காஷ்மீர் உறுப்பு 370 – சிதைக்கப்பட்ட வரலாறு (1954 – 2019)

29 Sep 2019

ஒரு வாரத்திற்கு முன்பு, மராட்டியத்தில் வரவிருக்கிற தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட முதல் பொதுக்கூட்டத்தில் 370 ஐ செயலிழக்கச் செய்ததை இதுவரை யாராலும் செய்ய முடியாத சாதனையாகப் பேசினார் தலைமையமைச்சர் மோடி.  அமெரிக்காவில் நட்ந்த ’மோடி நலமா?’ நிகழ்ச்சியிலும் ”370 க்கு ‘குட் பை’ சொல்லிவிட்டோம்” என்று பூரித்தார் அவர். அதே மராட்டியத்தில், காங்கிரசு கட்சி 370 ஐ நீக்கியதை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? என்பதை மராட்டிய மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று தேர்தல் சூதாட்டத்தில் காசுமீர் காய்களை உருட்டினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் 370 செயலிழக்கச் செய்யப்பட்டதைப் பாராட்டி இதை செய்ததில் மோடி, அமித் ஷா ஆகிய இருவரில் ’யார் அர்ஜீனன்? யார் கிருஷ்ணன்?’ என்று தெரியவில்லை என்று தனது ’நுண்மான் நுழைபுல அரசியல் அறிவை’ வெளிப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். இப்படியாக 370 ஐ நீக்கியதை தமது மாபெரும் சாதனையாக காட்டி வருகின்றன சங் பரிவாரங்கள். இந்தியா-காசுமீர் சிக்கலில் தலைகால் தெரியாத பா.ச.க. ஆதரவாளர்களும் வெற்றிக் கூச்சல் இடுகின்றனர். பொதுமக்களில் ஒருபகுதியினரும் மோடி-அமித் ஷா வின் செயல்களைப் பெரிய சாகசம் போல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அர்ஜூனன் யார்? கிருஷ்ணன் யார்? என்று ரஜினிகாந்த சொன்ன போது ஒரு கதை நம் நினைவுக்கு வருகிறது. மகாபாரதத்தில் வரும் கர்ணன் பற்றி தமிழில் எடுக்கப்பட்ட படத்தில் கர்ணனாக சிவாஜியும் அர்ஜூனனாக முத்துராமனும் கண்ணனாக என்.டி.ஆர். உம் நடித்திருப்பர். கடைசியில் சிவாஜி(கர்ணன்) செத்து விழுந்து கிடக்கும் நேரத்தில், கர்ணன் தன்னுடைய அண்ணன் என்று தெரிந்த முத்துராமன்(அர்ஜுனன்) ’அண்ணனையா நான் கொன்றேன், நான் கொன்றேன்’ என்று சொல்லும்பொழுது இடைமறிப்பார் என்.டி.ஆர்(கண்ணன்). கர்ணனின் கவசகுண்டலத்தை தானமாக பெற்றான் இந்திரன். பிரம்மாஸ்திரம் தக்க தருணத்தில் கைக்கொடுக்காமல் போகும் என்று சாபம் விட்டான் பரசுராமன். தேர் ஓடாமல் போய்விடும் என்று அந்தணர் ஒருவர் சாபம் விட்டார். நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாதென கர்ணனிடம் குந்தி வரம் பெற்றார். பாதியில் தேரை விட்டுவிட்டுப் போனான் சல்லியன். தேரைக் கீழே அழுத்தி தலைக்கு வந்த நாகாஸ்திரத்தில் இருந்து உன்னை நான் காப்பாற்றினேன். இதற்கு முன்பே ஆறு பேர் அவனைக் கொன்றுவிட்டனர். வெறும் செத்தப் பாம்பை அடித்துவிட்டு ‘நான் கொன்றேன், நான் கொன்றேன்’ என்று வீராப்புப் பேசுகிறாய் என்று என்.டி.ஆர். சொல்வார்.

மோடி-அமித் ஷா தலைமையிலான கும்பல் காசுமீருக்கான உறுப்பு 370 ஐ செயலிழக்கச் செய்ததும் கர்ணனை அர்ஜூனனும் கிருஷ்ணனும் கொன்ற கதை போன்றதுதான்.

  1. முகலாயரின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த காஷ்மீர் ஆப்கானிஸ்தானிடம் கைமாறிப்பின்னர் சீக்கிய மன்னனின் கீழ் இருந்தது. இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்கை வென்ற ஆங்கிலேயர், பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதியாக காஷ்மீரை ஆக்கிக் கொள்ளாமல் ஜம்மு-லடாக் பகுதியை ஆண்டு கொண்டிருந்த டோக்ர வம்ச மன்னனாகிய குலாப் சிங்கிற்கு வெறும் 75 இலட்ச ரூபாய்க்கு விற்றனர். இப்படி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் காசுமீர் பள்ளத்தாக்கை இந்து மன்னிடம் ஒப்படைத்து ஒரு சமஸ்தானத்தை உருவாக்கியதில் பிரிட்டிஷாருக்கு ஒரு நோக்கம் இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் ஆப்கனுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு தாங்கு அரசை(buffer state) உருவாக்குவதே அந்த நோக்கமாகும். ஓர் இந்து மன்னனுக்கு கீழே காசுமீர் மக்களின் வரலாற்றைத் தள்ளிவிட்டனர் பிரிட்டிஷார்.
  2. இந்த மன்னனின் பெயரன் தான் மகாராஜா அரிசிங். 1946 இல் இம்மன்னுக்கு எதிராக முஸ்லிம் மாநாட்டுக் கட்சி வரிகொடா இயக்கம் நடத்திக் கொண்டிருந்தது. தேசிய மாநாட்டுக் கட்சி ‘காசுமீரைவிட்டு வெளியேறு’ என்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தது. காசுமீர் பள்ளத்தாக்கு மக்களிடம் ஒரு துளியளவு ஆதரவும் இல்லாத அரிசிங் 1947 அக்டோபர் 26 அன்று தன் தாத்தா 75 இலட்ச ரூபாய்க்கு வாங்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். 1944 இலேயே ’புதிய காசுமீர்’ ஒன்றை படைப்பதற்கு சட்ட வரைவுகளை உருவாக்கி இருந்த காஷ்மீரிகளை இந்திய சிறைக்குள் தள்ளிவிட்டார் ‘தப்பியோடிய மன்னன்’ என்று வரலாற்றாளர்களால் சொல்லப்படும் அரிசிங்.
  3. மன்னராட்சிக்கும் நிலவுடைமைக்கும் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடியதில் வளர்ந்த காசுமீர் தேசியத்தின் தலைவிதியின் குறுக்கே ஆப்கனில் பதான் பழங்குடியைச் சேர்ந்த 300 பேரும் பாகிஸ்தான் இராணுவமும் வந்தது. இதன் எதிர்விளைவாய் இந்தியாவும் காஷ்மீருக்குள் படையை இறக்கியது. 1947 இன் முடிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து காசுமீரை இரு துண்டுகளாகப் பிளந்துவிட்டன. தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் காசுமீர் தேசத்தின் தந்தையுமான சேக் அப்துல்லாவுடன் முரண்பட்டு இருந்தவர் முகமது அலி ஜின்னா.  இஸ்லாமிய இறையரசுக்கு மாறாக ஒரு சுதந்திரமான மதச்சார்பற்ற அரசை அமைக்க எண்ணியவர் சேக் அப்துல்லா. பாகிஸ்தானுடன் காசுமீரை இணைப்பதற்கு தடையாக இருப்பவர் சேக் அப்துல்லா என ஜின்னா எண்ணினார். காஷ்மீர் பள்ளத்தாக்கின் மீது  படையெடுப்பு நடத்தி காஷ்மீரைப் பிளவுபடுத்துவதற்கு வழிவகுத்தார் ஜின்னா.
  4. கதையின் அடுத்தடுத்தப் படலங்களை நேரு நகர்த்தினார். இணைப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உறுப்பு 370 இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்டது. “காசுமீர் மக்களின் விருப்பம் அறியும் பொதுவாக்கெடுப்பு நடத்துவோம்” என்று சொல்லிக் கொண்டே இந்திய அரசியல் நிர்ணய சபையில் சேக் அப்துல்லாவைப் பங்குபெறச் செய்தார் நேரு. காசுமீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 370 ஐ கொண்டு வருவதில் நேரு வெற்றிக் கண்டார். 1949 அக்டோபர் 17 அன்று  கோபல்சாமி அய்யங்கார் உறுப்பு 370 ஐ அரசியல் நிர்ணய சபையில் முன்வைத்தார். 1952 ஜுன் 24 இல்  மைய அரசு நிறுவனங்களை காசுமீருக்கும் பொருந்தச் செய்யும் தில்லி உடன்படிக்கைக்கு சேக் அப்துல்லாவை இணங்க வைத்தார் நேரு. சரியாக ஒரு மாதத்தில் ஜூலை 25, 1952 இல் சோன்மார்க் என்னும் இடத்தில் இருந்து நேரு சேக் அப்துல்லாவுக்கு எழுதிய கடிதத்தில், கருத்துக்கணிப்பு சாத்தியமில்லை என தான் 1948 இலேயே முடிவு செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியின் செயற்குழு, முழு விடுதலை அல்லது முழு தன்னாட்சியுடன் இந்தியாவுடன் இருப்பது உள்ளிட்ட நான்கு தீர்வுகளை 1953 ஜூன் 9 அன்று முன்வைத்தது. நேரு அபுல் கலாம் ஆசாத்தை அனுப்பி சேக் அப்துல்லாவை எச்சரித்துப் பார்த்தார். ஒருவழியாக இன்றைக்கு பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் ஃபருக் அப்துல்லாவின் தந்தை சேக் அப்துல்லா நேரு அரசால் 1953 ஆகஸ்ட் 9 அன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். நேரு மறையும்வரை அவர் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார். சேக் அப்துல்லா சிறையில் வைக்கப்பட்ட கையோடு தில்லி உடன்படிக்கைக்கு மாறாக உறுப்பு 370 மீதான முதல் தாக்குதலை 1954 பிப்ரவரி மாதத்திலேயே நேரு அரசு நடத்திவிட்டது. அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு ஆகிய மூன்று தலைப்புகளையும் தாண்டி  எல்லாத் துறைகளிலும் சட்டமியற்றும் அதிகாரத்தை இந்திய அரசுக்கு வழங்கும் குடியரசு தலைவரின் ஆணை பிறப்பிக்கப்பட்டது. கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என்பது முதல் துரோகமெனில் 370 ஐ கேலிப் பொருளாக்கியது இரண்டாவது பெருந்துரோகமாகும். சேக் அப்துல்லா வீட்டுச் சிறையில் இருக்க அவரது வலக்கரமான பக்சி குலாம் முகமதுவை தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்ட நேரு  1956 நவம்பர் 17 இல் காசுமீர் அரசியல் நிர்ணய சபை முடிவுக்கு வரும்முன்பு உறுப்பு 370 ஐ பயன்படுத்தியே 46 அரசியல் சட்ட ஆணைகளைப் பிறப்பித்தார். காசுமீர் அரசியல் நிர்ணய சபை இருக்கும் காலத்தைப் பயன்படுத்தி சேக் அப்துல்லாவை சிறையில் தள்ளியபடி இவற்றையெல்லாம் நேரு செய்துமுடிதார்.
  5. 1972 இல் பாகிஸ்தானை உடைத்து வங்க தேசத்தை உருவாக்கிய கையோடு பாகிஸ்தானோடு சிம்லா உடன்படிக்கை கண்டார் நேருவின் மகள் இந்திரா காந்தி. இந்த உடன்படிக்கையின் மூலம் வெற்றிகரமாக காசுமீர் சிக்கலில் இருந்து ஐ.நா. வை வெளியேற்றினார் இந்திரா காந்தி. காசுமீர் விவகாரத்தில் 1948 முதல் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ.நா. சிம்லா உடன்படிக்கையின் போது மெளனம் காத்து காசுமீரிகளைக் கைவிட்டது.
  6. பலரும் சேக் அப்துல்லாவின் முதுகில் குத்திவிட்டுப் போக கடந்த இருபது ஆண்டுகளாக ’பொதுவாக்கெடுப்பு முன்னணி’   என்றொரு அமைப்பைத் தொடங்கி உழைத்துக் கொண்டிருந்தார் அப்சல் பெக். பொதுவாக்கெடுப்பு முன்னணி தேர்தலில் போட்டியிட முயன்ற போது இந்திய அரசு அனுமதிக்கவில்லை. ஒருவழியாக 1974 இல் சேக் அப்துல்லா இந்திராவுடன்  சமரசத்திற்குப் போனார். பொதுவாக்கெடுப்பு முன்னணியைக் கலைக்க ஒப்புக்கொண்டார். காசுமீரைப் பொருத்தவரை முதல்வர் என்று அழைப்பதில்லை, பிரதமர் என்றுதான் 1951 இல் இருந்து அழைக்கப்பட்டது. பிற மாநிலங்களுக்கு இருக்கும் ஆளுநர் பொறுப்பு காஷ்மீரில் ’சதார்-ஏ-ரியாசத்’ என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதுவும் அவர் மத்திய அரசால் நியமிக்கப்படாமல் மாநில சட்டப்பேரவையால் தேர்வு செய்யப்படுபவர். இந்த முறையை 1964 வாக்கிலேயே மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்து எல்லா மாநிலங்களையும் போல் காசுமீரையும் ஆக்கிவிட்டது. 1953 இல் ஆகஸ்ட் 9 இல் பிரதமராக இருந்த போது நேருவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சேக் அப்துல்லா 22 ஆண்டுகால கைது, சிறை, நெருக்கடி, பாஸ்போர்ட் பறிமுதல் என இந்திய அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளானாலும் காசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமையின் ஆளுருவாக இருந்தவர், ஆனால், அவர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் உடன்பாடு கண்டு 1975 பிப்ரவரி 25 இல் காசுமீர் முதல்வராக முடிசூடிக் கொண்டு காசுமீர் மக்களைக் கைவிட்டார். அவர் போய் சேர்ந்த பாதையில் இந்திய அரசின் காசுமீர் பிரதிநிதிகளாக சேக் அப்துல்லாவின் வாரிசுகள் செவ்வனே செயல்பட்டு வந்தன.
  7. 1957, 1962, 1967, 1972 மாநில சட்ட சபை தேர்தல்கள், 1971 நாடாளுமன்றத் தேர்தல் என ஜம்மு-காசுமீரில் எந்த தேர்தல்களையும் நேர்மையாக நடத்தவில்லை இந்திய அரசு. 1977 சட்டசபை தேர்தல் மட்டும்தான் இந்திய அரசின் தலையீடும் அத்துமீறலும் இன்றி நடத்தப்பட்ட தேர்தல் ஆகும். 1987 ஆம் ஆண்டில் காஷ்மீர் மாநில சட்டப் பேரவை தேர்தல் இந்திய சனநாயகத்தின் மீதான மாபெரும் களங்கமாக நடந்தது. காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்திருந்தன. முஸ்லிம் ஐக்கிய முன்னணி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகின்றது. 30% வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் ஐக்கிய முன்னணி வேட்பாளர்க்ள் நான்கு பேர் மட்டுமே வெற்றிப் பெற்றதாக அறிவித்தது இராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரசு அரசின் கீழ் செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம். வெற்றிப் பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்களாக அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு காசுமீர் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்து காசுமீர் மக்களை ஆயுதப் போராட்டத்தை முழுவீச்சில்  முன்னெடுக்க வைத்தது. காசுமீரிகளை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளி ஆயிரக்கணக்கானோர் உயிரைக் கொடுப்பதற்கு வழிவகுத்தார் நேருவின் பேரன்
    இராஜீவ்காந்தி.

1994 இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசு ஐ.நா. வில் காசுமீர் பற்றி வாதாட அனுப்பிய இந்தியக் குழுவுக்கு வாஜ்பாய் தலைமை ஏற்றார். பரூக் அப்துல்லாவும் அங்கு சென்றிருந்தார். அவர் தான் ஒரு இந்தியன் என்று பேசியது ஐ.நா. வில் இந்தியாவுக்கு வலிமை சேர்த்தது. எதிரியே தனக்கு சேவை செய்ய வைப்பதே இராஜதந்திரம். காசுமீரைக் கரைத்து தனது காலடியில் கொண்டு வருவதில் காங்கிரசு கட்சி காசுமீர் தலைவர்களையே பயன்படுத்தியது. தன் கையே தன் கண்களைக் குத்துவது போல் காசுமீர் தலைவர்களைக் கொண்டே காசுமீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராகப் பேச வைத்து இணைப்பைப் படிப்படியாக நிறைவேற்றி, 370 ஐ படிப்படியாக கரைத்தது காங்கிரசு தலைமையிலான அரசுகள்..

1949 இல் உறுப்பு 370 இயற்றப்பட்டதில் இருந்து 2019 வரையான 70 ஆண்டுகளில் 1954  தொடங்கி அதை வலுவிழக்கச் செய்யும் வகையில்  இந்திய அரசால் 200 குடியரசு தலைவர் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மத்திய பட்டியலில் இருக்கும் 97 விவகாரங்களில் 93 காசுமீருக்கும் பொருந்தும். இந்திய அரசியல் சட்டதில் உள்ள 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் காசுமீருக்கும் பொருந்தும் பிற 135 பிரிவுகள் மீதான உரிமை முழுமையாக மாநிலத்திடம் உள்ளது என்பது பொருளல்ல. இவற்றை ஒத்தப் பிரிவுகள் ஏற்கெனவே காசுமீர் அரசியல் சட்டத்தில் இருப்பதால் இவற்றைப் பிடுங்கிக் கொள்ளும் தேவை இந்திய அரசுக்கு இல்லை.

1996 இல் காங்கிரசு அல்லாத ஐக்கிய முன்னணி அரசில் தேவகவுடா தலைமையிலான மத்திய அரசு காசுமீர் சிக்கலுக்கு தீர்வுகாண மாநில சுயாட்சிக் குழு, வட்டார சுயாட்சிக் குழு என இருக்குழுக்கள் அமைக்கப்பட்டன. தடைகள் பலவற்றைத் தாண்டி 1999 ஏப்ரலில் இக்குழுக்கள் தம் பரிந்துரைகளை முன்வைத்தன. அவை விவாதிக்கப்படவே இல்லை. சுயாட்சிக் குழுவின் பரிந்துரைகள் பின்வருமாறு:

  1. 370 பிரிவை தற்காலிகம் என்ற தலைப்பின் கீழ் இல்லாமல் ‘சிறப்பு’ என்கிற தலைப்பில் கொண்டுவர வேண்டும்.
  2. இந்திய அரசு வரையறுக்கும் அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள் ஜம்மு-காசுமீருக்குப் பொருந்தாது. மாறாக, சம்மு-காசுமீர் அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுக்காக புதிய அத்தியாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
  3. ஜம்மு-காசுமீர் மீதான இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் திரும்பப் பெற வேண்டும்.
  4. ஜம்மு-காசுமீர் சட்டமன்றத் தேர்தல்களை மாநில அளவிலான தேர்தல் துறை நடத்தும். இந்திய அரசின் தேர்தல் ஆணையம் இதை செய்யாது. மாநில சட்டங்களின் அடிப்படையில் இது நடைபெறும்.
  5. இணைப்பு ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடி அட்டவணையில் உள்ள மூன்று தலைப்புகளில் மட்டுமே இந்திய அரசு சட்டமியற்ற முடியும். 1950 க்குப் பின் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட எல்லாத் திருத்தங்களும் ரத்தாகும்.
  6. மாநில அரசு மற்றும் மாநில சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகே ஜம்மு-காசுமீரில் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ய முடியும்.
  7. அகில இந்திய அளவிலான நிர்வாகப் பணியாளர்கள் IAS, IPS ஜம்மு-காசுமீரில் பணி செய்ய இயலாது.
  8. பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவியிறக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரமில்லை. மாநில சட்டமன்றமே அதை செய்ய முடியும்.
  9. 1950 க்குப் பின் பறிக்கப்பட்ட கீழ்கண்ட உரிமைகளை ஜம்மு-காசுமீர் மாநிலம் மீண்டும் பெறும். 1. அட்டவணைப் பழங்குடியினரின் நலனுக்கான அட்டவணைப் பகுதிகளை நிர்வகிக்கும் உரிமை மீண்டும் மாநில அரசுக்கே வழங்கப்படும். 2. ஆளுநர் மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான நியமனம் மற்றும் இப்பதவிகளின் அதிகாரங்கள் தொடர்பாக மாநில சட்டமன்றம் பெற்றிருந்த உரிமைகள் மீண்டும் வழங்கப்படும். 3. மாநில அரசின் தலைவர் ஆளுநர் முதலான பதவிகளுக்கு 1965 க்கு முன்பு இருந்த பெயர்கள்( பிரதமர், சதார்-ஏ.ரியாசத்) மீட்கப்படும்.

மேற்கண்ட பரிந்துரைகளே உறுப்பு 370 இன் நிலை என்னவாக இருந்தது என்பதைக் புரிந்துகொள்ளப் போதுமானது. அதுமட்டுமின்றி 370 ஐ வைத்துக் கொண்டே இந்திய அரசு கடந்த 70 ஆண்டுகாலமாக செய்ததையும் புரிந்து கொள்ள முடியும். எனவே, உறுப்பு 370 என்பது ஓர் அலங்கார உறுப்பு, ஒரு வெற்றுப் பாத்திரம். அதில் இருந்து இறைக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கையைத்தான் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது மோடி- அமித் ஷா தலைமையிலான இந்திய அரசு.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து காசுமீரிகளின் தலைவிதியில் குறுக்கே வந்தோர் பலர். 1947 இல் இருந்து மட்டும் காசுமீரிகளைக் கைவிட்டவர்கள், முதுகில் குத்தியவர்கள், முகத்தில் குத்தியவர்கள், நெஞ்சில் குத்தியவர்கள் என்று பட்டியல் இட்டுப் பார்த்தால் மன்னர் அரிசிங், ஜின்னா, நேரு, பக்சி குலாம் முகமது, இந்திரா காந்தி, சேக் அப்துல்லா, ஐ.நா. அவை, ராஜீவ் காந்தி, பரூக் அப்துல்லா, நரசிம்மராவ் என இத்தனைப் பேர் வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் அடித்து துவைத்து காயப்போட்ட உறுப்பு 370 க்கு தான் ‘குட் பை’ சொல்லிவிட்டதாக மோடியும்-அமித் ஷா வும் பீற்றிக் கொள்கின்றனர். உண்மையில் காசுமீரை வலுக்கட்டாயமாகவும் சனநாயக நெறிகளைக் காலில் போட்டு மிதித்தும் இந்தியாவுடன் இணைத்ததில் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணனைப் போல் ஒரு பாத்திரத்தை இந்திய அரசியலில் வகித்தவர் நேருதான்.

காசுமீரை முன்னிட்டு சர்வதேச அரங்கில் ஓர் அரசியல் சூதாட்டத்தை நடத்தி வருகிறோம். அதுவரை ஜனநாயகம், நேர்மை எல்லாவற்றையும் சற்று ஒத்திவைக்க வேண்டியதுதான்”. என நேரு தன்னிடம் சொன்னதாக பால்ராஜ் பூரி பதிவு செய்கிறார்.

அதாவது காசுமீரிகளின் பார்வையில் வஞ்சகமான, சூதுத்தன்மையில் நேரு செயல்பட்டார் என்று சொல்ல முடியும். இந்திய ஆளும் வர்க்கத்தின் பார்வையில் இராஜதந்திர மெருகுடன் நேரு செயல்பட்டார் என்று இதைப் புரிந்தவர்களால் சொல்ல முடியும். நிச்சயமாக மோடி-அமித் ஷா போன்ற ’பசுக்குண்டர்’ கூட்டத்திற்கு இது புரியாது. காலம் மோடி-அமித் ஷா தலையில் இடியை இறக்கும்போது வரலாறு புரியவரும்.

இந்திய அரசு காசுமீரை அன்னியராகவும் எதிரி நாடாகவுமே நடத்தி வந்துள்ளது. 70 ஆண்டுகாலமாக சட்ட ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் காசுமீர்  இந்தியாவிற்கு கீழ்படுத்தப்பட்ட  நிகழ்ச்சிப் போக்கில் இந்திய ஆதிக்கத்தின் வெற்றியை அரசியல் வகையில் வெளிப்படுத்தும் ஒரு குறியீட்டு நடவடிக்கைதான் மோடி-அமித் ஷா கும்பல் உறுப்பு 370 ஐ செயலிழக்கச் செய்ததும், ஜம்மு-காசுமீரைத் துண்டாடி ஒன்றிய ஆட்சிப்புலமாக்கியது.

ஓர் அன்னிய நாட்டை ஆக்கிரமித்துவிட்டு அந்த நாட்டின் கொடியைக் கீழே இறக்கி அடிமைப்படுத்தும் நாட்டின் கொடி அந்நாட்டின் கோட்டையில் பறக்கவிடப்படும். அதைத்தான் மோடி-அமித் ஷா கும்பல் காசுமீரில் செய்துள்ளது. காசுமீர் மீதான படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, உடன்படிக்கை, உடன்படிக்கை மீறல் என எல்லாவற்றையும் ஏற்கெனவே எல்லோரும் செய்துவிட்டனர். ”காசுமீருக்கு என்று தனிக் கொடி இல்லை , இந்தியக் கொடியே காசுமீர் கொடி” என்றதுதான் மோடி-அமித் ஷா கும்பல் செய்ததாகும். இதை மாபெரும் சாதனையாக சொல்லி மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருகிறார்கள் இவர்கள்.

சேக் அப்துல்லாவை கைது செய்த நேரு இந்தியாவுக்கு ஆதரவாகப் பேச பக்சி குலாம் முகமதுவைத் தன் பக்கம் வைத்திருந்தார். ஆனால், பரூக் அப்துல்லாவை கைது செய்திருக்கும் மோடி-அமித்ஷா வுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு காசுமீரில் பக்சி குலாம் முகமதுக்கள் யாரும் இப்போது இல்லை. உத்தரகாண்ட் ஐ சேர்ந்தவரும் பாதுகாப்பு துறைச் செயலரும் ஆகிய அஜித் தோவல்தான் காசுமீரிகளின் சார்பாக கருத்து தெரிவித்து வருகிறார். இதுதான் மோடி-அமித் ஷாவின் பரிதாப நிலை.

தமிழ்மக்கள் பார்த்து பழகிய மகாபாரதம் பற்றிய திரைப்படத்தில் அர்ஜூனனோ, கிருஷ்ணனோ கதாநாயகனில்லை, கர்ணன் தான் கதாநாயகன். அர்ஜூனனின் வெற்றியை ரசித்தவர்களை விட கர்ணனாக நடித்த சிவாஜி வீழ்ந்து கிடக்கும் காட்சிக்காக கலங்கியவர்கள்தான் அதிகம். நசுக்கப்பட்டு வரும் காசுமீரிகளின் பக்கம்தான் தமிழர்கள் நிற்பார்கள்..  காஷ்மீரிகள் எழுந்துவராமல் வீழ்ந்து போவதற்கு இது ஒன்று நாகாஸ்திர, பிரம்மாஸ்திரக் காலமல்ல, பெல்லட் குண்டுகளை வெறும் கற்களைக் கொண்டு சந்திக்கும் மக்கள் யுகம்.

இந்தியாவின் காலனி காசுமீர் என்று அரசமைப்பு சட்டரீதியாக அறிவித்துவிட்டது இந்திய அரசு. வரலாற்றின் பெரும்போக்கில் நேரடி காலனியாதிக்கம் அநாகரிகமானது என்ற கருத்தும் அதன் அடிப்படையிலான நடைமுறையும் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய அழிவில் இருந்து தொடங்கிவிட்டது. இந்த வரலாற்று நிகழ்ச்சிப் போக்கில்தான் பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து இந்தியாவும் விடுதலைப் பெற்றது. ”காசுமீரிகள் இந்தியாவின் அடிமை, இந்த அடிமைகளை மூன்று ஊழல் குடும்பங்கள் சுரண்டி வந்தன, அவர்களிடம் இருந்து காசுமீரிகளை மீட்டு  நாங்கள் நல்ல சட்டங்களையும் சம உரிமையையும் வழங்குகிறோம், வளர்ச்சியைத் தருகிறோம்” என காலனியாதிக்கத்தை நியாயப்படுத்திய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டனைப் போல் பேசுகிறது இந்திய அரசு.

இன்னும் சில காலத்தில் காசுமீர் மக்கள் ’ஆசாதி’ என்ற முழக்கத்துடன் தெருவில் இறங்கப் போகிறார்கள். கொக்கரிக்கும் மோடி-அமித் ஷாவின் முகங்கள் வெளுத்துப் போய் பாகிஸ்தான், பயங்கரவாதம், பிரிவினைவாதிகள், காங்கிரசு, நக்சல்கள் எனப் போலித்தனமான வாய்ச்சவடால்கள் விடுவதைப் பார்க்கத்தான் போகிறோம்.

காசுமீரைப் பொருத்தவரை மோடி-அமித் ஷா கூட்டணிக்கு எந்த அதிர்ஷ்டமும் கைகொடுக்கப் போவதில்லை.

 

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW