பொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…
18.2.2020 இன்று பொதுவுடமைப் போராளி சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 161வது பிறந்த நாள். சென்னை நகரத்தின் சிவப்புப் போராளியாக, தென்னிந்திய தொழிலாளர்களின் தோழனாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தோழர் சிங்காரவேலர். சென்னை குப்பம் பகுதியிலிருந்து சமூகப் பற்றாளராக, சர்வதேசியவாதியாக கூர்மைமிக்க சிந்தனையாளராக பல அறிவுத்தளங்களில் செயல்பட்ட தலைவர் சிங்காரவேலர். புத்திஸ்ட்டாக இருந்து கம்யூனிஸ்டாக மாறிய தலைவர். இத்தகைய போராளித்தலைவரின் வாழ்க்கைக் குறிப்பை, மக்கள் பணியை சுருக்கமாகப் பார்ப்போம்.
- 1860ல் பிப்ரவரி 18ல் மயிலாப்பூர் நடுக்குப்பத்தில் திரு. வெங்கடாசலம், திருமதி, வள்ளியம்மை ஆகியோருக்கு மூன்றாவது மகனாக சிங்காரவேலு பிறந்தார்.
- 1884ல் எஃப்.ஏ. பட்டத்தை சென்னை சேத்துப்பட்டில் இருந்த கிருத்தவ கல்லூரியில் பயின்று பெற்றார்.
- 1889ல் அங்கம்மையை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்தார். அதற்காக அவர் எதிர்ப்பை சந்தித்தார்.
- 1900ல் பர்மா டிரேடர்ஸ் என்ற வணிக நிறுவனத்தைத் தொடங்கினார்.
- 1902ல் அரிசி விற்பனை செய்வதற்கான வர்த்தக தொடர்பை ஏற்படுத்த லண்டன் சென்றார்.
- இலண்டன் உலக பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டார்.
- 1907ல் ‘இன்ப்ளுவென்சிய‘ காய்ச்சல் சென்னை குப்பங்களில் ஒரு கொள்ளை நோயாக உருவாகி மக்களைத் தாக்கியபோது தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணம் ஏற்பாடு செய்தார்.
- 1921ல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று வழக்கறிஞர் அங்கியை பொதுமக்கள் மத்தியில் தீ வைத்து கொளுத்தி வழக்கறிஞர் தொழிலை துறந்தார்.
- 1922ல் ஆகஸ்ட் 25ல் திருவான்மியூரில் உள்ள சிங்காரவேலரின் வீடு ஆங்கிலேயரால் சோதனையிடப்பட்டது.
- 1922ல் டிசம்பரில் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
- 1923ல் மே 1ல் இந்தியாவில் முதன்முதலாக மே தினம் சிங்காரவேலரால் சென்னை உயர்நீதிமன்ற கடற்கரையில் கொண்டாடப்பட்டது.
- 1923ல் இந்துஸ்தான் லேபர்கிசான் கட்சியை ஆரம்பித்தார்.
- 1924ல் மார்ச் 6ல் கான்பூர் ‘போல்ஸ்விக் சதி‘ வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.
- 1924ல் ஆகஸ்ட் 30ல் கழிவுநீர் தொழிலாளர் சங்க கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
- 1925ல் சென்னை நகராண்மை கழகத்திற்கு காங்கிரஸ் சுயராஜ்ய கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு 13வது யானைகவுளி டிவிஷனுக்கு அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1925ல் டிசம்பர், கான்பூரில் நடந்த முதலாவது கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.
- 1926ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1927 பிப்ரவரியில் சென்னை வந்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் சக்வத்வாலா எம்.பி. அவர்களை வரவேற்றார்.
- 1927 ஆகஸ்டு, அமெரிக்காவில் சாக்கோ, வான்சிட்டி ஆகிய தொழிலாளர் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை கண்டித்து கண்டன கூட்டம் நடத்தினார்.
- 1928 சூலை மாதம் தென்னிந்திய ரயில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதற்காக கைதுசெய்யப்பட்டார்.
- 1930 ஆகஸ்டு மாதம் சென்னை, திருச்சி, கோவை, சிறைகளில் 18 மாதங்கள் இருந்து பின் விடுதலை செய்யப்பட்டார்.
- 1931 டிசம்பர் 26, சுயமரியாதை மாநாட்டை தொடங்கி வைத்து சொற்பொழிவு ஆற்றினார்.
- 1932ல் சேலம் மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் தலைமையுரை ஆற்றினார்.
- 1933ல் ஏப்ரல், சிங்காரவேலரின் வீடு மீண்டும் போலீசாரால் சோதனையிடப்பட்டது.
- 1933 டிசம்பர், சென்னையில் நடைபெற்ற நாத்திக மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.
- 1935 “புதிய உலகம்“ பத்திரிகை வெளிவரக் காரணமாக இருந்தார்.
- 1935 சென்னை ட்ராம்வே மின்சாரத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1938ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- 1943 சூன் மாதம் நடந்த தீண்டாமை ஒழிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
- 1945 அச்சு தொழிலாளர் சங்க மாநாட்டில் தலைமையுரை ஆற்றினார்.
- 1946 பிப்ரவரி மைலாப்பூர் முண்டக்கன்னி அம்மன் கோயில் தெருவில் உள்ள தமது வீட்டில் காலமானார்.
இவை சுருக்கமான வரலாற்றுச் செய்திதான். “சிங்காரவேலரின் வாழ்வும் சிந்தனையும்“ என்கிற நூலில் இவரின் செயல் குறித்து விரிவாக பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட பல்வேறு தளங்களில் களப்பணியை ஆற்றி வீரப்போராளியாக மக்களுக்காகவே வாழ்ந்துகாட்டியிருக்கிறார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலர் என்றால் மிகையாகாது.
தமிழ்ச்சமூகத்தில் அரசியல் ஆளுமைகளாக அறியப்பட்ட பல தலைவர்கள் போல் சிங்காரவேலர் அறியப்படவில்லை. கடலோடி மக்களில் ஒருவராக பிறந்து ஒட்டுமொத்த மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்து பொதுவுடமையராகி பல இன்னல்களைக் கண்டிருக்கிறார். உழைப்பாளிகளான மீனவ சமூகத்திலிருந்து உருவெடுத்த அறிவாளுமை ஒருவறென்றால் அவர் ம.சிங்காரவேலர் என்கிற மயிலாப்பூர் சிங்காரவேலுதான். இவரின் புகழை, நினைவைப் போற்றுபவர்கள் மீனவ கிராமங்களும், மீனவர்களுமாகத்தான் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கக்கூடியது. சமூகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளும் சக்தியாக செயலாற்றிய இத்தகைய அறிவாளுமைகளை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இன்றைய சூழலில் பாசிச சக்திகள் மேலோங்கி வருகிறார்கள். சமூகத்தை, மக்களை பிற்போக்கு சகதிக்குள் தள்ளும் வேலையை தீவிரமாக செய்துகொண்டிருக்கிறது பாஜக மோடி அமித்ஷா கும்பல். இதனை முறியடித்து இடதுசாரி, சனநாயக சக்திகளின் ஐக்கியத்தை வலுவாக்கிடும் சூழலில் நாம் இருக்கிறோம். உழைக்கும் மக்கள் ஒற்றுமை, சாதி, மத பேதம் ஒழிந்த சமத்துவ சமூகத்தை உருவாக்கும் கனவில் நாமும், இந்து ராஜ்ஜியத்தை கட்டியமைத்திட காவி கூட்டங்களும் என இருவேறு முனையில் இருக்கிறோம். இவ்வேளையில் நாம் நமக்கான முன்னோடிகளை, முற்போக்கு போராளிகளின் பாத்திரத்தை நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.
பொதுவுடமைப் போராளி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ம. சிங்காரவேலரின் மக்கள் பணியை போற்றுவோம். மக்களிடம் பரப்புவோம். இத்தகைய உழைப்பாளி மக்கள் ஆளுமையின் அரும்பணி இச்சமூகத்தில் அழியாமல் பாதுகாத்திட பாடுபடுவது நமது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கடமையாகும்.
-ரமணி, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மாவோ சிந்தனை)