எடப்பாடி அரசே ! இஸ்லாமியர், ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்காதே ! இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் NPR ‘ யை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றிடு !

06 Jan 2020

திசம்பர் 28 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்று ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் செல்வாக்கில்லாத கட்சிகள் மத்திய மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன என்றார். ஆனால், அவர் ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஆளுநர் மாளிகை நோக்கி பத்தாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் பேரணி போய்க்கொண்டிருந்தனர். ஒருபடி மேலே சென்று திமுகவும் அதன் கூட்டணிகளுக்கு இது குறித்து பொய்யைப் பரப்புகின்றன  என்று சொன்னார்.  CAA-NPA-NRC க்கு எதிராக இந்தியாவெங்கும் நடக்கும் போராட்டங்களும் உலகெங்கும் எழும் கண்டனங்களும் திமுகவாலும் அதன் எதிர்க்கட்சிகளாலும் தூண்டி விடப்பட்டவையாக இருக்க முடியுமா? அறிவாலயத்தில் இருந்துதான் உலகமே இயக்கப்பட்டு வருகிறதா? முக ஸ்டாலின் பரப்பும் பொய்களை நம்பித்தான் அசாமியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களா?

  • மாநிலங்களவையில் அதிமுக வாக்களிக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்காது. அதாவது ஒரு சாதாரணப் பெரும்பான்மை அடிப்படையில்தான் குடியுரிமை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அறிஞர்கள், விஞ்ஞானிகள் என 1047 பேர் கையெழுத்திட்டு குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறச் சொல்லி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  • சட்டத்திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அசாம் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இதுவரை 5 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். அசாம் மட்டுமின்றி வடகிழக்கு முழுவதுமே வங்கதேச ஏதிலியருக்கு குடியுரிமை கொடுப்பதால் தமது பண்பாடு அழிந்துவிடும் என்ற அச்சம் நிலவிக் கொண்டிருக்கிறது.
  • தில்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்திலும் அலிகார் பல்கலைக் கழகத்திலும் காவல்துறை நடத்திய வெறியாட்டத்தால் நாடு முழுவதும் எழுந்த அதிர்வலை கணிசமான நகர்ப்புற மாணவர்களைப் போராட்டத்திற்கு இழுத்து வந்துள்ளது.
  • பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆற்றல்கள், திரைப்பட கலைஞர்கள் என நாடெங்கும் இச்சட்டத்திருத்தத்திற்கும் NPR – NRC க்கும் எதிராகப் போராடிக் கொண்டுள்ளனர். முன்னாள் நீதிபதிகள் இச்சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கருத்து சொல்லியுள்ளனர்.
  • வெளிநாட்டு ஊடகங்களான வாசிங்கடன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், கார்டியன், ரெளடர்ஸ் போன்றவை குடியுரிமை சட்டத்திருத்தத்தை விமர்சித்து தலையங்கம் எழுதியுள்ளன.
  • வங்கதேசத்தின் வெளியுறவு அமைச்சர், வங்கதேசத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்ற பொருளில் பேசியதுடன் அமித் ஷா வங்கதேசத்தில் வந்து தங்கியிருந்து மத துன்புறுத்தல் இருக்கிறதா? என்று காட்ட வேண்டும் என்று சொல்லியுள்ளார். மலேசியப் பிரதமரும் இச்சட்டத்திருத்தத்தை விமர்சித்துப் பேசியுள்ளார்.
  • குடியுரிமை திருத்தச் சட்டம் – தேசிய மக்கள்தொகை பதிவேடு – தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் தொடர்பைப் புரிந்து கொண்டு இவற்றால் தமது குடியுரிமைப் பறிக்கப்படும் என்ற அபாயம் இருக்கிறது என்று புரிந்து கொண்ட இஸ்லாமியர்கள் இலட்சக்கணக்கில் திரண்டு வீதியில் வந்து போராடிய வண்ணம் உள்ளனர்.
  • கர்நாடகாவில் இருவர், உத்தர பிரதேசத்தில் 21 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளனர். அதுவும் உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக காவல்துறையே இறங்கி கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் ஒரு புதிய கட்டமாக இது பார்க்கப்படுகின்றது.
  • கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம், இராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், மராட்டியம், தில்லி, பீகார், மத்திய பிரதேசம், ஒடிசா, பாண்டிச்சேரி ஆகிய 13 மாநில முதல்வர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) ஐ எதிர்ப்போம் என்று சொல்லியுள்ளனர். மேற்கு வங்கத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான பணிகளை அதன் முதல்வர் மம்தா நிறுத்திவிட்டார். கேரள சட்டசபையில் NPR க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிணராய் விஜயன், மம்தா, அசோக் கெலாட் போன்றோர் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து போர்க்குரல் எழுப்பி வருகின்றனர், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த கட்சிகளான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு, தெலங்கானா இராஷ்டிரிய சமிதி, ஐக்கிய ஜனதா தளம் போன்றைவை நாடு தழுவிய NRC ஐ எதிர்த்துள்ளனர். பா.ச.க.வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் நாடு தழுவிய NRC ஐ நடத்தக்கூடாது என்று சொல்லியுள்ளன.
  • துப்பாக்கிச் சூட்டில் மட்டுமல்ல, NRC ஐ நாடு தழுவிய அளவில் அமல்படுத்துவோம் என்று அமித் ஷா அரம்பத்தனமாக பேசத் தொடங்கியதில் இருந்து மேற்கு வங்கத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஐ தாண்டிவிட்டது.
  • பிரதமர் மோடி இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்பது போல் பேசிக் கொண்டிருக்கும் போதே கர்நாடகாவில் குடிமக்கள் அல்லாத நாடற்றவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு முகாம் கட்டப்பட்டிருக்கும் செய்தி வெளிவந்தது. பிறப்பின் வழி குடியுரிமை என்றில்லாமல் வம்சா வழியின் அடிப்படையில் குடியுரிமை என்று சொல்லி அரசு ஆவணங்களை கேட்பதன் மூலம் இந்நாட்டின் மண்ணின் மைந்தர்களை தடுப்பு முகாமில் அடைக்கும் ஆபத்து இருக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.

இத்தகைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழலில் தான் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரானப் போராட்டங்களுக்கு திமுக மீது பழிபோடுகிறார் எடப்பாடி.

ஒன்று முதல்வர் செய்தித்தாள் கூட வாசிக்காதவராக இருக்க வேண்டும் அல்லது அறிவாலயமும் அதிமுக அலுவலகமும்தான் உலகம் என்று கருதக் கூடிய கிணற்றுத் தவளையாக இருக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களை ஏமாளிகளாக அவர் கருத வேண்டும். தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்று இந்த அடிமை அரசுக்கு உணர்த்த வேண்டும்.

குடிபோதையின் தீமை பற்றி ஒரு பிரபலமான கதை உண்டு. ஒருவரிடம் ஒன்று மது குடிக்க வேண்டும் அல்லது இந்த குழந்தையைக் கொல்ல வேண்டும் அல்லது அந்த குழந்தையின் தாயை வன்புணர்வு செய்ய வேண்டும் என்று மூன்று தெரிவுகள் முன்வைக்கப்பட்டபோது இந்த மூன்றில் சிறிய தீமை மதுதான் என்றெண்ணியவர் மதுவைக் குடித்ததாகவும் அதை தொடர்ந்து மதி மயங்கிய நிலையில் அந்தப் பெண்ணின் கையில் இருந்த குழந்தையை தரையில் தூக்கி வீசிக் கொன்றுவிட்டு அந்தப் பெண்ணை வன்புணர்ந்துவிட்டாரென்றும் ஆகையால். ”உண்ணற்க கள்ளை, குடிபோதை என்பது எல்லாக் குற்றங்களுக்கும் வழிவகுக்கும்” என்று சொல்லப்படுவதுண்டு.

அதுபோல் பதவிப்போதை இனப்படுகொலையின் போது மெளனம் காக்க வைத்ததைக் கண்டோம், ஒருபடி மேலே இனப்படுகொலையைத் தடுக்கப் போராடியவர்களை அடக்கி ஒடுக்கக் கண்டோம். காவிரி உரிமையில் சமரசம் செய்யக் கண்டோம். இப்போது, எல்லா உரிமைகளுக்கும் தாய் உரிமையான குடியுரிமைப் பறிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் நடைமுறையை ஆதரிக்கக் கண்டு வருகிறோம். பதவி போதை தன்மானத்தையும், இனமானத்தையும் இன நலனையும் அடகு வைக்க வழிவகுத்துவிடும் என்பதற்கும் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் வரலாற்றின் இரத்த சாட்சியாக அறியப்படுவார்கள்.

நாளை தொடங்கி ஐந்து நாட்களுக்கு சட்டமன்றம் நடக்க விருக்கிறது. இதில், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பை அனுமதிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசைக் கோருவோம். வீதியில் இறங்கிப் போராடினால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றச் செய்ய முடியும்.

எடப்பாடி பழனிச்சாமிப் போன்றவர்களுக்கு சுய புத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாது, மக்களின் போராட்டம் மட்டுமே புத்தி புகட்ட முடியும்.. ஏனென்றால்,

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.

அணுகி குறை சொல்கின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர். கரும்புப்போல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

பழனிச்சாமிகளுக்கும் பன்னீர்செல்வங்களுக்கும் என்றே வள்ளுவர் எழுதியது போல் உள்ளது!

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW