அயோத்தி பிரச்சனை – மதச்சார்பற்றோரின் முழக்கம் என்ன?

03 Nov 2019

பலப் பத்தாண்டுகளாகத் தொடர்ந்துக் கொண்டிருக்கும் அயோத்தி நில விவகாரத்தின்  தீர்ப்பு நவம்பர் 17 ஆம் தேதி வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 40 நாட்களாக நடந்த நீதிமன்ற விசாரணையில் ராமர் சார்பாக இந்து அமைப்பினரும் நிர்மோஹி அகாரா அமைப்பினரும் (Ascetics of Ram), இஸ்லாமியர்கள் சார்பாக சுன்னி வக்பு வாரியமும் தங்கள் வாதங்களை முன்வைத்தன. அயோத்தி விவகாரத்தை இருதரப்பினர்யிடையே பேசி தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சமரசக் குழுவினால் முடிவினை எட்ட முடியாததால் உச்ச நீதிமன்றம்  தினசரி விசாரணை நடத்த முடிவு செய்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எப்.எம் கலிபுல்லா , மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு மற்றும் வாழும் காலை அமைப்பின் (Art of Living )நிறுவனரான  ரவிசங்கர் ஆகியோரைக் கொண்டு சமரசக் குழு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் சமரசக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்களின் தேர்வினைப் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பப்படவில்லை.

 

இராமரை ஒரு  சட்ட உருப்படி (juristic entity) ஆக்கியது  அயோத்தி சர்ச்சையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இது வழக்கு விவகாரங்களில் சங்கபரிவாரங்களின் தலையீட்டை பலப்படுத்தியது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தாலேயே இந்த வழக்கில் ராமர் ஒரு கட்சிக்காரராக சேர்க்கப்பட்டார். “ பூசலுக்குரிய இடம் கடவுள் இராமரின் பிறப்பிடமாகும். இங்கே ராமர் சட்டத் தொடர்பானவர் மற்றும் தெய்வமாகும்.  இறைவன்  எல்லாவிடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் எவர் ஒருவரும் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப எந்நேரத்திலும் எந்த  உருவத்திலும் அல்லது வடிவத்திலும்  எழுந்தருளச் செய்யலாம் மற்றும் அவர் உருவற்றவராகவும் வடிவமற்றவராகவும் இருக்க முடியும்” என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது. இது இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஒரு கட்சியாக இல்லாவிட்டாலும் சங்கப் பரிவார ஆற்றல்களை ராமரின் பிரதிநிதியாக  ஈடுபடுத்துவதற்கான சட்டபூர்வமான வழிமுறை ஆகிவிட்டது. இது சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமைகளை சங்கப் பரிவாரத்திற்கு சொந்தமாக்க வழிவகுத்துவிட்டது.

 

ராமர் தரப்பு வழக்கறிஞர்கள்,  ராமர்  கோவில் கட்டுவதற்காக இஸ்லாமியர்கள் நிலத்தை விட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்  . மேலும் தற்போது மசூதி அங்கு இல்லாத காரணத்தினால் நிலத்தில் உரிமையோ அல்லது ஈடுசெய்ய வேறு சமமான நிவாரணத்தையோ எதிர்பார்க்கக்  கூடாது என்றும் கேட்டுள்ளனர். வழக்கு விசாரணை முழுவதும் வழக்கறிஞர்கள் இந்த இடம் இந்துக்களுக்கு புனிதமான இடம் என்றும் அதை எக்காலமும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளனர் . ராமர் இந்துக்களின் சக்தி வாய்ந்த கடவுள் என்றும் அவருக்காக அதே இடத்தில் மிகப் பெரிய கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அந்த இடத்திற்கான மத முக்கியத்துவத்தைக்  கருத்தில் கொண்டு சர்ச்சைக்குரிய அந்த நிலம் முழுவதுமாக ராமருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நிர்மோஹி அகாரா நிலத்திற்கு உரிமை கோருவதைக் கேள்விக்குள்ளாக்கினர்.

 

விசாரணையின் கடைசி நாளில், உச்சநீதிமன்றத்தில் ஒரு சமரசத்  திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. சமர்பிக்கப்பட்டதாக கூறப்பட்ட அந்தத் திட்டம் பத்திரிகைகளுக்கு கசிந்தது. கசிந்த செய்திபடி, சுன்னி வக்பு வாரியம் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமைகோரலை கைவிட்டதாக கூறப்படுகிறது. இது வழக்கில் தொடர்புடைய பல்வேறு முஸ்லீம் கட்சிகளுக்கு இடையே பிளவினை ஏற்படுத்தியது . மேலும் இஸ்லாமியர் தரப்பு வழக்கறிஞர்கள் அத்தகைய செய்தி அறிக்கைகளை மறுத்து, நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வெளியிடும் என்று கூறினர்

 

சுன்னி வக்பு வாரியம் நிலத்தின் மீதான தனது உரிமையை விட்டுக் கொடுப்பதற்கு கைமாறாக சில நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அந்த நிபந்தனைகளில் ஒன்று – மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள் சட்டதின்படி, “   மத வழிப்பாடுத் தலங்களின் தன்மை 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி எவ்வாறு இருந்ததோ அது போலவே தொடரும்” என்று கூறுகிறது. 1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் அரசு பாபர் மசூதி- ராமர் கோவிலுக்கு மட்டும் இந்த சட்டதில் இருந்து விலக்கு அளித்தது. சியா வக்பு வாரியமும் சங் பரிவாரங்களும் இந்த சட்டத்தினை எதிர்க்கிறது . பா. ஜ. க செய்தி தொடர்பாளர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அஷ்வினி உபாத்தியாய் இந்த சட்டத்திணை நீதிமன்றத்தில் எதிர்த்துள்ளார். இது “சனாதன” இந்தியாவிற்கு எதிரானது என்றும் இந்தியாவில் வேறு சில இடங்களிலும் இது போன்று இந்து கோவில்கள் மசூதியாக மாற்றப்பட்டுள்ளன என்றும்  கூறினார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தாங்கள் எந்தவித சமரசப் பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என்றும் ”வாரணாசி, மதுரா போன்ற மற்ற இடங்களிலும் இது போன்று மசூதியாக மாற்றப்பட்ட இந்து கோவில்களை மீட்பதே தங்களின் லட்சியம்” என்றும் அறிக்கை விட்டுள்ளது. இதற்காக விஷ்வ இந்து பரிஷத் “தரம் ரக்ஷக் கேந்திரா” என்ற ஊழியர் அமைப்பினை  உருவாக்கி அதன் மூலம் கோவிலை கட்டுவதற்கு மக்களைத் திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக 25000 இளைஞர்களை “ திரிசூலம் தீக்ஷா “ என்ற பயிற்சி முகாமின் மூலம் திரிசூலம் பயன்படுத்த பயிற்சி அளித் துள்ளது. இந்த பயிற்சியை முடித்த இளைஞர்கள்  “தரம் ரக்ஷக் கேந்திரா” அமைப்பிற்குள் சேரக்கப் படுவார்கள்.

 

சுன்னி வக்பு வாரியம் இதரக் கோரிக்கைகளாக  – பாபர் மசூதியை இன்னொரு இடத்தில் கட்டியெழுப்புவது, அயோத்தியாவில் உள்ள மற்ற மசூதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பது, அயோத்தியாவில் சமூக நல்லிணக்கத்திற்கான  ஒரு நிறுவனத்தை  நிறுவுவது போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளனது. சமரசப் பேச்சுவார்தை குழுவின் கசிந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது  உண்மை எனில் , வக்பு வாரியத்தின்   இந்த திடீர் மாற்றம் இந்த வழக்கையொட்டி எழுந்துள்ள அழுத்தம், அதுவும் குறிப்பாக 2019 பொதுத் தேர்தலில் பாசக வின் வெற்றிக்கு பின்னான அழுத்தத்தினால் எழுந்தது என்று புரிந்து கொள்ளலாம். மேலும் , காஷ்மீர் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையாண்டதை கண்ட பிறகு , அதன் மீது நம்பிக்கை இழந்திருக்கலாம். நாடெங்கிலும் உள்ள ஜனநாயக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள இன்றைய அசாதாரண அரசியல் சூழலில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வருவது சாத்தியமற்றது என்று வக்பு வாரியம் கருதியிருக்கக் கூடும்.

 

உத்திர பிரதேசத்தின் பாசக தலைவர் ஒருவர் இந்துக்கள் தீபாவளிக்கு வாளினை வாங்கி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ராமர் கோவில் கட்ட தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். விஷ்வ இந்து பரிஷத்தோ தாங்கள் டிசம்பர் 6 ஆம் தேதி ராமர் கோவில் கட்டத்  தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 

அநேக மாநிலங்களில் பாசக ஆட்சியில் உள்ள இன்றைய சூழலில், அதுவும் ஜனநாயக நிறுவனங்கள் அனைத்தும் காவிமயமாகி வரும் வேளையில் அயோத்தியா விவகாரத்தோடு அவர்கள் நிற்கப் போவதில்லை.  முகலாயர்கள் இந்துக் கோவில்களை இடித்து மசூதிகளை கட்டிய இடங்கள் என்று புத்தகங்களும் , கட்டுரைகளும் கடந்த பல ஆண்டுகளாகவே எழுதப்பட்டு வருகின்றன. 1991 ஆம் ஆண்டு அருண்சோரி மற்றும் சீதா ராம் முகலாயர்கள் இடித்த இந்துக் கோவில்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார்கள். அதில் அயோத்தி விவகாரம் குறித்த ஓர்அத்தியாயமும் உள்ளது.  இந்த புத்தகம் இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்களையும் விமர்சித்தது. சங் பரிவாரத்தை சார்ந்தவரும் அயோத்தியா அகழாய்வுக்கு காரணமானவருமான பிபி. லால், 2008 ஆம் ஆண்டு அயோத்தியா விவகாரம் குறித்து எழுதிய புத்தகத்திலும் அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் இருந்ததாக விஞ்ஞானப்பூர்வமற்ற கூற்றை மீண்டும் கூறியுள்ளார். இப்படித்தான் பாபர் மசூதி இடிப்புக்கான  கதையாடல் தொடங்கியது.

 

பாசக மற்றும் இதர இந்து தேசிய கட்சிகள் அயோத்தி விவகாரம் , தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC) மற்றும் காஷ்மீர் விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்து இருப்பதன் மூலம் மதவாத வெறுப்புணர்வை வளர்த்து அதீத தேசியவாத இந்து பாசிசத்தை நோக்கி இந்தியாவை இட்டுச் செல்கின்றனர் . ராமர் கோவில் மட்டும் கட்டப்பட்டால்  இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தும் அவர்களின் அடிப்படைவாத வெறுப்பு அரசியலை மேலும் பலப்படுத்துவதாக ஆகிவிடும். அயோத்தி விவகாரம் மதச்சார்பின்மைக்கான ஒரு சோதனையாகும்.  பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டியெழுப்ப வேண்டும் என்று சொல்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். இதில்தான் ஓர் அமைப்பு இந்திய அரசமைப்பில் சொல்லப்படும் மதச்சார்பின்மையில்  எந்த அளவுக்கு பற்றுறுதியுடன் உள்ளது என்பதை அறிய முடியும்.

– யாமினி

மொழிபெயர்ப்பு – லீனஸ்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW