’பசுப் பாதுகாப்பு’ காவிக் கொலைவெறி சக்திகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி உள்ளிட்ட 7 தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
12-7-2019 அன்று நாகை மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான் என்ற இளைஞரை வீடு புகுந்து தாக்கிய இந்து மக்கள் கட்சியையும், மதவாத சக்திகளுக்கு துணைபோகும் தமிழக அரசையும் கண்டித்து இன்று மாலை தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி தலைமையில் இரயில் நிலையம் அருகில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து தோழர்கள் அருண்சோரி, நகர செயலாளர் ஆலம் கான் உள்ளிட்ட 7 தோழர்களை கைது செய்த காவல்துறை IPC 147, 143, 341, 353, 505(i)(b), 506(i) CLA 7(1)(a) இன் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைந்துள்ளது.
முன்னதாக ஜூலை 15 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்ட பொழுது சட்டத்திற்குப் புறம்பான காரணங்களைச் சொல்லி காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால், அதே 15 ஆம் தேதி தஞ்சையில் சிவசேனா ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது காவல்துறை. அதுமட்டுமின்றி, நாகையில் இந்துத்துவ வெறியர்களால் நடத்தப்பட்ட வன்கும்பல் தாக்குதலைக் கண்டித்தற்காக அதே ஆர்ப்பாட்டத்தில் தோழர் அருண்சோரிக்கு கொலை மிரட்டல் விடுத்து சிவசேனா பேசியது. ஆனால், சிவசேனா மீது எடப்பாடியின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிவசேனா, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி ,பா.ச.க. போன்ற ஆர்.எஸ்.எஸ். இன் கிளை அமைப்புகள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தி மதவெறியைத் தூண்டி மதச்சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை வளர்ப்பதற்கு நடுவண் மோடி அரசின் அடிமையாக செயல்படும் எடப்பாடி அரசு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. சனநாயகம், சமூக நீதி, மதச்சார்பின்மை, இயற்கை வளப் பாதுகாப்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றிற்காகப் பாடுபடும் அமைப்புகளுக்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மக்களை அணி திரட்டும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை எடப்பாடி அரசு மறுக்கும் போக்கு தொடர் கதையாகி வருகிறது.
’பசு பாதுகாப்பு’ என்ற பெயரால் இஸ்லாமியர்கள், தலித் மக்கள், பழங்குடிகள் மீது தொடர் வன்முறைகள் வட மாநிலங்களில் நடந்துவரும் சூழலில் தமிழகத்தில் இதனை தொடங்கி வைத்துள்ள இந்து மக்கள் கட்சி போன்ற மதவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு துணை செய்யும் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, சனநாயக குரல்களை நசுக்கும் இச்செயலை தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். காவிப் பயங்கரவாதிகள் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக தமிழ்நாட்டிலும் கொலைவெறி அரசியலை நடத்த எண்ணினால் அதை தமிழக அரசு வேடிக்கை பார்த்தால், நேருக்கு நேர் களத்தில் இறங்கி தடுத்து-முறியடிக்க தமிழ்த்தேச மக்கள் முன்னணி என்ன விலை கொடுக்கவும் தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
7010084440