கொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் – தாமஸ் பியுயோ பகுதி 3 (Corono Virus:The Hammer and the Dance)

29 Mar 2020

(முதல் பகுதியில் உலகளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்தும்,பல்வேறு நாடுகள் மேற்கொண்ட கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளையும்  பார்த்தோம்.மேலும் “எதுவும் செய்யாதிருத்தல்” எனும் முதல் வாய்ப்பை தேர்வு செய்தால் என்ன ஆகும் எனப் பார்த்தோம்.இரண்டாவது பகுதியில் நோயாற்றுதல் உக்தி மற்றும் அடக்குதல் உக்தியின் விளைவுகள் குறித்தும் சரியான நேரத்தில் தலையீடு செய்வது மற்றும் அதன் ஆதாயங்கள் பற்றியெல்லாம் பார்த்தோம்)

  1. 4. அடித்து நொறுக்குவதும் ஆடிக் கறத்தலும்

நோயாற்றுதல் உக்தியானது கொடுமையான தேர்வென்றும்,அடக்குதல் உக்தியானது உடனடி நலனைக் கொண்டுள்ளதெனவும் தற்போது புரிந்துகொண்டிருப்போம்.

அதேநேரம் பொதுமக்களுக்கு ‘அடக்குதல் உத்தி” குறித்து கீழ்வரும் ஐயங்கள் எழுகின்றன

  • இந்த நிலைமை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்?
  • அதற்கு எவ்வளவு விலை கொடுக்க நேரிடும்?
  • நாம் எதுவுமே செய்யாதிருந்தாலும் இரண்டாவது உயர்வு வருமா?

இதற்கு விடை காண்பதற்கு,அடக்குதல் உக்தி குறித்து இன்னும் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.இதை அடித்து நொறுக்குவதும் ஆடிக் கறத்தலும்  எனஅழைக்கலாம்.

அடித்து நொறுக்குவது(Hammer):

எல்லோருக்கும் எழுகிற ஒரு முக்கியமான கேள்வியானது,இது எவ்வளவு நாளைக்கு நீளும் என்பதுதான்.

மாதக்கணக்கில் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்பட்டிருந்தால் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல பிரச்சனைகள் எழும் என ஒவ்வொருவரும் அச்சமடைகின்றனர். துரதிர்ஷ்டவசமாக இம்பீரியல் கல்லூரி ஆய்விலும் கூட இவ்வாறு காட்டப்பட்டுள்ளது.

மேலே உள்ள இம்பீரியல் ஆய்வுப்படத்தில்,அடித்து நொறுக்குகிற காலம் வெளிர் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.இந்தக் காலமானது கடுமையான சமூக விலகல் போன்ற  அடக்குதல் உக்தியை மார்ச் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலும் நீடித்து காட்டுகின்றது.

ஒருவேளை நீங்கள் ஒரு அரசியல்வாதியாக இருந்தால்,நோயாற்றுதல் உக்தியை தேர்வு செய்வதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்கு விட்டுவிடுவீர்கள் .அல்லது அடக்குதல் உக்தியை தேர்வு செய்து நோய்த் தொற்றும் மரணமும் உச்சமடைவதை தடுத்து பல மாதங்களுக்கு பொருளாதாரத்தை முடக்கி வைத்திருப்பீர்கள்.வலுக்காட்டாயமாக இந்த இரண்டு வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என உங்களுக்குத் தோன்றலாம்.ஆனால் அப்படியில்லை.

சில ஆய்வுகளானது,பரிசோதனை,தொற்று உள்ள தொடர்புகளை கண்டறிவது,கூட்டத்தை தவிர்ப்பது(சீனா,சிங்கபூர்,தென் கொரியா போன்ற நாடுகள் கடைபிடிக்கின்ற தடுப்பு நடவடிக்கைகள்) உள்ளிட்ட தடுப்புக் காரணிகளை கவனத்தில் கொள்ளாமல் இவ்வாறான முடிவுகளை(நீண்ட கால ஊரடங்கு) முன்னரிவிக்கின்றன.

ஆக,அடித்து நொறுக்குதல் காலகட்டத்திற்கு சில வாரங்களே ஆகும்.மாதக் கணக்கில் நீளாது.

மேலே உள்ள படமானது, ஆறுகோடி மக்கள் தொகை கொண்ட சீனாவின் ஹூபெயில் 23/1 ஆம் தேதிக்கு பிறகான நாட்களில் முதன் முதலாக ஒரு புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை வரமால் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது.அடுத்த இரு வாரங்களில் ஹூபெ, தனது அன்றாட வேலைகளுக்கு திரும்பி விட்டது.ஐந்து வாரங்களில் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது. சீனாவின் இந்த மாகாணம் நோய்த் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி என்பதை மறந்திட வேண்டாம்.

இதேபோன்ற நடவடிக்கைகளை பிரான்சு,ஸ்பெயின்,இத்தாலி போன்ற நாடுகளும் மேற்கொண்டன.பாதிப்புள்ளவர்களை தனிமைப்படுத்துவது,தொடர்புகளை கண்டறிவது,அவசியமான தேவைக்கு மட்டுமே மக்கள் கடைகளுக்கு வரவேண்டும் என அறிவுறுத்துவது,பரிசோதனைகளை மேற்கொள்வது,அவசர சிகிச்சை பிரிவுகளை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டன.

ஆனால் எவ்வளவு தீவிரத்துடன் இதை மேற்கொண்டன என்பதுதான் கேள்வி!

சீனா இதை கடுமையாக கடைபிடித்தது.உதாரணமாக,அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும்.அதுவும் வீட்டுக்கொருவர் மட்டுமே வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நடைமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.இதனால்தான் இந்தக் கொள்ளை நோய் விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 

ஆனால் பிரான்ஸ்,இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளவில்லை.மக்கள் வீதிகளில் சாதரணமாக நடமாடினார்கள்.யாரும் சுவாசக் கவசம் அணியவில்லை.இதை பட்டும் படாமல் அடித்து நொறுக்குவதாக கொள்ளலாம்.,இதனால் இங்கு கொள்ளை நோய் கட்டுக்குள் வருவதற்கு நீண்ட காலம் ஆகலாம்.

சீனாவிற்கு வெளியே,தென்கொரியா நாடுதான் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று பாதிப்பை பல வாரங்களாக எதிர்கொண்டது.ஆனால் தற்போது நிலைமை அங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனக் கூறாமலேயே இதை அவர்கள் சாதித்துள்ளார்கள்.தீவிரமான பரிசோதனைகள்,தொடர்புகளை கண்டறிந்து தனிமைப் படுத்துவது போன்ற நடவடிக்கைகளைக் கொண்டே அவர்கள் இதை சாதித்தார்கள்.

கொள்ளை நோய் பரவாமல் தடுப்பதற்கு,உலக நாடுகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகளை கீழ் உள்ள அட்டவணை எடுத்துக் காட்டுகிறது.

வெவ்வேறு நாடுகள் எடுத்த தடுப்பு நடவடிக்கைகளை இப்பட்டியல் காட்டுகிறது.சமூக விலக்கு,பயணத் தடை என தொடக்கத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்த நாடுகள் பின்னாளில் இக்கொள்ளை நோய்க்கு பெரும் விலை கொடுக்காமல் தப்பித்தன.

ஆனால் தொடக்கத்தில் அசிரத்தையாக இருந்த பிரான்சு ஸ்பெயின் போன்ற நாடுகள்,பின்னாளில் கடுமையான அடித்து நொறுக்குகிற நடவடிக்கைகளுக்கு வழியின்றி சென்றன.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் எதுவுமே செய்யாதிருந்ததைப் பார்க்கிறோம்.குறிப்பாக அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும் தொற்று எண்ணிக்கை செங்குத்தாக உயரத் தொடங்கிய போதும் கூட சிங்கபூர்,அல்லது தாய்வான் போல  தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.ஆனால் காலம்கடந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின.ஒன்று இந்த கொள்ளை நோயால் துன்புறுவது அல்லது காலம் கடந்தேனும் தவறை உணர்ந்து,விட்டதை பிடிக்க மேலும் கடுமையான அடித்துநொறுக்குகிற நடவடிக்கைகளை மேற்கொண்டாகவேண்டும்.இதிலிருந்து யாரும் தப்பித்து ஓட முடியாது.

எல்லாம் சாத்தியம்தான்.கடுமையான சமூக விலகல் நடவடிக்கைகளை அமலாக்கமலேயே தென்கொரியா சில வாரங்களில் தொற்றை கட்டுப்படுத்தியது.தற்போது மேற்குலக நாடுகள் தீவிரமான சமூக விலகல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.ஆகவே நிலைமை இன்னும் சில வாரங்களில் கண்டிப்பாக கட்டுக்குள் வரும்.இவையாவுமே அரசின் உத்தரவை மக்கள் எவ்வாறு கடைபிடிக்கிறார்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தது.

முதலில் அடித்து நொறுக்குதலை அமல்படுத்தி, பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்னர்,அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கவேண்டும்.அதுதான் ஆடிக்கறத்தல்

ஆட்டம் அல்லது ஆடிக்கறத்தல்(The Dance):

கடுமையான அடித்து நொறுக்குதல் உக்தியால் சில வாரங்களில் கொள்ளை நோயை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால்,இச்சிக்கலை முறையான வகையிலே நம்மால் கையாள முடியும்.இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறிகிற வரையில் தொற்று பரவாமல் தடுக்கின்ற நீண்டகால நடவடிக்கைகளில் கவனத்தை குவிக்கலாம்.

இந்தப்படத்தில் காட்டப்பட்டுள்ள நீண்டகால அடித்து நொறுக்குதல் காலகட்டத்தை, பெரும்பாலான மக்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள்.மருந்து கண்டறிகிற வரையிலே நீண்டகாலமாக வீட்டிலேயே அடைந்துகிடக்க வேண்டியதுதானா என அச்சமடைகிறார்கள்.ஆனால் அப்படியிருக்க வேண்டியதில்லை.மீண்டும்  இயல்பு வாழ்க்கைக்கு விரைவாகவே திரும்பிடுவோம்.

கொரோனா வைரசை வெற்றிகரமாக ஆடிக்கறந்த நாடுகள்:

நீண்டகாலமாக கொரோனா தொற்று பாதிப்பு நிலவிய சிங்கப்பூர்,தைவான்,தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் எவ்வாறு இதிலிருந்து மீண்டன? அதிலும் குறிப்பாக ஆயிரக்கணக்கான வைரஸ் தொற்று ஏற்பட்ட தென்கொரியா,ஊரடங்கை அமல்படுத்தாமலேயே எவ்வாறு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது?

இந்த கானொளி இணைப்பில்  https://www.bbc.com/news/av/world-asia-51897979/coronavirus-south-korea-seeing-a-stabilising-trend தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் அதை விளக்கமாக எடுத்துரைக்கின்றார்.மிக எளிமையான வகையில் அவர்கள் இதை செய்கிறார்கள்:பரிசோதிப்பது,கண்டறிவது,தனிமைப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை முறையாக செய்தார்கள்.

சிங்கப்பூர் மேற்கொண்டுவருகிற நடவடிக்கைகளை இந்த இணைப்பு https://academic.oup.com/jtm/advance-article/doi/10.1093/jtm/taaa039/5804843 எடுத்துரைக்கின்றது.

தென்கொரியாவைப் போலவே சிங்கபூரும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக பொருளாதார உதவிகளையும் சிங்கப்பூர் அரசு செய்தது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை.அடித்து நொறுக்குகிற உக்தியால் மற்ற நாடுகளுக்கு மேற்கூறிய நடவடிக்கைகளை கடைபிடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் போதுமானதா?

R காரணியின் ஆட்டம்:

கொள்ளை நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காலம் முதலாக வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிக்கின்ற காலம் வரையிலுமான காலத்தையே நான்  ஆடிக் கறத்தல் காலம் என அழைக்கின்றேன்.அடக்குதல்(அடித்து நொறுக்குதல்) காலத்தில் உள்ளதுபோல கடுமையான நடவடிக்கைகள் இக்காலகட்டத்தில் இருக்காது.முன்பு நோய்த் தொற்று பரவிய அதே பகுதிகளில் மீண்டும்கூட தொற்று அலை உருவாகலாம். சில பகுதிகளில் நீண்ட காலத்திற்கு வரமாலும் போகலாம்.இது,புதிய தொற்று எவ்வாறு ஏற்படுகிறது என்கிற தன்மையைத் பொறுத்ததாகும்.இதை அடிப்படையாகக் கொண்டே சமூக விலகல் நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுவதா அல்லது தளர்த்துவதா என முடிவு செய்ய முடியும்.

R என்பது(Reproductive Factor) வைரசின் மறுத் தொற்று பரவல் வீதம் எனலாம்.இந்தக் கொள்ளை நோய்க்கு தயாராகத நாட்டில் R இன் பரவல் வீதம் 2  ஆக இருக்கும். தொற்று ஏற்பட்ட ஒருவர்,அடுத்த ஒருவாரத்தில் அடுத்தடுத்த இருவருக்கோ அல்லது மூவருக்கோ தனது வைரஸ் தொற்றை பரப்ப இயலும்.

R இன் வீதம் ஒன்றுக்கு மேலாக இருந்தால்,கொள்ளை நோய் பரவல்  செங்குத்தாக  உயரும். R இன் வீதம் ஒன்றுக்கு கீழே இருந்தால்,தொற்று கட்டுக்குள் வந்து மடியும்.

அடித்து நொறுக்குகிற காலத்தில், R இன் வீதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு  நெருக்கமாக கொண்டு வரவேண்டும் என அரசு இலக்கு நிர்ணயக்கிறது.சீனாவின் வூஹானில் தொடக்கதில் R இன் வீதம் 3.9 ஆக இருந்தது.பின்னர் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் சுய தனிமைப்படுதல் நடவடிக்கையின் மூலமாக R இன் வீதம் 0.39 ஆக குறைக்கப்பட்டது.

அடித்து நொறுக்குகிற காலகட்டத்திலிருந்து ஆடிக்கறக்கிற காலத்திற்கு வந்தபின்னர்,கடுமையான நடவடிக்கைகளை தொடர வேண்டும் என அவசியமில்லை.

ஆடிக்கறத்தல் காலத்தில் R வீதத்தை ஒன்றுக்கு கீழாக வைப்பதில் கீழ்வரும் சில முறைகளை கடைபிடிக்கலாம்.

 

வைரஸ் தொற்று ஏற்படுகிற  ஒவ்வொருவருக்கும்  என்னமாதிரியான விளைவுகள் ஏற்படலாம் என்பதை மேலே உள்ள படத்தில் தோராயமாக கூறப்பட்டுள்ளது.இது இந்த வீதத்தில்தான் இருக்கும் என்பதை இதுவரை யாருமே துல்லியமாக கூறியது கிடையாது.ஆனால் தற்போதுவரை  வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகளில் வந்த தகவல்களைத் தொகுத்து இது எவ்வாறு  இருக்கலாம் என மேற்கூறிய படத்தில் கூறியுள்ளோம்.

முதல் கட்டத்தில், அறிகுறி தென்படாத கட்டத்திலேயே  பலருக்கு தொற்று  ஏற்படும்  நம்பப்படுகின்றது.இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்தில் அறிகுறி தென்பட்டு(மருத்துவமனை சென்றோ செல்லாமலோ) தொற்று மறைகிறது.

முதல் கட்டத்திற்கு உதாரணம் கூறவேண்டுமென்றால்;உங்களுக்கு தொற்றின் அறிகுறி தெரியாத நிலையில் சாதரணமாகவே உணருவீர்கள்.அப்போது வேறு ஒருவர்களுடன் நீங்கள் பேசுகையில்,வைரசை அவருக்கு பரப்புகிறீர்கள்.உங்கள் மூக்கை தொட்டு பின்னர் கதவுப் பிடியை திறந்திருப்பீர்கள்.உங்களுக்கு அடுத்த வருபவர் கதவுப் பிடியை தொடுகிற போது அவருக்கு  வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும்

வைரஸ் அதிகமானால் அறிகுறி தெரியத் தொடங்கும்.வேலைக்கு போவதை தவிர்ப்பீர்கள்.உங்களது படுக்கையில் ஓய்வெடுப்பீர்கள்,மருத்துவரை பார்க்கப் போவீர்கள்.தொற்று அதிகரிக்கத் தொடங்கிய வேளையில்,மற்றவருக்கு தொற்று பரவிடாமல் இருப்பதன் பொருட்டு சுய தனிமைப்படுத்திக் கொண்டால்,வைரஸ் பரவலை தடுக்கலாம்.

நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டால்  வைரஸ் பரவாமல் தடுக்கலாம்.

சிங்கபூர் அல்லது தென்கொரியா  நாடுகளில் கடைபிடிக்கப்படுகிற  இக்கொள்கைகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியதை பார்க்கின்றோம்.

  • பெருமளவில் பரிசோதனைகளை(Mass Testing) மேற்கொள்ளும்போது,அறிகுறி தென்படுவதற்கு முன்பாகவே தொற்று கண்டறியப்பட்டு பரவல் கட்டுப்படுத்தப்படுகின்றது.
  • அறிகுறி தென்படுவதற்கு முன்பே நோய்த் தொற்றை கண்டறிவதற்கு நாம் கற்றுக் கொண்டால்  நீல நிற நாட்களை குறைக்க முடியும்.ஓட்டுமொத்த பரவலையும் கட்டுப்படுத்த முடியும்.
  • அறிகுறி தென்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டால்,ஆரஞ்சு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள தொற்றின் கட்டமே மறைந்துவிடும்.
  • சமூக விலகல்,சுவாசக் கவசம் அணிதல்,கைகளை கழுவுதல் ஆகிய நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால்,நீண்டகாலத்திற்கு வைரஸ் பரவலை தடுத்திட முடியும்.

மேற்கூறிய நடவடிக்கைகளில் தோல்வி ஏற்பட்டால்,தீவிரமான சமூக விலகல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சமூக விலகல் உக்தியால் R ஐ குறைப்பது:

மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தபின்னரும் R இன் வீதத்தை ஒன்றுக்கு கீழே வைக்கமுடியவில்லை என்றால் பரவல் வீதத்தை  கட்டுப்படுத்தும் விதமாக நபர்களை நபர்கள் நெருக்கமாக சந்திப்பதை தடுக்கின்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

உதாரணமாக,அதிக எண்ணிக்கையில் நிகழ்சிகளில் மக்கள் கூடுவதை தடைசெய்யலாம்.அதேசமயம் பள்ளிகளை மூடுவது,வர்த்தகத்தை மூடுவது,அனைவரையும் வீட்டில் இருக்கச் சொல்வது போன்ற நடவடிக்கைககளை மேற்கொண்டால், மிக அதிக சமூகப் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இந்தப் படத்தில் கூறப்பட்ட அம்சங்கள் குறித்து இதுவரை யாரும் ஆய்வு செய்யவில்லை.

இப்படம் போன்ற ஒன்றை அரசியல்வாதிகள் பார்த்தாலே,அவர்கள் முடிவு எடுத்தாக வேண்டிய அவசியத்தை உணருவார்கள்.தற்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதும் தெரியும்.

அடித்து நொறுக்குதல் காலகட்டத்தில், R வீதத்தை  எந்தளவிற்கு குறைக்க முடியுமோ அந்தளவிற்கு குறைக்கவேண்டும் என அரசியல்வாதிகள் கருதுவார்கள்.ஹூபெயில் 0.32 ஆக குறைக்கப்பட்டது.அந்தளவிற்கு இல்லையென்றாலும் 0.5 அல்லது 0.6 ஆகவாவது குறைக்கலாம்.

ஆனால் ஆடிக்கறத்தல் காலகட்டத்தில்,நீண்ட காலத்திற்கு  Rஐ 1 க்கு கீழே  வைத்திருக்க வேண்டும். R கட்டுக்குள் இருந்தால்தான்,பெரும் சமூக விலகல் நடவடிக்கைகளையும் கொள்ளை நோய் மீண்டும் பரவுவதையும் தவிர்க்கலாம்.

இதனாலேயே நமது அரசியல்வாதிகள் தெரிந்தோ தெரியாமலோ கீழ்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

  • R ஐ குறைக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பட்டியலிடுகின்றனர்.
  • R ஐ குறைக்கின்ற நடவடிக்கையால் என்னவிதமான நன்மைகள் கிடைக்கும் என யோசிக்கின்றனர்.
  • இந்த நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சமூகப் பொருளாதார விளைவுகள் குறித்தும் யோசிக்கின்றனர்.
  • குறைவான பொருளாதார சேதாரத்தில் Rஐ ஒன்றுக்கு கீழே குறைக்கின்ற வழியொன்றை தேர்வு செய்கின்றனர்.

R குறித்த எண் விளையாட்டை விரைவாக நாம் கற்றுக் கொள்ளவேண்டும். R ஐ குறைக்க மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகளால் ஏற்படுகிற சமூகப் பொருளாதார விளைவுகளையும் விரைவாக அறிந்துகொள்ள வேண்டும்.

இதுகுறித்தெல்லாம் தெரிந்துகொண்டால்தான் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும்.

முடிவாக:நேரத்தை பெறுவது

கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கிலும் பரவியுள்ளது.152 நாடுகளில் தற்போது கொரோனா தொற்று பாதிப்புள்ளது.

கொரோனா வைரசின் பாதிப்பை இதுவரை சந்திக்காத நாடுகளோ,எங்கள் நாட்டிலெல்லாம் வைரஸ் வருமா என அலட்சியம் காட்டுகின்றன.ஆனால் அங்கு வைரஸ் ஏற்கனவே வந்திருக்கலாம்.கண்டறியப்படாமல் வேண்டுமானால் இருக்கலாம்.இந்த வைரஸ் தாக்குகிற போது,சுகாதார அமைப்பு கடுமையான சிக்கலுக்குள்ளாகும்.ஆகவே தீவிரமடைவதற்கு முன் தடுப்பது அவசியம்.

கொரோனா ஏற்கனவே வந்துள்ள நாடுகளைப் பொருத்தவரைக்கும்,என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பது தெளிவு.

சில நாடுகள்,நோயாற்றுதல் உக்தியை தேர்ந்துகொண்டு கொள்ளை நோய்ப் பரவலை அதிகமாக்குகின்றன,சுகாதார அமைப்பிற்கு நிலைகுலைவை ஏற்படுத்துகின்றன.வைரஸ் வகைமாற்றமடைவதற்கு வாய்ப்பை வழங்குகின்றன,பல்லாயிரக்கணக்கன மக்களின் மரணத்திற்கு காரணமாகின்றன.

வேறு சில நாடுகள்,கொரோனாவுக்கு எதிராக போராடுகின்றன.சில வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்துகின்றன.செயல்படுத்துவதற்கான நேரத்தை பெற்றுக்கொண்டு  செயல் திட்டத்தை உருவாக்குகின்றன.தடுப்பு மருந்து கிடைக்கின்ற வரையில் நோயை கட்டுப்படுத்துகின்றன.

தற்போது அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகள் நோயாற்றுதல் உக்தியை தேர்ந்துகொண்டுள்ளன.

மற்ற நாடுகள் கொரோனாவிற்கு எதிராக போராடுகிற வேளையில்,இவர்களோ “எங்களால் அதை செய்ய முடியாது” என  போராடுவதை கைவிட்டு விட்டார்கள்.

ஐரோப்பா எங்கிலும்  நாசிக்கள் நுழைந்துவிட்டார்கள்.ஆகவே நாம் போராட முடியாது.என வின்ஸ்டன் சர்ச்சில் சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும்?பெரும்பாலான நாடுகள் இதைத்தான் செய்கின்றன.ஆகவே போராடுவதற்கான வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது.நாம்தான் அரசை செயல்பட வைக்க வேண்டும்.

-முற்றும்

கட்டுரையாசிரியர் குறிப்பு:

இந்த கட்டுரையானது ஒரு சிறு குழுவின் நீண்ட நேர கடுமையான உழைப்பால்  எழுதப்பட்டதாகும்.கொரோனா வைரஸ் குறித்து வெளிவந்த பல்வேறு ஆய்வு முடிவுகளை ஒன்றாக இக்கட்டுரையில் தொகுத்துள்ளோம்.

மொழிபெயர்ப்பு: அருண் நெடுஞ்சழியன்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

இக்கட்டுரையானது இதுவரை 32  மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் முதல் முதலாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

 

Coronavirus: The Hammer and the Dance- Tomas Pueyo

(What the Next 18 Months Can Look Like, if Leaders Buy Us Time_

https://medium.com/@tomaspueyo/coronavirus-the-hammer-and-the-dance-be9337092b56

RELATED POST
1 comments
  1. சிறப்பு தோழர்களே.கடும் உழைப்பு தெரிகிறது மொழிபெயர்ப்பில்.

    மிகச்சிறப்பான விளக்கம்.நன்றிகள் அனைவருக்கும்.

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW