வேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா? ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா உள்ளிட்ட ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா?

27 Jun 2019

மண்ணைக்காக்கும் மாநாடு – ஆக்ஸ்ட் 31 சனிக்கிழமை மயிலாடுதுறை

காவிரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம் என வாக்குறுதிகள் பறந்துகொண்டிருந்தன. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என எல்லாக் கட்சிகளும் சத்தியம் செய்தன.

தேர்தல் திருவிழாவின் இரைச்சலுக்கு இடையில்தான் வேதாந்தா பன்னாட்டு குழுமத்தின் கெயிர்ன் நிறுவனமும் எண்ணெய் மற்றும் எரிவாயு கழகமும் (ஓ.என்.ஜி.சி) ஹைட்ரோகார்பன் எடுக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் முடிவு வருவதற்குள்ளாக நடுவண அரசும் தலையசைத்துவிட்டது. இன்னொரு மே.மாத்தூர் முதல் மாதானம் வரை கெயில் குழாய் பதிப்பு நடந்து கொண்டிருந்தது. பச்சை வயல்களில் இறங்கி ஜே.சி.பி. இயந்திரங்கள் பயிர்க்கொலை செய்துகொண்டிருந்தன.

வேதாந்தா 274 கிணறுகள் தோண்டப் போகிறதாம். நிலமட்டுமல்ல, கடலும் தாரை வார்க்கப்பட்டுள்ளன. அதாவது நிலத்தை விட்டு உழவர்களும் கடலை விட்டு மீனவர்களும் பிய்த்தெறியப்படப் போகிறார்கள். ஒரு கிணறு தோண்ட 49 கோடி செலவு. மொத்த முதலீடு 13550 கோடி ரூபாய். நிலத்தில் 4364 சதுர கி.மீ. , வங்கக் கடலில் 4047 சதுர கி.மீ. பரப்பில் வேதாந்தா வல்லூறு வட்டமிடப் போகிறது. நாகை, காரைக்கால், விழுப்புரம் மாவட்டங்களில் இப்பகுதி வருகிறது. பிச்சாவரம் காடுகளும் காவிரி, மஞ்சளாறு, உப்பனாறு, தென்பெண்ணை என ஆறுகள் பலவும் தேங்காய்திட்டு எஸ்டுவரி, பக்கிங்காம் கால்வாய், வேதாரண்யம் கால்வாய் என நீர்நிலைகள் பலவும் இத்திட்டப் பகுதியில் வருகின்றன.

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியை நாசமாக்கிய வேதாந்தா, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்க் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்துவதில் இருந்து தனக்கு விலக்கு வேண்டும் என்று வெட்கமின்றி கேட்கிறது.

ஓ.என்.ஜி.சி. கடலூர் புவனகிரியிலும் திருவாரூர் பெரியகுடியிலும் என 67 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது. மொத்தமாக 5150 கோடி முதலீடு செய்யவிருக்கிறது.

மொத்தமாக 3.5 இல் இருந்து 4.5 கி.மீட்டர் ஆழத்திற்கு கிணறுகள் தோண்டப்படும்.

சாவதா? எங்கே போவது?

ஒரு கிணறுக்கு ஒவ்வொரு நாளும் 25,000 லிட்டர் தண்ணீர் தேவை. சுமார் 20,000 லிட்டர் கழிவு நீர் வெளியாகும். இந்த கிணறுகளில் இருந்து வரும் எண்ணெய் எரிவாயு  கசிவால் விளைநிலங்கள் பாழாகும்; தீ விபத்துவகள் நிகழும். காற்று மாசுபட்டு சுவாசக் கோளாறு நோய்கள் வரும். பூமிக்கடியில் பலவித நச்சுப் பொருட்கள் நிலத்தின் மேற்பரப்புக்கு வரும். வெளியாகும் மீத்தேன் கரியமிலக் காற்றைவிட 84 விழுக்காடு நச்சுமிக்கதாகும். இதனால் பருவநிலைமாற்றம் ஏற்பட்டு புவிவெப்படமடையும்.

காவிரிப் படுகையில் மட்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கப்போவதில்லை. தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இந்த எரிவாயு இருப்பதாக கட்டம் கட்டியுள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் வாழ்வுக்கு வேட்டு வைக்கும் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்காவிட்டால் ஒன்று இங்கேயே நாம் செத்து மடிய வேண்டும் அல்லது வாழ்வு தந்த மண்ணைவிட்டுப் போக வேண்டும்? ஆனால், எங்கே போவது?

அன்னை மடியறுக்கும் அழிவுத் திட்டம்!

மீத்தேன் எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிறுவனம் வருவதாக சொன்னார்கள். எதிர்ப்புகள் கிளம்பின. மீத்தேன் திட்டத்தை தடுத்துவிட்டோம் என்று சொன்னது தமிழக அரசு. ஹைட்ரோகார்பன் எடுக்க ஜெம் லேபரேட்டரீஸ் என்ற நிறுவனம் வருவதாகச் சொன்னார்கள். நெடுவாசல்  போர்க்கொடி தூக்கியது. ஜெம் பின்வாங்கியது.

ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் கிணறுகளில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. கதிராமங்கலம் களம் கண்டது. மாதிரிமங்கலம், திருநகரி என ஒன்றன்பின் ஒன்றாக ஓ.என்.ஜி.சி. க்கு எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருக்கிறது. மீத்தேன் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதா? இல்லை. ஹைட்ரோகார்பனில் 80 விழுக்காடு மீத்தேன் தான் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. ஹைட்ரோகார்பன் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 25 இலட்சம் கனமீட்டர் எரிவாயு எடுத்துக்கொண்டிருக்கிறது ஓ.என்.ஜி.சி. நாங்கள் மோர் எடுக்கவில்லை, தயிர் எடுக்கிறோம் என்று சொல்வது போன்றதுதான், மீத்தேன் எடுக்கவில்லை, ஹைட்ரோகார்பன் எடுப்பது என்பதாகும். எனவே, ஹைட்ரோகார்பன், சேல் மீத்தேன், நிலக்கரிப் படுகை மீத்தேன் எல்லாம் ஒன்றே.

ஓ.என்.ஜி.சி. யை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று சொல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பதாக சொல்வது ஏமாற்று. ஓ.என்.ஜி.சி. பொதுத்துறை நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுத்தால் நிலம் நாசமாகதா? அதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனம் அல்ல, அதன் சரி பாதி பங்குகள் தனியாரிடம் உள்ளது.

எரிவாயு எடுப்பதோடு கதை முடியப்போவதில்லை. பாகூர் தொடங்கி ராஜமன்னார்குடி வரை உள்ள சுமார் 1,64,814 ஏக்கர் பரப்பில் மண்ணுக்கடியில் நிலக்கரி வளம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.6.25 இலட்சம் கோடி பெருமானம். எரிவாயு எடுக்காமல் நிலக்கரி எடுத்தால் விபத்து நேரிடும். முதலில் எரிவாயு பின்னர் நிலக்கரி. அதுவே திட்டம். நெற்களஞ்சியம் நிலக்கரி சுரங்கங்கள் ஆகிவிடும். நாசமாகிப் போன நெய்வேலியைப் போல் தஞ்சைத்தரணி பாழாகும்

வளர்ச்சியை எதிர்ப்பதா?

உலகமயத்திற்கு உள்ளூர் கதவு திறந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு தாராளம் காட்டி தனியார்மயத்தை தலையில் தூக்கி வைத்து ஆடத் தொடங்கியது அரசு. இதையே வளர்ச்சி என்றார்கள். வளர்ச்சியின் மறுபக்கம் என்ன?  ஆண்டுக்கு சராசரியாக ஒரு இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக விளைப்பொருளுக்கு அதே விலை. அடிமாட்டுவிலையில் உழவர் உழைப்பு வாங்கப்படுகிறது. சோறுதந்த உழவர் கூட்டம் கடனாளியாக்கப்பட்டான். மானமுள்ள உழவன் கடன் தர முடியாவிட்டால் தன்னையே மாய்த்துக் கொள்கிறான். உழவர்களின் தற்கொலை மட்டும் பல லட்சம். பல இலட்சம் கோடி கடன் வாங்கிய மானங் கெட்ட கார்ப்பரேட் முதலாளிகளோ தந்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிப் போகிறார்கள். இதுதான் வளர்ச்சியா?

காவிரிப் படுகையை சிங்கப்பூர் ஆக்குகிறோம் என்று இறால் பண்ணைகளைக் கொண்டுவந்தார்களே! என்ன நடந்தது? ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உப்பாயின, கிராமங்களைவிட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். இதுதான் வளர்ச்சியா?

உழவை அழித்து உழவனைக் கொன்றால் சோற்றுக்கு எங்கே போவது? ஆப்பிரிக்காவில் இந்திய முதலாளிகள் வாங்கிப் போட்ட நிலங்களில் உற்பத்தியாகுமோ? அங்கிருந்து அதே முதலாளிகளின் துறைமுகங்களில் இறக்குமதி செய்து சோற்றுக்கு சொந்த மக்களை கையேந்த வைப்பதுதான் வளர்ச்சியா?

எரிபொருளுக்கு எங்கே போவது?

மனமிருந்தால் மார்க்கமுண்டு. கார், பைக் கம்பெனிகள் கொழுப்பதற்கே வண்டி வாகன விற்பனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எரிபொருள் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. பொதுப்போக்குவரத்து ஊக்குவிக்க மறுப்பது ஏன்? புதைப்படிவ எரிபொருளுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிபொருளுக்கு மாற வேண்டும். காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், கடலலை  மின்சாரம் எல்லாம் புதுப்பிக்கத்தக்கவை, அள்ளக் குறையாதவை, இயற்கை அன்னையைச் சிதைக்காதவை. மாட்டுச் சானத்திலிருந்து மீத்தேன் எடுக்கலாம். சென்னை நகரத்து கழிவுகளில் உள்ள மக்கும் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கலாம். பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்தைக் குறியாய் வைத்து சிந்திக்காமல் மக்களை மனதில் வைத்து சிந்தித்தால் ஆயிரம் வழிகளுக்கு எண்ணெய், எரிவாயு எரிபொருளுக்கு! காவிரிப் படுகையைப் படுகொலை செய்ய வேண்டியதில்லை.

வாழ்வா? வளர்ச்சியா?, உணவா? எரிபொருளா? மக்களா? பன்னாட்டு முதலாளிகளா?

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளில் ஊற்றுப்பெருக்கால் உலகூட்டிய நம் காவிரி. நெல் வயல்வெளிகளின் செழிப்பால் தமிழர் நாகரிகத்தைச் செழிக்கச் செய்த காவிரி நிலம். திருவரங்கமும் திருவானைக்காவும் நாகூரும் வேளாங்கண்ணியும் தந்து சமயம் பல வளர்த்த காவிரி.  சோறுடைத்த சோழநாடு என்ற பெருமைப் படைத்த மண். இன்று நெல் வயல்களின் இடத்தில் எண்ணெய் வயல்களா? வேளாண் மண்டலத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக்குவதா? ஊருக்கு சோறு தந்த மண்ணை வேதாந்தா போன்ற பன்னாட்டு ஓநாய்களுக்கு விருந்தாக்குவதா? ஓ.என்.ஜி.சி. உறிஞ்சித் துப்புவதற்கு தமிழ்நாடு என்ன புறம்போக்கு நிலமா? ஹைட்ரோகார்பன் எடுக்காதே என்றால் வளர்ச்சி வேண்டுமா? வேண்டாமா? என்கிறார்கள். நல்ல காற்றும், நீரும், நிலமும் இல்லையேல் உணவுக்கு எங்கே போவது? வளர்ச்சி வேண்டுமா? வேண்டாமா? என்பதல்ல கேள்வி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வா? விரல்விட்டு எண்ணக்கூடிய பன்னாட்டு முதலாளிகளுக்கு வளர்ச்சியா? உணவா? எரிபொருளா? இரண்டில் ஒன்றை தொடு என்றால் உணவுதான் எரிபொருள் அல்ல.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்து!                                                                                                                                  மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுப்படுத்து!                                                                                                                  காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவி!

நினைவில் கொள்ளுங்கள் இது நமது மண்ணைக் காக்கும் போராட்டம்!

கொள்ளையர்களிடமிருந்து நமது சந்ததியை காக்கும் போராட்டம்!

தமிழக அரசே!

  • நீர் மேலாண்மைத்திட்டத்தை  ஒழுங்குபடுத்து!
  • விவசாயத்தை கூட்டுறவுமயமாக்கு
  • எண்ணெய் எரிவாயுவிற்கு மாற்றாக உலக நாடுகள் முன்னேறி வருகிற சூரிய ஒளி, காற்றாலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்து
  • காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு என உரத்து முழங்குவோம்.

 

தமிழ்த்தேச மக்கள் முன்னணி – தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம்

7299999168, 8608884534

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW