முன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார்! அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்!

13 Jul 2019

கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாடு

14-07-2019  ஞாயிறு, காலை 10:30  மணி முதல் இரவு 7 மணி வரை

இடம்  நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை

2011 ஆம் ஆண்டு புகுசிமா அணு உலை விபத்தைத் தொடர்ந்து இடிந்தகரை, கூடங்குளத்தைச் சேர்ந்த மக்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம் நாட்களுக்கு மேல் நீடித்தப் போராட்டம் அது. கோரிக்கை வெல்லும்வரை போராட்டத்தைவிட்டு செல்வதில்லை என அப்பகுதி மக்கள் உறுதிக் காட்டியது தமிழக மக்களுக்கே பாடமாக அமைந்தது. நெடுவாசல், கதிராமங்கலம் என இடிந்தகரையில் இருந்து கற்றுக்கொண்டு களம் கண்ட ஊர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. சல்லிக்கட்டுப் போராட்டமும் சரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமும் சரி இடிந்தகரைப் போராட்டத்தின் தொடர்ச்சியே. ’வளர்ச்சி’ என்று வாய்ப்பந்தல் போட்டு கார்ப்பரேட்டுகளுக்கு விருந்து வைக்கிறது அரசு என்பது தமிழ்நாட்டில் அன்றாடப் பேசுபொருள் ஆகியுள்ளது. தமிழ்நாட்டின் நாலாப்புறமும் நடுவன் அரசின் அழிவைத் தரும் வளர்ச்சிக் கொள்கை அம்பலப்பட்டு வருகிறது.

கூடங்குளத்தில் முதல் இரண்டு அணு உலைகள் நிறுவப்பட்ட பொழுது இந்தியாவின் மக்கள் தொகையைக் காரணமாகச் சொல்லியும் மின்சாரத் தேவை என்றும் ’கடைசி நேரத்தில் போராடுவதா?’ என்றும் சொல்லி ஆறு முக்கிய கட்சிகள் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. பின்னர், இரண்டு அணு உலைகள் மட்டுமல்ல, அணு உலைப் பூங்காவே அமைக்கப் போகிறோமென அரசு அறிவித்த போது ஆபத்தான ஆறில் இருந்து இரண்டு கட்சிகள் கழன்று கொண்டன. இப்போது இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கப் போகிறோம் என அறிவிப்பு வந்துள்ள நிலையில் முதல் இரண்டு அணு உலைகளை ஆதரித்து நின்ற மற்றுமொரு கட்சி அணுக் கழிவைப் புதைப்பதற்கு எதிராய் நிலையெடுத்துவிட்டது. மொத்தத்தில், ஆபத்தான ஆறின் பட்டியலில் இருந்து தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) ஆகிய மூன்று கட்சிகளும் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்க்க முன்வந்துள்ளன. எனவே, இன்று ஆபத்தான ஆறல்ல, வெறும் மூன்று கட்சிகள்தான் அணுக் கழிவு மையம் அமைப்பதை ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. அவை அதிமுக, காங்கிரசு, பா.ச.க. இம்மூன்று கட்சிகளில் காங்கிரசும் பா.ச.க.வும் மக்களிடம் செல்வாக்கு இல்லாதவை, அதிமுகவோ மெல்ல செல்வாக்கை இழந்துவருகின்றது. எனவே, அணு உலைகளை அமைக்கக் கூடாதென்று போராட்டிய நாட்களைவிட இன்றைக்கு அணுக் கழிவைப் புதைக்கக் கூடாதென்ற கோரிக்கைக்கு கருத்தளவிலேனும் வலிமை கூடுதலாக உள்ளது.

கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கியதில் இருந்து உருவாகியுள்ள கழிவுகளை அணு உலைக்கு அருகிலேயே பாதுகாத்து வருகின்றனர். வெகுகாலத்திற்கு இப்படி அணு உலைக்கு அருகிலேயே சேகரித்துக் கொண்டிருப்பது விபத்திற்கு வழிவகுத்துவிடும். எனவே, தற்காலிக அல்லது நிரந்தர கிடங்கில் அணுக் கழிவு புதைக்கப்பட்டாக வேண்டும். கோலார் சுரங்கத்தில் நடுவண் அரசு அணுக் கழிவைப் புதைக்க எண்ணிய போது கர்நாடகவில் இருக்கும் பா.ச்.க., காங்கிரசு கட்சிக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்துவிட்டனர். அணுக் கழிவப் புதைப்பதற்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்க அணியமாக இல்லை. எனவே, இருக்கவே இருக்கிறது தமிழ்நாடு என இந்தியாவின் முதல் அணுக் கழிவு மையத்திற்கும் கூடங்குளத்தைத் தெரிவு செய்துவிட்டனர்.

தற்காலிகமாக கூடங்குளம் வளாகத்திற்குள் அணுக் கழிவைப் புதைப்பதை தடுக்க முடிந்தால் படிப்படியாக அணு உலையை மூடுவதற்கு அது வழிவகுத்துவிடும். ஏனெனில், அணு உலை துப்பிக் கொண்டிருக்கும் அணுக் கழிவை இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மேலாக அணு உலைக்கு அருகிலேயே வைத்துப் பாதுகாத்துவிட முடியாது. அணுக் கழிவு மையம் அமைக்க முடியாவிட்டால் அணு உலையை மூடுவதை நோக்கித்தான் அரசு போயாக வேண்டும். அணுக் கழிவைப் புதைப்பதை தடுத்து நிறுத்தினால் நாளடைவில் அணு உலைகளை மூடச் சொல்லி முன்னேற முடியும்.

பெரிய கட்சிகள் ஒரு கோரிக்கையை ஆதரித்துவிட்டாலே அதை வென்றுவிட முடியும் என்பதல்ல. ஆனால், அக்கட்சிகள் ஆதரிக்கும் பொழுது அக்கோரிக்கை வெகுமக்களிடம் கொண்டு செல்லப்பட்டு வலுப்பெறுகிறது. இது உறுதியாக போராடக் கூடிய ஆற்றல்களுக்கு கருத்தியல் பலத்தை கொடுக்கிறது. முதலிரண்டு அணு உலைகளை எதிர்த்த போது இல்லாத கருத்தியல் பலம் இப்போது அணுக்கழிவு மையத்தை எதிர்க்கும் போது கிடைத்துள்ளது. எனவே, அணுக் கழிவு மையத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கு அணியமாவோம். அணு உலைகள் இல்லாத் தமிழகம் படைக்கும் காலம் தொலைவில் இல்லை. இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் இது விசயத்தில் அரசை முற்றாக தனிமைப்படுத்தி அணு உலைகளை செயலற்றுப் போகச் செய்ய முடியும்.

அணு உலைகளை கைவிட்டு வேறு வழிகளுக்கு மாறும் போக்கிலேயே உலகமும் இருக்கிறது. வரலாறும் நம் பக்கமே இருக்கிறது. நம்பிக்கையோடு போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்.

 

-செந்தில், இளந்தமிழகம்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW