2020 சனவரி 30 – காந்தி கொல்லப்பட்ட நாளை குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான எழுச்சி நாளாக கடைபிடிப்போம்!

26 Jan 2020

       கடவுள்கள் இறப்பதில்லை. சில நேரத்தில் இறந்தால்கூட மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவதுண்டு. எனவே, பெரும்பாலும் கடவுள்களின் பிறந்த நாட்கள் மட்டும்தான் தெரியும், அவை சமய நம்பிக்கை கொண்டோரால் கொண்டாடப்படுகின்றன. தம்மை கடவுளின் மறுபதிப்பாய் கருதிக் கொண்ட மன்னர்களுடைய பிறந்த நாட்கள் வரலாற்றில் பதிவாகின்றன. அத்தகைய சுமார் 5000 ஆண்டுகால மன்னர்கால கலாச்சாரத்தின் நீட்சியாய், அதை கடக்கவியலாத மக்கள் தலைவர்கள் தமது பிறந்த நாட்களைப் பிறர் கொண்டாட செய்கின்றனர். ஆனால், மாந்தர் பிறப்பால் அன்றி வாழ்வாலும் நடவடிக்கைகளாலும்தான் பிறரால் எடை போடப்படுகின்றார். ஆதலால், பிறந்த நாட்களைவிடவும் இறந்த நாட்கள் அவரது நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படுவது பொருள் பொதிந்தாக அமைகின்றது. அதிலும் அத்தகைய தலைவரின் அல்லது சமூக முன்னோடியின் சாவு கொலையாகவோ அல்லது தற்கொலையாகவோ அமையும்விடத்து அவரது நினைவுநாள் இன்னும் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. ஏனெனில், அந்த உன்னத மாந்தரின் வாழ்வு மட்டுமின்றி சாவும் ஓர் இலட்சியத்தின் பொருட்டு அமைந்துவிடுகின்றது. ஒரு நிறைவுறாத இலட்சியத்திற்கானப் பயணத்தில் அந்த இலட்சியத்திற்கு பங்களிக்கும் பொருட்டு அவர்தம் உயிர் ஈகம் அமைவதால் அந்த நாள் வரலாற்றின் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டுவிடுகிறது. அவ்வகையில் காந்தியின் பிறந்த நாளைவிட அவரது நினைவு நாள் முக்கியத்துவம் பெறுகிறது. அக்டோபர் 2 ஐ விடவும் காந்தி கொல்லப்பட்ட சனவரி 30 இந்தியாவின் குடிமக்களுக்கு முக்கியத்துவம் உடையதாகும். அதிலும் இவ்வாண்டு காந்தி நினைவு நாள், நடந்துவருகின்ற அரசியல் நிகழ்ச்சிகளின் காரணமாக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் உடையதாகப் படுகின்றது.

இந்தியா அனைத்து சமய நம்பிக்கை கொண்டவர்களுக்குமான நாடு என்பதில் காந்தி எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த இந்து – சீக்கியர் – முஸ்லிம் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் காந்தி முன்னிலையில் நின்றார். மேற்குவங்கத்தில் அமைதியைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டவர், பின்னர் தில்லியில் அமைதியை உறுதி செய்தபின் பாகிஸ்தானுக்கும் சென்று அமைதியை உருவாக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார். அவ்வேளையில்தான், 1948 சனவரி 13 ஆம் நாள் தில்லியில் நடந்துவந்த மதக் கலவரங்களை முடிவுக்கு கொண்டுவர சாகும்வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு அகவை 79.

பிரிவினையை ஒட்டி பாகிஸ்தானுக்கு கொடுப்பதாக ஒப்புக்கொண்ட 50 கோடி ரூபாயைக் கொடுக்காமல் இந்திய அரசு மறுத்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் காசுமீர் மீது படையெடுத்திருந்ததைக் காரணம் காட்டிக் கொண்டிருந்தது. காந்தி இது குறித்து அதிருப்தி கொண்டிருந்த நிலையில், காந்தி பட்டினிப் போராட்டத்தின் காரணமாக சனவரி 15 அன்று இந்திய அரசு அப்பணத்தைப் பாகிஸ்தானுக்கு கொடுப்பதென்று அறிவித்துவிட்டது.

சனவரி 17 அன்று அபுல்கலாம் அசாத்திடம் பட்டினிப் போராட்டத்தை முடிப்பதற்கு காந்தி முன்வைத்த கோரிக்கைகள்.

  1. மெஹ்ரவுளியில் உள்ள க்வாஜா பக்தியார் புனித தளத்தில் இன்னும் ஒன்பது நாட்களில் வரவுள்ள ஆண்டு நினைவுநாள் விழா எவ்வித இடையூறும் இன்றி அமைதியான முறையில் நடக்க வேண்டும்.
  2. தில்லியில் கோயில்களாகவும் வீடுகளாகவும் மாற்றப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட மசூதிகளும் மீட்கப்பட்டு முந்தைய பயன்பாட்டுக்கு விடப்படவேண்டும்.
  3. பழைய தில்லிக்குள் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்.
  4. பாகிஸ்தானிலிருந்து தில்லி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வரும் போது இஸ்லாமியர் அல்லாதவர்கள் எதிர்ப்புக் காட்டக் கூடாது.
  5. இஸ்லாமியர்கள் இரயில்களில் ஆபத்தின்றி பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
  6. இஸ்லாமியர்கள் மீதானப் பொருளியல் புறக்கணிப்பு இருக்கக் கூடாது.
  7. இஸ்லாமியப் பகுதிகளில் இந்து ஏதிலிகளைத் தங்க வைக்கும் போது அப்பகுதிகளில் ஏற்கெனவே வாழ்ந்து வருவோரின் உடன்பாட்டுடன் இதை செய்ய வேண்டும்.

சனவரி 17 ஆம் நாள் காந்தியின் பட்டினிப் போராட்டத்தின் 5 வது நாள். தில்லியில் உள்ள 2 இலட்சம் பேர் பின்வரும் உறுதிமொழியில் ஒப்பமிட்டனர்.

“தில்லியைச் சேர்ந்த இந்து, சீக்கிய, கிறித்துவ, ஏனைய குடிமக்களாகிய நாங்கள், ”அமைதிசூழவும் பாதுகாப்பாகவும் தன்மானத்துடனும் தில்லியில் வாழவும் இந்திய ஒன்றியத்தின் நன்மை, நல்வாழ்வுக்காக உழைக்கவும் இந்திய ஒன்றியத்தின் இஸ்லாமிய குடிமக்களுக்கு நம்மில் மற்றவர்களுக்குள்ள அதே சுதந்திரம் இருக்க வேண்டும்” என்ற உறுதிப்பாட்டை உளமார அறிவித்துக் கொள்கிறோம்.

“We the Hindu, Sikh, Christian and other citizens of Delhi declare solemnly our conviction that Muslim citizens of the Indian Union should be as free as the rest of us to live in Delhi in peace and security and with self-respect and to work for the good and well-being of the Indian Union’.

சனவரி 18 அன்று அனைத்து சமயத் தலைவர்கள் அளித்த உறுதிப் பத்திரத்தின் அடிப்படையில் காந்தி பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்.

ஏற்கெனவே எட்டு முறை காந்தியைக் கொல்ல முயற்சி நடந்திருந்தது. சனவரி 12 அன்று சாகும்வரை பட்டினிப் போராட்டம் இருக்கப் போவதாக காந்தி அறிவித்தவுடனேயே, காந்தியைக் கொல்லும்முடிவில் இருந்த இந்துத்துவ சக்திகளான கோட்சேவும் அரவது கூட்டாளிகளும் காந்தியை உடனடியாக தீர்த்துக்கட்டுவது என்ற முடிவுக்கு வந்தனர். எந்த நேரத்தில் தாம் காந்தியைக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்லக் கூடும் என்பதால், சனவரி 13, சனவரி 14 ஆகிய நாட்களில் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட நாராயண் ஆப்தேவும் கோபால் கோட்சேவும் தங்கள் குடும்பத்திற்கு என்று காப்பீடு செய்துகொண்டனர். சனவரி 20 அன்று கோட்சேவும் அவரது கூட்டாளிகளும் மேற்கொண்ட கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது. சனவரி 30 அன்று மாலை 5:12 மணி அளவில் காந்தியை நோக்கி மூன்றுமுறை சுட்டார் நாதுராம் கோட்சே. காந்தியின் உடலியக்கம் நின்றது.

பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்ட இந்துத்துவ சித்தாந்தத்தினர் காந்தியின் சத்தியத்திற்கு முன்னால் அன்றைக்கு தோற்றுப்போயினர்.  அதனால்தான், காந்தியைக் கோழைத்தனமாக சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். ஆயினும், அவர் சுட்டதால் காந்தியின் உடல் இயக்கம் மட்டுமே நின்றது. இந்தியாவில் மதச்சார்பின்மையை நிலைநாட்ட பல்வேறு சமயத்தவர்களும் நடத்தும் போராட்டத்தில் காந்தி உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

எந்த சித்தாந்தம் காந்தியின் கதையை முடிக்க எண்ணியதோ அந்த சித்தாந்தம் இன்றைக்கு இந்தியாவின் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அனைத்து சமயத்தவருக்குமான இந்தியாவை முடிவுக்கு கொண்டுவந்து ’இந்துராஷ்டிரா’ என்ற தனது நூற்றாண்டு இலட்சியத்தை நிறைவேற்றிட துடிக்கிறது. சாவர்க்கர், கோல்வால்கரின் வாரிசுகளும்.சமகால கோட்சேக்களுமான மோடி-அமித்ஷா போன்றோர் ஆட்சி செய்து வருகின்றனர். கார்ப்பரேட்களுக்கு இந்தியாவை விற்றுவிட்டு ஏழை எளிய மக்களையும் விவசாயிகளையும் ஒழித்துக்கட்டப் பார்க்கின்றனர்.

நாதுராம் கோட்சே மகாராஷ்டிராவை சேர்ந்தவர், சித்பவன் பார்ப்பனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ’கோட்சே’ என்ற பெயரைத் தவிர அவரது மாநிலம், சாதி, அமைப்புப் பின்புலங்கள் வெளியில் பேசப்படாமல் மறைத்துக் கொண்டிருந்தனர். ஆனால்,  இப்போதெல்லாம் நாடாளுமன்றத்திலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் கோட்சேவைத் ’தேச பக்தர்’ என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கிவிட்டனர்.

 

காந்தி மட்டுமல்ல பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷ் என ஆர்.எஸ்.எஸ். காரர்களால் இந்துராஷ்டிரா நிகழ்ச்சி நிரலுக்கு தடையாய் இருந்தவர்கள் என்ற காரணத்திற்காக கொல்லப்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டது. தீர்த்து கட்டுவது, கலவரங்களை செய்து இஸ்லாமியர்களைக் கொல்வது, மசூதிகளுக்கு வெடிகுண்டு வைப்பது என ஆர்.எஸ்.எஸ். இன் வழிகாட்டுதலில் செயல்படும் அமைப்புகள் ஏராளம். அபினவ் பாரத், சனாதன சன்ஸ்தா, பஜ்ரங் தள், போன்சாலே இராணுவப் பள்ளி ஆகியவை. அவற்றுள் சில.

இஸ்லாமியர்கள் இரயில்களில் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காந்தி பட்டினிப் போராட்டம் நடத்தினார். இன்றோ, அக்லக் முதல் தப்ரீஸ் வரை பொதுவிடங்களில் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக அடித்துக் கொல்லப்படுவது நம் நாட்டில் வாடிக்கையாகிவிட்டது. முதலில் மாட்டிறைச்சியின் பெயரால் நடந்த கொலைகள் இன்று ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லி நடந்து வருகின்றது. 1961 ஜபல்பூர் கலவரம் தொடங்கி 2014 ஆம் ஆண்டு முசாபர் நகர் கலவரம் வரை இஸ்லாமியர்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதும் சொத்துகள் சேதப்படுத்தப்படுவதும் இடம்பெயறச் செய்வதும் தொடர் கதையாக இருக்கிறது. இதில் உச்சமாக, 2002 இல் இன்றைய பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது  சுமார் 2000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்போது உத்தரபிரதேசத்தில் மாநில காவல்துறையே இறங்கி போராடும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களை செய்து வரக் காண்கிறோம். இஸ்லாமியர்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலைமை இந்தியாவின் ஏனைய குடிமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.

இந்துக்கள் மசூதிகளைக் கோயிலாக மாற்றுவது, சேதப்படுவது மசூதியை இழிவுப் படுத்துவதல்ல மாறாக இந்து சமயத்தை இழிவுபடுத்துவதாகும் என்று சொன்னவர் காந்தி. ஆனால், அவர் மறைந்த சில மாதங்களில் பாபர் மசூதிக்குள் இராமர் சிலையை இந்துத்துவ வெறியர்கள் வைத்தனர். பின்னர் அவர்களால் பாபர் மசூதி இடிக்கப்படுவதை இந்தியாவில் வாழும் இந்து சமய மக்கள் அனுமதித்ததுடன் அவ்விடத்தில் இராமர் கோயில் கட்டப்போவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தமது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளும் உரிமை காசுமீர் மக்களுக்கே உண்டு என்பதில் காந்தி உடன்பட்டார். ஆனால், காசுமீர் இந்தியா – பாகிஸ்தானின் இராணுவ ஆக்கிரமிப்பில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வருகின்றது.  ஆட்சியிலிருக்கும் கோட்சேக்கள் கடந்த 170 நாட்களாக ஒட்டுமொத்த காசுமீரையும் திறந்தவெளிச் சிறைச்சாலையாக்கி சித்திரவதை செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு உரிமையாகப் பறிக்கத் தொடங்கி இப்போது குடியுரிமை சட்டத் திருத்தம்(CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR) ஆகியவற்றின் மூலம் இந்தியாவை இஸ்லாமியர்கள் இல்லாத இந்து தேசமாக கோட்சேக்கள் மாற்றத் துடிக்கின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கன் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து உயிருக்கு தஞ்சம் கேட்டு இந்தியாவுக்குள் புகும் ஏதிலிகளுக்கு குடியுரிமைக் கொடுப்பதில் இஸ்லாமியர் , இஸ்லாமியர் அல்லாதவர் என்று சமய வகைப்பட்ட வேறுபாடு காட்டுகிறது இச்சட்டத் திருத்தம். காந்தியின் கடைசி உண்ணாநிலைப் போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்று – பாகிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமிய ஏதிலிகளை இஸ்லாமியர் அல்லாதோர் தடுக்கக் கூடாது என்பதாகும். குடியுரிமை சட்டத்திருத்தத்துடன் சேர்த்து தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வழியாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நாட்டை விட்டு விரட்டவும் தடுப்பு முகாம்களில் அடைக்கவும் கட்டாயமாக மத மாற்றம் செய்யவும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தவும்  கோட்சேக்கள் முயன்று வருகின்றனர்.

இந்தியாவில் அனைத்து சமயத்தவர்களும் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதற்காக நடக்கும் போராட்டங்களில் காந்தி உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். இன்றைய கோட்சேக்கள் காந்தியைக் கொல்வதற்காக மீண்டுமொருமுறை துப்பாக்கி விசையை அழுத்தியுள்ளனர். காந்தியை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்தான் குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA), தேசிய மக்கள்தொகை பதிவேடு(NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC).

காந்தி இந்நாட்டுக் குடிமக்களின் மனசாட்சியாக விளங்கினார். ஒவ்வொருமுறை அவர் சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் இறங்கும் போது அவர் முன்வைத்தக் கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கிப் போராடிய மக்கள் காந்தியை சாகவிடாமல் பாதுகாத்தனர். அதன்மூலம், அவர்கள் தமது மனசாட்சியைச் சாகவிடாமல் பாதுகாத்துக் கொண்டனர். இப்போது நாடெங்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரானப் போராட்டம் நடந்து  கொண்டிருக்கிறது. கோட்சேக்கள் ஓரடிகூட பின்வாங்க முடியாதென்று சொல்கின்றனர். இந்தப் போராட்டங்களில்  காந்தி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் குடிமக்கள் CAA- NRC- NPR ஐ தடுத்து நிறுத்தப் போகிறார்களா? இல்லை காந்தியை சாகவிடப் போகிறார்களா? தமது மனசாட்சியை சாகடிக்கப் போகிறார்களா? என்பதே கேள்வி.

சனவரி 30 காந்தி கொல்லப்பட்ட நாள் அன்று, நாடெங்கும் நடக்கும் மனித சங்கிலி, நினைவுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் அவரவருக்கு இருக்கும் வாய்ப்புக்கு ஏற்ப கலந்து கொள்வோம். இலட்சக்கணக்கான இளந் தலைமுறையினரிடம் காந்தியைக் கொன்றவர்களையும் அவர்களது சித்தாந்தத்தையும் அடையாளம் காட்டுவோம். பள்ளி, கல்லூரிகளில், ஆலை வாயில்களில், காந்தி கொல்லப்பட்டதை நினைவுப்படுத்துவோம். சுவரொட்டிகள், துண்டறிக்கைகளின் வழியாக  மசூதியைக் கோயிலாக்குவதையும்  இந்தியாவை இந்துராஷ்டிரமாக்குவதையும் காந்தி எதிர்த்தார் என்பதைக் கொண்டு செல்வோம்.

சனவரி 30 அன்று காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அதே மாலை 5 மணி 12 நிமிடத்தில் அவரது சிலைகளின் முன்பு திரள்வோம்.  காந்தியின் கடைசி உண்ணாநிலைப் போராட்டத்தின் போது அவரிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற உறுதியேற்போம்.

“இந்தியாவைச் சேர்ந்த இந்து, சீக்கிய, கிறித்துவ, ஏனைய குடிமக்களாகிய நாங்கள், ”அமைதிசூழவும் பாதுகாப்பாகவும் தன்மானத்துடனும் இந்தியாவில் வாழவும் இந்திய ஒன்றியத்தின் நன்மை, நல்வாழ்வுக்காக உழைக்கவும் இந்திய ஒன்றியத்தின் இஸ்லாமிய குடிமக்களுக்கு நம்மில் மற்றவர்களுக்குள்ள அதே சுதந்திரம் இருக்க வேண்டும்” என்ற உறுதிப்பாட்டை உளமார அறிவித்துக் கொள்கிறோம்.

சனவரி 30 ஐ மக்கள் எழுச்சி நாளாக்குவோம். காந்தியின் நினைவுநாள் அன்று அவரது பெயரால் இந்தியாவின் எட்டுத்திசையிலும் கோடிக்கணக்கானோர் திரண்டெழுப்பும் இந்த உறுதிமொழி கோட்சேக்களின் உறக்கத்தைக் கெடுக்கும். இந்துராஷ்டிரக் கனவைக் கலைக்கும்.  சனவரி 31 அன்று நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கும்போது மோடி – அமித் ஷாவின் நடையில் இருக்கும் இருமாப்புக் குலைந்திருக்கக் காண்போம்!

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW