டிச 25 –  வெண்மணித் தீ

24 Dec 2019

1960’களின் இறுதி ஆண்டுகள் கீழத்தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்களின் கூலி, சங்க உரிமைக்கான சனநாயகப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலம். சாணிப்பால், சவுக்கடிக்கு எதிரான பண்ணையடிமைகளின் போராட்டம் வாட்டாக்குடி இரணியன் போன்றவர்களின் ஈகத்தின் தொடர்ச்சியாக, பரவலான போராட்டமாக செங்கொடி இயக்கத்தின் தலைமையில் பரிமாணம் எடுத்தது. விவசாயத் தொழிலாளர்களாகவும், சமூக ரீதியாக தாழ்த்தப்பட்ட பிரிவினர்களாகவுமிருந்த மக்களின் போராட்டம் பண்ணையார்களின் ” நெல் உற்பத்தியாளர் சங்கம் ” உருவாகக் காரணமானது. காங்கிரஸ் கட்சியிலிருந்த பண்ணையார்கள் தலைமையிலான சங்கத்திற்கும், செங்கொடி இயக்கத்தின் தலைமையில் ன் விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்குமான போராட்டக் களம் வீரியம் பெற்றது.

 

சுரண்டும் வர்க்கம் ஆதிக்க சாதியாகவும் இருப்பதால் உழைக்கும் மக்களைப் படுகொலை செய்வது தொடர்கதையாகும். 1968 டிசம் 25 இல் மேல் சாதிப் பண்ணைகள்  44 பேரை எரித்த வெண்மணித் தீ, 1999 சூலை 23 இல் தாமிரபரணியில் 17 பேரை, 2018 மே 22 இல் தூத்துக்குடியில் 16 பேரை, 2019 டிச 3 இல் மேட்டுப்பாளையத்தில் 17 பேரை எனச் சாதிய மேலாதிக்கம், பாப்பனீய மேலாதிக்க அரச பயங்கரவாதமும் படுகொலை அரசியல் செய்து வருகிறது.

 

கீழத் தஞ்சை உள்ளிட்ட ஆற்றுப்பாசனச் சமவெளிகளில் பண்ணை நிலக்குவிமானம் பினாமிகளின் பேரில் குடும்பச் சொத்துக்களாகவும், கோவில், மடங்களுக்கு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பார்ப்பன, சாதிய ஆதிக்க சக்திகளிடம் உள்ளது. நிலமற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூக உழைக்கும் மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் காவி  – கார்ப்பரேட் மோடி அரசு இயற்கை வளங்களைச் சூறையாடும் வகையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாரி வழங்கி வருகின்றது.

 

தனியார் நிலக் குவியல், கோவில், மடங்களின் நிலங்கள், பஞ்சமி நிலங்கள் உழைக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூக மக்களுக்குக் கிடைக்கப் போராட வெண்மணிப் படுகொலை நாளில் சபதமேற்போம்!

 

-மீ.த.பாண்டியன்
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW