ஜார்கண்ட் வன்கும்பல்கொலைப் பற்றி மோடியின் பேச்சு – பித்தலாட்டத்தனமானப் பிதற்றல்

03 Jul 2019

ஜூன் 26 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, ஜார்க்கண்ட் படுகொலை பற்றி மூன்று நிமிடங்கள் பேசினார். ஆனால், கொலை அவருக்கு ஏற்படுத்திய வலியைவிட கொலை மீதான விமர்சனங்கள் ஏற்படுத்திய வலியைப் பற்றி அதிகம் பேசினார். அவர் எத்தகைய காலச் சூழலில் அப்படி பேசியுள்ளார் என்பதைப் பார்த்தால் இந்த ஆட்சியின் தொடக்கம் படுமோசமான ஒரு வருங்காலத்தைக் காட்டுகிறது.

தப்ரீஸ் அன்சாரி கொலை:

 ஜூன் 18 அன்று தப்ரீஸ் அன்சாரி என்ற 24 அகவைக் கொண்ட இஸ்லாமிய இளைஞன் ஜார்க்கண்ட்டில் உள்ள சரைகெலா கரசவன் மாவட்டத்தில் தட்கிடி கிராமத்தில் இந்துத்துவ வன்கும்பலால் மின்கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கப்படும் காணொளி வெளிவந்தது. அவர் இருசக்கர மோட்டார் வண்டியைத் திருட முற்பட்டபோது பிடிப்பட்டார் என்றும் அதை தொடர்ந்து அவர் தாக்கப்பட, இஸ்லாமியர் என்று தெரிந்ததும் கொலைவெறித் தாக்குதலாக அது நீடித்துள்ளது. அந்த தாக்குதல் நடக்கும் பொழுது அங்கே குழந்தை இருக்கும் சத்தம் பதிவாகியுள்ளது. ஒரு பெண் சிரிப்பொலி எழுப்பும் சத்தம் காணொளியில் பதிவாகியுள்ளது. மணமாகி வெறும் ஒன்றரை மாதமே ஆகியுள்ள நிலையில் தன்னை விட்டுவிடுமாறு அந்த இளைஞன் மன்றாடுகிறான். ’ஜெய் ஸ்ரீராம்’ என்றும் ‘ஜெய் ஹனுமான்’ என்றும் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லுமாறு அவன் தடியால் தாக்கப்படுகிறான். இந்த தாக்குதல் சுமார் பல மணி நேரங்கள் நீடித்துள்ளது.

காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அன்சாரி மீது அவரது வாக்குமூலத்தின் பெயரால் அவர் மீது திருட்டு வழக்குப் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை சொல்கிறது. நான்கு நாட்களுக்குபின் ஜூன் 22 அன்று உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்ட அன்சாரி, சில மணித்துளிகளில் இறந்து போகிறார். இந்த ஜார்க்கண்ட் தாக்குதலைப் பற்றித் தான் தனது மக்களவை உரையில் மோடி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மக்களவைப் பேசத் தவறியதால் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து மறுநாள் ஜூன் 26 அன்று மாநிலங்கள் அவையில் பேசினார்.

அமெரிக்க அரசின் அறிக்கை:

 ஜுன் 20 அன்று அமெரிக்க அரசின் அனைத்துலக மதச் சுதந்திரத்திற்கான ஆணையத்தின் ஆண்டறிக்கை வெளிவந்திருந்தது. அந்த அறிக்கையை வெளியிட்டவர் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் போம்பியோ. அந்த அறிக்கை கடந்த 2013 இல் இருந்து இந்தியாவை இரண்டாம் நிலைப் பட்டியலில் வைத்துள்ளது. இரண்டாம் நிலை என்பது மத சுதந்திரம் போதிய அளவில் இல்லாத நாடு, மதச் சுதந்திரத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபடவோ அல்லது அனுமதிக்கவோ செய்யும் அரசு என்று வரையறுத்து அவற்றை ’குறிப்பான கண்காணிப்பில் வைக்கவேண்டியவை’ என்பதாகும். ஆப்கன், ஈரான், எகிப்து,      மலேசியா போன்ற நாடுகளோடு இந்தியாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மைய, மாநில அரசுகளும் தனிப்பட்ட அமைப்புகளும் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் மற்றும் நிறுவனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் மதச்சிறுபான்மை தகுதியை உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கிறது. இஸ்லாமியப் பெயர்கள் கொண்ட நகரங்களின் பெயர்களை மாற்ற முயல்வது – எடுத்துக்காட்டாக, அலகாபாத்தை பிரக்யாராஜ் என மாற்றியது – இதன் மூலம் இந்திய வரலாற்றுக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பை அழிக்க முயல்வதாக இந்திய செயற்பாட்டாளர்கள் சொல்வதாக அறிக்கை பதிவு செய்கிறது.

மதரீதியாக தூண்டப்பட்ட கொலைகள், தாக்குதல்கள், கலவரங்கள், பாகுபாடுகள், காழ்ப்புணர்ச்சிகள், தனிநபர் தமது மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு இருக்கும் உரிமைகளைக் கட்டுபடுத்தல், கட்டாய மத மாற்றங்கள் நடப்பதாக அறிக்கைகள் சொல்கின்றன. பசுப் பாதுகாப்பு என்பதன் பெயரால் நடக்கும் கொலை உள்ளிட்ட தாக்குதல்கள், கும்பல் வன்முறைகள், அச்சுறுத்தல்களில் ஈடுபடுவோரை அரசு அதிகாரிகள் தண்டனைக்குள்ளாக்குவது இல்லை… இந்துப்பெரும்பான்மைவாத பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மதச் சிறுபானமியினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுகின்றனர்.

மேலும், இந்துக்கள் அல்லாத மதத்தினரும் இந்துக்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாவதாக அறிக்கை பதிவு செய்கிறது. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், சங் பரிவாரங்கள் போன்ற இந்து தேசியவாதக் குழுக்களின் பன்முனைப் பரப்புரை இத்தகைய மதரீதியான வன்முறைகளுக்கும் குற்றங்களுக்கும் முக்கியமான பங்களிப்பு செய்கின்றன” என்று குறிப்பிடும் அந்த அறிக்கை மோடி ஆட்சிக்கு வந்தப் பின் உருவாகியுள்ள ‘புதிய இந்தியாவை’ படம்பிடிக்கிறது.

”அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படும் குடிமக்கள் பற்றி அன்னிய அமைப்போ அல்லது அரசோ கருத்துச் சொல்வதற்கான உரிமை இல்லை” என்று இந்திய அரசின் வெளியுறவுத் துறை செயலர் பதில் தந்து இந்த அறிக்கையைப் பற்றிய பேச்சை முடித்துக் கொண்டார்.

இந்தப் பின்னணியில்தான் ஜூன் 26 அன்று ஜார்க்கண்ட் கொலை பற்றி மாநிலங்கள் அவையில் மோடி பேச நேர்ந்தது.

அன்சாரி சாவுக்கு யார் பொறுப்பு?

அந்த இளைஞனின் மரணம் எல்லோருக்கும் வலியைக் கொடுப்பது, தனக்கும்தான் என்று சொல்லிவிட்டு குற்றமிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும் என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் ‘ஆனால் என்று தொடங்கி ஜார்க்கண்ட் மாநிலத்தையே வன்கும்பல் அடித்துக் கொலைகளின் களமாக சித்திரிப்பது சரியா?, ஒரு மாநிலத்தையே இப்படி சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை என்று சொல்லி முந்தையநாள் மாநிலங்களவையில் காங்கிரசைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் பேசியதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

தாக்கியவர்கள் என்று கைதுசெய்யப்பட்டுள்ள 11 பேர் மட்டும்தான் இதற்கு பொறுப்பா? தாக்கப்பட்ட அன்சாரியை மருத்துவமனையில் சேர்க்காமல் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்த காவல்துறைக்கு பொறுப்பில்லையா? காவல்நிலையத்தில் இருக்கும் போது அன்சாரியின் மாமா அன்சாரியை மருத்துவமனையில் சேர்க்குமாறு மன்றாடியதாக சொல்கிறார். அந்நேரத்தில் வன்கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி பாப்பா மண்டல் காவல் நிலையத்திற்குள் இருந்து கொண்டு , ’இவன் என்ன இன்னும் சாகவில்லை’ என்று கத்தியதை அன்சாரியின் மாமா காதுபடக் கேட்டுள்ளார். இரு காவலர்கள் இப்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என மாவட்ட எஸ்.பி. சொல்கிறார். மேலும் தாக்கியவர்கள் மீதான வழக்கே அன்சாரியின் மனைவி மறுநாள் கொடுத்தப் புகாரின் பேரிலேயே போடப்பட்டுள்ளது.

வன்கும்பல் அடித்துக் கொலைகள் அதிகரித்து வரும் சூழலில் ஓர் இஸ்லாமிய இளைஞன் காயங்களோடு  நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும்பொழுது அவரைச் சிறையில் அடைக்க ஆணையிட்ட நீதிபதிக்கு இதில் பொறுப்பில்லையா?

பல மணி நேரங்கள் ஒரு வன்கும்பலால் தாக்கப்பட்ட ஓர் இளைஞனின் உடலைப் பரிசோதித்து அவரை மருத்துவமனையில் இருக்க வைக்காமல் சிறைக்கு அனுப்பப் பரிந்துரைத்த மருத்துவருக்குப் பொறுப்பில்லையா?

சிறையிலடைக்கப்பட்ட பின்பு அன்சாரியின் மாமா அவரைச் சிறையில் சென்று சந்தித்துள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்க்குமாறு சிறை அதிகாரிகளிடம் மன்றாடியுள்ளார். ஆனால், அங்கேயும் அவர்கள் அதற்கு இசையவில்லை. படுகாயம் அடைந்த ஒருவரை நான்கு நாட்கள் அடைத்து வைத்து சாகடித்த சிறையதிகாரிகளுக்குப் பொறுப்பில்லையா?

இந்துத்துவ வன்கும்பல் மட்டுமல்ல மொத்தத்தில் காவல்துறை, மருத்துவர்கள், நீதிபதி, சிறையதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் சேர்ந்து அன்சாரியைக் கொன்றுவிட்டது.

ஜார்க்கண்டில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 18 பேர் வன்கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 11 பேர் இஸ்லாமியர்கள். ஆனால், மோடியோ ஏதோ சிலரின் ‘தற்செயல்’ வன்முறையாக இதைக் கண்டித்துவிட்டு கடந்துபோகப் பார்க்கிறார்.

இராமனின் பெயரால் கும்பல் கொலைகள்:

கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார், மாட்டிறைச்சிக் கொண்டு சென்றார், மாட்டிறைச்சி உண்டார் என்று வன்கும்பல் கொலைகளுக்கு ஏதாவது ஒரு காரணம் தேவைப்பட்டது. இப்போது ஒருவரை தாக்கிக் கொள்ள அவர் இஸ்லாமியராக இருந்தால் மட்டும் போதும் என்ற நிலைக்கு காவிப் பயங்கரம் வளர்ந்து நிற்கிறது. ’ஜெய் ஸ்ரீராம்’, ஜெய் ஹணுமான், ஜெய் பஜ்ரங் பளி என்று சொல்லுமாறு அடித்துக் கொல்வது தொடர்கிறது.

அன்சாரி ஜூன் 18 இல் தாக்கப்பட்டார் என்றால் ஜூன் 21 அன்று கொல்கத்தாவில் அபீஸ் முகமது சாருக் அல்தர் என்ற 26 அகவை இஸ்லாமிய இளைஞர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லுமாறு வன்கும்பலால் நிர்பந்திக்கப்பட்டு, தாக்கப்பட்டு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார்.

அதே ஜூன் 18 அன்று அசாமில் பர்பேட்டா நகரில் ஓர் இஸ்லாமிய இளைஞர் ‘ ஜெய் ஸ்ரீராம்’, ’பாரத் மாதா கீ ஜே’, பாகிஸ்தான் முர்தாபாத்(ஒழிக) என்று சொல்லுமாறு நிர்பந்திக்கப்பட்டு ஓர் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

மும்பையில் வாடகை கார் ஓட்டும் ஓர் இஸ்லாமியர் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லுமாறு நிர்பந்திக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். இந்திய நாளிதழ்களில் இப்படி தாக்கப்படுவோர் பற்றிய செய்திகள் ஒவ்வொரு நாளும் இடம்பிடிக்கும் வகையில் மோடி ஆட்சியின் இரண்டாம் பாகம் தொடங்கி இருக்கிறது.

உண்மையில், தலைமை அமைச்சராக இருக்கும் மோடி, ஒருவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லுமாறு வற்புறுத்தும் உரிமை எவருக்கும் இல்லை என்று சொல்லியிருந்தால் அந்த பொறுப்புக்கு தகுதியுடையவர் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ஜார்க்கண்ட் மாநிலத்தை தூற்றிவிட்டார்கள் என்று திசை திருப்பத் தான் முயற்சி செய்தார்.

குஜராத் மாதிரி:

2002 இல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட போது அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த மோடி இதே உத்தியைத் தான் கடைபிடித்தார். குஜராத் மாநில அரசு மீது குவிந்த விமர்சனக் கணைகளைக் குஜராத் மக்களுக்கு எதிரான விமர்சனமாக காட்டினார். குஜராத்தின் பகைவர்கள் குஜராத்தைத் திட்டமிட்டுத் தூற்றுகின்றனர் என்றார். இதன் மூலம் குஜராத் மாநிலத்தின் குடிமக்களாக இந்துக்களை மட்டும் உருவகப்படுத்தி படுகொலைகளுக்கு ஆளான இஸ்லாமியர்களை குஜராத்திற்கு அன்னியர்களாக சித்திரித்தார். அன்சாரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் மண்ணின் மைந்தன். அன்சாரி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜார்க்கண்ட்டை ஆளும் பா.ச.க. அரசை விமர்சித்தே விமர்சனங்கள் எழுகின்றதே அன்றி ஜார்க்கண்ட் மக்கள் எல்லோரையும் விமர்சித்தல்ல. குஜராத்தின் கொலை மாதிரியையும் அதற்கு எதிராக எழுந்த கண்டனங்களை எதிர்கொண்ட மாதிரியையும் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொறுத்தப் பார்க்கிறார் மோடி.

வெறுப்புக் குற்றங்களை நிகர்படுத்தும் மோடி:

ஜார்க்கண்ட் வன்முறைப் பற்றி அரை நிமிடம் பேசிவிட்டு மீதமுள்ள 2.5 நிமிடத்தில் பொதுவான வன்முறை எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டு எல்லா வன்முறைகளையும் ஒரே தன்மையில் கண்டிக்க வேண்டும். – ஜார்க்கண்ட் ஆனாலும் சரி, கேரளாவானாலும் சரி, மேற்கு வங்கமானாலும் சரி. அப்போதுதான் எல்லோரும் ஒரே தட்டில் இருந்து இது போன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோரைத் தனிமைப்படுத்த முடியும் என்று பேசினார். கேரளாவிலும் மேற்குவங்கத்திலும் ஆர்.எஸ்.எஸ். க்கும் அந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கும் இடையிலான அதிகார சண்டையில் பரஸ்பரம் தாக்குதல்களும் கொலைகளும் நடக்கின்றன . ஆர்.எஸ்.எஸ். மீதான தாக்குதலை இந்துக்கள் மீதான தாக்குதலாக உருவகப்படுத்தும் பணியை இந்த உரையில் செய்கிறார். எனவே நாடெங்கும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது போல் மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இந்துக்கள் தாக்கப்படுவதாகச் சித்திரிக்கிறார்.  இரண்டையும் சமமான தன்மையில் கருதச் சொல்கிறார்.

ஆனால், உள்துறை அமைச்சரும் மோடியின் கூட்டாளியுமான அமித் ஷா உத்தர பிரதேசத்தில் நடக்கும் கொலைகளும் மேற்கு வங்கத்தில் நடக்கும் கொலைகளும் ஒன்றல்ல, மேற்கு வங்கத்தில் நடப்பவை அரசியல் கொலைகள். அத்தகைய அரசியல் கொலைகள் ஒன்றுகூட பா.ச.க. அங்கே ஆட்சிக்கு வந்தப் பிறகு நடந்ததில்லை. எனவேதான், மேற்கு வங்கத்திற்கு மட்டும் உள்துறை அமைச்சகத்தின் சார்பாக இரு ஆலோசகர்களை அனுப்பியுள்ளோம்” என்று ஜுலை 1 அன்று அதே மாநிலங்களவையில் திரினாமூல் காங்கிரசு எம்.பி. தெரிக்-ஓ-பிரைனுக்கு பதிலளித்துள்ளார். ஒரே அவை, ஒரே விவகாரம் ஆனால் மோடி-அமித் ஷா பொய்யர் கூட்டணி எப்படி புரட்டிப் புரட்டிப் பேசுகின்றனர் என்று புரிந்துகொள்வதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

’’சாதி ஆணவப் படுகொலை என்று சொல்லாதீர்கள், எல்லாக் கொலையும் கண்டிக்கத் தக்கதுதான்’ என்று தந்திரமாக சிலர் வாதிடுவதைக் கண்டுள்ளோம். அதே உத்தியைத் தான் மோடியும் கையிலெடுக்கிறார். வெறுப்புக் குற்றங்களைப் பொதுவானக் குற்றங்களோடு நிகர்ப்படுத்துவது என்பது அடிப்படை மாந்த  உரிமைகளைச் சிதைக்கக்கூடிய செயலகளின் குறிப்பான தன்மையைக் காணத் தவறுவதற்கு வழிவகுத்துவிடும்.

பாதிக்கப்பட்டவர்களின் மீதே வழக்குகள்:

இதில் வேடிக்கை என்னவென்றால் வன்கும்பல் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் கொல்லப்பட்ட அக்லக் மற்றும் அவருடன் இருந்த ஆறு பேர் மீது ’பசுப் பாதுகாப்பு’ வழக்குப் பதியப்பட்டு நடக்கிறது. 2017 இல் இராஜஸ்தானில் கொல்லப்பட்ட பெஹ்லு கான் மீதும் அவருடன் இருந்த இருவர் மீதும் ’பசுப் பாதுகாப்பு’ வழக்குப் பதியப்பட்டுள்ளது. 2018 இல் மணிப்பூரைச் சேர்ந்த முகமது ஃபரூக் கான் மீது திருட்டு வழக்குப் போடப்பட்டுள்ளது.  காங்கிரசு ஆளும் மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. ஒருபுறம் வன்கும்பல் தாக்குதலில் ஈடுபடுவோர் எவ்வித தண்டனையுமின்றி தப்புவதும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் போடுவதற்குரிய சட்டப் பிரிவுகளும் அரசு இயந்திரமும் இருக்கும் வேடிக்கையான நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுதுதான் சட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு மோடி மாநிலங்களைவில் பேசியுள்ளார்.

இருள்சூழ் காலம்:

எந்த நாடாளுமன்றத்தில் நேரு போன்ற மதச்சார்பற்ற தலைவர் தலைமை அமைச்சர்கள் பதவியில் இருந்தாரோ அதே நாடாளுமன்றத்தில் ’ஜெய் ஸ்ரீராம்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிடும் அவலத்தோடுதான் இந்த ஆட்சி தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கப் போகும்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்று கூச்சலிட்டதன் மூலம் அன்சாரி போன்றவர்கள் வன்கும்பலால் அடித்துக் கொல்லப்படுவதற்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தை வழங்கிவிட்டனர். உண்மையில் இந்திய நாடாளுமன்றத்தின் கூரையில் நேருவைத் தூக்கிலேற்றியதற்கு ஒப்பான செயல் இது. இதைத் தடுக்கவோ, கண்டிக்கவோ, ஒழுங்குபடுத்தவோ தலைமை அமைச்சர் மோடி அணியமாக இல்லை.

அதே நாடாளுமன்றத்தில் பிரதாப் சாரங்கி என்ற உறுப்பினர், ’எவர் ஒருவர் வந்தே மாதரம் என்று சொல்லவில்லையோ அவர் இந்நாட்டின் குடிமகனே அல்ல’ என்று பேசியதன் மூலம் ஒருபடி மேலே சென்றார்.

ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார ஆற்றல்கள் பொதுக்கூட்டங்களில் ’ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கினர். தேர்தல் பரப்புரை மேடைகளிலும் ’ஜெய் ஸ்ரீராம்’ என மோடி உள்ளிட்ட பா.ச.க. தலைவர்கள் முழங்கினர். மம்தா பேனர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என எழுதி ஒரு இலட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தைப் பா.ச.க. முன்னெடுத்தது. ’ஜெய் ஸ்ரீராம்’ என்ற அந்த முழக்கம் ஆன்மீகத் தன்மையை இழந்து அரசியல் தன்மையுடன் இன்று நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதைத்தான், சங் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்கள் மதச் சிறுபான்மையினரை நோக்கி தெருக்கள்தோறும்  எழுப்பி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியான இன, மத, சாதிரீயான வன்முறைகள் நடக்கும் போது என்றைக்கு ஒரு நாட்டின் அரசவையில் அதன் தலைவர் அதை ஒரு பிரச்சனையாக கருதி பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று பேசாமல், அதற்கு எழும் எதிர்வினைகளைப் பிரச்சனையாக்குகிறாரோ அன்றைக்கு அந்த நாடு இன, மத, சாதி ரீதியான சிறுபான்மையினருக்கு எதிரான அரச வன்முறை கட்டவிக்கப்படும் காலக்கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது என்று பொருள்.

இலங்கையில் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்த போது அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா   பின்வருமாறு கூறி சிங்களப் பெளத்தப் பேரினவாதத்தின் அதிபராக தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். “நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்ராய்ங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை…இப்போது அவர்களைப் பற்றி எம்மால் சிந்திக்க முடியாது. அவர்களின் உயிரைப் பற்றியோ, அவர்கள் எம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியோ சிந்திக்க முடியாது’ என்றார்.

ஜெயவர்தனாவைப் போலவே மோடியும் அன்சாரி பற்றியோ அவரது குடும்பத்தினரின் துயரத்தைப் பற்றியோ நாடெங்கும் அன்சாரியைப் போல் தாக்கப்படும் மதச் சிறுபான்மையினர் பற்றியோ அவர்களிடம் சூழ்ந்துவரும் அச்சத்தைப் பற்றியோ தம்மால் சிந்திக்க முடியாது என்று தனது உரையின் வாயிலாக தெரிவித்துவிட்டார்.

அவரது பேச்சு தலைமை அமைச்சர் என்ற பொறுப்பிற்கும் அதன் கண்ணியத்திற்கும் உரியதல்ல. மாறாக அந்த உரை பொய்யான வலியையும் பொய்யான துயரத்தையும் பொய்யான உணர்ச்சியையும் வெளிப்படுத்தும் பித்தலாட்டத்தனமான பிதற்றலாகும்.

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW