சத்தியவாணி முத்து நகர் பூர்வகுடி மக்கள் வெளியேற்றம் – எதிர்த்து நின்ற தோழர் இசையரசு மற்றும் DYFI தோழர்கள் மீது காவல்துறை தாக்குதல் ! – கண்டனம்

29 Dec 2019

அண்ணாசாலையில் இருக்கும் சத்தியவாணி முத்து நகர் மக்களிடம், ”நாளைக்கு உங்கள் வீடுகள் இடிக்கப்பட உள்ளன” என்ற செய்தியை காவல்துறையும் மாநகராட்சி அதிகாரிகளும் தெரிவித்தன. அரையாண்டு விடுமுறைக் காலமிது. இந்த கல்வியாண்டு முடிய இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. இங்கிருந்து 26 கி.மீ தொலைவில் இருக்கும் பெரும்பாக்கத்திற்கோ, செம்மஞ்சேரிக்கோ இடம்பெயர்ந்தால் பிள்ளைகளின் கல்விப் பாழாகும்” என்பது மக்களின் முறையிடல். பலனொன்றும் இல்லை. வழக்கம் போலவே இன்று காலை அப்பகுதி சென்ற மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் பூர்வகுடி மக்களைப் பெயர்த்தெடுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டனர்.

இதை எதிர்த்துப் போராடிய பெண்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்துகிறது காவல்துறை. மக்களுக்கு தோள் கொடுத்து நின்ற ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் ஆசைத்தம்பி, இளங்கோ ஆகியோரைக் கைது செய்து அப்புறப்படுத்துகிறது காவல்துறை. மக்களின் துயரத்தையும் நியாயத்தையும் அரசின் அராஜகத்தையும் அம்பலப்படுத்தி  ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தோழர் இசையரசையும் தாக்கி திருவல்லிக்கேணி D1 காவல்நிலையத்திற்கு கொண்டு செல்கிறது காவல்துறை. அதுமட்டுமின்றி காவல்நிலையத்திலும் தோழர்கள் மூவரும் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். தோழர் இசையரசின் முகம் வீங்கியிருக்கிறது. வலது கையில் லத்தியால் அடித்ததில் வீக்கம் இருக்கிறது. இடதுகால் சிறுவிரலில் இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் சில மணி நேரங்கள் அந்த இரத்தக் காயத்துடனே அவர் இருந்த நிலையில், இச்செய்தி வெளியே தெரிந்தப் பிறகே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவிச் செய்யப்பட்டது. பின்னர், இம்மூவர் மீது பிரிவு 75 இன் கீழ் வழக்குப் போடப்பட்டு காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சென்னை நகரத்தில் பிய்த்தெறியப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் பெருவெள்ளத்தில் அறச்சீற்றமும் பொதுவுணர்வும் காய்ந்துவிடாத ஒரு துளிதான் தோழர் இசையரசு.  நாமும் தோழர் இசையரசும் இன்னும் சில தோழர்களும் இணைந்து 2009 – 2011 ஆண்டுகளில் குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தைத் தொடங்கி இந்த நவீனத் தீண்டாமைக்கு எதிராக செயல்பட்டோம்.  அப்போது சிட்டி செண்டருக்கு பின்புறமுள்ள அம்பேத்கர் பாலத்தில் உள்ள குடிசை வீடுகளை அப்புறப்படுத்தும் முனைப்பு மாநகராட்சிக்கு இருந்தது. அக்காலகட்த்தில் தான், ”யாருக்காக சிங்கார சென்னை?” என்ற தலைப்பில் ஆவணப் படமொன்றை எடுத்தோம். இந்த பத்தாண்டுகளில் சிந்தாதிரிப்பேட்டை லாங்க்ஸ் கார்டன், சூளைமேடு முக ஸ்டாலின் நகர், சைதை தாடண்டர் நகர், கிரீஸ் சாலை மக்கீஸ் தோட்டம், திடீர் நகர் என ஒவ்வொரு குடிசை வாழ் பகுதிகளும் வீழ்த்தப்பட்டு மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டன. ஓ.எம்.ஆர். சாலையில் வானளாவ உயர்ந்த தகவல் தொழில்நுட்ப கண்ணாடிக் கட்டிடங்களுக்கு இணையாக கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் குடிசை வாழ் மக்களால் வீங்கிப் பெருத்தன. 2017 இல் கிரீம்ஸ் சாலையில் உள்ள திடீர் நகர், மக்கீஸ் தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்ட போது நாம் களம் இறங்கி  தோழர் இசையரசு உள்ளிட்ட பல்வேறு சனநாயக ஆற்றல்களோடு இணைந்து மக்களையும் அணி திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தோம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினோம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். ஆனாலும், மக்களை அப்புறப்படுத்தி பெரும்பாக்கத்திற்கு விரட்டியடிப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை.  ஆளும் வர்க்க ரியல் எஸ்டேட் நில மாஃபியா கும்பலும் பிழைப்புவாத கும்பலும் மக்களின் போராட்டங்களுக்கு எதிராக நிற்கின்றன. ஆற்றங்கரையோரம் வாழும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகப் பார்க்கும் கண்ணோட்டம் பொதுசமூகத்திடம் மண்டிக்கிடக்கிறது. இவையாவும் சேர்ந்து கரையோரம் வாழும் மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரம் பெறுவதை தடுத்து அவர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கின.

1990 களில் பிற்பாதியில் இருந்து சென்னை நகரை தம் உழைப்பால் உருவாக்கிய பூர்வகுடி மக்கள் சென்னைக்கு வெளியே துரத்தப்படும் துடைத்தழிப்பு வேலை நடந்துவந்தது. உலகமய, தாராளயம, தனியார்மயத்தின் வருகை நகரத்தின் வானளாவிய கட்டிடங்களை, பறக்கும் பாலங்களை, பறக்கும் இரயில்களை, பன்னாட்டு வணிக வளாகங்களைக் கொண்டு வந்தது. விலையுயர்ந்து போன நகரத்தின் நிலங்களில் உடைமையற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடமில்லை என்றானதோடு விரிவடையும் நகரத்திற்கான உழைப்புச் சக்தியாக இம்மக்கள் கண்ணகி நகருக்கு வீசியெறிப்பட்டனர்.

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த எந்த கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. திமுகவும், அதிமுகவும் இது விசயத்தில் ஒரே கொள்கையைக் கடைபிடித்தன. ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிச்சாமியோ எவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நகரத்தில் வாழவழிசெய்ய முன்வரவில்லை. இவர்களோடு கூட்டணி வைத்த தலித் கட்சிகளோ உலகமய, தாராளமய, தனியார்மயத்திற்கு எதிரான உணர்வுப்பூர்வ கொள்கை இன்மையால் இந்த நவீன தீண்டாமைக்கு எதிரான நிற்கவில்லை. குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி, காவல்துறை, நீதிமன்றம் என   அரசு இயந்திரத்தின் அத்தனை பாகங்களும் கரும்பு சக்கையைப் பிழிந்து தள்ளும் இயந்திரங்களாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் நடந்து கொண்டன. பெசண்ட் நகரிலும் திருவான்மியூரிலும் வசதியாய் வாழ்ந்துவரும் நீதிபதிகள் இம்மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றே வகைப்படுத்தினர்.

2017 இல் அப்புறப்படுத்தப்பட்ட கிரீம்ஸ் சாலையில் உள்ள மக்கீஸ் தோட்டம், திடீர் நகர்ப் பகுதி அப்புறப்படுத்தப்பட்டது. ஓரிரு நாளுக்கு முன்புதான் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியது. சுமார் 70 ஆண்டுகாலமாக அங்கே வாழ்ந்து வரும் மக்கள். இத்தனைக்கு அங்கே வீடுகள் கட்டிக் கொடுத்தது தமிழக அரசு தான். வீடுகள் அப்புறப்படுத்துவதை எதிர்த்து நீதிமன்றப் படியேறினர் மூவர். அவர்களது வேண்டுகோளை நிராகரித்ததோடு நிற்கவில்லை நீதிமன்றம். ஒருபடி மேலே சென்று கூவங்கரையோரம் உள்ள அத்தனை வீடுகளையும் அப்புறப்படுத்தி வெளியேற்ற சொன்னது, பெரும்பாக்கத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் அவர்கள்தான் இருக்கிறார்களா? என்று திடீர் சோதனை நடத்த சொன்னது, ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பு இவர்களின் புகைப்படத்தை ஒட்டி வைக்க வேண்டும் என்று சொன்னது. ஆற்றங்கரையோரம் வாழும் மக்கள் ’ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று சொன்னதோடு இப்படி இடம்பெயர்க்கப்படுவோரை கிரிமினல்களாகவும் சித்திரித்தது.

மொத்தத்தில், நீதிமன்றத்தின் வர்க்க – சாதி சார்பும் ஏழை, எளிய மக்களின் மீது கொண்டிருக்கும் கண்ணோட்டமும் குடிசை வாழ் மக்கள் மீதும் சாலையோர வியாபாரிகள் மீதும் ஒவ்வொருமுறையும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த தொடர் நிகழ்ச்சிப் போக்கில் கிட்டத்தட்ட கூவம் ஆற்றங்கரையில் உள்ள எல்லாச் சேரிகளும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. எம்.ஆர்.டி.எஸ். இரயில் நிலையங்கள், சிங்கார சென்னை  என்ற பெயரில் இவை நடந்தேறிவந்தன. 2015 ஆம் ஆண்டின் சென்னைப் பெருவெள்ளத்திற்குப் பின் ஒட்டுமொத்த பழியையும் ஆற்றங்கரையோரம் வாழும் மக்களின் மீது போட்டு அரசு இயந்திரமும் பொது சமூகமும் தப்பித்து கொண்டு இவர்களை அப்புறப்படுத்த முனைப்புக் காட்டின. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு குடியமர்த்தபடும் செம்மஞ்சேரிப் பகுதியும் நீர்நிலை ஆக்கிரமிப்பே ஆகும். இப்போது நகரத்தில் விட்டுவைக்கப்பட்டிருப்பது பக்கிங்காம் கால்வாய் கரையோரங்களில் வாழும் மக்கள் மட்டுமே. அவர்களை நோக்கியும் பெருநகர புல்டோசர்கள் நகர்ந்து கொண்டுள்ளன.

உலகப் பெருமூலதனம் இந்திய சாதி சமூகத்தின் மீது ஊடுருவிப் பாயும் போது வாழ்வுரிமை, இருப்பிட உரிமை, குழந்தைகளுக்கான கல்வியுரிமை, பெண்ணுரிமை என எல்லாவகையான உரிமைகளும் மண்டியிட்டுக் கிடக்கின்றன. காடுகளில் இருந்து பழங்குடிகள், கடல்புறங்களில் இருந்து மீனவர்கள், விளைநிலங்களில் இருந்து விவசாயிகள், நகரத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்த உடைமையற்ற உழைக்கும் மக்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். இந்திய அரசக்கட்டமைப்பின் வழியாக சாதி, வர்க்க, தேசிய ஒடுக்குமுறை ஒன்றை மற்றவை சார்ந்தும் ஒன்றில் மற்றவை ஊடுருவியும் புயல் காற்றைப் போல் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிய்த்தெறிந்து கொண்டிருக்கிறது. கோட்பாட்டு தளத்தில் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றையோ ஒன்றிற்கும் மேற்பட்ட அம்சத்தையோ மறுத்தும் அதனதனில் உள்ள குறிப்பான அம்சத்தை அதனதன் அளவைவிட மிகைப்படுத்தியும் குறைப்படுத்தியும் சனநாயக ஆற்றல்கள் விலகி நிற்பதும் வேடிக்கைப் பார்ப்பதும் சிதறி நிற்பதும் நடந்து வருகிறது. இதில் ஒரு கருத்தியல் ஒற்றுமையும் போராட்ட அணி சேர்க்கையையும் உருவாக்க வேண்டியத் தேவையை சத்தியவாணி முத்து நகரில் இடிந்து கிடக்கும் கற்குவியல்கள் உரக்கச் சொல்கின்றன. அது ஒரு தலைமுறையின் கனவு சிதறடிக்கப்பட்டிருப்பதன் வெட்ட வெளிக் காட்சியாகும். சென்னை நகரைப் பொருத்தவரை எஞ்சியிருக்கும் குடிசைப் பகுதி வாழ் மக்களுக்கு நகரத்தில் வாழ்வதற்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டுவதும் வீசி நகரத்திற்கு வெளியே வீசி எறியப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வுரிமையையும் சுயமரியாதையையும் மீட்டெடுப்பதும் இதை படிக்க நேரும் ஒவ்வொருவரின் சனநாயக கடமையாகும்.

 

தமிழ்த்தேச மக்கள் முன்னணி – சாதி ஒழிப்பு முன்னணி,

சென்னை மாவட்டம் – 9884318227, 8508726919

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW