தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பாசிச பயங்கரம் – இஸ்லாமிய சகோதரர்கள் உடன் துணை நிற்போம்! காவி பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவோம்!

27 Feb 2020

-தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் அறிக்கை

 

பிப்ரவரி 23 ஆம் நாளில் இருந்து இன்று ( பிப் 26) வரை தில்லியில் வடக்குகிழக்கு பகுதி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தளங்கள், வாகனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டும் எரியூட்டப்பட்டும் வருகின்றன. தடிகள், இரும்பு கம்பிகள், ட்யூப் லைட்கள், பிவிசி பைப்கள் மட்டுமின்றி துப்பாக்கிகளோடு சங் பரிவார சக்திகள் தலைநகரின் வீதிகளில் கோரத் தாண்டவம் ஆடிவருகின்றனர். இதுவரை 23 பேரின் உடல்கள் மருத்துவமனையை அடைந்துள்ளன, 190 க்கும் மேற்பட்டோர் காயம்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. ஒரு தலைமை காவரும், மத்திய உளவுத்துறை இன்பார்மர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த கலவரத்திற்கு பாசகவே பொறுப்பு என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். காவல்துறையால் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை, ஆகையால் இராணுவத்தை அழைக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

முன்னதாக, பிப்ரவரி 23 அன்று கபில் மிஷ்ரா என்ற பாசகவின் தலைவர் பாபர்பூருக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். தன்னுடன் வந்தவர்களை சிஏஏ ஆதரவுப் போராட்டக்காரர்கள் என்று சொல்லியுள்ளார். அங்கே சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி ‘ மூன்று நாட்களுக்குள் இந்தப் போராட்டத்தைக் காவல்துறை கலைத்து ஜாப்ராபாத் சாலையை திறக்கவில்லை என்றால், நானே இப்பிரச்சனையைக் கையில் எடுப்பேன்” என்று பேசிய காணொளி காணக் கிடைக்கிறது. ஆனால், அவர் சென்ற சில நிமிடங்களிலேயே சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது இந்துத்துவ சக்திகள் கல்லெறியத் தொடங்கியுள்ளனர். அடுத்த நாள் இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையாக இது வெடித்துள்ளது.

இணையத்தில் வரக்கூடிய புகைப்படங்கள், காணொளிகள் மிகக் கொடூரமானதாக இருக்கின்றது.  மோடி-அமித் ஷா தலைமையிலான இந்த ஆட்சி தொடங்கும்போது நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்கும் போது பாசகவினர் எழுப்பிய ’ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் இப்போது தில்லியின் தெருக்களில் ஒலிக்கின்றது. அப்படி சொல்பவர்கள் பல்வேறு ஆயுதங்களுடன் இஸ்லாமியர்களைத் தாக்குகின்றனர். பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ’நீ இந்துவா? முஸ்லிமா? பேண்டைக் கழற்று’ என்று கேட்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். காவல்துறை இந்த வன்முறை வெறியர்களை வேடிக்கை பார்க்கவில்லை, ஊக்கப்படுத்தியுள்ளது, தானும் சேர்ந்து கல்லெறிந்துள்ளது, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் வருகையின் போது இந்தியாவின் தலைநகரிலேயே இப்படியொரு கலவரத்தை செய்வதற்கு இந்துத்துவ சக்திகள் துணிந்திருக்கிறார்கள் என்றால் தாம் எதற்கும் தயார் என்ற செய்தியை அறிவிக்கின்றனர். தில்லி உயர்நீதிமன்றம் கலவரத்தைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியதோடு இன்னொரு ’1984’ ஐ தில்லியில் அனுமதிக்க முடியாது. அதுவும் இந்த நீதிமன்றம் அதை பார்த்துக் கொண்டிருக்காது’ என்று சொல்லியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பொறுப்பேற்குமாறு சொல்லி பதவியில் இருந்து விலகக் கோரியுள்ளது காங்கிரசு கட்சி. ஆனால், பாசக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிரித்தபடியே ஊடகங்களை சந்திக்கிறார், ”காங்கிரசு கைகளில் இரத்தம் படிந்திருக்கிறது, அக்கட்சி இதுபற்றி பேசலாமா?’ என்கிறார். ரவிசங்கர் பிரசாத் ;காங்கிரசு இதை அரசியலாக்குகிறது’ என்கிறார். ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிய படி இந்த வன்முறையை நிகழ்த்தியவர்களைக் கண்டிக்கவோ அல்லது இதை தூண்டிவிட்ட கபில் மிஷ்ராவைக்கூட கண்டிக்க மறுக்கிறார் பிரகாஷ் ஜவடேகர்.

பாசிசம் இந்தியாவில் என்ன வடிவத்தில் வரும் என்ற விவாதம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இந்துதேசிய வெறியூட்டப்பட்டு காவல்துறையும் காவிப்படையும் சேர்ந்து தலைநகரின் தெருக்களில் இறங்கி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறியாட்டம் போடுவது பாசிச வன்முறையின் ஒரு பகுதிதான். இச்சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே இப்போதுள்ள கேள்வி.

சிஏஏ வுக்கு எதிரானப் போராட்டக்காரர்களை தேச துரோகிகளாக சித்திரித்து அவர்களுக்கு எதிராக சுமார் இரு மாதங்களாக திரிகொழுத்திக் கொண்டிருந்த பாசக ஒருவழியாக தன்னுடைய காவிபடையே ஏவிவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டின் மூலம் சுமார் 30 பேரின் உயிர்களைப் பலி வாங்கிப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது பாசக. இப்போது தில்லியில் காவல் துறையைப் பக்கப் பலமாக வைத்துக்கொண்டு காவிப் படை மூலம் இந்த வன்முறையை நிகழ்த்திக் காட்டி இஸ்லாமியர்களைத் தண்டித்துள்ளது மோடி-அமித்ஷா கூட்டணி.

சில பகுதிகளில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி இந்துக்களும் சீக்கியர்களும் தலித் மக்களும் நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியுள்ளனர். ஊடகத்தில் பணியாற்றக் கூடியோர் இரவு பகல் பாராது உயிரைப் பணயம் வைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது மிகுந்த நம்பிக்கைக்குரியது.

நாடு முழுவதும் உடனடியாக காவிப் பாசிச வன்முறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு துணைநிற்க ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும். பாசிச எதிர்ப்பு சனநாயக இயக்கம் விரிவடைய வேண்டிய அவசியத்தில் குடியுரிமைப் திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரானப் போராட்டத்தை முன்னிலும் விரிவாக முன்னெடுத்துச் செல்ல நாம் முயலவேண்டும். பாசிச பயங்கரவாதிகளின் இரக்கமற்ற கொலைகளை, கலவரங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மக்களின் நியாய உணர்ச்சியைத் தட்டியெழுப்புவதற்கு இந்த நேரத்தில் பாடுபட வேண்டும் என தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW