தில்லி வன்முறையும் ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும்..

28 Feb 2020

நடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62  இல் வெற்றி பெற்று, பாஜகவை ஒற்றை இலக்கத்தில்  கட்டுப்படுத்திய ஆம் ஆத்மியின் வெற்றியை ஜனநாயக சக்திகள் கொண்டாடிவந்த நிலையில்தான், குடியிரிமை திருத்த சட்டதிற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்திய ஷாஹீன் பாக் போராட்டம், வடகிழக்கு தில்லி வன்முறை ஆகிய மைய அரசியல் நிகழ்விலிருந்து விலகி நிற்கிற  தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின்    “கள்ள மௌனம்”  கடும் விமர்சனத்திற்குள்ளாகிவருகிறது. தில்லி வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்கு  உள்துறை அமைச்சர் அமித் ஷாவோடு, கள்ள மௌனம் காத்த தில்லி முதல்வரும் பொறுப்பாளியாகிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான அதீத தேசியவாத பிரச்சாரத்தை தில்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சார உக்தியாக  பாஜக மேற்கொண்டது.ஷாஹீன் பாக் போராட்டத்தை தேச விரோத சக்திகள் என பரப்புரை செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, CAA போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டு, கல்வி,சுகாதரம்,வீட்டு வசதி உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை மையப்படுத்தி பிரச்சாரத்தை கட்டமைத்துக் கொண்டது. இந்த உக்தி  வெற்றி பெற்றது. ஆனால் இந்த உக்தியை தேர்தல் முடிவுக்கு பிறகும் கெஜ்ரிவால் கடைபிடித்து வருவதுதான் கெஜ்ரிவாலின் அரசியல் கொள்கை குறித்த விமர்சனத்திற்கு காரணமாக உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான ஆம் ஆத்மியின் “மைய நிலைப்பாடு” அல்லது “கள்ள மௌன” நிலைப்பாடு என்பது  அதன்  கொள்கையற்ற சந்தர்ப்பவாத அரசியலையே வெளிப்படுத்துகிறது. இந்த கள்ள மௌன நிலைப்பாடு முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது. நிலவுகிற காவி கார்ப்பரேட் அரசியல் முரண்பாட்டை ஜனநாயக ரீதியாக தீர்க்க முயல்கிற சிவில் சமூகத்தின் பல்வேறு வர்க்கப் பிரிவினரின் ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரானது.

ஆம் ஆத்மி கட்சி சமூகத்தின் எந்த வர்க்கத்திற்கான கட்சி என்பதை புரிந்துகொள்வதில் இருந்து அதன் கள்ள மௌன நிலைப்பாட்டையும் கொள்கை வெறுமைவாதத்திற்குமான காரணத்தை அறியலாம்.

ஆம் ஆத்மியின் சமூகஅடித்தளம்

ஆம் ஆத்மி கட்சியின்  தோற்றம் உலகமய  காலகட்டத்தில், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் அரசியல் விழுப்புணர்வு எழுச்சியின் விளைவில்  உருவானது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், முதலாளித்துவம் தோற்றுவித்த சமூகப் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட நகரப்புற நடுத்தர வர்க்கத்தினர், சிறு முதலீட்டாளர்கள், வணிகரகள் உள்ளிட்ட சிவில் சமூகத்தின் வர்க்கப் பிரிவினரை ஆம் ஆத்மி அடித்தளமாக கொண்டுள்ளது.

சிவில் சமூகத்தின் பல்வேறு சமூக சக்திகளும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகளாலும் அதன் நாடாளுமன்ற ஆட்சி முறையாலும்  அதிருப்தியடைந்துள்ள  வர்க்கங்களாக நீடித்தாலும், கல்வியறிவு மற்றும் தகவல் கட்டமைப்பு வசதிகளை எளிதாக பெறுகிற நகர்ப்புற நடுத்தர வர்க்கமே, விரைவாக  அரசியல் விழுணர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறது.

அதனால், உலகமய காலகட்டத்தில் சமூகப் பொருளாதார நெருக்கடிகளாக  வெளிப்படுகிற சூழலியல் சிக்கல்கள் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, ஊழல், குடிநீர், சுகாதரம், போக்குவரத்து, மருத்துவ சேவை உள்ளிட்ட அன்றாட சமூக நல சேவைகளைப் பெறுவதில் பின்னடைவு போன்ற சிக்கல்களின் மீது நடுத்தர வர்க்கம் அதன் விழுப்புணர்வு மட்டத்தில் இருந்து தலையீடு செய்கிறது.

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் அரசியல் விழிப்புணர்வும் ஆம் ஆத்மியின் அரசியல் நிலைப்பாடும்

காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புத்  தோல்விக்கு எதிரான அலை, நிர்பயா ஒடுக்குமுறைக்கு எதிரான அலை, ஊழலுக்கு எதிரான அலை என ஆளும் கட்சியின் அரசியல் தோல்வியின் மீதான எதிர்ப்பிலிருந்து உருவான நகர்ப்புற நடுத்தர வர்க்க அரசியல் விழுப்புணர்வு எழுச்சியானது, காங்கிரசை தலைநகரில் வீழ்த்தியது. இந்த  நகர்ப்புற நடுத்தரவர்க்க அரசியல் உணர்வின் தோள்மீது ஏறிக்கொண்டே அண்ணா ஹசாரே இயக்கத்தில் இருந்து விலகி ஆம் ஆத்மியை உருவாக்கி அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை பிடித்தார்.

  • நகர்ப்புற நடுத்தர வர்க்கமானது, பாரப்பரிய தேசிய கட்சிகளின் மீது ஆழமான அவநம்பிக்கை கொண்டுள்ளது. பாரம்பரிய தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் வலதுசாரி காட்சியான பாஜக மற்றும் பாரம்பரிய இடது கட்சிகளான CPI &CPI(M) ஐ புறக்கணிக்கிறது.
  • நகர்ப்புற நடுத்தர வர்க்கமானது,தேசியஇன மக்கள் மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை, ராணுவ மாயை, தேசப்பற்று உள்ளிட்ட இந்திய தேசிய கருத்துக்கள் மற்றும் ஏகாதிபத்திய கொள்கை சார்பு உள்ளிட்டவை குறித்தெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் உருவாக்கியுள்ள கருத்தியல் மேலாண்மைக்கு இன்னும் இரையாகியே வருகிறது.
  • நகர்ப்புற நடுத்தர வர்க்கமானது, மதம் சாதி உள்ளிட்ட பழைய நிலப்பிரபுத்துவ கருத்தியல்களில் ஆழமாக நம்பிக்கை கொண்டு செத்துப் போன பழைய உலகின் கருத்தியல் மேலாண்மைக்கு இன்னும் இரையாகி வருகிறது.

ஆம் ஆதிமியின் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாட்டையும்  மேற்கூறிய அதன் சமூக அடித்தள அணிகளின் அரசியல் விழுப்பிணர்வு மட்டத்தில் இருந்தே காண வேண்டும்.

 

உதாரணமாக

  • காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து -370 ஐ ரத்து செய்ததை ஆம் ஆத்மி வரவேற்றது. இதன் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக ஓட்டளித்தது. 370 சட்டப் பிரிவை ரத்து செய்வதால் காஷ்மீர், அமைதியும் வளர்ச்சியும் அடையும் என்றது. காஷ்மீர், தேசிய இன ஒடுக்குமுறை குறித்தெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் தவறான உணர்வுகளுக்கு முரண்படாமல் ஆம் ஆத்மி அதற்கு ஒத்தூதியது.
  • உயர் சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை  ஆம் ஆத்மி வரவேற்றது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்த்திருக்கின்றார் என லாலு பிரசாத் யாதவ் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. மண்டல் கமிஷனுக்கு பிந்தைய காலகட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், பட்டியலின சாதிகளுக்கு எதிரான நகரப்புற வர்க்கத்தின் (இட ஒதுக்கீடு எதிர்ப்புஎனும்) தவறான உணர்வுநிலையின் வெளிப்பாடு இது.
  • மதம் குறித்த ஆம் ஆத்மியின் நிலைப்பாடு மென் இந்துத்துவ சார்புடையது.அதனால்தான் தேர்தல் நேரத்தில் அனுமன் கோயிலுக்கு சென்று இந்துக்களின் ஓட்டை நழுவ விடாமல் தன்னை மென் இந்துவாக காட்டிக் கொண்டார்.
  • மேலும் ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் காவி பாசிஸ்ட்கள் தாக்கியபோதும் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் மற்றும் ஷாகீன் பாக்கில் துப்பாக்கியோடு திரிந்த  இந்துத்துவ தீவிரவாதிகள் குறித்தெல்லாம் கள்ள மௌனம் காத்தார்.

ஆக, மேற்கூறிய ஆத்மியின் அரசியல் நிலைப்பாடு என்பது அதன் சமூக அடித்தள வர்க்கப் பிரிவினரின் தவறான அரசியல் விழுப்புணர்வு மட்டத்தை சார்ந்து மட்டுமே எடுக்கப்படுகிற ஜனநாயக விரோத முடிவுகளாக உள்ளது தெளிவாகிறது.

சமகால சமூக முரண்பாடுகளும் அதைக் களைவதற்கான ஜனநாயகப் போராட்டங்கள்  குறித்து ஆம் ஆத்மிக்கு  எந்தவித அடிப்படை அறிவும் கொள்கையும் முற்றிலுமாக கிடையாது. எனவேதான் ஆம் ஆத்மி கட்சியானது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத(PRAGMATIC) கட்சியாக உள்ளது.

சமூகத்தை மென் மேலும் ஜனநாயகப் படுத்துகிற அரசியல் கொள்கையும் திட்டமும் இல்லாத கட்சியானது நடைமுறையில் சந்தர்ப்பாவாதத்தை மட்டுமே தேர்ந்துகொள்ள முடியும். அதன் கொள்கையும் நிலைப்பாடும் புறநிலை மாற்றங்களை தனக்கு சாதமாக மாற்றிக் கொள்வதையே ஆதாரமாக கொண்டுள்ளது.

இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டைத்தான் வலதும் இல்லை இடதும் இல்லை “மய்யம்” என ஆர்ப்பட்டமாக  பெயர் சூட்டப்படுகிறது. கமலஹாசனின் மக்கள் நீதி  மய்யம்’மும் ஆம் ஆத்மியின் தமிழக பதிப்புத்தான். ஆம் ஆத்மியின் அனைத்து பண்பும் மக்கள் நீதி  கட்சிக்கு பொருந்தும்.

ஆம் ஆத்மியின் இந்த “மய்ய நிலைப்பாடு” அல்லது “கள்ள மௌன” நிலைப்பாடுதான், தில்லி பற்றி எரியும்போது மௌனமாக வேடிக்கை பார்க்கிற நிலை எடுக்க வைத்தது. பிறகு புறநிலை மாறியதும் அதை தன்வயப்படுத்தத் தொடங்கியது.

தில்லி வன்முறையை வேடிக்கை பார்த்த ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாதம்

பிப்ரவரி 23 இல் தில்லியின் வடகிழக்குப் பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடங்கிய இந்துத்வ வன்முறை வெறியாட்டத்திற்கு அம்மாநில முதல்வர் கேஜ்ரிவ்வல் எவ்வாறு செயலாற்றினார்?

”எல்லோரும் அமைதி காக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிசெய்ய வேண்டும்”என டிவிட்டர் பதிவுப் போடுவதை தவிர எதுவுமே செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தார்.

என்ன செய்திருக்கலாம்? “நிராதவரான முதல்வராக” இருக்க வேண்டாம், அதேநேரம் இவையெல்லாம் முதல்வர் செய்திருக்கலாம் என தில்லியின் முன்னால் காங்கிரஸ் பொறுப்பாளர்  அஜய் மகேன் டிவிட்டர் பதிவு போடுகிறார்.அவை வருமாறு

  • கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவி கேட்பதற்கும், போலீஸ் உதவி கிடைக்காமல் புகார் தெரிவிப்பதற்கும் உதவி எண்களை அறிவித்திருக்கலாம். தனது நேரடி கட்டுப்பாட்டில் இதை செய்திருக்கலாம்.
  • உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி வன்முறையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஆலோசனைகளைக் கேட்டிருக்கலாம்.
  • பகுதி கவுன்சிலர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்டவர்களை உள்ளடக்கிய அமைதி குழுக்களை அமைத்திருக்கலாம்.

ஆனால் இவை எதையுமே செய்யாமல் கள்ள மௌனத்துடன் அனைத்தையும் மாநில முதல்வர் வேடிக்கை பார்த்தார். தனது கைப்பேசியில் ட்விட்டர் பதிவு போடுவதைத் தவிர குறைந்த பட்ச அரசு வளத்தைக் கூட அவர் பயன்படுத்தவில்லை.

வன்முறையால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதும், வன்முறைக்கு எதிரான சிவில் சமூகம் எதிர்வினையாற்றத் தொடங்கியதும், பாஜகவிற்கு எதிராகவும் அமித் ஷாவிற்கு எதிராக காங்கிரஸ் பேசத் தொடங்கியதும், நீதிமன்றம் தலையீடு செய்யத் தொடங்கியதும், புறநிலைமை முற்றிலும் பாஜகவிற்கு எதிராக திரும்பியதை அடுத்து, தனது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களைக் கொண்டு பாஜகவிற்கு எதிராக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்துகிறார். பாஜகவிற்கு எதிரான போக்கை தனக்கு சாதமாக மாற்ற முயல்கிறார். தில்லியில் இராணுவத்தை இறக்க வேண்டும் என அறிக்கை விடுகிறார்.

மாநில முதல்வராக இருந்துகொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல் இருந்ததை நேரடியாக  நீதிமன்றம் கண்டித்த பின்னர்தான், நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கெஜ்ரிவால் பார்வையிடுகிறார். ஒரு மாநில முதல்வரின் செயலின்மையை நீதிமன்றம் கண்டிக்கிற நிலையை ஏற்படுத்திக் கொண்டது கெஜ்ரிவாலின் சந்தர்ப்பவாத அரசியல் பண்பால் ஏற்பட்ட அவமானகரமான நிலையாகும்.

ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலானது, தனது கட்சியின் சமூக அடித்தளமான நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தை முதலாளிய வர்க்க ஆதிக்கத்தோடு ஒத்துப் போக வற்புறுத்துகிறது, ஒன்றுகலந்து வாழக் கோருகிறது. முதலாளித்துவ அரசியல் சாசன ஆட்சியின் மாயைகளில் இருந்து நகர்ப்புற நடத்தற  வர்க்கத்தை    மீட்காமல் வெகுளித்தனமாக பங்கு கொள்ள வைக்கிறது. சமூக முரண்பாடுகள் கொதிநிலையை எட்டி வெடிக்கிறபோது, ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும் தாமாகவே அம்பலமாகும். தற்போது அம்பலமாகிவருவதைப் போல!

 

– அருண் நெடுஞ்சழியன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW