பேரிடர் மேலாண்மையில் பாடம் கற்குமா தமிழக அரசு?
மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடராக இருந்தாலும் சரி இயற்கைப் பேரிடராக இருந்தாலும் சரி, வரும்முன் காப்பதும் வந்தபின் மீட்பதும் சிவில் சமூகத்திற்கு தலைமை தாங்குகிற அரசின் பொறுப்பாகிறது. அரசிடம் குவிந்துள்ள ரிசோர்சஸ் அதாவது நிதிஆதாரம், தொழில்நுட்பம், இயந்திர சாதனம், அதிகாரப் பிரயோகம் மனிதவள ஆற்றல்களை பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் பயன்படுத்துகிற சாதனமாக உள்ளதால் பேரிடர்கால செயல்பாட்டிற்கும் மீட்புக்கும் அரசே பொறுப்பாகிறது. இந்தியாவில், பேரிடர்கால கொள்கைகளும் வழிமுறைகளும் இதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசின் பேரிடர்கால செயல்பாடு குறித்த கடந்த கால வரலாற்றை பார்த்தோமென்றால் சில விலக்குகளைத் தவிர பெரும்பால பேரிடர் நிகழ்வுகளைக் கையாள்வதில் தொடர்ச்சியாக அரசு தோல்வியடைந்துள்ளதை பார்த்துவருகிறோம்.
ஓக்கி புயலால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும் பொருட்சேதமும், பேரிடருக்கு முன்பும் பின்புமான தமிழக அரசின் தோல்வியை காட்டியது. போலவே கஜா புயலுக்கு முன்பான பேரிடர் கால ஆயத்தக் கட்டமும் பேரிடர்கால மீட்பிலும் இதுவே தொடர்ந்தது.
தற்போது சுஜித்தின் மரணமும் பேரிடர்கால மீட்பின் தோல்வியை வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா, என அரசிடம் சென்னை உயர்நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை முறையாக மூடாதது இந்த விஷயத்தில் முதல் தவறாகியது. இதை எள்ளளவிலும் மறுப்பதிற்கில்லை. அதே வேளையில் மனிதத் தவறுகள் மற்றும் அலட்சியத்தால் ஏற்படுகிற தவறுகள் உயிராபத்து மிக்கவையாக பேரிடராக மாறுகிறபோது இதைக் கையாள்வதற்கு, சிவில் சமூகத்திற்கு தலைமை பாத்திரம் வகிக்கிற அரசே பொறுப்பாகிறது.
ஆனால் சுஜித் விஷயத்தில் அரசின் செயதிறனற்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கியது. குழந்தை சுஜித்தின் மரணம், தமிழக அரசின் பேரிடர் கால மீட்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியது. பேரிடர் கால ஆயத்த தயாரிப்புகள், தொழில் நுட்ப தோல்வியானது மீண்டுமொரு உயிரை பலி வாங்கியது.
சுஜித்தை மீட்பதில் அரசு மேற்கொண்ட தவறுகள்:
பேரிடர்கால மீட்புக்கு அரசு பொறுப்பு என நாம் கூறுவது, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தை குறிப்பவையாகும். தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிற இவ்வாணையத்தில் மாநில வருவாய்த் துறை மற்றும் உள்துறை அமைச்சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்குகிறது.
சுஜித் நிகழ்வைப் பொறுத்தவரை,கிணற்றுக்குள் விழுந்த சில மணி நேரம் வரையிலும் தீயணைப்பு துறையினர் மீட்பு முயற்சியில் ஈடப்பட்டனர். அதேநேரம் மீட்பு முயற்சிகள் பலனிக்காத நிலையில், குழந்தை மேலும் ஆழமாக செல்லச் செல்லச் நிலைமை தீயணைப்பு துறையின் எல்லையை மீறியதாகிறது. இந்த இக்கட்டான நிலைமையை எதிர்கொள்கிற பொறுப்பு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் வருகிறது.
ஆனால் நடந்தது என்ன? சம்பவம் நடைபெற்று 48 மணி நேரத்திற்கு பின்பே மாநில வருவாய்த் துறை மற்றும் பேரிடர் ஆணையத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு செல்கிறார். அப்போது நிலைமை மேலும் மோசமாகி கை மீறி செல்லத் தொடங்கியது. ஒரு மாநில அரசுக்கு எது பேரிடர்? பேரிடர் இல்லை என்பதிலும் யார் பொறுப்பு கூறுவது என்பதிலும் ஏற்பட்ட குழப்பமே அடுத்தடுத்த செயலபாடுகளின் தாமதத்திற்கு ஆதாரமாகியது.
மாநில பேரிடர் ஆணையர் நிகழவிடத்திற்கு வந்து மேற்கொள்கிற முயற்சிகள் யாவுமே பரிட்சார்த்த முயற்சிகள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை.
இந்நிகழ்வு தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒட்டுமொத்த பேரிடர்கால ஆயத்தமற்ற நிலையையும் மீட்பின் தோல்வியையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
- மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கு போதிய தொழில்நுட்ப உபகரனங்களோ பயிற்சிப் பெற்ற பேரிடர் கால மீட்பு குழுவினரோ தயார் நிலையில் ஆயத்தமாக இல்லை. எண்ணூர் கப்பல் விபத்தின்போது கடலில் கொட்டிய எண்ணெய்யை அகற்றுவதற்கு வாளியைத் தவிர எந்த உபகரணமும் இல்லை,தொழில்நுட்பமும் இல்லை.ஆழ் துளை கிணற்றில் மீட்புக்கும் இதே நிலைதான்.
- 09.2017-ன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கிட தமிழ்நாடு அரசு ரூ.73.55 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு பேரிடர் ஆணையத்தின் இணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?எந்தந்தே துறைகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது?
- ஆழிப் பேரலை, பூகம்பம் மற்றும் புயல் மட்டுமல்லாது வெள்ளத்தால் அணை உடைதல், பாலம் உடைந்து மக்கள் சிக்குவதும் பேரிடர்கள்தான். இதுபோன்ற பேரிடர்காலத்தில் ஆணையம் எவ்வாறு இயங்கவேண்டும் என வழிகாட்டுதல்களில் தெளிவில்லாமல் உள்ளது.
- .இந்த கொள்கை தெளிவற்ற நிலைமையே ,பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தாமத வருகையின் காரணமாக புரிந்து கொள்ளலாம். முக்கொம்பு மதகு உடைவும் சீரமைப்பும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பும் இதற்கொரு உதாரணம்.
மத்திய மாநில அரசின் நிதிப் பயன்பாடு:
மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள நாடான இந்தியாவில் இயற்கைப் பேரிடர் பாதிப்பாலும் செயற்கைப் பேரிடர் பாதிப்பாலும் மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. மத்திய மாநில அரசைப் பொறுத்தவரை பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்தோம் கொள்கையை வெளியிட்டோம் என சடங்குப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றன. மாறாக மக்கள் நலனுக்காக, பேரிடர் ஆணையத்தை செயல்திறன் மிக்க ஒன்றாக மாற்றியமைப்பதில் அரசு படு தோல்வி அடைந்துள்ளதை ஒவ்வொரு பேரிடரும் உணர்த்துகின்றன.
பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிக நிதி ஒதுக்குவது, மீட்பு குழுவிற்கு போதிய பயிற்சி வழங்குவது, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது, தொலைதொடர்பு சாதனங்களை நவீனப் படுத்துவது என அனைத்து ஏற்பாடுகளும் மக்கள் நலனை ஒட்டி நிதி ஆதாரங்களை ஒழுங்கு படுத்தப்படவேண்டும்.பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அடிப்படையான நிதி ஆதாரத்தை மாநில அரசின் தலையில் கட்டிவிட்டு மத்திய அரசு முற்றிலும் ஒதுங்கிக் கொள்கிறது. பேரிடரின் தன்மையை கொண்டு கூடுதல் தொகையை ஒதுக்குவதாக தெளிவற்ற கொள்கையை தனக்கு சாதகமான வகையில் பயன்படுத்துகிறது.மாநில அரசின் வரி வருவாயை சுரண்டுகிற மத்திய அரசு, மக்கள் பாதுகாப்பிற்கு அடிப்படையான பேரிடர் ஆணையத்தை கைகழுவி விட்டுச் செல்கிறது.
தமிழகத்தின் கஜா புயல், கேரள வெள்ள காலங்களில் மத்திய அரசிடம் மாநில அரசு கெஞ்சி நொந்தது. மத்திய அரசோ மையப்படுத்தப்பட்ட ராணுவ பயன்பாடு, விண்வெளி ஆய்வுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதே நேரத்தில் நாட்டின் சிவில் சமூகத்திற்கு பாதுகாப்பை உறுதி செய்திட ஆபத்து காலத்தில் மீட்டிட நிதி ஆதாரங்களை ஒதுக்காமல் மக்களை கண்டுகொள்ளாமல் நட்டாற்றில் விட்டுச் செல்கிறது.
-அருண் நெடுஞ்சழியன்