மோடி-ஜீ-ஜிங்பின்னின் மாமல்லபுர சந்திப்புக்காக, வங்கக் கடலில் மனசாட்சியைக் கரைத்தவர்களே!

12 Oct 2019

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாசிச மோடி என்றவர்களும் தமிழ்நாட்டிற்குள் மோடி வரும்போதெல்லாம் ’மோடியே திரும்பிப் போ’ என்று எதிர்ப்புக் காட்டியவர்களும் திடீரென்று மோடி-ஜீ ஜின்பிங் சந்திப்பை வரவேற்று மகிழ்வதேன்?

காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தீக்கதிர் தொடங்கி முரசொலி வரை காந்திப் புகழ் பாடியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருப்பதால் காந்தியிடமே செல்வோம். 1947 ஆகஸ்ட் 15 க்கான வாழ்த்துச் செய்தி கொடுக்க காந்தி மறுத்துவிட்டார். அப்போது அவர் நவகாளியில் இருந்தார். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்த கலவரங்களால் ஓங்கி ஒலித்த மரண ஒலங்களுக்கிடையில் சுதந்திர நாள் வாழ்த்துச் செய்தி ஒரு கேடா? என்று அவர் கருதியிருக்கக் கூடும். அதனால், அதில் உறுதியாக நின்று வாழ்த்துச் செய்தி தரமுடியாது என்று சொல்லிவிட்டார். தேசப்பற்று, சுதந்திர நாள் என்ற குறியீடுகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட வில்லை. தன்னை தேசவிரோதி என்று யாரும் சொல்லிவிடுவார்களோ என்று அவர் அச்சப்படவும் இல்லை. இனி மோடி – ஜீ ஜின்பிங் சந்திப்புக்கு வருவோம்.

மோடியின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியோடு ஒப்பிடும்போது தேர்தலுக்குப் பின்னான இந்த நான்கு மாதக் காலத்தில் அவரது ஆட்சிமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நடந்துள்ளதா? காசுமீருக்கான 370 ஐ நீக்கியதோடு மட்டுமின்றி 65 நாட்களாக திறந்தவெளிச் சிறைச்சாலையில் 70 இலட்சம் பேர் வாழ வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் முழுக் காலனியாக காசுமீர் மாற்றப்பட்டுள்ளது.  முத்தலாக் தடைசட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் பெயரால் 19 இலட்சம் பேரை நாடற்றவர்களாக்கியுள்ளனர். குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரவுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்குப் பின்னால் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், கிறித்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது உறுதி செய்யப்படும் என்றும் பின்னர் ’ஊடுறுவல்காரர்கள்’ அதாவது முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் மேற்கு வங்கத்தில் கொக்கரிக்கிறார் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு வகையினங்களுக்குள் தொகுத்து நீர்த்துப் போகச் செய்யும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுவிட்டது. ஒற்றை நாடு, ஒற்றை மொழி, ஒற்றை சட்டம், ஒற்றை கட்சி, ஒற்றை தேர்தல், ஒற்றை உணவு வழங்கல் அட்டை, ஒற்றை ஆட்சி என்று அன்றாடம் ஏதாவதொரு ’ஒற்றை’ பல்லவி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒன்று விலைக்கு வாங்குகிறார்கள் அல்லது சிபிஐ, அமலாக்கத் துறை, வருவாய்த் துறை வழியாக கைது செய்கிறார்கள்.

ஊழல் கரை படியாதவர்கள், விலை போகாதவர்களுக்கு என்று ஊபாவும் என்.ஐ.ஏ.வும் திருத்தப்பட்டுள்ளது. எந்தவொரு தனி மனிதரையும் ‘பயங்கரவாதி’ என அறிவிக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவையன்றி தெருக்களிலோ ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லி முஸ்லிம்களை அடித்துக் கொல்லும் கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. பாபர் மசுதி இருந்த இடத்தில் விரையில் ராமர் கோயில் கட்டப்பட்டுவிடும் என்று சுப்பிரமணிய சுவாமிகள் அடித்துச் சொல்கிறார்கள்.

இதுதான் மோடி ஆட்சிக்காலத்தின் இரண்டாம் பாகத்தில் விரியும் காட்சிகளாக இருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் இதுவரை இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு இத்தகைய அச்சம் சூழ்நிலைமை ஏற்பட்டதில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் இஸ்லாமியர்களுக்கு எதிரானப் பெரும் கலவரங்களில் ஈடுபடாமல் இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். இன் கட்டளை மையத்தில் இருந்து ஒரு சமிக்ஞை வந்தால் போதும் சில மணிநேரங்களில் பெரும் படுகொலைகளை நாடெங்கும் நிகழ்த்தக் கூடிய அளவுக்கான சமூக அடித்தளம் அதற்கு இருக்கிறது. இன்னும் கால் நூற்றாண்டுக்குள்ளாவது  இஸ்லாமியர்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மையைப் போக்கிவிட முடியும்  என்று எந்தவொரு மதச்சார்பற்றக் கட்சியாவது நம்புகிறதா? நிலைமை இப்படியிருக்க மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பில் மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவைப் பூரிப்பு அடைய வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

இந்திய – சீன நட்புறவு யாருக்கானது? இந்திய – சீன நட்புறவு கண்டு சீனாவில் ஒடுக்கப்படும் உய்கூர் முஸ்லிம்கள் மகிழ முடியுமா? சீனாவை  எதிர்த்துப் போராட முனைந்ததால் சிறையில் அடைக்கபட்டுள்ள திபெத்திய அகதிகளுக்கு இச்சந்திப்பினால் பலன் உண்டா? காசுமீர் மக்கள் மோடி – ஜீ ஜின் பிங் சந்திப்பை வரவேற்பார்களா? இல்லையா? என்று தெரிந்து கொள்ளவாவது வழி உண்டா? அசாமில் குடியுரிமை இழந்து நிற்கும் 19 இலட்சம் பேர் யானை – டிராகன் கும்மாளங் கண்டு பெருமை கொள்வார்களா? தேசிய குடியுரிமை பதிவேடு நடைமுறைபடுத்தப்படும் என்ற அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மேற்கு வங்கத்து இஸ்லாமியர்களுக்கு இரங்கல் அறிக்கை எழுதிக் கொண்டே மோடி – ஜீ ஜின்பிங் சந்திப்புக்கு வாழ்த்து அறிக்கை அனுப்புவதுதான் மதச் சார்பின்மைக்குப் பாடுபடுவதா? இஸ்லாமியர்கள் விலக்கி வைக்கப்பட்டுவிட்டால் இது இந்தியாவே கிடையாதே!  இஸ்லாமியர்கள் விலக்கிவைக்கப்படும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவுக்கு ஆதரவாக மதச்சார்பற்ற கட்சிகளிடம் ஏன் இத்தனை ஆரவாரம், அவசரம்?.

திமுக , அதிமுக போன்ற கட்சிகள்  தேர்தல் காலங்களுக்கு அப்பால் மதச்சார்பின்மைக்காகவோ இஸ்லாமியர்களுக்காகவோ உலகளாவிய அளவில் ஏகாதிபத்தியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய எதிர்ப்புவாதத்திற்கு எதிராகவோ போர்க்குணத்தோடு எதையும் செய்ததில்லை என்பதை இஸ்லாமிய சமூகம் உணர்ந்து கொள்ளாமல் இல்லை. இந்தியப் பெருமுதலாளிய ஆளும்வர்க்கத்தின் விரிவாதிக்க நலன், பிராந்திய மேலாதிக்க நலன், சந்தைப் பொருளாதார வர்த்தக நலன் என எதுவாயினும் இந்திய தேசியத்தின் பெயரால் நேர்க்கோட்டில் நின்று ஆளும்வர்க்கத்திற்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டி விடுவார்கள். இதை பலமுறை வரலாறு மெய்ப்பித்துள்ளது. மதச்சார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை  எல்லாம் இந்தியப் பெருமுதலாளிகளுக்கான இந்திய தேசிய நலன் என்று வந்துவிட்டால் பின்னுக்குப் போய்விடும். அனுமன் ராமனிடம் நெஞ்சைக் கிழித்து காண்பித்தது போல் ஆளும் வர்க்கத்திற்கு நெஞ்சைப் பிளந்து காட்டிவிடுவார்கள். எனவே, அதிமுக ஜீ ஜின் பிங் குக்கு மலர்க் கொத்து கொடுத்ததும் திமுக வாழ்த்தறிக்கை தந்ததும் வியப்புக்குரியதல்ல.

’தோழர்’ என்று சொல்லி ஜீ ஜின்பிங்கை வரவேற்கிறது தீக்கதிர். தோழர் ஜீ ஜின்பிங் தோழர் பாலகிருஷ்ணனையும் தோழர் முத்தரசனையும் சந்திப்பதற்காக தமிழகம் வந்திருக்கிறாரா? இந்தியாவில் சரிந்துவரும் பொருளாதாரத்தின் காரணமாக அன்றாடம் வேலையிழந்துவரும் தொழிலாளர் வர்க்கத்தின் நிலையைப் பற்றி பேசுவதற்கு வந்துள்ளாரா? தோழர் ஜீ ஜின் பிங் ‘தோழர்’ மோடியை அல்லவா சந்திக்க வந்துள்ளார். ’தோழர் மோடியின்’ இந்திய அரசு தொழிலாளர் வர்க்கத்தை ஒடுக்கி வங்கி மூலதனத்தை ஒன்று திரட்டி அரசுத் துறைகளை தனியார்மயமாக்கி கார்ப்பரேட்களுக்கு சேவை செய்யும் அரசாயிற்றே! மோடி தலைமையிலான இந்துத்துவ இந்திய அரசுக்கும் சீன அரசுக்குமான நட்புறவில் இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு கிடைக்கப் போவதென்ன? இந்திய தேசியத்தின் பெயராலான இந்திய விரிவாதிக்க நலன், பிராந்திய மேலாதிக்க நலனென்றால் பா.ச.க.வும் காங்கிரசும் சி.பிஐ.(எம்) மும் நேர்க்கோட்டில் வந்துவிடும் யதார்த்தம்தான் இந்தியாவிற்குள் மதச்சார்பின்மை, சனநாயகம் போன்றவற்றில் சி.பி.ஐ(எம்) இன் எல்லையைத் தீர்மானிக்கப்போகின்றது என்பதை எவரும் மறந்துவிட வேண்டாம்.

மோடியும் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திப்பது சந்தைப் பொருளாதாரப் போட்டியில் இரு நாட்டு ஆளும் வர்க்கங்களும் தத்தமது வலிமையிலும் தத்தமது நிலையிலும் இருந்து தத்தமது பங்கைப் பிரித்துக் கொள்வதற்காகவே. இந்திய தேசியத்தின் பெயரால் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு தவறாமல் தங்கள் விசுவாசத்தைக் காட்டி மனசாட்சியை வங்கக் கடலில் கரைத்தவர்களே!. மோடி – ஜீ ஜிங்பின் சந்திப்பு முடியும்வரை கிழக்கு கடற்கரையோரம் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்த பிறகு கடற்கரையில் உயிரற்று மிதந்து கொண்டிருக்கும் மதச் சார்பின்மை, சனநாயகம், சுயநிர்ணய உரிமை, சோசலிசம் ஆகிய கொள்கைகளைத் தோளில் சுமந்து வாருங்கள். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது அவை தேவைப்படும். ‘மோடியே திரும்பிப் போ’ என்று சொல்ல வேண்டுமல்லவா?

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW