கொரோனா தடுப்பு நடவடிக்கை – இருவேறு பார்வைகள் … அரசு செய்யவேண்டியது என்ன ?

19 Mar 2020

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உள்ளது.கொரோனா உறுதியானவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது  மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகிற  கொரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகள்  மீது நமது உடனடியான கவனத்தை குவிப்பது அவசியமாகிறது.ஏனெனில் பேரச்சமும் பெரும் பீதியும் மக்களிடம் நிலவி  வருகிற நிலையில் அறிவியல் பூர்வமாகவும் மக்கள் நலனின் பேரிலும்  இச்சிக்கலை எதிர்கொள்வது அவசர அவசியமாக உள்ளது.

தற்போது கொரோனா தொற்று எதிர்ப்பு நடவடிக்கை மீதான இரு  தரப்பு வாதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஒன்று அரசு தரப்பு வாதம் மற்றொன்று சுயாதீன மருத்துவர்கள்,இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் முன்வைக்கின்ற வாதம்  ஆகும்.(கொரோனா தொற்று குறித்த சதிக் கோட்பாடுகளை இங்கு கணக்கில் கொள்ளவில்லை)

முதல் தரப்பு வாதம் வருமாறு,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பானது, (community spread)சமுதாயத் தொற்று(கட்டம் மூன்று) கட்டத்திற்கு வரவில்லை.சுமார் ஐநூறு நபர்களிடம் மேற்கொண்ட ரெண்டம்  பரிசோதனையில், சமுதாய தொற்று வந்துள்ளதற்கான ஆதாரம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.இத்தகைய நிலையில்,மக்களை பதட்டமடையச் செய்கிற முடிவுகளை எடுக்க அவசியமில்லை  என இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் (ICMR)தலைவர் பல்ராம் பார்கவா கூறுகிறார்.அனைத்து நாடுகளும் உடனடியாக கொரோனா  பரிசோதனைக்கு உட்பட்டுத்த வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை இதன்காரணமாக இந்தியா நிராகரிக்கிறது.இந்தியாவிற்கு இது  பொருந்தாது என்கிறது.அதேநேரம் தற்போது இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் கட்டுப்பாட்டில் நாடெங்கிலும் சுமார் 52  கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன.இந்த எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்கிறார்.

இந்திய அரசு  கொரோனா தொற்று நடவடிக்கையை தடுப்பதற்கு துரிதமாக செயல்பட்டுள்ளது என  உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ஹென்க் கூறியுள்ளார்.உதாரணமாக எல்லைகளை மூடியது,விமான நிலையங்கள் துறைமுகங்களில் பரிசோதனைகள் மேற்கொண்டது.ஐரோப்பிய பயணிகளுக்கு இந்தியாவில் நுழைவதற்கு தடை விதித்தது,கல்வி மற்றும் பொது மக்கள் கூடும் பகுதிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிதத்தது,மக்களை தனிமைப்படுத்திக் கொள்ள வற்புறுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளை விரைவாக முடிக்கி விட்டுள்ளதன் அடிப்படையில் இந்தியா துரிதமாக செயல்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வருவதாக் கொள்ளலாம்.(இதனால் சமுதாய தோற்று கட்டுப்பட்டுவிட்டதாகவே கூட சிலர் முன்னரிவிக்கின்றனர்)

இரண்டாவது தரப்பு வாதமானது,மேற்கூறியதற்கு நேர் மாறானது.இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் முன்னாள் தலைவரும் வைராலஜிஸ்டுமான ஜெகப் ஜான்சன்,மற்றும் மருத்துவர்  லக்ஷ்மி நாராயணன்(the wire பேட்டி) ஆகியோர் இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் கொரோனா பரிசோதனை கொள்கையை  விமர்சிக்கிறார்கள்.

இந்தியாவில் தற்போது சுமார் 150 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது.ஏனெனில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி வரை மொத்தமாகவே சுமார் 11,500 மக்கள்தான் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.ஆனால் நாம் ஒரு நாளுக்கு 10,000 மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார்கள்.

.இந்தியாவில் தற்போதைய கொரோனா பரிசோதனைக்கு இந்திய மருத்துவ ஆய்வுக் குழு வகுத்துள்ள பரிசோதனைக் கொள்கை வருமாறு

  • அண்மையில் வெளிநாடு சென்று வந்தர்வர்கள் அனைவரும் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
  • அவ்வாறு வந்தவர்களில் இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதிப்பது.ஒருவேளை கொரோனா தொற்று உறுதியானால் அவர்களை தனி வார்டுக்கு அனுப்பி சிகிச்சை அளிப்பது.

இப்போது வாதம் என்னவென்றால்,மேற்கூறிய பரிசோதனைக் கொள்கையில் இரண்டாம் நிலை தொற்று உள்ளவர்கள்,அறிகுறிகள் அதிகம் வெளியில் தெரிந்திடாத மக்களிடம் கொரோனா தொற்று பரிசோதனை போதுமான எண்ணிக்கையில் நடத்தப்படவில்லை என்பதாகும்.இங்கிலாந்து பெண்மணி ஒருவருக்கு மேற்கூறிய கொள்கையின் அடிப்படையில்(அறிகுறி தெரியாததால்) பரிசோதனை மேற்கொள்ளவில்லை.

இந்தியாவில் பரிசோதனை நிலையங்களின் பற்றாக்குறை மற்றும் அதற்கு ஆகிற செலவுகள்(குறைதபட்சம் 5,000ரூபாய்) காரணமாக இரண்டாம் நிலை தொற்று உள்ளவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளனர் என்ற விமர்சனம் எழுகிறது.இதுவரை இந்தியாவில்  மொத்தமாகவே 11,500 பேரிடம் மட்டுமே கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.ஆகவே பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத இரண்டாம் நிலை தொற்று உள்ளவர்களால்,வைரஸ் பரவலாகி சமுதாய தொற்றாக கண்ணுக்கு புலப்படாத  வகையில் மாறிக்கொண்டிருக்கலாம் என்கிறார்கள்.

ஆகவே உடனடியாக அவசர கால நடவடிக்கையாக சந்தேகத்துக்குரியவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்துகிற வசதிகளை அதிகப்படுத்தி,அதிகமான மக்களை பரிசோதனை செய்வது,மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பது,உயிர் காக்கும் சாதனங்களை கையிருப்பில் வைத்திருப்பது,போதுமான மருத்துவ படுக்கை வசதிகளை உறுதிப் படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கவேண்டும் என்கிறார்கள்.

போலவே,உலக  சுகாதார அமைப்பின் பரிசோதனை வழிகாட்டலை புறந்தள்ளாமல் மேற்கூறிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.

ஏனெனில் இந்தியாவில் சுகாதாரத்திற்கு  நாட்டின் ஒட்டுமொத்தGDP பியில் வெறும் 3.7 விழுக்காடே ஒதுக்கப்படுகிறது.நெருக்கமான நகரங்களில் சுகாதாரக் குறைவான பகுதிகளிலும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் வாழ்கின்றனர்.இவர்களை தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள முடியாது.ஆகவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்படவேண்டும் என்கிறார்கள்.

ஆனால் பாஜக ஆள்கின்ற உத்திர பிரதேச மாநில அரசோ,இக்கட்டுப்பாடுகளை புறந்தள்ளி அயோத்தியில் மக்கள் கூடுகையை நடத்த உள்ளதாக அறிவிக்கின்றது.ராமர் மக்களை காப்பார் என்கிறார் அம்மாநில முட்டாள் முதலமைச்சர்.பிரதமர் மோடியோ இரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.அவரது பரிவாரங்களோ மாட்டு மூத்திரத்தை குடிக்கிறது.அறிவியலுக்கு புறம்பாகவும் அறிவிற்கு புறம்பாகவும் உள்ளவர்களிடம் சிக்கி துன்பத்தை அனுபவிக்கிறோம்!

-அருண் நெடுஞ்சழியன்

ஆதாரம்:

INDIAN COUNCIL OF MEDICAL RESEARCHDEPARTMENT OF HEALTH RESEARCH Strategy of COVID19 testing in India (17/03/2020)

https://thewire.in/health/india-coronavirus-ramanan-laxminarayan

https://www.aljazeera.com/news/2020/03/india-poor-testing-rate-masked-coronavirus-cases-200318040314568.html

https://www.weforum.org/agenda/2020/03/quarantine-india-covid-19-coronavirus/

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW