குடியுரிமை சட்டத்திருத்தம் CAB மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC- நாம் ஏன் எதிர்க்கவேண்டும் ?

05 Dec 2019

மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை சட்டம் 1955 இல் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை மக்களவையில் நேற்று முன்தினம் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றியது. இன்று மாநிலங்களவையில் நிறைவேற்ற முயற்சித்துவருகிறது. அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வலுவான எதிர்ப்பு தொடர்கிறது. நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் இதனை  கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்த சட்டத்திருத்தமானது டிசம்பர் 31, 2014 வரை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம்  ஆகிய  3 நாடுகளிலிருந்து இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினர் (இந்து, சீக்கியர், பௌத்தர், ஜெயின், கிருத்தவர்) இந்தியாவில் ‘சட்டவிரோதமாக’ குடியேறியிருந்தால் அவர்களுக்கு  குடியுரிமை கொடுப்பதற்கு வழிவகுக்கிறது.
இந்த 3 நாடுகளிலிருந்து குடியேறிய லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் நாடற்றவர்களாக  ஆக்கப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலை போல அகதிகள் முகாமிற்குள் அடைக்கப்படுவர்.

1947 இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் போது கோடிக்கணக்கான  மக்கள் இருதரப்பிலும் குடியேறியுள்ளனர், இதில் மேற்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய வங்கதேசத்திலிருந்தும் மக்கள் இடம்பெயர்த்துள்ளனர். தங்கள் உடைமைகளை எல்லாம் விட்டுவிட்டு இடம்பெயர்ந்தவர்கள் இந்நாட்டில் அகதிகளாயினர். மீன்டும் 1971 இல் வங்கதேசம் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்தபோதும் மக்கள் இடம்பெயர்ந்தனர். இதேபோல் 1983 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடங்கியபிறகு பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தனர். பர்மாவில் சிறுபான்மை ‘ரோஹிங்கியா’ இஸ்லாமியர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிவரும் சூழலில் அவர்களும் இந்தியாவிற்குள் அகதிகளாக வருகின்றனர்.

இலங்கை, பர்மா, திபெத், நேபாளம் என்று அண்டை நாடுகளிலிருந்து  இடம்பெயர்ந்த  அகதிகளுக்கு  குடியுரிமை வழங்கப்படமாட்டாது. குடியுரிமை சட்டத்திருத்தம் CAB மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு NRC ஆகிய இரண்டையும் இணைத்து புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.  நாடு முழுக்க NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்துவதற்கு சட்டம் கொண்டு வரவுள்ளது பா.ச.க. அரசு. இதன் மூலம் இந்தியாவின் 130 கோடி மக்களும் தாம் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று மெய்பிப்பதற்கு தன் பாட்டன், முப்பாட்டன் பெயர் தாங்கிய அரசு ஆவணங்களை சான்றாக காட்ட வேண்டும். இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை உள்ளதால் பெரும்பான்மை மக்கள் தாங்கள் இந்துக்கள் என்று நிரூபித்தால் கூட போதுமானதாக இருக்கும் அனால் இஸ்லாமியர்கள் போதிய ஆவணங்களை கொடுக்கவில்லை என்றால்  அவர்கள் ‘அந்நியர்கள்’ , ‘ஊடுருவகாரர்கள்’  என்று அறிவிக்கப்பட்டு நாடற்றவர்களாக முகாம்களில் அடைக்கப்படுவர்.

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட  தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 19 லட்சம் மக்கள் ‘சட்டவிரோதமாக’ குடியேறியவர்கள் என்ற பட்டியலில் இருப்பதை இந்த சட்டத்திருத்தத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. வங்கதேசத்தை  சேர்ந்த இஸ்லாமியர்கள் குடியுரிமைப் பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தது மோடி அரசு. ஆனால் இதில் பெரும் எண்ணிக்கையில் இந்துக்கள் இருப்பதால் அதனை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘இந்நாட்டில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றுவோம் என்று முழங்கினார், அஸ்ஸாமை போன்று இந்துக்கள் இதில் பாதிப்பு அடையக்கூடாது என்பதால் குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தார்.  நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை மேற்கொள்வோம் என்று தெரிவித்து இருந்தார் அமித் ஷா.

மத அடிப்படையில் குடியுரிமையை தீர்மானிப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பானது மட்டுமின்றி இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி, அவர்களை அந்நியர்களாக சித்தரித்து, ‘இந்து தேசம்’ என்பதை பிரகடனப்படுத்தும் செயலாகவே நாம் பாக்கவேண்டியுள்ளது.

=============================================================================================

நரேந்திர மோடி அரசு, தேசிய குடிமக்கள் பதிவேட்டினை (NRC) மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது. இதன் பொருட்டாக ஒவ்வொரு இந்தியரையும் தனது குடியுரிமையை மட்டுமல்லாது அவர்களது தாத்தா- பாட்டியின் குடியுரிமையையும்  நிரூபிக்க சொல்லலாம். சமீபத்தில் அசாமில் இது தான் நடந்தேறியது .

தேசிய அளவிலான தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு மோடி அரசு என்ன “கட்- ஆப் “ தேதி வைத்துள்ளது என்று தெரியவில்லை. ஒரு உதாரணத்திற்கு “கட்-ஆப்” தேதி  1971 ஆம் ஆண்டு என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறக்கவில்லையென்றால் , அவர்கள் உங்கள் தாய்- தந்தையரையோ அல்லது தாத்தா பாட்டியையோ அவர்கள் 1971 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கும்.

என்.ஆர்.சி ஒரு மிக மோசமான திட்டம் என்பதற்கான ஏழு காரணங்கள் :

  1. சட்டவிரோத குடியேற்றம் ஒரு பெரிய பிரச்சனையா? அரசாங்கம் 130 கோடி மக்களிடையே சட்டவிரோதமாக குடியேறியர்களை அடையாளம் காண நிறைய பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்ய விழைகிறது. ஆனால் இந்தியாவில் சட்ட விரோதமாக நிறைய மக்கள் குடியேறி உள்ளனர் என்றோ அவர்களால் நிறைய பிரச்சனைகள் மேலெழுந்து உள்ளது என்றோ இன்னும் ஆதாரப்பூர்வமாக முன்வைக்கவில்லை.

இது குறித்து நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேட்கப்படும் போதெல்லாம், உள்துறை அமைச்சகம் ஒரே பாங்கான பதிலை அளிக்கிறது “ வங்க தேசத்தில் இருந்து அகதிகள் ரகசியமாக இந்தியாவிற்குள் நுழைவதால், நாடு முழுவதும் உள்ள வங்க தேச மக்கள் குறித்த துல்லியமான தகவல் சேகரிப்பது கடினம்” என்று கூறுகிறது .

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் இரண்டு வகைப்படுவர் : கடவுச்சீட்டு(passport) & விசா இல்லாது எல்லையை தாண்டியவர்கள் ; இன்னொரு வகையினர் விசாவுடன் இந்தியாவிற்கு வந்து பின்னர் விசா காலாவதி ஆன பிறகும் இந்தியாவில் தொடர்ந்து இருப்பவர்கள். வருடந்தோறும் இந்தியாவிற்கு 1 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அது போக மற்ற விசா எடுத்துக்கொண்டும் பலர் வருகின்றனர். இதில் வெறும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மட்டுமே விசா காலாவதி ஆன பிறகும் இங்கேயே தங்குகின்றனர். இதில் 6 முதல் 7 ஆயிரம் பேர் வரை நாடு கடத்தப்படுகின்றனர். வெறும் 1000- 2000 பேர் மட்டுமே வெளிநாட்டினர்  சட்டம் 1946  மூலம் தண்டிக்கப்படுகிறார்கள்.

உள்விவகாரத்துறை அமைச்சகம் வாடிக்கையாக அளிக்கும் மற்றொரு பதில் “சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடித்து நாடு கடத்துவது என்பது ஒரு தொடர்ச்சியான செயலாகும். மாநில அரசாங்கங்கள்/ / யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ள அத்தகைய நாடு கடத்தும்  உத்தரவுகள் மத்திய அரசிடம் மையமாக பராமரிக்கப்படுவதில்லை. எனவே , இது ஒரு தொடர் நடவடிக்கை என்றால் , ஏன் மத்திய அரசாங்கம் மாநில அரசுகள் வழங்கியுள்ள அத்தகைய ஆணைகளைத் தொகுத்து உண்மையிலேயே சட்ட விரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்துள்ளதா என்பதை சரி பார்க்கவில்லை?

2004 ஆம் ஆண்டு , உள்துறை அமைச்சகம் வங்க தேசத்திலிருந்து இந்தியாவிற்கு குடியேறியவர்களின் எண்ணிக்கை 1.2 கோடி என்று கூறியது . 2016 ஆம் ஆண்டு , இந்த எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியது உள்துறை அமைச்சகம். இந்த புள்ளி விவரங்கள் எந்த அளவு உண்மைக்கு புறம்பானது என்பது மொத்த புலம்பெயர் வங்காளிகளின் எண்ணிக்கையே வெறும் 80 லட்சம் தான் என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். வங்க தேசத்தின் மொத்த  மக்கள் தொகையே ஏறத்தாழ  16 கோடி தான்.இதில் 2 கோடி வங்க தேச மக்கள் இந்தியாவில் உள்ளனர் என்று கூறுவது வடிகட்டிய பொய்யாகும். “ எங்கள் நாட்டு மக்கள் சமுத்திரத்தில் குதித்து இத்தாலிக்கே  நீந்தி சென்றாலும் செல்வார்களே ஒழிய இந்தியாவிற்கு வர மாட்டார்கள்” என்று வங்கதேசத்தின்  இந்திய தூதர் தெரிவித்தார்

சட்ட விரோதமாக குடியேறியவர்களால் அதிகமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாநிலம் அசாம் ஆகும். சமீபத்தில் நடந்து முடிந்த என்.ஆர்.சி புதுப்பித்தல் நடவடிக்கையில் , பல லட்சம் மக்களால்  தங்கள்  குடியுரியுமையை நிரூபிக்க முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 19 லட்சம் மக்களால் மட்டுமே  தங்களது மூதாதையரும் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க முடியாமல் போனது. அசாமில் குடியேறியவர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள் என்ற கருத்துக்கு எதிராக இந்த 19 லட்சத்தில் பெரும்பான்மையானவர்கள்  இஸ்லாமியர் அல்லாதவரே ,

1985 ஆம் ஆண்டு முதலே அசாமில் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் உள்ளது. 1985 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, 9.4 லட்ச மக்களின் குடியுரிமை வழக்கினை கையாண்டுள்ளது. இதில் வெறும் 61 ஆயிரம் மக்களை மட்டுமே வங்க தேசத்து மக்கள் என்று அறிவித்தது இந்த தீர்ப்பாயம். இதில் 2500 க்கும் குறைவான மக்களே வங்க தேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனர் . எனவே சட்ட விரோத குடியேற்றம் மிகப்பெரிய பிரச்சனை என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது . இத்தகையதொரு சூழ்நிலையில் , எதற்காக 130 கோடி மக்களும் தங்களது மூதாதையாரின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்?

2.வைக்கோல்போரில் ஊசி: கண்டிப்பாக இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் உள்ளனர். அநேக நாடுகளில் இதே நிலைமை தான். ஆனால் இந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் இவர்களை அடையாளம் காண நினைப்பதென்பது வைக்கோல்போரில் ஊசியை தேடுவதற்கு சமமான ஒன்றாகும். சட்ட விரோதமாக குடியேறியவர்களை பற்றிய தரவுகள் ஏதும் இல்லையென்பது நமக்கு உணர்த்துவது வெகு சிலரே சட்ட விரோதமாக குடியேறி உள்ளனர் என்பதையே. இவர்களை அடையாளம் காண ஒவ்வொரு இந்தியனின் வம்ச வழியினையும் ( family tree) சரி பார்ப்பதென்பது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்று இல்லை.

  1. நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி: குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்பது தான் இயற்கையின் நியதி. ஆனால் என்.ஆர்.சி யை பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியனும் தனது குடியுரிமையை நிரூபிக்கும் வரை “ சட்டவிரோதமாக குடியேறியவர்” என்றே கருதப்படுவர்.

உதாரணமாக, தங்களது குடியுரிமையை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை சமர்பிக்க முடியாதவர்களின் நிலைமை என்னவாகும்? ஒருவரிடம் ஆதார், கடவுச் சீட்டு, PAN கார்டு என இன்ன பிற ஆவணங்கள் இருந்தும் , அவருடைய தாத்தாவின் ஆவணங்கள் இல்லாத காரணத்திற்காக அவர் குடியுரிமை பறிக்கப்படுமா? இல்லாத ஒரு பிரச்சனையான சட்ட விரோத குடியேற்றத்திற்காக 130 கோடி மக்களையும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க சொல்லி அவர்களை தேவையற்ற பதட்டத்தில் ஆழ்த்தப் போகிறதா

  1. செலவு பயன் பகுப்பாய்வு : சட்ட விரோத குடியேற்றம் ஒரு மிகப் பெரிய பிரச்சனை என்பதை அரசு நிறுவ தவறிய நிலையில், , இதற்காக வீணாகவுள்ள மக்கள் வரிப் பனத்தை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அசாமில் மட்டும் , என். ஆர். சி காக 1220 கோடி செலவாகியுள்ளது.இதன்படி கணக்கிட்டால், இந்தியா முழுமைக்கும் என். ஆர்.சி க்காக 2 லட்சம் கோடிக்கு மேல் செலவாகும். இவ்வளவு செலவு செய்து இந்தியர்கள் அனைவரின்  தாத்தா,பாட்டியின் ஆவணங்களை சரி பார்க்க வேண்டிய அளவுக்கு அது உண்மையிலயே அவ்வளவு பெரிய பிரச்சனையா என்ற கேள்வி நம் முன் உள்ளது .

வெறும் 0.5 சதவீத மக்கள் அகில இந்திய அளவிலான என். ஆர். சி யில் இருந்து விலக்கப்பட்டாலும் , அது 65 லட்ச மக்கள் ஆகும். இது ஜெய்ப்பூரின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு கூடுதலாகும்.இவ்வளவு மக்களுக்கு தடுப்பு மையங்கள் ( detention centres ) கட்டி அதில் அவர்களை வருடக்கணக்கில் ஏன் காலம் முழுக்க வைத்திருக்க நினைப்பதென்பது பைத்தியக்காரத்தனமான செயலாகும். ஒரு ஒப்பீடுக்காக, இந்தியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையான திகார் சிறைச்சாலையின் கொள்ளளவு கூட வெறும் 6250 கைதிகள் தான்.

  1. என்.ஆர்.சி ஒரு தோல்வி அடைந்த முயற்சி: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் சமீபத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மட்டும் அரசியல் விஞ்ஞானியாக இருந்திருந்தால் பைத்தியம் குறித்த அவருடைய வரையறைக்கு அறியப்பட்டிருப்பார். பைத்தியக்காரத்தனம் என்பது ஒரு காரியத்தை ஒரே மாதிரி திரும்ப திரும்ப செய்து, வேறுவேறு முடிவுகளை எதிர்பார்ப்பது ஆகும் என்றார் ஐன்ஸ்டீன். ஒருவேளை , ஜெய்ஷங்கர்  என். ஆர். சி விவகாரத்தில் தான் சார்ந்திருக்கும் அரசின் நிலைப்பாட்டினை குறித்து இதை கூறியிருக்கலாம்.

அசாம் மாநிலத்தில் எதிர்பார்த்த நோக்கத்தினை பூர்த்தி செய்வதில் மிகப்பெரிய தோல்வி அடைந்த போதிலும், இதை இந்தியா முழுமைக்கும் செய்ய முயல்கிறது அரசு.  என். ஆர். சி வேண்டும் என்று கூறிய மக்களே அதை இரண்டு முறை நிராகரித்துள்ளனர் . ஒரு தோல்வி அடைந்த முயற்சியை  நாடு முழுவதுக்கும் அமல்படுத்துவதை அமித் ஷா அவர்கள் எப்படி நியாயப்படுத்தப் போகிறார்

  1. சட்ட விரோதமாக குடியேறியவர்களால் இந்தியாவிற்கு ஆபத்தா? காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஏற்கனவே இந்திய பாதுகாப்பு படைகள் ஏற்கனவே வேட்டையாடி கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் குடியேறிய வறிய மக்கள் இந்திய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் உண்மையிலேயே அச்சுறுத்தலாக உள்ளார்களா ?

ஒரு கூற்றுக்காக அவர்கள் இங்குள்ள வேலையை திருடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதே போன்று நாம் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு சட்டப்பூர்வகமாக வேலை தேடி வரும் மக்களை பார்ப்பதில்லை.

சட்ட விரோதமாக குடியேறி  இங்கொன்றும் அங்கொன்றுமாக உள்ள சில ஆயிரம் மக்கள் , இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாட்டில்  பெரும் சுமையாக உள்ளது உண்மையானால் , ஏன் ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மக்களை இங்கு கொண்டு வர  குடியுரிமை மசோதாவில் திருத்தம் செய்ய ஆர்வமாக உள்ளோம்.

7. இஸ்லாமியர்களை குறிவைத்த திட்டம்: என். ஆர். சி மூலமாக அடையாளம் காணப்படுபவர்களை வங்க தேசத்திற்கு நாடு கடத்த மாட்டோம் என்று ஏற்கனவே வங்க தேசத்திற்கு  இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் , சட்ட விரோதமாக குடியேறியவர்களைக் கண்டுபிடிக்க அரசு ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளது. இதில் இருந்தே அரசுக்கு இதில் உள் நோக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது.

இதன் உண்மையான நோக்கம் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிப்பதாகும்.  இஸ்லாமியர் அல்லாதோர் அகதிகளாக கருதப்பட்டு குடியுரிமை மசோதா சட்டத் திருத்தத்தின்படி அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். என். ஆர். சி யின் மூலம் அடையாளம் காணப்பட்ட மக்கள் நாடற்ற மக்களாக இந்தியாவில் தொடர்ந்து வாழ்வார்கள். இதன் மூலம் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றத் துடிக்கும்  சங் பரிவாரத்தின் குறிக்கோள் சட்டப் பூர்வமாக நிறைவேறுகிறது. என். ஆர். சி யின் உண்மையான பெயர் இஸ்லாமியர் வாக்குரிமை பறிப்புத் திட்டமாக இருக்க வேண்டும்.

அனைவருக்கும் அழிவு

என்.ஆர்.சி பா.ஜ.க வின் வெற்று  முழக்கமான  ’அனைவரும் ஒன்றிணைவோம், வளர்ச்சி காண்போம்’ ( சப்கா சாத் , சப்கா விகாஸ் ) என்பதற்கு நேரதிரானதாகும் . இது அனைவரையும் உள்ளடக்கியதோ வளர்ச்சி பற்றியதோ நம்பிக்கை பற்றியதோ இல்லை. இது உண்டாக்க போகும் மோசமான குழப்பத்தை “அனைவருக்கும் அழிவு” என்றே கூறலாம்

என். ஆர். சி நாட்டுக்கு பேரழிவை உண்டாக்கினாலும் ,பா. ஜ. க விற்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவரும் என். ஆர். சி யை பற்றித் தான் பேச முடியுமே ஒழிய  மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை பற்றி பேச நேரமிருக்காது . நமது தாத்தா, பாட்டியின் பிறப்பு சான்றிதழை தேடி ஓடிக் கொண்டிருக்கும் போது நாம் எப்படி வேலைவாய்ப்பின்மையை பற்றியோ விலைவாசி உயர்வை பற்றியோ பேச முடியும்.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற பெயரில் ஊட்டப்படும் இனவெறியும், இஸ்லாமியர்களின் ஒட்டுரிமையைப் பறிக்கக் கூடிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவும்  வரக்கூடிய தேர்தல்களில் வாக்காளர்களை துருவப்படுத்த உதவும். மோடியால் இந்துக்களுக்கு வேலை தர முடியாது , ஆனால் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கி விட்டோம் என்று பரப்புவதன் மூலம் மக்களுக்கு இன்பக் கிளர்ச்சியூட்ட முடியும்.

(‘Why India dosen’t  need NRC ? – www.theprint.in – சிவம் விஜி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில்: லீனஸ்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW