இராசபக்சேவுக்களுக்கு பட்டுக் கம்பளம். இலங்கைக்கு இராணுவ  உதவி. இந்திய-இலங்கை இனக்கொலை கூட்டணியை இனியும் பொறுக்கலாமா?

05 Feb 2020

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழர்கள் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டிவைத்துப் போனார்கள். அன்றைய பொருளாக்க செழுமையை, கட்டிடக் கலைத் திறனை, மக்களின் பண்பாட்டு வாழ்க்கையை உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் காட்டி நிற்கின்றன,  நாம் அதே தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கட்டி வைத்துள்ளோம். நமது தோல்வியின் சின்னமாக, இனப்படுகொலையின் ஆவணமாக, ஆயிரம் ஆயிரம் கசப்பான உண்மைகளையும் நமது கையறு நிலையையும் இது காட்டி நிற்கிறது.

2600 ஆண்டுகளுக்கு முன் நகர நாகரிகத்தோடு வாழ்ந்தவர்கள் என்ற பெருமைமிகு பண்பாட்டைக் கீழடியின் புதைமேட்டுக்குள்  ஆதன்களும் மானச்சிகளும் பாதுகாத்து வைத்திருந்தனர்.  பானைகளில் எழுதப்பட்ட அந்தப் பெயர்களின் மூலம் பாமரனும் எழுத்தறிவுப் பெற்றிருந்த ஓர் அரிய உண்மையை உலகம் அறிய முடிந்தது. இத்தகைய தொன்மைக்கும் பண்பாட்டுச் செழுமைக்கும் முன்னால்நின்று கொண்டுதான் கொத்து கொத்தாய்ப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைக்குழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வான்புகழ் கொண்ட குறளும் நாலடியாரும், நான்மணிக்கடிகையும் என நீதிநூல்கள் பல கண்ட மக்கள்கூட்டம்தான் இன்று நீதிக்காக உலகத்தின் முன் மன்றாடி நிற்பவர்களாகவும் அந்த நீதியை வெல்தற்கான வல்லமையும் வழிவகையும் அற்றவர்களாகவும் நிற்கிறோம்.

காணாமல் போன கோவலனைத் தேடி சோழநாட்டில் இருந்து புறப்பட்டு பாண்டிய நாடு சென்ற கண்ணகி, அவன் கொல்லப்பட்டதை அறிந்து ‘அரசியல் பிழைத்தோர்க்கும் அறம் கூற்றாகும்’ என்றாள்,  நீதிக்காக மதுரையையே எரித்தாள். அந்தக் கண்ணகியை தெய்வமாக வழிபடும் மக்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட 20,000 பேரும் உயிருடன் இல்லை என்ற செய்தி கிளர்ச்சிக்கோ, போராட்டத்திற்கோ உரியதாக இல்லை.

புள்ளிவிவரங்கள் இரத்தம் சிந்துவதில்லை. இன்று ஈழத் தமிழர்களின் சாவுச் செய்திகள் குருதியை சூடாக்குவதில்லை, கண்களைக் குளமாக்குவதில்லை. கேட்டுக் கேட்டு, பார்த்துப் பார்த்து பழகிப் போனதாக மாறிவிட்டது.

சனவரி 20 ஆம் தேதி கொழும்பில் உள்ள ஐநாவின் இலங்கைக்கான பிரதிநிதி ஹானா சிங்கர் உடனான சந்திப்பின் போது இலங்கை அதிபர் கோத்தபய இராசபக்சே, “காணாமல் போனோர் உண்மையில் இறந்துவிட்டார்கள், அவர்களில் பெரும்பாலோர் புலிகளால் கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டவர்கள், போதிய விசாரணைக்குப் பின் மரணச் சான்றிதழ் வழங்கப்படும்”  என்று தெரிவித்ததாக அதிபர் அலுவலக செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பன்னாட்டு ஊடகங்களிலும் இந்திய ஊடகங்களிலும் இடம்பெற்றது. சுமார் 20,000 க்கும் மேற்பட்ட காணாமலாக்கப்பட்டோருக்காக அவர்தம் உறவுகள் கடந்த 1000 நாட்களுக்குப் மேலாகப் போராடி வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கையில் நெருப்பள்ளிப் போட்டுவிட்டது இச்செய்தி. தங்கள் மகன்களோ, மகள்களோ, இணையரோ உயிருடன் வருவார்கள் என்று நம்பியிருந்தோருக்கு மரணச் சான்றிதழ் தருவதாக சொல்கிறார் கோத்தபய. இரத்தமும் சதையுமாய் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் இப்போது மரணச் சான்றிதழில் உள்ள பெயர்களாக சுருங்கிப் போய்விட்டனர்.

விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்தி தனிமைப்படுத்தியவர்கள் அவர்தம் துப்பாக்கிகள் மெளனிக்கப்பட்ட பத்தாண்டுகள் கழித்தும் காணாமலாக்கப்பட்டோர் புலிகளால் கொல்லப்பட்டதாகப் புனையப் பார்க்கிறார்கள். காணாமலாக்கப்பட்டோரில் மூன்று வகையினர் உண்டு. 1. போரின் போது காணாமலாக்கபட்டோர் 2. போர் வளையத்திற்கு வெளியே காணாமலாக்கப்பட்டோர் 3. போர் முடிவுற்ற நிலையில் இலங்கை அரசப் படைகளிடம்  வெறுங்கையோடு சரணடைந்தவர்கள்.

போரில் புலிகளை வென்றுவிட்டதாகச் சொல்லி தரையை முத்தமிட்டார் அன்றைய அதிபரும் இன்றைய பிரதமருமான மகிந்த இராசபக்சே. வெற்றியின் நாயகர்களாக தம்மை அறிவித்துக் கொண்டார்கள். அன்றைக்கு பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர் இந்த போரில் ஈட்டிய வெற்றியின் பெயரால் சிங்கள மக்களால் முடிசூட்டப்பட்டு அதிபராக பதவியில் இருக்கிறார். இதற்கு முன்னமே ஒருமுறை, அப்போதைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே, 2016 சனவரி 15 தைப் பொங்கல் நாளன்று, ’காணாமலாக்கப்பட்டோர் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை’ என்று சொல்லியிருந்தார். ஆனால், இப்போது கோத்தபய சொல்லியிருப்பது அவர்தான் அன்றைக்கு பாதுகாப்பு துறை செயலராக இருந்தார் என்ற வகையில் அவர் கொடுக்கும் வாக்குமூலமாகும்.

வலிந்து காணாமலடிக்கப்பட்டோர் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அப்படி வலிந்து காணாமலடிக்கப்பட்டோரில் சரணடைந்தப் போராளிகளையும் பொது மக்களையும் கொண்டது இலங்கை மட்டுமே. அதிலும்   படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டிருப்பது இலங்கையில் மட்டுமே. இப்படி காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் பட்டியல் மட்டும் 50 ஐ தொடும். இப்படி வெட்கித் தலைகுனியத்தக்க மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்களைச் செய்தவர்களிடம்தான் உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

இறுதிப்போரின் முடிவில் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் பொதுமக்களும் சரணடைந்தார்கள் என்பதை இலங்கை அரசின் அறிக்கைகளும் பல்வேறு பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பதினொரு ஆண்டுகளில் இதுவரை வெறும் 12,000 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். 2017 பிப்ரவரி  மாதத்தில் உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு மையம்(ITJP) இலங்கையில் பாலியல் அடிமைகளாக தமிழ்ப் பெண்கள் நடத்தப்படுவதை அம்பலப்படுத்தி அப்படியான முகாம்கள் நான்கு இடங்களில் இருப்பதை வெளிக் கொண்டுவந்தது. வவுனியாவில் ஒன்றும், புத்தளத்தில் ஒன்றும், கொழும்பில் ஒன்றும் கொழுப்புக்கு வெளியே ஒன்றும் இருப்பதை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கை இவ்வமைப்பின் நிர்வாக இயக்குநர் யாஸ்மின் சூகாவால் பெண்களுக்கெதிரான பாகுபாட்டுக்கு எதிரான ஐநா அமைப்பிடம் ஒப்படைப்பட்டது. இந்த முகாம்கள் கலைக்கப்பட்டனவா? இல்லை அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனரா?

கொழும்பில் பதினொரு இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையின்போது இவ்வாறான தடுப்பு சித்திரவதை முகாம்கள் இருந்தது வெளியில் தெரிந்தது. இது நீதிமன்றப் பதிவிலும் உள்ளது.

காணாமலாக்கப்பட்டோர் பட்டியல் ஒன்றை வெளியிடுவதாக முன்னாள் அதிபர் சிறிசேனா ஒப்புக்கொண்டார் ஆனால், அப்படி ஒரு பட்டியல் வெளியிடப்படவுமில்லை. 2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசு தானே முன்வந்து இணை உபயம் செய்து ஒப்புக்கொண்ட 30/1, 34/1, 40/L.1 தீர்மானங்களின்படியான கடமைகளைச் செய்யத் தவறியுள்ளது. காணாமற்போனோருக்கான அலுவலகம் கண் துடைப்பிற்காகவே திறந்து வைக்கப்பட்டு, ஐ.நா. வில் கணக்கு காட்டப்பட்டு வந்தது. அந்த அலுவலகம் பல்பிடுங்கிய பாம்பு போல் விசாரிப்பதற்குகூட அதிகாரமற்ற, பட்டியல் தயாரிக்கும் அலுவலகமாகும். இந்நிலையில் காணாமலாக்கபப்ட்டோர் பட்டியல் வெளியிடப்படவில்லை, அவர்களின் நிலைப்பற்றி விளக்கம் தரப்பட வில்லை. விசாரணை மேற்கொள்ளப்பட வில்லை. ஆனால், இழப்பீடு கொடுப்பதற்கானப் பணியகத்தை அமைக்க சட்டம் இயற்றிக் கொண்டது இலங்கை அரசு. மரணச் சான்றிதழைக் கொடுத்துவிட்டு மாதந்தோறும் இழப்பீடாக 6000 ரூபாய் கொடுத்து கணக்கை முடித்துக் கொள்ளப் பார்க்கிறது இலங்கை அரசு.

காணாமலாக்கப்பட்டோர் உயிருடன் இல்லை என்றால அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதே பொருள். அப்படி கொல்லப்பட்டார்கள் என்றால் எங்கே? எப்போது? யாரால்? எப்படி? எதற்காக? கொல்லப்பட்டார்கள் என்ற உண்மை சொல்லப்பட்டே ஆக வேண்டும்.

அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்? இட்லர் யூதர்களை ஆஸ்விட்ச் முகாம்களில் வைத்து விச வாயு அனுப்பி மூச்சு திறண்டித்துக் கொன்றானே, அப்படியா? அல்லது இடியமீன் சுத்தியலால் மண்டையில் அடித்து கொன்றானே அப்படியா? அல்லது முன்பே சானல் 4 காணொளிகளில் வெளியிடப்பட்ட காட்சிப் படங்களில் வந்தது போல் அவர்கள் நிர்வாணம் ஆக்கப்பட்டு கண்களூம் கைகளும் கட்டப்பட்டு பின் மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்களா? என்ற உண்மையை நாம் அறிந்தாக வேண்டும்.

அது மட்டுமல்ல, அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு இலங்கையின் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? அவர்கள் மரணத் தண்டனைக்கு உரியவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டதா? அப்படி தீர்ப்பளித்த நீதிபதிகள் யார்? மரணத் தண்டனைக்கான விசாரணையையும், காரணத்தையும் சொல்லக் கூடிய தீர்ப்பு அறிக்கைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறதா? என்பதை இலங்கை அரசு சொல்லியாக வேண்டும்.

அதுமட்டுமல்ல, அப்படி கொல்லப்பட்டோர் எங்கே, எப்படி அடக்கம் செய்யப்பட்டனர்? அந்த பல்லாயிரக்கணக்கான உடல்கள் மண்ணில் புதைக்கப்பட்டனவா? அல்லது எரியூட்டப்பட்டனவா? அல்லது இந்தியப் பெருங்கடலில் வீசப்பட்டனவா? அல்லது விலங்குகளுக்கு உணவாக திண்ணக் கொடுக்கப்பட்டனவா? என்பது குறித்தும் கோத்தபய இராசபக்சே சொல்லியாக வேண்டும்.

வெறும் மரணச் சான்றிதழும் இழப்பீடும் கொடுத்து கணக்கை முடிப்பதற்கு காசு, பணமோ, நகை, நட்டோ, வண்டி வாகனமோ காணாமற் போகவில்லை. பத்து மாதம் சுமந்து ஈன்றெடுக்கப்பட்டு சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்டு இரத்தமும் சதையுமாய் இலங்கைப் படையிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்தான் காணாமல் ஆக்கப்பட்டோர். பூமிப் பந்தில் ஒவ்வொரு மாந்தருக்கும் எந்தெந்த உரிமைகள் இருக்கிறது என்று இந்த உலகம் பறைச்சாற்றி இருக்கிறதோ அந்த உரிமைகளைக் கொண்ட மாந்தர்கள் என்பது அவர்கள் தமிழர்கள் என்பதால் மாறிவிடுமா? என்று உலகத்தை நாம் கேட்டாக வேண்டும்.

கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள் 300 பேரை முதலைகளுக்கு இரையாக்குமாறு கட்டளையிட்டார் கோத்தபய இராசபக்சே என்று அதில் நேரடியாக ஈடுபட்ட வாகன ஓட்டுநர் ஒருவர் பத்திரிகையாளர் மாநாடொன்றில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இறுதிப்போரின் போது வெடித்துச் சிதறிய வான் கரும்புலி ரூபன் அறைகூவல் விடுத்து எழுதிய கடைசிக் கடிதத்தில், “தமிழரில் பெண்கள் உங்களுக்கு, ஆண்கள் கடலிற்கு’ என்று கோத்தபய இராணுவத்திற்கு சொல்லியதைச் சுட்டிக்காட்டி இருந்தார். இந்த கோத்தபய தான் இப்போது அதிபராக அரியணையில் இருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக இலங்கை அரசு தமிழர்களின் தாயகத்தில் நடந்திவரும் கட்டமைப்புரீதியான இன அழிப்பு மேலும் தீவிரப்பட்டு வருகிறது. ஐநா மனிதவுரிமை மன்றத்தில் ஒப்புக்கொண்ட தீர்மானத்தில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்து விட்டார் கோத்தபய.

ஆனால், இந்திய அரசின் கொள்கையில் இலங்கை தொடர்பில் எவ்வித மாற்றமும் இல்லை. இன்றைக்கும் நட்பு நாடென்று சொல்லிவருகிறது இந்திய அரசு. ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனப்படுகொலை என்று ஒரு தீர்மானத்தைக்கூட நாடாளுமன்றத்தில் கொண்டுவர இயலாதவர்களாக நாம் இருந்துவருகிறோம். சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட பன்னாட்டு புலனாய்வும் பொதுவாக்கெப்பும் கோரும் தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் கழிவறைகளில் துடைப்புக் காகிதங்களாக பயன்படுத்தப்படுகின்றன. சட்டமன்ற நாற்காலிகள், நாடாளுமன்ற அமைச்சர் பதவிகள் என்ற கேலிக்கூத்துகளில் மனம் நிறைந்தவர்களாக இருப்பவர்கள்தான் இன்றைக்கு தமிழ் மக்களின் தலைவர்களாக இருக்கிறார்கள்.

மன்மோகன் சிங், மோடி என பிரதமர்கள் மாறினாலும் சிவசங்கர மேனன், நிருபமா ராவ், ஜெய்சங்கர் என வெளியுறவுச் செயலர்கள் மாறினாலும் எம்.கே நாராயணன், அஜித் தோவல் என பாதுகாப்புத் துறை செயலர்கள் மாறினாலும் பிரணாப்  முகர்ஜி, சுஷ்மா சுவராஜ், ஜெய்சங்கர் என வெளியுறவு அமைச்சர்கள் மாறினாலும் ரணில்களுடனும் சிறிசேனாக்களுடனும் இராசபக்சேக்களுடன் கட்டிப்புரளும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இல்லை. சனவரி 18 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோகர் அஜித் தோவல், தமிழர்களைத் திட்டமிட்ட கட்டமைப்பு ரீதியான இன அழிப்புச் செய்துவரும் சிங்கள இனவெறி அரசப்படைகளுக்கு கருவிகள் வாங்குவதற்கென்று இந்தியா இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் பணத்தை வழங்கும் என அறிவித்துள்ளார்.

போன மாதம் கோத்தபய இராசபக்சே இந்தியாவுக்கு வந்துப் போனார். இப்போது பிப்ரவரி 7 முதல் 11 வரையான நான்கு நாட்கள் பயணமாக மகிந்த இராசபக்சே வருகிறார். அரசுறவிய சந்திப்புகளை முடித்து காசிக்கும் மதுராவுக்கும் திருப்பதிக்கும் என்று வழிபடப் போகிறாராம்.

போர் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. அன்றைக்கு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று முத்திரையிட்டு அழித்தார்கள். இந்த பத்தாண்டுகளில் ஒரு புதிய கட்டத்தில் ஈழத்தமிழர் தம் போராட்டம் பயணித்துக் கொண்டிருக்கிறது. போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், இனக் கொலை குற்றங்களுக்கானப் பொறுப்புகூறலிலும் சரி அரசியல் தீர்விலும் சரி பெரிய முன்னேற்றங்கள் இல்லை. இந்திய விரிவாதிக்கத்திற்கான அரசு சார் வெளியுறவுக் கொள்கையின் படி இலங்கையுடனான இந்தியாவின் நட்புறவிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவின் விரிவாதிக்க கொள்கைக்கும் சிங்களப் பெளத்தப் பேரினவாதத்திற்கும் இடையில் சிக்குண்டு அழிந்துபடும் இனமாக ஈழத் தமிழர்கள் இருந்து வருகிறார்கள். இதில் ஈழத்தமிழர்தம் தலைவர்களான சம்பந்தம், சுமந்திரன், விக்கினேஸ்வரன், சுரேஷ் பிரமேசந்திரன், கஜேந்திர பொன்னம்பலம் போன்றோரிடமும் உறவைப் பேணிக் கொண்டு உள்ளது இந்திய அரசு. ஆனால், அம்மக்களின் நீதிக்கோ, அரசியல் தீர்வுக்கோ, இன அழிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவோ எந்த உதவியையும் இந்திய அரசு செய்வதில்லை. ஏன் 13 வது சட்டத் திருத்தத்தின் படியான ஒரு தீர்வை நோக்கிக் கூட இலங்கை அரசியலை நடத்த முடியவில்லை.

யார் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டுமோ அவர்கள் அதிபராகவும் பிரதமராகவும் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. வரலாற்றில் ஒரு நாள் இந்த ஆற்றல்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள். ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவின் விரிவாதிக்கத்தாலும் சிங்களப் பெளத்தப் பேரினவதாதத்தில் அழிந்துவரும் ஈழத் தமிழர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறார்களா?

தமிழ் மக்களின் தலைவர்களாக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இவற்றுக்கு வெளியிலும் இந்திய அரசின் மீதும் இந்திய இறையாண்மையின் மீதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைக்கச் சொல்பவர்கள் இந்த இன அழிப்புப் போக்குக்கு பொறுப்புக் கூற முன் வருவார்களா? இந்த பத்தாண்டுகளில் ஈழத் தமிழரின் நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு காரணமான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்த முடியாததற்குப் பொறுப்புக் கூறுவார்களா? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் பாடுபடுவதில் தங்களை மிஞ்சி யாருமில்லை என்று சொல்லிவரும் ’தமிழின உரிமைக் காப்பு’ தலைவர்கள்  ஈழத் தமிழர்களின் வாழ்வில் இந்த் பத்தாண்டுகளில் திட்டவட்டமான மாற்றம் ஏற்பட என்ன செய்தார்கள்? ஈழத் தமிழரின் விடியலுக்காக தமிழகம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தமிழ்நாட்டின் ’வீரமிகுந்த’ வாய்ப்பேச்சு தலைவர்களிடம் எந்த வேலைத் திட்டமும் இல்லை என்பதனால்தான் கோத்தபயவால் காணாமற்போன அத்தனை பேரும் உயிருடன் இல்லை என்று திமிருடன் சொல்ல முடிகின்றது. எதையும் தடுக்கவோ மாற்றவோ வல்லமையற்ற தலைவர்களின் பிடியில் தமிழர்கள் இருப்பதால் தான் இராசபக்சேக்களால் விரும்பும்போதெல்லாம் இந்தியாவுக்குள் வந்துபோக முடிகிறது. அந்த இனக்கொலைகாரர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரித்து இந்திய ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும் கூடி குலாவ முடிகிறது.

இந்துத்துவ சக்திகளுக்கும் இந்திய விரிவாதிக்கத்திற்கும் உறுதியான அரசியல் தலைமை இருப்பதால்தான் அவர்களால் காசுமீர் பிரச்சனை தொடங்கி பாபர் மசூதி வரை உறுதியாக அடியெடுத்து வைக்க முடிகிறது. ஆனால், 8 கோடி தமிழர்கள் இருந்தபோதும் கண் முன்னே கொத்துக் கொத்தாய் மக்கள் கொல்லப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் வெளிவந்த போதும் இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட போதும் பத்தாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த இனம் அழிந்துவரும்போது திட்டவட்டமான, உறுதியான அடியெடுத்து வைக்கக் கூடிய அரசியல் தலைமை தமிழர்களுக்கு இல்லை என்பதை விட்டுவிட்டு ஈழத் தமிழினம் அழியும் வரலாற்றைப் பரிசீலித்துவிட முடியுமா என்ன?

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW