பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதியானது! தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 21 மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

15 Nov 2019

தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.13) சென்னை நிரூபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

#1.பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு நீதியல்ல – தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்:

பாபர் மசூதி வழக்கில் நம்பிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என இந்த கூட்டமைப்பு கருதுகிறது. மேலும் மதவெறி சக்திகளின் செயல்பாட்டை வலிமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. முஸ்லிம்களிடம் நிலத்திற்கான முழு ஆதாரத்தையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்து தரப்பினரிடம் எந்த ஒரு ஆதாரத்தையும் கோராதது பாரபட்சமானதாகும். பாபர் மசூதி மீர்பாஹியால் கட்டப்பட்டதையும், மசூதிக்கு கீழ் இருந்த கட்டிடம் கோயில் இல்லை என்பதையும் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், 1949ம் ஆண்டு பாபர் மசூதிக்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததை சட்டமீறல் என்றும், 1992ல் அதனை இடித்து தகர்த்தது சட்டமீறல் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்த உச்சநீதிமன்றம், அத்துமீறி இடித்தவர்களிடம் பாபர் மசூதி இடத்தை வழங்கி, அதில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது எந்த விதத்தில் நீதியாகும். பிரச்சினைக்கு மூல காரணமான அந்த சட்ட மீறல்கள் குறித்தோ, அது தொடர்பான கிரிமினல் வழக்குகளை விரைந்து நடத்துவது பற்றியோ நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் பாதிக்கப்பட்ட சமூகத்திடம் இருந்து இடத்தை பிடுங்கி அதில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அரசே அறக்கட்டளை ஒன்றை நிறுவ வேண்டும் என்று நீதிமன்றம் கோருவது நியாயமற்றது என இந்த கூட்டமைப்பு கருதுகிறது.

பாபர் மசூதி இருந்த இடம் வருவாய்த்துறைக்கு (அரசுக்கு) சொந்தமானது என கூறிவிட்டு, அதில் மூன்று மாதத்திற்குள் கோயில் கட்டும் பணிகளை துவங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடுவது எந்த விதத்திலானது? மசூதி வீற்றிருந்த இடத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித பாத்தியமும் இல்லை என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க உத்தரவிடுவது எந்த நீதியின் அடிப்படையில்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

உச்சநீதிமன்றம் சட்டம் மற்றும் ஆவணத்தில் செயல்பட வேண்டுமா? அல்லது அதற்கு நேர் எதிராக நம்பிக்கை மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா? இத்துனை ஆண்டுகாலம் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் நம்பிய சமூகத்திற்கு இப்படிப்பட்ட தீர்ப்பு எந்தவிதத்தில் நியாயமாக இருக்கும். எனவே உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் தனது தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

#2.பள்ளி கல்லூரிகளில் மதவெறி அமைப்புகள்: தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்:

தமிழகத்திலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மதவெறி அமைப்புகள் செயல்பாடு இருப்பதாக அரசுக்கு உறுதியான செய்திகள் கிடைத்திருப்பதாகவும், இவற்றைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுக்கு 20-9-2019 தேதியிட்டு கடிதம் எழுதப்பட்டது. தமிழக கல்வி நிலையங்களை குறிவைக்கும் மதவெறி பாசிச சக்திகளின் செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டமைப்பு கவலை கொள்கிறது.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதமானது அரசியல் தலையீடு காரணமாக அனுப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மேற்கண்ட கடிதம் மேம்போக்கான தகவல்கள் அடிப்படையில் எழுதப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு துறையின் முதன்மை செயலாளர் அலுவலகத்திலிருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகாரப்பூர்வமான கடிதம் வந்த அடிப்படையிலேயே அதன் அவசரத்தன்மையை உணர்ந்து பள்ளிக் கல்வித் துறை செயலகம் கல்வித்துறை இயக்குநர்களுக்கு கடிதம் எழுதியதுடன் அடுத்து நடைபெறவுள்ள சட்டம் – ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதால் உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளது.

சட்டம் – ஒழுங்கு முதன்மைச் செயலாளர் அலுவலகத்தின் கடிதத்தின்படி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசியல் சட்டதிற்கு விரோதமாகவும், பள்ளிக்கல்வித்துறை விதிகளுக்கு முரணாகவும் மதவெறி அமைப்புகள்செயல்பட அனுமதித்துள்ளது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது. மேலும், மத, சாதி அடிப்படையில் மாணவர்களை அணி திரட்டுவது ஆபத்தானது என்பதையும் பள்ளிக்கல்வித் துறை கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவர்களின் பிஞ்சு நெஞ்சங்களில் சாதி, மதவெறி விஷக்கருத்துக்களை பரப்பும்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் பிரதான கடமையாகும். ஆனால், அபாயகரமான இந்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கடிதம் அரசியல் தலையீட்டின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல.

ஆகவே கல்வி நிலையங்களில் செயல்பட்டு வரும் மதவெறிஅமைப்புகளை வெளியேற்றவும், அவற்றின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

#3.திருவள்ளுவருக்கு காவி அடையாளம் – சிலை அவமதிப்பு: கண்டிக்கத்தக்கது

சாதி சமயங்களை கடந்து, இன மொழிகளை கடந்து, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை, காவி அடையாளத்துடன் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக மாற்றத்துடிக்கும் பாஜகவின் மதரீதியான பிளவு அரசியல் கடும் கண்டனத்திற்குரியது. திருக்குறள் பெருமை பேசி, திருவள்ளுவரை ஒரு மத அடையாளத்திற்குள் கொண்டு போய் சிறுமைப்படுத்தியுள்ளது பாஜக. வள்ளுவரை அரசியல் பகடைக்காயாக்கி மோசமான அரசியல் செய்து வருகின்றது பாஜக. பாஜவின் இத்தகைய பிளவு அரசியலை இந்த கூட்டமைப்பு கண்டிக்கிறது.

அதேபோல் தமிழர்கள் மதிக்கக் கூடிய தலைவர்களின் சிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், அந்த சிலைகளை அவமதிப்பு செய்யும் செயல்களும் நடந்தேறி வருகின்றன. சென்னை, திருச்சி, தஞ்சை போன்ற இடங்களில் தந்தை பெரியார் சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வரிசையில் தற்போது தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மிகவும் மதிக்கக் கூடிய, போற்றக்கூடிய தலைவர்களின் நன்மதிப்பை கெடுக்கும் விதத்திலும், வன்முறை நோக்கிலும் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

#4.காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்:

காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் 370 மற்றும் 35A நீக்கப்பட்ட பின்னர், காஷ்மீர் முழுவதும் தகவல் தொடர்பு மற்றும் வலைதளம் முடக்கப்பட்டது மட்டுமில்லாமல், பாஜக தவிர்த்து பிற எல்லா அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. உணவு மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் துப்பாக்கிகளை ஏந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையின் நடமாட்டம் அச்சத்தை உண்டாக்கும் விதத்தில் உள்ளது.

கடந்த 100 நாட்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்குறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்முனைவோர் மற்றும் பகுதி தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் வெளிமாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறுவடைக் காலத்தில் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் பறிக்காமல் போனதால் அழுகிப் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பதப்படுப்பட்ட உலர் பழங்கள் வாங்குவோர் இல்லாமல் அழிந்து வருகிறது.

ஆகவே, ஜம்மு காஷ்மீரில் அமைதியையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் மீண்டும் நிலைநாட்டும் வண்ணம், முடக்கிவைக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய அரசு முன்வர வேண்டும். சிறைக்காவலிலும், வீட்டுச்சிறையிலும் வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜனநாயக அமைப்புகளின் மீதான கட்டுப்பாடுகளை தாமதமின்றி நீக்க வேண்டும். ராணுவத்தை திரும்பப்பெற்று மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு,
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ.,
பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார்,
மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன்,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது,
பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்
முகமது இஸ்மாயில்,
தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குநர் கவுதமன்,
தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர்
நாகை. திருவள்ளுவன்,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தைமியா,
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம். சரீப்,
திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி,
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ்,
தமிழக மக்கள் முன்னணியின் பொழிலன்,
தமிழ் தேச மக்கள் முன்னணியின் பாலன், ஐ.என்.டி.ஜே. அமைப்பின் மாநில நிர்வாகி இக்பால்,
தந்தை பெரியார் திராவிட கழக சென்னை மாவட்ட பொறுப்பாளர் குமரன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தி,
#நவ_21 அன்று, சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW