நெருங்கும் பாசிசம் – இந்தியாவில் பாசிசத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு மூலங்கள் என்ன?
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
எய்தவன் இருக்க அம்பை நோகக் கூடாதெனவும் சொல்வதுண்டு. காட்டைப் பார்ப்போர் மரத்தைப் பார்ப்பதில்லை. மரத்தைப் பார்ப்போர் காட்டைப் பார்ப்பதில்லை. அதிலும் மரத்தின் கிளை, இலை மட்டுமின்றி வேரையும் ஊருருவிப் பார்ப்பதில்லை. கண்ணில் புலப்படுவதற்குப் பின்னால் இருக்கும் உள்ளோட்டங்களை நாம் கண்டாக வேண்டாம்.
வங்கிகள் இணைப்பு, திவால் சட்டம், பொதுத்துறை பங்கு விலக்கங்கள், செல்லலாக் காசு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. எனப் பொருளியல் சீர்திருத்தங்கள் யாவும் நிகழ்த்திக் கொண்டிருப்பதென்ன? நிதிமூலதனக் கையிருப்பில் உலகின் முதல் நூறு வங்கிகளின் பட்டியலில் இந்திய வங்கியும் இடம்பிடித்துவிட்டது. உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளியல் கொள்கைகள் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக ஏகபோக பெருமூலதன சக்திகள் வளர்ந்து நிற்கின்றன. இவை அரசின் சலுகைப் பெற்ற, சூறையாடக் கூடிய முதலாளித்துவத் தன்மையில் வளர்ந்து வந்துள்ளன. தொழில் மற்றும் சேவைத் துறையின் ஒவ்வொரு துறையும் சில்லறை வர்த்தகம் தொடங்கி கனரக உற்பத்தி நிறுவனங்கள் வரை பெருவீத மற்றும் ஏகபோக சக்திகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
காசுமீர் 370 நீக்கம், பாபர் மசூதி தீர்ப்பு, என்.ஐ.ஏ., ஊபா சட்டத் திருத்தங்கள், குடியுரிமை சட்டத்திருத்தம் போன்ற அரசியல் அதிரடிகளின் திசைவழி என்ன? முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு, கல்வியை காவிமயமாக்கல், உயர்கல்வி நிலையங்களில் நிறுவனப் படுகொலைகள் எனப் படமெடுத்து ஆடுகிறது பார்ப்பயனியம். இராணுவம், நீதிமன்றம், ஊடகம் என அரசியல் சமூக நிறுவனங்கள் பெட்டிப் பாம்பாய் மோடி-அமித் ஷா கும்பலின் மகுடிக்கு ஆடிவரக் காண்கிறோம். தனது நூற்றாண்டு நிறைவில் இந்துராஷ்டிர இலட்சியத்தை எட்டிப் பிடிக்க இன்னும் சில அடிகளே இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், எதிர்க்கட்சிகள் குடைசாய்கின்றன. கோடிகளை வீசியெறிந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கொத்துகொத்தாக விலைக்கு வாங்குகிறார் மோடி. எஞ்சியப் பெருந்தலைகளை வெட்டி விளையாட வருவான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ. யை ஏவிவிடுகிறார் மோடி. பா.ச.க.வுக்கு நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கோடிகளை அள்ளிக் கொடுப்பவர்கள் யார்? மோடியுடன் ஓவ்வொரு வெளிநாட்டு பயணங்களிலும் தப்பாமல் உடன் சென்று ஒப்பந்தங்களை வென்றுவருபவர்கள் யாரோ அவர்களே!
சாவர்க்கரின் வாரிசுகளும் அம்பானி, அதானி வகையறாக்களும் ஒன்றுபடும் புள்ளி எது? ஒரே தேசம், ஒரே சந்தை, ஒற்றையாட்சி என்ற இலக்கில் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாய் காவியும் கார்ப்பரேட்டும் காட்சி தருகின்றன. இந்த காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சி அடுத்து என்ன வடிவம் எடுக்கக் கூடும்? நிதியாதிக்க சக்திகளின் சிறுகும்பலாட்சி எதை நோக்கிச் செல்லும்?
இன்றைக்கு நடந்தேறிவரும் அரசியல், பொருளியல், பண்பாட்டு நிகழ்வுகளும் உரை வீச்சுகளும் சமூக இயக்கங்களும் அதன் கூட்டுத்தொகையில் கொடுக்கும் விடை என்ன? தனது மேல்பூச்சுகளை, வண்ண உடைகளை எல்லாம் நீக்கிவிட்டு முழு நிர்வாணமாக அரசு பேயுருவம் எடுத்தால், கோர வடிவமெடுத்தால் அதுவே பாசிசம். அத்தகைய பாசிச அரச வடிமெடுப்பதற்கானப் பொருளியல் தேவையும் அது கோரும் அரசமைப்பு மாற்றங்களும் அதை இன்முகத்துடன் ஏற்கும் சமூகத் தயாரிப்பும் நடந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய அரசியல் சூழலால் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் எத்தகைய சவால்கள் காத்திருக்கின்றன? கரைபுரண்டு வரும் காட்டாற்று வெள்ளத்திற்கு அணைபோட சரியான இடம் எது? மதம் பிடித்த யானையை மண்ணில் சாய்க்க எங்கே அடிக்க வேண்டும்? எரிவது எதுவோ அதைப் பிடுங்கினால்தானே கொதிப்பது அடங்கும். பாசிச அபாயத்தை தடுக்க நாம் எதை குறிவைக்க வேண்டும்? நமது நிகழ்ச்சி நிரல் என்னவாக இருக்க வேண்டும்?
ஆய்வோம்! தெளிவோம்! செயல்திட்டத்தை வகுப்போம்! வாரீர்!
மோடி 2.0 – பாசிச அபாயம்
செயல்திட்ட விளக்கக்கூட்டம்
நாள்: 7-12-2019, சனிக்கிழமை, மாலை 5 மணி, இடம்: நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை,
தலைமை: செந்தில், இளந்தமிழகம்
விளக்கவுரை:
நிதிமூலதனமும் பாசிசமும் – பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
இந்துத்துவமும் பாசிசமும் – மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
அதிகாரக்குவிப்பும் பாசிசமும் – க.விநாயகம், தலைமைக்குழு உறுப்பினர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
நன்றியுரை: ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
9884318227/9941931499