வருக புத்தாண்டே! வாட்களோடும் கேடயங்களோடும் அச்சத்தை அகற்றி, அமைதியைக் கொண்டுவரும் வாஞ்சையோடும் அணியமாய் இருக்கிறோம்!

16 Jan 2020

கடந்த நூற்றாண்டில்(1920) இதே நேரத்தில் உலகம் நம்பிக்கை ததும்ப நடைபோட்டுக் கொண்டிருந்தது. உலகின் முதல் சோசலிச அரசு ரசியாவில் தோன்றியிருந்தது. விடுதலை, சனநாயகம், சோசலிசம் என்பதெல்லாம் உலகெங்கும் உள்ள நல்மனத்தவர்களின் பேரவாவாக இருந்தது. இன்னும் சில பத்தாண்டுகளில் உலகம் இடப்பக்கம் திரும்பிவிடும் என்று கைவிரல்களால் வரலாற்று வேகத்தை எண்ணிக் கொண்டிருந்த காலம். அப்போது பாசிச கருத்துகள் கருத்துத்தளத்தில்தான் செல்வாக்குப் பெற தொடங்கியிருந்தன.

இன்றோ உலகில் சோசலிச அரசு ஒன்றுகூட இல்லை என்பதைவிட சோசலிசம் தோற்றுப் போய்விட்டது என்ற கருத்தாக்கம் செல்வாக்கு செலுத்தக் கூடிய காலப் பகுதி. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைக் கோட்பாடாக்கி அதை நடைமுறைப்படுத்திக் காட்டியிருந்தார் லெனின்.  ஒரு நூற்றாண்டுக் கடந்த நிலையில் இன்றும் பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்கள் இனப்படுகொலைகளிலும் மிகப் பெரிய இராணுவ ஆக்கிரமிப்புகளிலும் தடைப்பட்டு நிற்கக் கூடிய காலமிது.

மனிதன் தனக்குள் மோதுண்டு இரத்தம் சிந்துவதோடு இயற்கையோடு நடத்தும் மூர்க்கமான சண்டையில் இயற்கை தனது பதிலடியைக் கொடுத்து பூமியினது மூச்சையே நிறுத்திவிடக் கூடும் என்ற அச்சம் மேலோங்கி இருக்கிற காலமிது.  இயற்கையின் சீற்றம் பூமியை எரிமலையின் வாயில் வைத்திருக்கிறது. கொதித்து கொண்டிருக்கும் எரிமலை வெப்பத்தைக் கக்கும் இடத்து பூமியோடு சேர்ந்து மனிதனும் மனிதனோடு சேர்ந்து அவன் உருவாக்கிய அனைத்தும் அதனோடு சேர்ந்து அவன் ஐயாயிரம் ஆண்டுகாலமாய் பேணிவந்த ஆக்கிரமிப்பு வெறியும் கொள்ளைக்கார ஆசையும் கடலில் மூழ்கிவிடக்கூடும்.

வட அமெரிக்காவில் டிரம்ப், துருக்கியில் எர்டோகன், பிரேசிலில் பொல்சனரோ, இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன், இந்தியாவில் மோடி, இலங்கையில் கோத்தபய இராசபக்சே என சர்வாதிகாரிகளை மேற்கு – கிழக்கு வேறுபாடின்றி ஒட்டுமொத்த உலகமும் ஆட்சியில் அமர்த்தியிருக்கிற காலமிது. இஸ்லாமிய எதிர்ப்பு, யூத எதிர்ப்பு, அயலார் எதிர்ப்பு, புலம்பெயர் தொழிலாளர் எதிர்ப்பு ஆகியவை மேற்கு கிழக்கு வேறுபாடின்றி உலகெங்கும் மேலோங்கியிருக்கும் காலமிது. படையெடுப்புகளுக்கு எதிராய் சீனர்கள் பெருஞ்சுவர் கட்டியதொரு காலமென்றால் அகதிகள் வருகைக்கு எதிராய் சுவர் கட்டும் காலமிது. அப்படி சுவர் கட்ட நினைப்பதோ வட அமெரிக்காவில் நாடு பிடிக்க வந்து குடியேறியவர்கள்! இவர்கள்தான், மெக்சிகன்கள் வட அமெரிக்காவுக்குள் புலம்யெர்வதைத் தடுக்க சுவர் கட்ட முயல்கின்றனர். சுமார் 7 இலட்சம் ரோஹிங்கியாக்களை நாடற்றவர்களாக்கியது மியான்மர்.  வங்கதேசம் அவர்களை அகதிகளாக ஏற்றுக் கொண்ட போதும்  ஆள் நடமாட்டம் இல்லாத, புயல் சீற்றங்கள் மிகுந்த பாசன் சார்(Bashan Char) தீவில் அவர்களைக் குடியமர்த்தத் திட்டமிட்டு வருகிறது. ஆதரவற்ற மக்கள் கூட்டத்தை ஆளரவமற்ற, ஆபத்துகள் நிறைந்த தீவுக்கு அனுப்பி வைக்கும் ’இரக்கம்’ மிகுந்த காலமிது.

இதில் துயரம் என்னவென்றால் ரோஹிங்கியாக்களுக்கு நேர்ந்த அவலம் இலங்கையில் கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக நடப்பதற்கான வரலாற்று யதார்த்தம் இலங்கையில் உண்டு. இன்னும் சில பத்தாண்டுகளில் அப்படியான அவலம் இந்தியாவில் நேருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

போரை நோக்கியே உலகம் உருண்டு கொண்டிருப்பது போல் காட்சிகள் நகர்கின்றன. ஒவ்வொரு முறையும் மலை உச்சியின் மீது நின்று, அதன் அடி ஆழத்தைப் பார்த்து சற்று தலைசுற்றிய பின் ஓரடி பின்னே வந்து மூச்சு வாங்குவது போல் போர்க்களத்தின் வாயிலுக்குள் நுழைந்து பின் வாங்குகிறது உலகம்.

இந்திய அரசியலின் பூசி மெழுகல்கள் எல்லாம் முடிவுக்கு வந்த காலமிது. எல்லாவிதமான கற்பனைகளும்  வாக்குறுதிகளும் யதார்த்தத்தின் முன்னால் மண்டியிட்டு நிற்கின்றன. காசுமீர் பள்ளத்தாக்கு 165 நாட்களாக சிறைப்படுத்தப்பட்டு இருப்பதற்கு எதிராக இந்தியாவில் எந்தக் கட்சியும் கிளர்ச்சி செய்யவில்லை. சுமார் நூறு கோடி இஸ்லாமியர் அல்லாதார் வாழுமொரு நாட்டில் ஒரே ஒரு இலட்சம் பேரைக்கூட திரட்டி பாபர் மசூதி தீர்ப்பைக் கண்டித்துப் போராட்டம் நடத்த எந்தக் கட்சியும் முன்வரவில்லை. மசூதியின் இடத்தில் கோயில் வருவதைத் தம்மால் தடுக்க முடியவில்லை என்றோ அல்லது பாபர் மசூதிக்கு ஆதரவான கோரிக்கைக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட முடியவில்லை என்றோ எவரும் பொறுப்புக்கூறவில்லை. இந்திய அரசியலில் நீடித்து வந்த  எல்லா இழுபறிகளும் அதன் தர்க்கப்பூர்வ முடிவை எட்டிவிட்டன,  பெருவெட்டான அரசியல் போக்குகள் பண்புரீதியானப் புதிய கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் எதிர்காலமும் இந்திய அரசியலின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. சாதிகளை சரிவரப் பயன்படுத்திக் கொண்டு எப்படியேனும் தமிழகத்தில் கால்பதித்துவிட முயல்கிறது ஆர்.எஸ்.எஸ்.. இன்னொருபுறம் கொள்கை அற்ற அரசியல் மரபின் தொடர்ச்சியாக திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தை தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்து  நிலைமையைக் குழப்பப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். எது எப்படியேனும் தமிழகம் ஆர்.எஸ்.எஸ். ஐ சந்தித்தே தீர வேண்டும். இந்தியா எப்படி ஆர்.எஸ்.எஸ். இடம் தோற்றுப் போனது என்பதிலிருந்து படிப்பினைகளைத் தமிழ்நாடு பெற்றாக வேண்டும். எதிரியின் சூறைக்காற்றை ஒத்த தாக்குதலில் முன்னேறுகிறோமோ இல்லையோ பின்னோக்கிச் சென்றுவிடாமல் கால்களை மண்ணில் ஊன்றி நிற்பதுதான் இந்த ஆண்டின் ஆகப் பெரும் இடர்பாடாக இருக்கப் போகிறது.

இட்லரைப் போல், முசோலினியைப் போல் மோடியும் அமித் ஷாவும் வீழ்த்தப்படுவார்கள் என்று  சொல்லிக்கொண்டிருப்பதில்  பயனில்லை. இட்லரும் முசோலினியும் கொல்லப்படுவதற்கு முன் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டு குறைந்தபட்சம் 7 கோடி பேர் சாவதற்கு வழிவகுத்தனர். அன்றைய உலக மக்கள் தொகையில் அது 3%. அதாவது உலகில் வாழ்ந்த நூறு பேரில் மூன்றுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.  யூத இனப்படுகொலையைப் பொருத்தமட்டில் அன்றைக்கு உயிருடன் இருந்த 90 இலட்சம் யூதர்களில் 60 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய உண்மை. அதாவது மூன்றில் இரு யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்! எனவே, இன்றைய இட்லர்களும் ( மோடி – அமித் ஷாக்கள்) மக்களால் தெருவில் அடித்து கொல்லப்படுவார்கள் என்று சொல்வதற்கு பதிலாக இட்லர் அடித்துக் கொல்லப்படுவதற்கு முன்பு ஏற்படுத்திய மாந்தப் பேரழிவைத் தடுப்பதெப்படி என்று சிந்தித்து அறிவியல்பூர்வமாக செயல்பட வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

எதிர்ப்புப் போராட்டங்கள் உலகெங்கும் நடந்து கொண்டிருந்தாலும் அவை புதிய உலக ஒழுங்குக்கான, புதிய அரசியல் பொருளாராத ஒழுங்குக்கான முன்வைப்புடன் புதியதொன்றை நிர்மாணிக்கும் ஆற்றலுடன் எழுந்துவரக் காணோம். எதிர்ப்புக்காகவே எதிர்ப்பாக, எதிர்ப்பு அலையாக எழுந்து அலையைப் போலவே முடிவுக்கு வந்துவிடுகின்றன. புதியதொன்றைப் படைப்பதற்கான மெய்யியல் உள்ளடக்கத்துடனும் அரசியல் திசை வழியுடனும் அவை எழுவதில்லை. முதலாளித்துவம் ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்தவிடத்து அதை 1916 இல் மதிப்பிட்டுச் சொன்னார் லெனின். அதிலிருந்து இன்றைக்கு ஒரு நூற்றாண்டு நிறைவடைந்துவிட்டது. இரு முழு உலகப் போர்களையும் பனிப்போர்களையும் பனிப்போருக்குப் பின்னான பெரும் படுகொலைகளையும் பனிப்போருக்குப் பின்பின்னான ஆக்கிரமிப்புப் போர்களையும் சந்தித்து ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியடைந்தவொரு கட்டத்தில் உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் முழு உலகின் வரலாற்று வளர்ச்சிப் போக்கை மதிப்பிட்டு புதிய உலக ஒழுங்கு, சோசலிச உலகு நோக்கிச் செல்வதற்கான வழித்தடம் ஆகியவைக் குறித்து உலகு தழுவியப் பார்வையுடன் வரலாற்றை உந்தித் தள்ளும் புதிய கருத்துகள் எதுவும் மனிதக் குலத்தைப் பற்றிப் பிடிக்கக் காணோம்.

குறுகிய தனிநபர் நலன்கள், குறுகிய குழுநலன்கள், குறுந்தேசிய நலன்கள் ஆகியவற்றிற்கு இரையாகிவிடாமல் பரந்த தேசிய மற்றும் பன்னாட்டுலகிய ( சர்வதேசிய) நலன்களால் வழிநடத்தப்படுவதோடு மனோரம்மிய கற்பனைகளையும் விருப்பங்களையும் அரசியல் மதிப்பீடாக்காமல் அறிவியல்வகைப்பட்ட மதிப்பீட்டுக்குள்ளால் எதிரியை எடைபோடுவதும் மக்கள் முகாமின் பலத்தையும் அவ்வண்ணமே மதிப்பிடுவதும் அதிலிருந்து நடைமுறை உத்திகளை வகுப்பதும் தேவைப்படுகின்றது. இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் என்பது மாந்த குல நாகரிகத்தையே பின்னுக்கு தள்ள விரும்புபவர்களுக்கும் அதை தற்காத்து வளர்த்தெடுக்க விரும்புபவர்களுக்கான போராட்டம். மொழி, மத, இன சிறுபான்மையினர் மீதான இனப் படுகொலைகளாகவும் இன அழிப்புகளாகவும் ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதார ஒழுங்கின் உலகமயக் கட்டம் விளைவுகளை ஏற்படுத்துமொரு காலமிது. எனவே, மாந்தப் பேரழிவுக்கு எதிரானவொரு போராட்டத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு நம்மை வழிநடத்தட்டும்!

வருக புத்தாண்டே! வாட்களோடும் கேடயங்களோடும் நிற்கிறோம்! அதுமட்டுமல்ல, பூமியையும் அதுதங்கியுள்ள பேரண்டத்தையும் பூமியில் வாழும் மரம், செடி, கொடி, ஆடு, மாடு, நாய், புலி, யானை, ஆறு, மலை, கடல் உள்ளிட்டவற்றையும் இவற்றோடெல்லாம் உறவு கொண்டுள்ள மாந்தக் குலத்தையும் ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதார உலக ஒழுங்கின் அழிவுத் தடத்திலிருந்து பாதுகாத்திட வேண்டும் என்ற வாஞ்சையுடனும் நிற்கிறோம்! நெருக்கடிகளை எதிர்கொள்ள அணியமாய் இருக்கிறோம்! வருக புத்தாண்டே!

 

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW