பாசிசத்தின் தத்துவம்தான் என்ன?

12 Aug 2019

உலகெங்கிலும் வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும், முற்போக்கு முகாம்களின் சமூக செல்வாக்குகள் சரிவுற்றுவருவதும் கடந்த பத்தாண்டுகால உலக அரசியல் போக்காக உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப், பிரேசிலில் போல்சொனரோ, துருக்கியில் எர்டோகன், இந்தியாவில் மோடி என வலதுசாரி ஆட்சியாளர்களின்  கை மேலோங்கி வருகிறது.

அரை நூற்றாண்டு கால உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் ஐரோப்பா, ஆசியா லத்தின் அமெரிக்க நாடுகளிலும் வட அமெரிக்காவிலும் ஏற்படுத்திய சமூக நெருக்கடிகள், அதன் உப விளைவான ஊழல்கள், சமூக குற்றங்கள், வேலைவாய்ப்பின்மை ஆகியவை உலகமயப் பொருளாதார ஒழுங்கை ஆட்டங்கானவைத்தன.  உலகமய தாராளமய கொள்கைகள் தோற்றுவித்த சமூக நெருக்கடிகளை எதிர்புரட்சிகர சக்திகளான வலதுசாரி பாபுலிச அரசியல் சக்திகள் வேகமாக கைப்பற்றிவருகின்றன.

இஸ்லாம் வெறுப்பு, இன வெறுப்பு, அகதிகள் எதிர்ப்பு, அதீத தேசியவாதம், கவர்ச்சிகர வாய்வீச்சுரைகள், நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை வழங்குவது, அதி மனித வழிபாட்டிற்கு சமூகத்தை உடன் படவைப்பது , ஊடகங்களை விலைக்கு வாங்குவது, கார்ப்பரேட்மய பிரச்சாரப்பாணி  போன்ற பல்வேறு விதமான வலது பாபுலிச உத்திகளின் துணைகொண்டு நகர்ப்புற தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கத்திடம் உளவியல் தாக்தத்தை ஏற்படுத்தி சட்டப்பூர்வ வடிவில் வலது சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர்.

சுமார் நூறாண்டு காலத்திற்கும் மேலாக நிலவி வருகிற சமூகத்தின் சமத்துவ ஜனநாயக முன்னேற்றம் யாவும் திடுமென ஒரு இரவில் பறிக்கப்பட்டது போன்றொதொரு அரசியல் நிலமை சர்வதேச அளவில் தோன்றியுள்ளதை கண்ணுற்றுவருகிறோம்.

கடந்த காலத்தில் பொருளாதார சீரழிவுகளும் சமூக நெருக்கடிகளும் முற்றிய நிலைமைகளில் அதிமனித, மாயாவாத கருத்துக்களைக் கொண்ட பிற்போக்கு அரசியல் லும்பன்களான முசோலினி, ஹிட்லர் ஆகியோர் கைகளில் சமூகம் சிக்கிக் கொண்டதையும் அதனால் மானுட சமூகம் எதிர்கொண்ட சொல்லெனா  துயரையும் கண்ணுற்றோம். பாசிசத்தின் மறுவருகையானது, தனது பழைய குணாம்சங்களை அவ்வாறே உறித்துக் கொண்டு வராமல் அதன் பொதுப் பண்புகளை உள்ளடக்கமாக கொண்டு உலகை சூழ்ந்துள்ளது.

1

பாசிசத்தின் தத்துவம்தான் என்ன?

பாசிசத்திற்கு குறிப்பான தத்துவ விளக்குமொன்றும் பொதுவானதாக இல்லை. பாசிசம் மாயாவாதத்தை தனது பயன்பாட்டு தத்துவமாக்கிகொண்டது எனக் கூறலாம்.  இனப் பெருமை, பழம் பெருமை மீட்புவாதம், ஆன்மீக வித்தைகள் போன்ற அறியாமைகளை விதந்தோதி மக்களிடத்தில் பெருமைப்படுத்துவதுதான் மாயாவாதம். இட்லரின் ஆரிய கலாச்சார புத்துர்யிர்ப்பிற்கும் ஆர் எஸ் எஸ் சின்  ஆரிய இந்து ராஷ்ட்ர புத்தியுர்ப்பும் கடந்த காலம் குறித்த கற்பனைகளை மக்களிடம் விதைக்கின்றன. பாசிசத்தின் மாயாவாதமானது இனவாதத்தையோ மதவாதத்தையோ தனது கருத்தியல் ஆயுதமாக்கிக் கொள்கிறது.

தொகுத்துக் கூறின், உலக வாழ்வின் புறவய உண்மைகளை மறுப்பதும் அதற்கு அகநிலையான கற்பனை நம்பிக்கை பாற்பட்ட கருத்துக்களை மேன்மை படுத்துவதும் பாசிசத்தின் பொதுப் பண்பாக உள்ளது. புறநிலை உலகை பகுத்தறிவின் துணைக்கொண்டு அணுகாமல்  குருட்டு நம்பிக்கை எனும் அகநிலைவாதத்தால் வியாக்கியானப்படுத்துவது பாசிச கருத்துகளுக்கு அடித்தளத்தை வழங்குகின்றன.

எனவேதான் பாசிச சிந்தனைகள் அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்ட உண்மைகளுக்கு எதிராக உள்ளன. மானுடவியல் துறைக்கோ, பரிணாமக் கோட்பாட்டிற்கோ நேரதிராக  உள்ளது. பிரபஞ்சம், உலகம் குறித்த அறிவியல் பூர்வ உண்மைகள் ஆன்மீக வித்தைகளுக்கும் கடவுளர்களுக்கும் இன்ன பிற விண்ணுலக அதிசய கற்பனைகளுக்கும் எதிராக உள்ளது. ஆர் எஸ் எஸ் ஊழியர்கள் டார்வினியத்தை ஏற்றுக் கொள்ளாததன் காரணமும் இதுதான்! பாசிசத்தின் அனைத்து அகநிலைவாத கருத்துக்களும் (இனவாதம், மதவாதம் உள்ளிட்ட) மூடநம்பிக்கைகளின் ஒட்டுமொத்த குப்பைக் கூலமாகும்.

2

இந்தியாவும் பிற்போக்கு சக்திகளின் எழுச்சியும்

இந்தியாவில் மூட நம்பிக்கைகள், புனிதங்கள் உள்ளிட்ட அகநிலை கருத்துக்களால் உந்தப்படுகிற மத அடிப்படைவாதம் ஐரோப்பாவைக் காட்டிலும் பலமடங்கு வீரியத்துடன் சமூகத்தின் அன்றாட பொருளாதர பண்பாட்டு உறவுகளில் ஊடுருவி உள்ளது. சமூகத்தில் புரையோடியுள்ள நால்வர்ணக் கோட்பாடு, மக்களின் கால்களில் கட்டிய சங்கிலியாக நகர விடாமல் கட்டுப்படுத்தி வருகிறது. இந்தியாவில் அரசும் மதமும் பிண்ணிப்பிணைந்தே உள்ளது. நவீன இந்தியாவின் பிரசவமே மத பிரிவினையில் தொடங்கி, காந்தி படுகொலையில் தொடர்ந்து, சீக்கிய கலவரங்களில் வளர்ந்து, பாபர் மசூதி இடிப்பில் நெருப்பாய் எழுந்து இன்று காஷ்மீர் ஒடுக்குமறை, இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள்,தலித்துகள்,பழங்குடிகள், முற்போக்காளர்கள்  மீதான தாக்குதல்கள்வரை பற்றி எரிகிறது.

இந்திய அரசியல் அரங்கில் தொடக்கம் முதலாகவே முற்போக்கு முகாம்கள் பலவீனமாகவும், சமூக செல்வாக்கற்றும் இருந்துவந்துள்ளன. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளோ ஏகாதிபத்திய செல்வாக்கு மண்டலந்தில் துணைக் கோளாக சுழன்று, நாட்டை சொந்தமாக புணர் கட்டமைப்பதற்கு வக்கற்று, அந்நிய முதலீடுகளின் துணையுடன் ஏற்றத் தாழ்வான லும்பன் வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்று மக்கள் வாழ்வை நாசமாக்கிவருகிறது..

நாட்டின் இயற்கை மற்றும் மனித வளங்கள் ஏகாதிபத்திய நிறுவனங்களால் சுரண்டப்பட்டது. இப்போக்கு தவிர்க்கவே இயலாத சமூக நெருக்கடிகளை நீடிக்கச் செய்தது. காலம் காலமாக நிலவி வந்த  மத அடிப்படைவாதத்தோடு விவசாயப் பொருளாதார சீரழிவு, தொழித்துறை மந்தப்போக்கு, வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி என பொருளாதார சீரழிவிலும் சிக்கிக்கொண்டது.

இந்திய சமூகத்தின் பொருளாதார சீரழிவுகள் அரசியல் வரலாற்று அரங்கில் பிரதிபலித்தே வந்தன. இந்திராவின் எமெர்ஜென்சி, சிங்கின் கூட்டணி ஆட்சி, தேசிய இனங்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிராந்திய கட்சிகளின் எழுச்சி என மத்திய அரசை கூட்டணி சகாப்தத்திற்குள்ளும் ஊசலாட்டமான அரசியல் தலைமையிலும் வைத்திருந்தன. போலவே சாதி மோதல்கள், போலி தேசியவாத முழக்கங்களும், மத அடிப்படைவாத மோதல்களும் தொடர்ந்தன.

இப்பின்னணியானது 2014 இல் பாஜகவை இமாலய வெற்றி பெறுவதை சுலபமாக்கின. அதன் ஐந்தாண்டுகால சீரழிவு (செல்லாக்காசு அறிவிப்பு, ரபேல் ஊழல், விவசாயிகள் மீதான துப்பாக்கிச் சூடு, காஷ்மீர் மக்கள் மீதான பெல்லேட் குண்டு தாக்குதல்கள், நீட் தேர்வு உள்ளிட்டவை) ஆட்சியானது. ஆன்மீக வித்தைகள் மூலமாகவோ அதீத தேசியவாத திரையாலோ மூடி மறைக்கப்பட்டன.

ரோமில் சர்கஸ் வித்தை காட்டி அரசுக்கெதிரான மக்களின் கோபத்தை மடைமாற்றிய  அரசியல் தந்திரத்தை  இன்றைய நவீன பாராளுமன்ற அரசியலுக்கு கச்சிதமாக பாஜக பொருத்தியது. விவசாய நெருக்கடியும், 45 ஆண்டுகாலத்தில் இல்லாத வேலைவிப்பின்மையும் பாஜக அரசை தோல்வியடைய செய்யும் என எதிர்பாத்திருந்த நேரத்தில் அதீத தேசியவாத வித்தைகளும், மோடி எனும் அதிமனிதனின் உருவாக்கமும் மக்களை உளவியல் ரீதியாக ஆட்கொண்டன.

பாரம்பரிய ஆளும்கட்சியான காங்கிரசை இந்தியாவில் இருந்தே அப்புறப்படுத்துவோம் என்ற லட்சிய வெறியுடன் செயல்பட்டுவருகிற ஆர்.எஸ் எஸ் –பாஜகாவின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க இயலாமல் காங்கிரஸ் திகைத்து நிற்கிறது.

3

இந்துத்துவ பாசிசத்தின் கோரப் பண்பு

ஆதிக்க உணர்வு, வன்முறை, மதவெறி, ஒடுக்குமுறை போன்ற கேடான பண்புகளுக்கும், இப்பண்புகளுக்கு கருத்துமுதல்வாத மாயாவாத  கோட்பாட்டால் நியாயம் கற்பிக்கிற ஆர் எஸ் எஸ்-பாஜகவிடம் நாடு சிக்கியுள்ளது. இது ஒரு அவமானகரமான நிலைமைதான்.

இந்த அவமானகரமான அரசியல் நிலைமையானது, முதலாளித்துவ நாடாளுமன்ற  ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல மானுட குலத்திற்கும் மானுட நாகரித்திற்கும் பேரழிவை ஏற்படுத்துகிற பிற்போக்கு சக்தியாக நம்முன் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று பேயாட்டம் போடுகிறது.

மறுமலர்ச்சி காலத்திற்கு பிந்தைய பழைய பிற்போக்கு சக்திகள், நவீன அரசியல் வடிவை கைப்பற்றுகிறபோது, ஏகாதிபத்திய விஸ்வாசத்துடன் கூடிய ஆன்மீக வித்தையையும் அதீத தேசியவாதத்தை காலத்திற்கேற்ப கச்சிதமாக இணைத்துகொள்கிறது. நாட்டின் பிரதமர் மோடி, உலக நாட்டுத் தலைவர்களிடமும் ,இந்திய முதலாளிகளுடனும் கண்ணியமான அரசியல் தலைவராக கைகுலுக்குகிறார். நாட்டிலோ ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச் சொல்லியும், மாட்டிறைச்சி விற்றதற்கும் இசுலாமியர்கள் தலித்கள் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

இந்தியாவில் தற்போது மக்கள் எதிர்கொண்டு வருகிற அனைத்துவிதமான சமூக நெருக்கடிகளையும் எதிர்கொள்ள மதத்தை பிரதான  கருவியாக பயன்படுத்துகிற பாஜகவை இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஆதரிக்கிறது.தேர்தல் நிதியை வாரி வழங்குகிறது,ஊடக செய்திகளை கட்டுப்படுத்துகிறது.தனது சுயநலத்தையும் சுயலாபத்தையும்  காத்துக் கொள்ள இந்துத்துவ பாசிசத்தை வரவேற்கிறது.ஆதரிக்கிறது.

ஆர் எஸ் எஸ் பாஜகவின் லட்சிய இலக்குகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீரின்  சிறப்பு சட்டப்பிரிவை அரசியல் சாசன விரோதமாக ரத்து செய்கிற அறிவிப்பை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்த பிறகு, தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு நாடகப் பாணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சுற்றுலா வருமானம், உணவு முதலீட்டு வாய்ப்பு குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார். அடுத்த சில மாதங்களில் அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறப்போவதாக அறிவிப்பு வெளியாகிறது.

இவையெல்லாம் இந்துத்துவ பாசிசம் எனும் பேய் வடிவ அரசிற்கும் இந்திய லும்பன் முதலாளித்துவ முதலீட்டாளர்களுக்குமான திருமண பந்த உறவை வெளிப்படுத்துகிறது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதரவுடன், ஆர் எஸ் எஸ் பாஜக மேற்கொண்டுவருகிற  தன்னிச்சையான கட்டுப்பாடுகளற்ற அதிகார ஒடுக்குமுறையும் வன்முறையும் மாபெரும் சமூக காட்டுமிராண்டித்தனத்திற்கும் பொருளாதார அழிவுவாதத்திற்கும் நாட்டைச் இட்டுச் செல்வது எதார்த்த உண்மையாக உள்ளது.

வழக்கம்போலே நாடாளுமன்ற ஜனாநாயக மயக்கத்தில் இருந்து மீளாத இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றளவிலும், ஜம்மு காஷ்மீர் முடிவை நாடளுமன்றத்தில் விவாதிக்கவில்லை என அங்கலாய்க்கின்றனர். நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகின்றனர். விஷயமென்னவென்றால் முதலாளித்துவ வர்க்கம் இந்துத்துவ பாசிசத்துடனும் ஏகாதிபத்திய மூலதனத்துடனும்  இழிவான கூட்டணி அமைத்து மேற்கொண்டுவருகிற அனைத்துவிதமான  ஒடுக்குமுறைகளை, நாடாளுமன்ற தேசிய சபைக்கு வெளியே, மக்கள் திரள் போராட்டத்தின் ஊடாக சாலையில் தனது பலத்தை வெளிப்படுத்தி எதிர்கொள்ளாமல், இந்துத்து பாசிசம் எனும் எதிர்புரட்சிகர சக்தியை முற்போக்கு முகாம்களை  அணிதிரட்டி முறியடிக்க முயற்சிக்காமல் புரட்சிகர அலங்கார சொல்வீச்சொடு தனது வரம்பை சுருக்கிக் கொண்டுள்ளது.

வலது சக்திகளின் சட்டப்பூர்வ வன்முறை மற்றும் சட்டத்திற்கு புறம்பான வன்முறையாலும் இந்தியாவில் முற்போக்கு சக்திகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. சிதறுண்ட எதிர்கட்சிகள் வினையாற்றுவதற்கு வக்கற்று வெற்று அறிக்கைகளை வெளியிட்டு  கட்சி அலுவலகத்தில் முடங்கியுள்ளன. அரசின் தன்னாட்சி நிறுவனங்கள் இந்துத்துவ சித்தாந்த செல்வாக்கால் சீரழிந்து வருகின்றன. தாராளமய ஜனநாயக சக்திகள் நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்துள்ளன.

ஆர் எஸ் எஸ் –பாஜக அமைப்பு முழு அரசாங்கமாகிவிட்டது. அதன் கட்டுப்பாடற்ற அதிகார வன்முறை வெறியாட்டமானது, வெற்றி முரசு கொட்டியபடி பீடு நடை போடுகிறது. பாசிசம் நிகழ்ந்துகொண்டிருக்கிற எதார்த்த உண்மையாகிவிட்டது!

நாடெங்கிலும் உள்ள முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டிய வரலாற்று தேவை தாமதத்திற்கு இடமின்றி அவசர அவசியமாகிவிட்டது!

 

ஆதாரம்;

பாசிசம் –எம்.என்.ராய், விடியல் பதிப்பகம்

– அருண் நெடுஞ்சழியன்

 

 

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW