“காவிரி காப்பாளர்” செய்வாரா? காவிரி காப்பாளர் பட்டம் கொடுத்தவர்களாவது இதை வலியுறுத்துவார்களா?

13 Mar 2020

காவிரி காப்பாளர் பட்டம், ஏர் கலப்பை பரிசு, ஊடகத்தின் முன்னாள் நெல்வயலில் இறங்கி நாற்று நடுவது, மாட்டு வண்டி ஒட்டிக்கொண்டு மேடைக்கு வருவது என “நானும் விவசாயிதான்” அவதாரம் எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  காவிரி டெல்டா பாசன பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வருக்கு , காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் .கடந்த 7 ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் பங்கேற்க சென்றபோது நடைபெற்றவைதான் மேற்கூறியவை.அன்றைய தினத்தில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களின் மறைவால் மேற்கூறிய செய்திகள் யாவும் பெரிதாக கவனம் பெறாமல் போய்விட்டது.

எட்டுவழி பசுமைசாலை திட்டத்திற்கு எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றவர்,டெல்டாவின் பச்சை வயலில் ஜெசிபியை இறக்கி போலீஸ் துணையோடு கெயில் குழாய் பதித்தவர்தான் இன்று “காவிரி காப்பாளர்” ஆகிவிட்டார்.

“காவிரி காப்பாளர்” பட்டம் வழங்கிய திரு மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் மற்றும் பி ஆர் பாண்டியன்தான் என்ன செய்வார்கள் பாவம்;.ஆட்சியாளர்களின் தூண்டிலுக்கு இரையாகாத மீன்கள்தான் உண்டா என்ன?

இது ஒருபுறம் என்றால், பேராசிரியர் ஜெயராமன் அவர்களோ இந்த பாராட்டு விழா நடைபெறுவதற்கு முன்னரே  கதிராமங்கல கிராம மக்களோடு சென்று முதல்வருக்கு  நன்றி தெரிவித்துவந்துவிட்டார்.

தற்போது,டெல்டாவில் எல்லாம் சுபம் என்பது போல ஒரு தோற்றமயக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது.இது போதாதற்கு கோதாவரியை கொண்டு வந்து காவிரியில் இணைத்து டெல்டாவின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கப்போவதாக பாராட்டு விழா கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஒரே போடாக போட்டுவிட்டார்.

இனி டெல்டாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என நம்புவோமாக!

1

முதல் வெற்றியை முழு வெற்றியாக்க வேண்டும்

காவிரி டெல்டா பாசன பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது மக்கள் திரள் போராட்டங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

தொடர் மக்கள் திரள் போராட்டங்களினாலும் எதிர்வருகிற சட்டமன்ற தேர்தல் நிர்பந்தங்களினாலும் மக்களுடன் ஒரு சமரசத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தின் பேரிலேயே இந்த அறிவிப்பை தமிழக அரசு மேற்கொண்டது.இந்த அறிவிப்பை மேற்கொண்டதால்,இது பொருளற்றது ஆகிவிடாது.ஏனெனில் இந்த அறிவிப்பும் எதிர்வருகிற புதிய திட்டங்களை கட்டுப்படுத்துவதால் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றியாக பார்க்கவேண்டும்.அதேநேரத்தில் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பும் ஆர்வமும் காட்டாமல்,பாராட்டு விழாவிற்கு முனைப்பும் ஆர்வமும் காட்டுவது தேர்தல் வாக்கு வங்கி அரசியலை  வெளிப்படுத்துகிறது.ஆளும் கட்சியின் இந்த மலிவான அரசியலுக்கு சமூக ஜனநாயக சக்திகள் பல்லக்கு தூக்காமல்.தமிழக அரசின் அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் தர வேண்டும்.மாறாக ஆளும் கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மலிவாக இரையாகக்கூடாது.

2

அதிமுக ஆட்சியில் சொன்னதும் செய்ததும்

மூச்சுக்கு முன்னூறு முறை அம்மாவின் ஆட்சியை தொடர்வதாக பல்லவி பாடுகிற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி காப்பாளர் விருது வழங்கிய விவசாய சங்கத்தினரோ கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்கு அ.இ.அ.திமுக வழங்கிய வாக்குறுதிகளை என்ன?செய்தது என்ன?

வாக்குறுதிகள்:

  • விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்
  • தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும். விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் உற்பத்தியால் 9 சதவீத விவசாய வளர்ச்சியை அடைவோம்.
  • விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • 30,000 ஹெக்டேர் நிலப் பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.
  • விவசாய கருவிகளை அ.தி.மு.க. அரசு இலவசமாக வழங்கும்.
  • மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு – உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.
  • அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப் படுத்துவோம்.
  • விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செய்யப்படும்.
  • கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப் பாளர்களுக்கும், விவசாயி களுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நலிந்த கரும்பு ஆலைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்க்கரை மற்றும் எத்தனால் எரிபொருள் தயாரிப்பு விரிவாக்கப்படும்.
  • ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருக்கப்படும்.
  • உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் நவீன காலத்திற்கு ஏற்ற வடிவில் புதிய பொலிவுடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்.

2011-16 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் நடந்தது:

  • ஐந்தாண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
  • 2014ல் மட்டும் 895 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
  • 2015 ஆம் ஆண்டிற்க்கான தேசிய குற்றவியல் ஆய்வு மையம் எடுத்த புள்ளிவிவரப் படி, ஒட்டுமொத்தமாக வேளாண் தொழில் சார்ந்த தற்கொலைகளில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது(மகராஷ்ட்ரம் – 4004,தெலுங்கான-1347,மத்திய பிரதேசம் -1198,தமிழகம் -827) விவசாய இயந்திரங்கள் எதுவும் இலவசமாக வழங்கவில்லை.மாறாக  டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்க விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க இயலாமல் ஜப்தி செய்வது தொடர்ந்தது.

2016 சட்டமன்ற தேர்தலிலும் கிட்டத்தட்ட 2011 வாக்குறுதியையே மீண்டும் வழங்கப்பட்டது.வழக்கம் போல எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.மாறாக அறிவிக்கப்படாத பேரழிவுத் திட்டங்களை திணித்து விவசாய நிலங்களை அழித்தனர்.கெயில் குழாய் பதிப்பு திட்டம்,எட்டு வழி பசுமைச் சாலை திட்டம்,எண்ணெய் எரிவாயு திட்டம் என டெல்டாவில் பேரழிவுத் திட்டங்கள் தொடர்ந்தன.விவசாயப் பொருளாதாரமும் முன்னேற்றம் ஏதுமில்லை,விவசாயத் தற்கொலைகளும் விவசாயிகளின் கடன் சுமையும் அதிகரித்தன.

3

காவிரிப்படுகை வேளாண்  மண்டல அறிவிப்பும் நடைமுறையும்

இந்தப் பின்னணியில்தான் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்டு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவிக்கிறார்.குறைந்தபட்சம் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்ற முனைப்பு காட்டாமல் ஆடம்பர பாராட்டு விழா கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்.குறைந்தபட்சமாக என்ன செய்திருக்க வேண்டும்?

காவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்ட மசோதாவில்

“விவசாய நலனுக்கு சேவை செய்யவும் அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்படுள்ளதாகவும்,முதல்வரைத் தலைவராக கொண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

  1. மசோதாவில் அறிவித்தவாறு முதல்வரை தலைவராகக் கொண்ட அதிகார அமைப்பு ஒரு முறையாவது கூட்டப்பட்டுள்ளதா?
  2. அதிகார அமைப்பிற்கு ஆலோசனைகளை வழங்குகிற உயர்மட்ட ஆலோசனைக் குழுவாவது அமைகப்பட்டதா?

சட்ட மசோதாவில் அறிவிக்கப்பட்ட மேற்கூறிய உறுதிமொழிகளில் சிறு துரும்பை கூட எடுத்துப்போடாத அரசிற்கு ஏன் இவ்வளவு அவசர கதியில் ஒரு பாராட்டுக் விழா?

காவிரிப்படுகை வேளாண்  மண்டல பாதுகாப்பு சட்டத்தை  நடைமுறையில் பொருளடையதாக மாற்ற வேண்டுமானால், சூழலியல் பாதிப்பு மிகுந்த நதி நீர் இணைப்பு போன்ற மாய மான்களை காட்டி ஏமாற்றாமல்,காவிரி வேளாண் மண்டல விவசாய தற்கொலைகளை தடுக்கவும்,விவசாயிகளை கடனில் இருந்து மீட்கவும்  குறைந்தபட்ச செயல்திட்டமும் நீண்டகால செயல்திட்டமும் அவசியம்.இந்த திட்டங்களை வகுக்கவும் நடைமுறைப்படுத்தவும் செயல்திறனுடைய நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண் மண்டல திட்டங்களை செயல்படுத்த, காவிரி வேளாண் மண்டல ஆணையம் ஒன்று  உடனடியாக உருவாக்க வேண்டும்.இந்த அமைப்பு  ஒரு பொருளாதாரத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக அரசு உருவாக்க வேண்டும். இந்த ஆணையமானது காவிரி வேளாண் மண்டலத்தின் நீடித்த சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.அதற்காக பொருளாதார வல்லுனர்கள், வேளாண் அறிஞர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிகள் கொண்ட குழு அமைத்து ஆலோசனைப் பெற்று அமல்படுத்த முயற்சிக்கவேண்டும்.

“காவிரி காப்பாளர்” செய்வாரா? காவிரி காப்பாளர் பட்டம் கொடுத்தவர்களாவது இதை வலியுறுத்துவார்களா?

 

-அருண் நெடுஞ்சழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW