ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு! மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து! காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!

19 Jun 2019

 

மண்ணைக்காக்கும் மாநாடு – ஆக்ஸ்ட் 31 சனிக்கிழமை மயிலாடுதுறை

அன்பார்ந்த மக்களே வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் வளம் குன்றா மண்ணிலே தலைமுறை தலைமுறையாக நமது நாகரிகம் செழித்து வந்திருக்கிறது. இனி இந்த மண்ணிலே நாம் வாழ முடியுமா? என்பதுதான் இப்பொழுது எழுந்திருக்கிற கேள்வி. சோறுடைத்த சோழநாட்டை இன்று எண்ணெய்க்கும் எரிவாயுவிற்கும் நிலக்கரிக்காகவும்  பிளந்தெறியப்போகிறார்கள். நெல்வயல்கள் எண்ணெய் மிதக்கும் வயல்களாக மாறப்போகின்றன. இந்த எரிபொருட்கள் எல்லாம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள், முதலில் எண்ணெய் எரிவாயு எடுப்பார்கள். ஒட்டுமொத்த நிலத்தையும் தோண்டி நிலக்கரி எடுப்பார்கள், நமக்கு முதலில் நீரின்றி போகும். நிலம் செத்துபோகும். இறுதியில் உயிர்கள் செத்துப்போகும். நாமும் நமது  சந்த்யினரும் இடம்  மாறிப்போக வேண்டியதுதான். இல்லையேல் நாமும் மடிந்துபோக வேண்டியதுதான்.

இதுதான் நமக்கான எதிர்காலமாக மோடியும் எடப்பாடியும் கார்ப்பரேட் வேதாந்தாவும் எழுதி வைத்திருக்கிற தலைவிதி. 2012ல் இருந்து ஏழு வருடமாக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். புதிது புதிதாக ஏலம் அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம் காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க கோரினால், அவர்கள் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கிறார்கள். கேட்டால் வளர்ச்சி என்கிறார்கள்? இது உண்மையா? வளமாக இருந்த நைஜீரியாவும் சோமாலியாவும் எண்ணெய் எடுத்தப்பிறகு என்ன ஆனது? அந்நிலம் சீரழிந்து அம்மக்கள் உணவுக்காக கடற்கொள்ளையர்களாக மாறவில்லையா? ஏன் நமது டெல்டா கடற்கரையோரங்களில் இறால் பண்ணைக்கொண்டு வந்தால் நமது சிங்கப்பூராக மாறும் என்றார்களே? என்னானது? ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கரிசாகி உப்பாக வில்லையா? ஒட்டுமொத்த கிராமமே இடம்பெயரவில்லையா?

இன்று எண்ணெய் எடுக்கும் மாதானத்திலும், கதிராமங்கலத்திலும் நிலத்தடிநீர் பாதிக்கவில்லையா? இதுதான் வளர்ச்சியா? இதற்கு யார் பதில்சொல்ல போகிறார்கள்? கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதையும் கமிசன் பெறுவதையும் வளர்ச்சி என்கிறார்கள். இதை எப்படி நாம் ஏற்கமுடியும்? நமது நிலத்தின்மீது நமக்கு இல்லாத அக்கறையா?

அவர்களுக்கு நாம் சொல்கிறோம் நமக்கான வளர்ச்சிக்கொள்கையை…

மத்திய அரசே ! காவிரி நீரைத் திறந்துவிடு!

தமிழக அரசே!

  • நீர் மேலாண்மைத்திட்டத்தை  ஒழுங்குபடுத்து!
  • விவசாயத்தை கூட்டுறவுமயமாக்கு
  • எண்ணெய் எரிவாயுவிற்கு மாற்றாக உலக நாடுகள் முன்னேறி வருகிற சூரிய ஒளி, காற்றாலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்து
  • காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு என உரத்து முழங்குவோம்.

நினைவுகொள்ளுங்கள் இது நமது மண்ணைக் காக்கும் போராட்டம்

கொள்ளையர்களிடமிருந்து நமது சந்ததியைக் காக்கும் போராட்டம்.

 

தமிழ்த்தேச மக்கள் முன்னணி – தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம்

7299999168, 8608884534

 

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW