CAA – NPR – NRC எதிர்ப்புப் போராட்டங்கள் – இப்போது செய்ய வேண்டியது என்ன?

22 Jan 2020
  1. ஆகாவென்றெழுந்துள்ளது எழுச்சி! ஆனால், அது இஸ்லாமியர்களிடம் மட்டும்தான். முத்தலாக் தடை சட்டம், காசுமீர் 370 நீக்கம், பாபர் மசூதி தீர்ப்பு ஆகியவை செய்யாததை குடியுரிமை திருத்தச் சட்டம் செய்துள்ளது. இச்சட்டத் திருத்தத்தை தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்து மிகச் சரியாகவே புரிந்து கொண்ட இஸ்லாமியர்கள் தெருவில் இறங்கிவிட்டனர். அமைதி வழியிலானப் போராட்டத்தின் மூலம் ஒரு மாதத்தைக் கடந்தும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதில் உத்தரபிரதேசம், கர்நாடகம் உள்ளிட்டு சுமார் 30 பேர் உயிர் ஈகம் செய்துள்ளனர். எண்ணற்றோர் காயம்பட்டுள்ளனர். பன்னூறு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உயிர் ஈகம் செய்தோருக்கும் குருதி சிந்தியவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்த சனநாயக ஆற்றல்கள் கடமைப்பட்டுள்ளனர்.
  2. வட கிழக்கு மாநிலங்களை வளைத்துவிட்டோம் என்று எண்ணியிருந்தது பா.ச.க. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் அச்சத்தை விதைத்து போராட்டத் தீயைப் பற்ற வைத்துவிட்டது. குறிப்பாக அசாமியர்களின் போராட்டம் அங்குள்ள பா.ச.க. காரர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது. தமது பண்பாட்டு பாதுகாப்புக்காக இப்போராட்டத்தில் உயிரைவிட்டுள்ள அசாமியர்களுக்கும் வீரவணக்கம் செலுத்த சனநாயக ஆற்றல்கள் கடமைப்பட்டுள்ளனர்.
  3. இங்கு அசாமியர்களின் போராட்டம் அசாமியர் அல்லாத எவருக்கும் குடியுரிமைக் கொடுக்கக் கூடாது என்பதற்காகும். ஏதிலிகளுக்கு குடியுரிமைக் கொடுப்பதில் மதத்தைக் காரணியாக சேர்க்கக் கூடாது என்பதற்காக வட கிழக்கு மாநிலங்களுக்கு வெளியே போராட்டங்கள் நடந்து வருகின்றன.
  4. சுமார் 11 மாநில அரசுகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்க்கின்றன. கேரளமும் பஞ்சாப்பும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளன. சில கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து இருந்தாலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஆதரிக்க மறுத்துள்ளன. இதில் பா.ச.க. வுடன் அதிகம் முரண்படாத ஓய்.எஸ்.ஆர். காங்கிரசு, தெலங்கானா இராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகளும் கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், பா.ம.க. போன்ற கட்சிகளும் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
  5. ஜாமியா மிலியா பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம் மற்றும் ஜே.என்.யூ பல்கலைக் கழகம் ஆகியவற்றில் காவல் படையும் காவிப் படையும் நடத்திய அட்டூழியங்கள் உயர்வர்க்கத்தையும் உயர் நடுத்தர வர்க்கத்தையும் சேர்ந்த குடிமை சமூகத்தினரை தெருவில் இறங்கிப் போராட வைத்துள்ளது. இந்தப் பிரிவினரும்கூட காசுமீர் 370, முத்தலாக் தடை சட்டம், பாபர் மசூதி தீர்ப்பு ஆகியவற்றின் போது எதிர்வினையாற்றாதவர்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. நாடெங்கும் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்கள் தான் போராட்டத்தில் இறங்கியுள்ளனவே ஒழிய அனைத்துக் கல்லூரி மாணவர் போராட்டமாக இது விரிவடையவில்லை.
  6. முதலாவதாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது – இஸ்லாமியர்களின் எழுச்சியை ஆர்.எஸ்.எஸ். பொருட்படுத்தப் போவதில்லை. இஸ்லாமியர்களின் வாக்குகள் தமக்கு தேவையில்லை என்ற இடத்தில் இருந்து பா.ச.க. தேர்தலை எதிர்கொள்கிறது. எனவே, இஸ்லாமியர்களின் அமைதிவழிப் போராட்டங்கள் பா.ச.க. வை அசைக்கப் போவதில்லை. மாறாக, இஸ்லாமியர்களின் எழுச்சி எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் பொய்களால் வழிநடத்தப்படுவதாக சொல்லி, எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானில் ’வதைப்படும்’ இந்துக்களுக்கு குடியுரிமை தர மறுக்கின்றனர் என்ற பரப்புரையை இந்துக்களிடம் கொண்டு சேர்த்து தனது வாக்கு வங்கி அணி திரட்சிக்கு பயன்படுத்திக் கொள்ள் முடியும். அதனால்தான், தனது கட்சியை நேரடியாக மக்களிடம் சென்று குடியுரிமை சட்டத் திருத்தத்தைப் பற்றி விளக்கிக் கூறுமாறு கட்டளையிட்டுள்ளார் அமித் ஷா. அவரே வீதியில் இறங்கி பரப்புரை செய்து தனது அணிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்.
  7. ஆர்.எஸ்.எஸ். இப்போது கவலைப்படுவது எதிர்க்கட்சிகள் காட்டிவரும் எதிர்ப்பு குறித்தும் தனது அணியில் இருந்த கூட்டணி கட்சிகள் காட்டி வரும் எதிர்ப்புக் குறித்தும்தான். எனவே, இதை சிதறடிப்பதற்கு தேவையான உரையாடல்களை வெகுமக்களிடம் நடத்திவருகின்றது.
  8. அசாமில் குடியுரிமைப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ள சுமார் 13 இலட்ச வங்க தேச இந்துக்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். பின்வாங்க தயாராயில்லை. எனவே, அசாமைக் கையாள வேண்டிய இடர்பாடு ஆர்.எஸ்.எஸ் க்கு உண்டு.
  9. மேற்கு வங்கத்தில் இருக்கும் வங்கதேச இந்துக்களுக்கு குடியுரிமை கொடுப்பதற்கு மம்தா பானர்ஜி எதிர்ப்புக் காட்டுகிறார் என்ற பரப்புரையை ஏற்கெனவே பா.ச.க. தொடங்கிவிட்டது. இஸ்லாமியர்கள் 30 விழுக்காடும் இஸ்லாமியர் அல்லாதோர் 70 விழுக்காடும் உள்ள மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான மம்தாவின் போராட்டங்களை இந்து வாக்கு வங்கி அணி திரட்சிக்கு பா.ச.க. வால் இலகுவாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  10. உத்தரபிரதேசத்தில் போராடும் இஸ்லாமியர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதோடு வீடு வீடாகச் சென்று அடித்து, பொருட்களை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இப்படி காவல் துறையே நேரடியாக இறங்கி இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வரலாற்றில் அபாயகரமான பரிணாம வளர்ச்சியாகும். இதில் வெட்கக்கேடானது காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்துள்ளன. இதனால், சில உயரிழப்புகள் நடந்துள்ளன். இது மாந்தக் குலத்திற்கு எதிரான குற்ற வகையில் சேரும். குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசால் வழிநடத்தப்பட்ட கலவரத்தின் வழியாக இஸ்லாமியர்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு பரிசோதனைக் கூடமாக குஜராத் பயன்படுத்தப்பட்டது. அது குஜராத் மாதிரி. இப்போது உத்தரபிரதேசத்தில் அரசப் படைகளே கலவரங்களை நடத்துவது ‘உத்தர பிரதேச மாதிரியாக’ அமையக் கூடிய ஆபத்து இருக்கிறது.
  11. எதிர்க்கட்சிகளைப் பொருத்தவரை குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புக்காகக் கூட ஒன்றுபட்டு நின்று எதிர்ப்புக் காட்ட முனையவில்லை. காங்கிரசு தலைமையில் சனவரி 13  அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், திரினாமுல் காங்கிரசு மற்றும் திமுக போன்ற கட்சிகள் பங்குபெறவில்லை. குறிப்பாக திமுக இவ்விவகாரத்தில் எத்தகைய உறுதித் தன்மை கொண்டிருக்கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.
  12. திமுகவைப் பொருத்தவரை இஸ்லாமியர்களின் வாக்குவங்கி நூறு விழுக்காடு உறுதியாகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கும் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தமை இரண்டாவது பலனையும் திமுகவுக்கு வழங்கியுள்ளது.  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் திமுக செய்த துரோகம் திமுகவுக்கான தமிழர் உரிமைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டோரின் வாக்கு வங்கியைச் சரித்து இருந்தது. அதை நேர் செய்வதற்கு இயன்றவரை இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் திமுகவின் பிரதான நோக்கமாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் இச்சட்டத் திருத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் புரிந்து கொள்வதற்கு கடினமான சட்டத்திருத்தம், குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு ஆகியவைப் பற்றிய தெளிவைக் கீழ்மட்டம் வரை கொண்டு சேர்க்கவில்லை. எனவே, இஸ்லாமியர்கள் அல்லாத ஏனைய மக்களிடம் இக்கோரிக்கையின் நியாயம் கொண்டு சேர்க்கப்படாமல் இருக்கிறது.
  13. ஒருபுறம் இஸ்லாமியர்கள் போராடிக் கொண்டிருக்க, இஸ்லாமியர் அல்லாதோர் இக்கோரிக்கைப் பற்றி தெளிவின்றி இருக்க, அத்தகைய இஸ்லாமியர் அல்லாதோரை நோக்கி ஆர்.எஸ்.எஸ். தனது பரப்புரையை முடுக்கிவிட்டுள்ளது. இஸ்லாமியரல்லாதோரிடம் இக்கோரிக்கையினதும் போராட்டத்தினதும் நியாயத்தைக் கொண்டு செல்ல வேண்டியது உடனடிக் கடமையாகும். இல்லாவிடில் இஸ்லாமியர்களின் இந்த எழுச்சியைக் காட்டியே இஸ்லாமியரல்லாதோரை தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் வாய்ப்பு ஆர்.எஸ்.எஸ் க்கு கிடைத்துவிடும்.
  14. ஆகவே, இஸ்லாமியர்களின் போராட்டம் மற்றும் அதில் சொல்லப்படும் கருத்துகள் இவையாவும் இஸ்லாமியரல்லாதோருக்கு இக்கோரிக்கையை விளக்குவதாகவும் ஆர்.எஸ்.எஸ். இன் வஞ்சகமான இலக்குகளை அடையாளம் காட்டுவதாகவும் இஸ்லாமியரல்லாதோரின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் நோக்கம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  15. இத்துடன், போராட்டம் அல்லாத பரப்புரை வடிவங்களின் வழியாக இஸ்லாமியரல்லாத மக்களிடம் இச்சட்டத் திருத்தத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் மக்கள் தொகை பதிவேட்டையும் விளக்கி இப்போராட்டங்களின் நியாயத்தை எடுத்துச் சொல்லி அவர்களை இக்கோரிக்கைக்கு ஆதரவாக மாற்ற வேண்டும்.
  16. குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்த கட்சிகள் அனைத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புறக்கணிக்குமாறு தனது கட்சிக்கும் வெகுமக்களுக்கும் அறைகூவல் விடுமாறு வலியுறுத்த வேண்டும். பெரும்பாலான இஸ்லாமிய கட்சிகள் மற்றும்  சிபிஐ(எம்) போன்ற கட்சிகள் முன்மாதிரியாக இதை ஏற்கெனவே செய்துள்ளன.
  17. செயல்பூர்வமாக, தேசிய மக்கள்தொகை பதிவேட்டைப் புறக்கணித்து மாபெரும் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்குமாறு வெகுமக்களை அணியமாக்க வேண்டும்!

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW