கண்ணுக்கு தெரியாத கொரோனாவை –  வெல்வதற்கு வேண்டும் வெளிப்படைத்தன்மை!

24 Mar 2020

கண்ணுக்கு தெரியாத கிருமி ஒன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தைகளின் எண்ணிக்கையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தோர் எல்லாம் இன்றைக்கு ஒவ்வொரு நாட்டிலும் எத்தனைப் பேர் நோய்க்கு ஆளாகியுள்ளனர், எவ்வளவு பேர் இறந்துள்ளனர் என்ற எண்ணிக்கையை உற்று நோக்கிக் கொண்டுள்ளனர்.  இந்தியாவும் கொரோனாவுக்கு எதிரானப் போரில் இருக்கிறது. அறிவுறுத்தல்கள், பரிந்துரைகள், ஆலோசனைகள் என்ற இடத்தில் இருந்து எச்சரிக்கைகள், கட்டுப்பாடுகள், ஆணைகள், தண்டங்கள், கைதுகள் என்ற இடத்திற்கு நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் மருத்துவப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், போக்குவரத்து துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கையில் கொரோனா ஏற்படுத்தியுள்ள சமூகப் பொருளாதார நெருக்கடிகளை காவல்துறையை முடுக்கிவிட்டு கையாண்டு விடலாம் என்று அரசு கருதிக் கொண்டிருந்தால் அது உதவப் போவதில்லை. மக்களை உருட்டிமிரட்டி, அடித்து, கைது செய்து, வழக்குப்போட்டு எல்லாம் கொரோனாவை வெற்றிக் கொள்ள முடியாது. கொரோனா நோய்ப் பரவுவதைத் தடுக்க, மக்களின் பங்கேற்பு இருந்தாக வேண்டும். பல்வேறு சிக்கல்கள், கற்பிதங்கள், நம்பிக்கைகள், புரளிகள் ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு பொதுவான சிக்கல் தெளிவாகப் புலப்படுகின்றது. அது வெளிப்படைத்தன்மை. யாருக்கு வேண்டும்? மக்களுக்கும் வேண்டும், அரசுக்கும் வேண்டும்.

கொரோனா தொற்றினால் ஏற்படும் நோய்க்குறிகள் இருப்பவர்கள் மறைக்காமல் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அப்படி தெரிவிக்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஒரு மாத காலமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டோர் தாமாக முன்வந்து அரசிடம் தெரிவித்து விட்டு அரசின் பதிவேட்டில் உட்படுத்திக் கொண்டு தனிமைப்படுத்துவதாக தெரியவில்லை. ஆந்திராவில் ஒருவர் காய்ச்சல் மாத்திரையை சாப்பிட்டுவிட்டு விமான நிலையத்தில் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக் கொண்டது அம்பலமாகியுள்ளது. அதாவது தனக்கு காய்ச்சல் இருப்பதை மறைத்து விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேற முயன்றுள்ளார். இன்னொருவர் ஹாலிவுட் பாடகர். அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதைப் பற்றி பொருட்படுத்தாமல் ஹோலி பண்டிகையில் கலந்து கொண்டுள்ளார். அதில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அடுத்த சில நாளில் குடியரசு தலைவருடன் ஒரு நிகழ்வில் பங்கேற்றுள்ளார். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக் கொண்டவர்களுக்கு உலகம் முழுக்க கொரோனா ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அழிவுகள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அத்தகையவர்கள் கொரோனா நோய்ப் பரவல் தடுப்பில் அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பது வேதனைக்கு உரியது. அரசு இவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருப்பது கூடுதல் சுமை.

கொரோனா கிருமியால் பாதிக்கப்படுவதே குற்றமல்ல. இதுவொரு அவமானம் அல்ல. இதை மறைக்க வேண்டிய தேவையில்லை. இது பரவும் வேகம் கருதியே எல்லோரும் பதறிக் கொண்டிருக்கின்றனர். ஓரளவுக்கு சிகிச்சை கொடுத்து உயிரிழப்பைத் தடுக்கவும் முடிகிறது. மறைப்பதோ, அஞ்சுவதோ, பீதி அடைவதோ தேவையற்றது.

எனவே, வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டோர், அவர்களோடு தொடர்புக் கொண்டுள்ளோர் என முதல் வளையத்தில் இருப்பவர்கள் முழு வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் கடைபிடிக்க வேண்டும்.

விஜயபாஸ்கருக்கும் வெளிப்படைத்தன்மை வேண்டும்!

ஒருவர் கூட உயிரிழக்காமல் காப்பாற்றுவோம் என்று நேற்று முதல்வர் பேசியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இரண்டு பத்திரிகை செய்திகள் நம்மை கலக்கமுறச் செய்கின்றன.

கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சக்திகுமார் என்பவர் பிப்ரவரி 18 அன்று மதுரை அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ளார். இவர் சீனாவில் வூஹான் நகரத்தில் இருந்து 900 கிமீ தொலைவில் உள்ள கோங்கிக் மாகாணத்தில் 15 ஆண்டுகள் சமையல்காரராக பணியாற்றியவர். பிப்ரவரி 5 அன்று இந்தியா திரும்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் முதல் கட்ட பரிசோதனை செய்த பொழுது கொரோனா அறிகுறி எதுவும் இல்லாததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அன்றாடம் தகவல் பெறப்பட்டுள்ளது. பிப்ரவரி 12 அன்று அவர் வாந்தி எடுக்கத் தொடங்கி சாப்பிட முடியாமல் திணறி உள்ளார். உடனே, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், பிப்ரவரி 18 அன்று அவர் உயிர்விட்டுள்ளார். அரசு மருத்துவமனைப் பதிவேட்டின்படி அவர் கல்லீரல் பாதிப்பால் இறந்துள்ளார்! இச்செய்தி அவுட் லுக்கில் வெளிவந்துள்ளது. கொரோனாவால் இவர் இறக்கவில்லை என்று நம்புவோமாக!

இன்றைய DTNEXT செய்தித்தாளில் கொரோனா நோய் தொற்றுக்கான பரிசோதனைப் செய்யப்பட்டு நோய் தொற்று உறுதியான செய்தி  உறவினர்களுக்கு மட்டும் சொல்லப்படுவதாகவும் வெளியில் சொல்லப்படவில்லை என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையிலேயே இப்படி நடப்பதாக அச்செய்திப் பதிவு சொல்கிறது. இது வருந்தத்தக்கது.

நோய்த் தொற்றுக்கு உள்ளானோர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவது போன்றவற்றை சீனா, வட கொரியா போன்ற நாடுகள் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

கடந்தமுறை தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொற்று இருந்த பொழுது தமிழக அரசு பாதிப்புக்குள்ளானோர், இறந்துபோனோர் எண்ணிகையைக் குறைத்துக் காட்டியது என்றக் குற்றச்சாட்டு உள்ளது.

மக்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது போல் அரசும் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது, சிகிச்சை நிலவரம், எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் போன்றவற்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதுவே, மக்களிடம் எச்சரிக்கையுணர்வை ஊட்டுவதற்கு உதவும்.

இன்னொருபுறம், அரசு தெளிவுபடுத்த வேண்டிய சில கேள்விகள் உள்ளன. இதைப்பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பும்போது அமைச்சர் விஜயபாஸ்கர் எரிச்சல் அடைகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஊடக ஆசிரியர்களை அழைத்து ஒரு சந்திப்பை நடத்தி, ’எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது’ என்று பேசியதாக தெரிகிறது. நிலைமை இன்னும் தீவிரத் தன்மை அடையாத நிலையிலேயே அரசு ஊடகங்களிடம் இப்படி நடந்துக்கொள்வது மிகுந்த கண்டனத்திற்குரியது.

உலகமே பாதிப்பு அடைந்திருக்கும் நிலையில் இது குறித்து ஒவ்வொரு நாட்டின் அனுபவத்தையும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதால் நம்முடைய நிலை என்ன என்ற பதற்றம் எல்லோருக்கும் இருக்கிறது. அதனால், நம்முடைய நிலை என்ன? இது குறித்து கேள்விகள் பல  எழுகின்றன. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

  1. தமிழ்நாட்டில் எத்தனை கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன? எத்தனை பரிசோதனைக் கருவிகள் இருக்கின்றன? நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்?
  2.  கொரோனாவுக்கான சிகிச்சைக்காக எத்தனை மையங்கள் இருக்கின்றன? அந்த மையங்களில் எத்தனைப் படுக்கைகள் இருக்கின்றன? மேலும் அந்த மையங்களில் எத்தனை எரிவலியூட்டிகள் உள்ளன?
  3. கொரோனா சிகிச்சைக்கான புதிய தற்காலிக மருத்துவமனை ஏற்பாடுகள் என்னென்ன திட்டமிடப்படுள்ளன?

இன்று காலை தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவல் கட்டத்தை அடைந்துவிட்டது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லியுள்ளார். சமூகத்தின் பங்கேற்பு இன்றி இதனை வெற்றி கொள்ளவே முடியாது. சமூகம் பங்கேற்க வேண்டும் என்றால் அரசு வெளிப்படையாக இருந்தாக வேண்டும்.

கண்ணுக்கு தெரியாத கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் அரசும் மக்களும் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடித்தாக வேண்டும்.

 

– செந்தில், இளந்தமிழகம்

சுட்டிகள்:

  1. https://www.dtnext.in/News/TamilNadu/2020/03/24020900/1221560/State-concealing-COVID-cases-allege-kin-medicos.vpf
  2. https://www.outlookindia.com/newsscroll/health-ministry-rebuts-news-of-coronavirus-death-in-india/1737827

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW