காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தமிழக முதல்வர் தகவல் – உடனடி வரவேற்பும், சில ஐயங்களும்.
2012 மீத்தேன் திட்ட அறிவிப்புகள் மெதுவாக கசிய தொடங்கியவுடன், ஐயா நம்மாழ்வார், ஐயா திருநாவுக்கரசு மற்றும் தோழர் இரணியன் ஆகியோர் உடனடியாக அதன் அபாயத்தை உணர்ந்து கொண்டு செய்திகளை வெளியே எடுத்து வந்தனர். பிறகு ஐயா நம்மாழ்வார் அவர்கள் ஒரு பரப்புரை இயக்கத்தை தொடங்கி மக்கள் மத்தியிலேயே செய்திகளை எடுத்துச் சென்றார். இன்று தமிழ்த்தேச மக்கள் முன்னணியாக இருக்கின்ற நாங்களும் உடனடியாக காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு கூட்டு நடவடிக்கை தொடங்கி காவிரிப்படுகையில் மூன்று மாவட்டங்களிலும் பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டதோடு, திட்டப் பணிகள் தொடங்கிய பகுதிகளில் மக்களோடு மக்களாக போராட்ட களத்தில் நின்று பணிகளை தடுத்து நிறுத்தி வருவாய்த்துறை மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது நோக்கி கொண்டு வந்து நிறுத்தினோம். பிறகு தோழர்கள் இரணியன் விஷ்ணு ஆகியோர் நேரடியாக பாதிக்கப்படவிருக்கின்ற பகுதிகளில் பணியாற்றி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பை உருவாக்கி பேராசிரியர் ஜெயராமன், ஐயா திருநாவுக்கரசு என பல தோழர்களும் பங்குபெற்று லட்சக்கணக்கான மக்களை சென்றடைகின்ற பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டனர். அதனூடாக ஒரு பரந்த விழிப்புணர்வு ஏற்பட்டு பல்வேறு இயக்கங்களும் பல்வேறு பகுதிகளில் மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்தனர்.
இது 2014 பாராளுமன்ற தேர்தலில் எதிரொலித்து தேர்தல் பரப்புரைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பொதுக்கூட்டத்தில் மீத்தேன் திட்டத்தை வல்லுநர் குழு முடிவின் அடிப்படையில் ‘அமுல்படுத்த மாட்டோம்’ என அறிவித்தார். ஆனால் அதன் பிறகு மீத்தேன் எடுக்க வில்லை ஹைட்ரோகார்பன் எடுக்கிறோம் என எண்ணையும் எரிவாயுவும் எடுப்பதற்கான பலகட்ட அறிவிப்புகளை ஏலத்தை மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த 50 ஆண்டு காலமாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் எரிவாயு துரப்பண பணி கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்களை மாசடைய செய்துள்ளன. எனவே 2014க்கு பிறகு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் கெயில் எரிவாயு குழாய் பணிகளையும் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமன்றி 2012 மீத்தேன் எதிர்ப்பு திட்ட நடவடிக்கையின் பொழுதே காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. பிறகு சமீபத்தில் விளை நில பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் இன்று கோரிக்கையும் தோழர் இரணியனை ஒருங்கிணைப்பாளராக கொண்ட ‘தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க கடந்த 7 ஆண்டு காலமாக மக்கள் போராட்டங்களும் கோரிக்கைகளும் செவிசாய்க்க படாமல் கடுமையாக ஒடுக்கப்பட்டு பலர் சிறையில் தள்ளப்பட்டு திட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில்தான் இவ்வளவு காலத்திற்குப் பிறகு, 2014 ஜெயலலிதா அம்மையாரின் மீத்தேன் திட்ட நிறுத்தம் அறிவிப்பிற்கு பிறகு, தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு அறிவிப்பாக வெளிவந்துள்ளது.
இது நீண்ட காலப் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எதிர்கால காவிரிப்படுகை பாதுகாப்பு நோக்கிலும் உலக அளவில் விழிப்புற்று வருகிற சூழலியல் இயக்க நோக்கிலும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்ற கருத்தின் அடிப்படையில் வரவேற்கப்பட கூடியதாகும். ஆனால் அச்சத்துக்கு ஐயத்துக்கும் உரிய வினாக்கள் அதைவிட அதிகமாக எழுகின்றன. ஏனென்றால் காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற கோரிக்கையின் முழு பொருளை புரிந்து ஏற்றுக்கொண்டுதான் இந்த அரசு அறிவித்து இருக்கிறதா? என்பதுதான் நமது கேள்வி. ஏனென்றால் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு மத்திய அரசால், ஓ.என்.ஜி.சியாள் மறைமுகமாக அதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது நமது அனைவரின் குற்றச்சாட்டு.
மேலும் கடந்த மூன்று வருடங்களாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் மத்திய அரசின் மூன்று கட்ட ஏலங்ளும், திட்டப்பணிகள் தொடங்குவதும், கெயில் குழாய் பதிப்பதும் அதை எதிர்ப்பவர்கள் மீது வழக்கு போடுவதும் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி காவிரிப் படுகையை ஒட்டி இருக்கின்ற கடல் அடிவாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு பணிகளும் நடந்து வருகின்றன. நேற்றையதினம்கூட HALDIA பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தை 50,000 கோடி மதிப்பில் கடலூரில் நிறுவுவதற்காக அந்நிறுவனத்துடன் பேசியுள்ளீர்கள். மேலும் இரண்டு வருடத்திற்கு முன்பு பூம்புகார் தொடங்கி கடலூர் வரை பெட்ரோகெமிக்கல் மண்டலம் அறிவிக்கப்பட்டு 43 கிராமங்களும் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலமும் கையகப்படுத்த படுவதற்காக காத்திருக்கின்றன. சிதம்பரம் முதல் புதுக்கோட்டை வரை அனல் மின் நிலையங்களுக்கு கையகப்படுத்தப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடைக்கின்றன. கடலூர் முதல் ராமநாதபுரம் வரை தொடங்கப்பட்ட இறால் பண்ணைகளால் காவிரிப் படுகையின் பல ஆயிரம் ஏக்கர்கள் உப்பேரி போய் பாலை நிலங்களாக வெள்ளை பூத்துக் கிடக்கின்றன.
காவிரி ஆற்றிலும் வயல்களின் அடி ஆழத்திலும் மணல் மாபியாக்களால் தோண்டி எடுக்கப்பட்ட மணல் குவாரிகளால் நிலம் குற்றுயிராய் குலை அறுந்து கிடக்கிறது. காவிரி மறுக்கப்பட்டதால் வயல்கள் முதலீட்டு ரியல் எஸ்டேட் மனைகளாக மாறிப் போயுள்ளன. நன்னீர் போக்கற்று போனதால் கடல் நீர் கடைமடை தாண்டி விரைந்து நுழைந்து கொண்டிருக்கிறது. இது அத்தனையும் இன்று காவிரி படுகையை பாதுகாப்பதற்கான உயிர் ஆதாரமான பிரச்சனைகள், ஒரு அறிவிப்பு மட்டும் போதாது அது தேர்தலுக்கு மட்டுமான அறிவிப்பாக இருந்தால் அதைவிட ஆபத்தானது. எனவேதான் உங்கள் அறிவிப்பிற்கு உண்மையான வரவேற்பை தெரிவிக்க இத்தனை விஷயங்களையும் ஐயங்களையும் கோரிக்கையின் ஆழத்தையும் உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். உண்மையிலே நீங்கள் அக்கறையோடு மக்களும் போராட்டக்காரர்களும் வைத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த அறிவிப்பை செய்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். எனவே இந்தக் கோரிக்கையை அமுல்படுத்துவதற்கு, அறிவிப்பை அமுல்படுத்துவதற்கு, சில ஆலோசனைகளையும் முன்வைக்கிறோம்.
அதைப் பரிசீலித்து கவனத்திலெடுத்து செயல்திட்டம் தீட்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
- 1. கடந்த 50 ஆண்டு காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஓ.என்.ஜி.சி ONGC நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிறுத்தி வெளியேற்ற வேண்டும்
- 2. தனியார் நிறுவனங்களுக்கு காவிரிப்படுகையில் கடலடியில் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அரசு ஒப்பந்தம் இட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்
- 3. விவசாயம் சாராத எந்த தொழில் திட்டங்களையும் கடலூர் தொடங்கி புதுக்கோட்டை வரை அமுல்படுத்த தடைவிதிக்க வேண்டும்.
- 4. ஆற்றிலும் விளை நிலங்களிலும் தோண்டப்பட்டு உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும்
- 5. இறால் பண்ணை, அனல் மின் நிலையம், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு எடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட நிலங்களை சீரமைத்து விவசாய பயன்பாட்டிற்கு விவசாயிகளின் கூட்டுறவுடன் ஒப்படைக்க வேண்டும்.
- 6. உள்ளூர் மக்களின் தேவையை தாண்டி வணிக நோக்கத்திற்காக செய்யப்படும் ரியல் எஸ்டேட் மனைகளுக்கு தடைவிதிக்க வேண்டும். அவ்வாறு வீணாக கிடைக்கின்ற நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேண்டும்
- 7. மடத்து நிலம், பண்ணை நிலம் என்ற பெயரில் உற்பத்தித்திறன் அற்று கிடக்கின்ற நிலங்களை உழுபவனுக்கு சொந்தமாக்கி விவசாய கூட்டுறவு களை உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தீட்ட வேண்டும்.
உண்மையிலேயே காவிரிப் படுகையின் விவசாய நிலத்தையும், உழவனையும், காவிரிப்படுகையையும் பாதுகாக்கப்பட்டதாக மாற்ற வேண்டுமானால் இதை பரிசீலியுங்கள், செயல்திட்டம் தீட்டுங்கள் கருத்தில் அல்ல செயலிலும் வரவேற்கின்றோம். தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கோபுரத்தில் எழுந்த தமிழ் ஓசையைக் கேட்டு ஆயிரக்கணக்கான தமிழ் அன்பர்கள் சிலிர்த்து இருப்பார்கள், உங்களை வாழ்த்தி இருப்பார்கள், ஆனால் ஆயிரம் ஆண்டுகாலமாக எழுந்து நிற்கின்ற அந்த கோபுரத்துக்கு வளமை சேர்த்த காவிரி படுகையையயும் உழைத்து களைத்த உழவனும் ஐயத்தோடு நிற்கிறான்… வாக்குக்கான அறிக்கையா ? வாழ்க்கைக்கான அறிக்கையா ?
-பாலன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி