இராஜராஜசோழனும் சாதி அமைப்பும்  சில விவாதப் புள்ளிகள்..

17 Jun 2019

இராஜராஜ சோழனின் காலம் பொற்காலமல்ல, அது இருண்ட காலம் என இயக்குநரும் தோழருமான பா.இரஞ்சித் சொன்னது பல்வேறு அரசியல் முகாம்களில் இருந்து பெரும்விவாதத்தைக் கிளப்பியுள்ளது.  மீண்டுமொரு முறை இராஜராஜ சோழன் கல்லறையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பறையர்களிடம் நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும் அதனால் தன்னைப் பொருத்தவரை அதுவொரு இருண்ட காலம் என்றும் அதனால் இராஜராஜ சோழன் தன் சாதியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மடங்களிடம் இருந்து நிலங்களை எடுத்து நிலமற்றவர்களுக்கு கொடுக்க முடியுமா? என்றும் அவர் பேசியுள்ளார். அவரது  உரையின் தெறிப்புகளில் இருந்து ஆக்கத்தின் பொருட்டு சில முக்கியப் புள்ளிகள் குறித்த விவாதமே பின்வரும் கட்டுரை. சாதி ஒழிப்பு என்ற நோக்கு நிலையில் இருந்து சாதியமைப்பு பற்றிய சில வரலாற்றுப் புரிதல்கள் மற்றும் சமகால கோரிக்கைகள் குறித்துமான தோழமையான உரையாடல் இது. இவையன்றி இராஜராஜ சோழன் குறித்து விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை. ஏனெனில், நாம் வரலாற்றை மன்னர்களின் வரலாறாகப் பார்ப்பதில்லை. தனிநபர்களின் சூழ்ச்சி, திட்டமிட்ட சதி, சாகசங்கள், வீரதீரங்களாக வரலாற்றைப் பார்ப்பதில்லை. வர்க்கங்களுக்கு இடையிலானப் போராட்டமாகப் பார்க்கிறோம். இதில் தனி மனிதர்களுக்கு அளவானப் பாத்திரம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. பொதுவில் மன்னர் கால பெருமிதங்கள் புதுமக் கால அரசியலின் புரட்சிகர உள்ளடக்கத்திற்கு ஊறு செய்வது என்பதே நமது நிலைப்பாடு. மன்னர் காலப் பெருமிதங்கள், மன்னர் கால சிந்தனை முறை, மன்னர் கால முடிவெடுக்கும் முறை, மன்னர் காலப் பண்பாடு இவையாவும் தேசிய அரச கருத்தாக்கத்திற்கு எதிரானது என்பதே நம் உறுதியான கருத்து.

 இராஜராஜ சோழன் பறையர்களிடம் இருந்து நிலத்தைப் பறித்தாரா?

இன்றைக்கு இருப்பது போல் பிறப்பின் அடிப்படையிலான சாதியமைப்பு அன்றைக்கும் இருந்ததா? எத்தனை காலமாக இன்றைக்கு இருக்கும் பிறப்பின் அடிப்பையிலான சாதிமுறை இருந்து வந்துள்ளது? ஆகியவை விவாதத்திற்கு உரியவை.

”மிக முக்கியமானது சோழர் காலத்தில் இருவகைப்பட்ட ஊர்கள் இருந்துள்ளன. ஒன்று பிரம்மதேய ஊர்கள் மற்றொன்று வெள்ளான் ஊர்கள்” என்று தஞ்சைப் பகுதியில் இருந்து பெறப்பட்ட கல்வெட்டுகளையும் கங்கை கொண்ட சோழபுரத்து கல்வெட்டுகளையும் கொண்டு ஆய்வு மேற்கொண்ட நொபொரு கராஷிமா சொல்கிறார். வெள்ளான் ஊர்களில் இன்றைக்கு இருப்பது போன்று நிலம் தனியுடைமையாக கிடையாது. ஊர் சொத்தாகவே இருந்து வந்துள்ளது. இதன் பொருள் முற்றாக நிலவுடைமையே இல்லை என்பதல்ல. பெரும்போக்காக வெள்ளான் ஊர்களில் கூட்டுடைமையே இருந்துவந்துள்ளது. பிரம்மதேயங்களில் நிலம் தனியுடைமையாக இருந்தளவுக்கு வெள்ளான் ஊர்களில் தனியுடைமை கிடையாது. நிலம் தனியுடைமையாகும் போக்கும் நில விற்பனைகளும் பிற்சோழர் காலப்பகுதியிலேயே அதிகரிக்கிருப்பதை காண முடிகிறது. அதாவது மூன்றாம் இராஜராஜன் மற்றும் மூன்றாம் இராஜேந்திரன் காலத்தின் கல்வெட்டுகள், கிபி 1231 – 1249 காலப்பகுதியைச் சேர்ந்தவற்றைக் கொண்டு பின்வரும் ஆய்வுமுடிவுகளை நொபொரு முன்வைக்கிறார். அக்கல்வெட்டுகள் நிலம் தனியுடைமையாக இருப்பதையும் அவை கோயில்களுக்கோ அல்லது தனி நபருக்கோ விற்கப்படுவதையும் காட்டுகிறது. ”குடிநீக்கிய தானங்கள்” என்பது ஓரிடத்தில் உழுது பயிர்செய்து பண்படுத்தப்பட்ட நிலங்களை விலைக்கு வாங்கியோ அல்லது பறித்தோ தானமாக கொடுப்பதாகும். அந்நிலத்தை அதுவரைப் பயன்படுத்தி வந்த குடிகளை அதிலிருந்து நீக்குதல் என்று பொருள். நொபொரு கராஷிமா குறிப்பிடுமொரு கல்வெட்டில் குடிநீங்கிய நிலங்கள் விலைக்கு வாங்கப் பெற்றதாக வருகிறது.   நிலம் தனியுடைமையாக இல்லை, நிலம் கூட்டுடைமையாக இருந்தது என்பதும் ஒரு ஊரில் உள்ள எல்லா சாதிகளுக்கும் பொதுவான நிலமாகவே அது இருந்து வந்துள்ளது என்பதும் கருதிப் பார்க்க வேண்டியவை. எனவே, பறையர் சாதியைச் சேர்ந்த தனி நபர் மற்றும் தனிக் குடும்பத்திற்கு அல்லது சாதிக் குழுவுக்கு சொந்தமான நிலங்கள் இருந்திருந்து அவை பறிக்கப்பட்டோ அல்லது விலைக்கு வாங்கப்பட்டோ குடிநீக்கம் செய்யப்பட்டதென சொல்வதற்கு இதில் இடமில்லை. பறையர்களையும் உள்ளடக்கியப்பல்வேறு சாதியைச் சேர்ந்த ஊராருக்கு சொந்தமான நிலங்கள் குடிநீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடும். இதற்குமேல் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் பறையர் சாதியினரிடம் இருந்து நிலங்கள் பறிக்கபட்டதற்கான குறிப்பான இலக்கியச் சான்றோ அல்லது கல்வெட்டுச் சான்றோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றே வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லக் காண்கிறோம்.

சோழர் காலம் பொற்காலமா? இருண்ட காலமா?

சோழர் காலம் பொற்காலமா? அல்லது இருண்ட காலமா? என்ற கேள்வியும் விவாதத்திற்கு உரியது. இராஜராஜ சோழர் காலத்தில் தேவரடியார் முறை இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால், பிற்சோழர் காலத்தில்  நிலவுடைமை முறையில் மாற்றங்கள்  ஏற்பட்டமைக்கு மூன்று காரணங்களை எடுத்து வைக்கிறார் நொபொரு. ஒன்று சோழனுடையது பேரரசு என்பதால் பிறநாடுகளில் இருந்து  கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்கள் சோழநாட்டின் மையப்பகுதி மக்களிடம் பகிர்ந்தளிப்பட்டமை, நீர் பாசன முறையில் ஏற்பட்ட பெருக்கம், அரசு நிர்வாக முறை நிறுவப்பட்டதால் நிலம் வாங்கும் விற்கும் நிர்வாக முறைகள் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.  உபரியின் பெருக்கம் காரணமாகவும் பேரரசுவிரிவாக்கம் காரணமாகவும் பாசனவசதி வளர்த்தெடுக்கப்பட்டது, கலை, இலக்கிய வளர்ச்சி, கட்டிடக் கலை, நில அளவை முறைகள், நிர்வாக முறைகள் வளர்ச்சிப் பெற்றன.

உண்மையில் கடல் கடந்து படை நடத்திய மன்னன் இராஜராஜ சோழன். அக்காலப்பகுதியில் கப்பல் போக்குவரத்து, கடல்சார் அறிவு வளர்ச்சி மேம்பட்டிருக்கும். தங்கம்,வெள்ளி, வெண்கலச் சிலைகள் வடிவமைப்பு ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. எனவே,அக்காலகட்டத்தை இருண்ட காலம் என்று சொல்வது இந்த வளர்ச்சிகளை, மக்களின் உழைப்பாலும் தொழில்நுட்பத் திறனாலும் அறிவாற்றாலும் ஏற்பட்ட வளர்ச்சிகளை மறுப்பதாகிவிடும். எல்லா மன்னரும் உபரியை அனுபவிக்கும் ஆளும் வர்க்கத்தின் தலைவன் என்ற வகையில் ஆளப்படும் வர்க்கங்கள் சுரண்டலுக்கும், வரிச்சுமைக்கும் ஆளாகியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ராஜராஜ சோழன் காலமும் இதற்கு விதிவிலக்கல்ல.

அதே நேரத்தில், சங்கக் காலத்தையோ, சோழர் காலத்தையோ பொற்காலம் என்று சொல்வது கடந்த காலம் பற்றிய மயக்கத்தை மக்களிடம் ஏற்படுத்திவிடுகின்றன. கடந்த காலம் ஒருபோதும் பொற்காலம் ஆகிவிட முடியாது. மேலும், பொற்காலம் என்றொன்றிருப்பின் அக்காலத்தை மனிதன் எப்படியேனும் தக்க வைத்துவிடுவான். அதைவிட்டுவிட்டு அடுத்தொரு அமைப்பு முறைக்கு அவன் நகர்வது நடக்காது. அப்படியென்றால் இருண்ட காலம் என்று சொல்லலாமா? பொதுவாக ஒரு நேர்மையான குமுக அறிவியில் மாணவர் எந்தவொரு காலப்பகுதியையும் இருண்ட காலம் என்று சொல்ல மாட்டார். இதுவரை களப்பிரர் காலத்தை இருண்ட காலமென சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வரக் காண்கிறோம். ஆனால், அதை மறுத்து சமணத்தின் சிறப்புகளை மூடி மறைப்பதற்கு பிற்காலத்தவர்களால் புனையப்பட்ட கருத்து அதுவென்று சொல்வாரும் உளர். எனவே, அந்த  காலத்திற்கு உரிய வளர்ச்சியையும் அதற்கான காரணங்களையும் எடைபோடுவதே வரலாற்று ஆய்வின் பணியாக இருக்க முடியும். அவரவர் தத்தமது விருப்புவெறுப்பு நிலையில் இருந்து அரசியல் நோக்கத்திற்காக வரலாற்றில் ஒரு காலப்பகுதியை இருண்ட காலம் என்று சொல்லி வருவது ஏற்கத்தக்கதோ ஊக்குவிக்கத்தக்கதோ அல்ல.

இன்றைய சேரிகளும் அன்றைய சேரிகளும் ஒன்றா?

சேரிகள் சோழர் காலத்திலும் இருந்தன. பறைச் சேரி, கம்மாளச் சேரி, ஈழச் சேரி, தீண்டாச் சேரி என்று கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. ஊர்தோறும் தீண்டாச் சேரிகள் இல்லை. ஒரே கல்வெட்டில் தீண்டாச் சேரி என்றும் பறைச் சேரி என்றும் வருவதிலிருந்து இரண்டும் வெவ்வேறு என்று மதிப்பிட முடிகிறது. இன்றைக்கு சேரிகள் என்பது தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களின் குடியிருப்புப் பகுதி. ஆனால், அன்றைக்கு சேரிகளுக்கு இதே பொருள் இல்லை. இரண்டு ஊர்களில் மட்டும் பறையர்களுக்கும் ஊர்ப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்குமென தனித்தனி சுடுகாடு இருந்ததாக கல்வெட்டில் வருகிறது. ஆனால், பெரும்பகுதியான ஊர்களில் இரு சுடுகாடுகள் இல்லை. இன்னும் சில ஊர்களில் சுடுகாடே இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக நொபொரு சொல்கிறார். அப்படியெனில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அக்கம்பக்கத்து ஊரிலுள்ள சுடுகாட்டைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றே மதிப்பிட முடிகிறது. சாதிகளும் சரி சேரிகளும் சரி இன்றிருப்பது போல் அன்றில்லை என்பதே உண்மை. இன்றிருக்கும் சாதியமைப்பின் கூறுகள் சிற்சில அன்று காணப்பட்டுள்ளன.

சாதியின் வரலாற்றை இந்திய அளவில் பொதுமைப்படுத்துவதா?

இந்திய அளவில் சாதியின் வரலாற்றைப் பொதுமைப்படுத்துவது நடந்து வருகிறது. இந்திய அளவில் வாழக்கூடிய பல்வேறு மொழி பேசும் மக்களூக்கும் பொதுவான வரலாறு என்றொன்றில்லை. சாதிய வரலாறும் அப்படித்தான். இன்றைய இந்தியக் குடியரசில் இந்திய அரசமைப்பின் வழியாகத்தான் அப்படியான ஒரு வரலாறு முன்னேறிய பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் என்ற வரையறைக்குள்ளாக உருப்பெற்று வருகிறது. காலத்தால் பின்னோக்கிச் செல்லசெல்ல ஒவ்வொரு மக்கள் கூட்டமும் தமக்கே உரித்தான வெவ்வேறு வரலாற்றைக் கொண்டுள்ளன. எனவே, சாதியின் வரலாற்றைத் தேடிச் செல்லும்போது தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் தமக்கான தனித்த வரலாற்றைத் தேடிப்போக வேண்டியுள்ளது. தமிழ்நாட்டிலும்கூட பொதுவான சாதிய வரலாறு என்று ஆய்வு செய்துவிட முடியாது. தஞ்சைப் பகுதியில் சோழர் காலத்தில் வாழ்ந்த பறையரும் திருநெல்வேலியில் உள்ள பறையரும் வெவ்வேறு நிலைமைகளுக்கு உள்ளாகவே இருந்துள்ளனர். சோழப் பேரரசின் நிர்வாக முறைக்குள் வாழ்ந்த பறையருக்கு தனித்த வரலாறும் திருநெல்வேலிப் பறையருக்கு வேறொரு வரலாறும் உண்டு. இப்படியான குறிப்பை ஓர் ஆங்கிலேய அதிகாரி குறிப்பிட்டுள்ளார் என்று ஆய்வாளர் அலோயசிஸ் ஒரு வகுப்பில் எடுத்துக் காட்டினார். எனவே, சாதி வட்டாரத் தன்மையது என்பதை மறந்துவிடலாகாது. வரலாறென்னும் இருட்டறையில் சென்று அதன் வேர்களைக் கண்டறிய முயல்வது எதற்காக? அதிலிருந்து பெருமைப் பேசுவதற்கோ? அல்லது காலங்காலமாக தாம் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம் என்று கழிவிரக்க உணர்ச்சிக் கொள்வதற்கோ? அல்ல. வரலாற்றின் வேர்களைத் தேடிப்போவது அதன் வளர்ச்சி விதிகளைக் கண்டறிந்து சம காலத்தில் வளர்ச்சியின் வேகத்தை கூட்டுவதற்கு வினையாற்றுவதற்கே.

தலித் அரசியலின் எதிரி யார்?

சாதி ஒழிப்பு இயக்கம் வெகுநீண்ட காலமாக நடந்துவருகிறது. இன்றைக்கு அந்தக் களத்தில் செயல்படுபவர்கள் சாதி ஒழிப்பு இயக்கத்தின் நீண்டநெடிய வரலாற்றில் இடையில் வந்தவர்கள்தாம். இந்திய தேசிய காங்கிரசு, திராவிட அரசியல், இடதுசாரி அரசியல் ஆகிய மூன்று பெரும் நீரோட்டங்களும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இச்சமூகத்தில் இருப்பதை அங்கீகரித்தன. அந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்க தத்தமது மெய்யியல் அடிப்படையில் தத்தமது வர்க்க நலனுக்கு உட்பட்டு பாடுபட்டன. ஆயினும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்றும் நீடித்துக்கொண்டிருப்பதால் மேற்படி மூன்று நீரோட்டங்களும் அந்த கடமையை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்த இடத்தில்தான், சாதிகள் தனித்தனியாக தமது நலன்களை முன்னிட்டு அமைப்புக் கண்டன,போராடத் தளைப்பட்டன. எனவே, மேற்படி மூன்று பெரும் நீரோட்டங்களும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதில் செய்யத்தவறியதுமட்டும் தலித் அரசியலின் எழுச்சிக்கு வழிவகுக்க வில்லை, சாதிய ஏற்றத் தாழ்வுகளைக் களைய இந்நீரோட்டங்கள் செய்த ஆக்கப்பூர்வமானப் பங்களிப்புகளும் சேர்த்தே தலித் அரசியலுக்கான சமூக வெளியை ஏற்படுத்தின.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை முதன்மை அரசியல் போக்காக திராவிட அரசியலே இருக்கிறது. அதுவே,  அரசியல் அதிகாரத்தைப் பிடித்துள்ளது. திராவிட அரசியல்  பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் அரசியலாக கருக்கொண்டது. அதில் இருந்த இடைவெளிகள் பார்ப்பனரல்லாதோரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை அமைப்பாய் திரளச் செய்து தமக்கானபங்கைக் கோரச் செய்தது. திராவிட அரசியலின் இடைவெளி தலித் அரசியலுக்கும் வழிவகுத்தது. தலித் அரசியல் சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்தியது. அண்மைகால தலித் அரசியல் எழுச்சிக்கும்கூட சற்றொப்ப முப்பது ஆண்டுகால அகவை ஆகிவிட்டது. தலித் அரசியல் எழுச்சியின் இன்னொரு முனையாக தலித் அல்லாதோர்களை தலித் மக்களுக்கு எதிராக அணிதிரட்டும் பிற்போக்கு அரசியல் நடவடிக்கைகளைக் கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகம் கண்டு வருகிறது.

இந்தப் பின்னணியில், ’நீங்கள், நாங்கள்’ என்பதாக தலித் அரசியல் களத்தில் இருந்து எழும் கலகக் குரல்கள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் என்ன? என்று கருதிப் பார்க்க வேண்டும். இதில் நாங்கள் என்பது தலித் மக்கள் என்று பொருள் கொண்டாலும் அத்தகைய குரல் பல நேரங்களில் பட்டியல் சாதியில் உள்ள எல்லோரையும் பிரதிநித்துவப் படுத்துவதாக அமைவதில்லை. பா.ரஞ்ச்த்தின் அண்மைய பேச்சில்கூட ’நாங்கள் பிறப்பிலேயே கலைஞர்கள், பறையடிப்பவர்கள்’ என்றே பேசினார். அறிந்தோ அறியாமலோ பட்டியல் சாதியில் உள்ள பறையர் என்ற வட்டத்திற்குள் கால்களை ஊன்றிக் கொண்டு இத்தகைய உரையாடல் நடந்துவிடுகிறது. ஆயினும்  ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் உள்ளடக்கியே ஒருவர் பேசியாக வேண்டும் என்று எவரும் கோர முடியாது. பறையர்கள் மீதான அரசியல், பொருளியல், பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கு குரல் எழுப்புவது சனநாயக வளர்ச்சிக்கு உதவக் கூடியதென்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தலித் மக்களின் வலியைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் என் மொழி எப்படி இருக்க வேண்டும் என்று ’நீ சொல்லாதே’ என்றும்கூட  இதற்கு விளக்கமளிக்கப்படுகிறது. வலி புரிந்துக் கொள்ளப்பட வேண்டும், வலி நீக்கப்பட வேண்டும் என்பதே இந்த உரையாடலின் நோக்கமாக இருக்க முடியும். இதற்கு துணை செய்யக்கூடிய மொழி கைகொள்ளப்படுகிறதா? என்பதும் கருதிப் பார்க்க வேண்டியது.

’நீங்கள், நாங்கள்’ என்று தலித் மக்களையும் இன்ன பிற எல்லோரையும் நேருக்கு நேராய் எதிர் நிறுத்துவது மக்களின் வலியை உணர்த்துமா? ஏனைய சாதியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒருபடித்தான அளவில் பிறப்பின் காரணத்தால் சாதி வெறியர்களாகவே இருக்கிறார்களா? எல்லா நேரங்களிலும் எல்லாவிடங்களிலும் சாதியுணர்ச்சி மேலோங்கித்தான் இருக்கிறார்களா? சாதியுணர்ச்சியோ சமூகநீதி உணர்ச்சியோ பிறப்பில் இருந்து வருவதா?வாழ்நிலையில் இருந்து வருவதா? ஓர் எளிய எடுத்துக்காட்டாக உயர்சாதியினரை சமூக அடித்தளமாக கொண்டிருக்கும், சமூக நீதியைக் கோட்பாட்டளவில் எதிர்க்கக் கூடியதுமான பா.ச.க. வோடு மாபெரும் தலித் தலைவர்களான அத்வாலேவும் ராம் விலாஸ் பாஸ்வானும் இரண்டாவது முறையாகவும் கூட்டு வைத்துள்ளனரே?ஜிக்னேஷ் மேவானி சமூகநீதிக்காக நிற்பவரா? ராம் விலாஸ் பாஸ்வான் சமூக நீதிக்காக நிற்பவரா? அப்படியெனில் பிறப்பிலேயே பட்டியல் சாதியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சமூக நீதி உணர்ச்சி வந்துவிடுமா? அவரவரின் வாழ்நிலையும் வர்க்க சார்பும் சேர்ந்தே அவர் சமூக நீதியின் பக்கம் நிற்கிறாரா? இல்லை சாதி ஆதிக்கத்தை எதிர்க்காமல் காலங் கடத்துகிறாரா? என்பதை தீர்மானிக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தோரும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து அமைப்புசாரா தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர், நிலமற்றக் கூலிகளாக கிராமத்தில் இருந்த தலித் மக்களும் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். சாதியைக் கடந்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கானப் பொதுவான நலன்கள் உண்டு. நடுவண் அரசின் மாநில உரிமைப் பறிப்புகள், அது கொண்டுவரும் பேரழிவுத் திட்டங்கள் எனப் பொதுவான கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டிய தேவை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உண்டு தலித் மக்களுக்கும் உண்டு. இவை இட்டுக்கட்டி சொல்லப்படுவதல்ல, மக்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் ஆகும்.

அதுமட்டுமின்றி, திராவிட அரசியல், தமிழ்த்தேசிய அரசியல், இடதுசாரி அரசியல் உள்ளிட்ட பல்வேறு சனநாயக நீரோட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதுவும் ஆயிரக்கணக்கான புதிய இளைஞர்கள் மக்கள் மீதானப் பொதுவானப் பிரச்சனைகளுக்கு சாதிப் பிரிவினைகளும் சாதிய ஏற்றத் தாழ்வுகளும் தடையாய் இருப்பதை உணர்ந்து சாதி ஆதிக்கத்தைக் கைவிடவும் சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்தவும் அணியமாய் இருக்கின்றனர். அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு, தர்மபுரியில் நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் கிராமங்கள் எரிக்கப்பட்ட காலந்தொடங்கி சனநாயக அரசியல் வெளியில் பா.ம.க. முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும். சாதி எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தி முன்செல்ல சாதி ஆதிக்கத்திற்கு எதிரானோர் சாதி ஆதிக்கத்தை உயர்த்திப் பிடிப்போர் என்று வகைப் பிரிப்பது பொருத்தமாக இருக்குமே ஒழிய பறையர் பறையரல்லாதோர் என்று பிரிப்பது பொருத்தமாக இருக்காது. இந்த உள்ளடக்கத்தை சாதி ஒழிப்பில் அக்கறையுடையோர் அதற்குரிய வடிவத்தோடு வெளிப்படுத்த வேண்டியுள்ளது. வலியும் முக்கியம் வலியை வெளிப்படுத்தும் மொழியும் முக்கியம். பொருத்தமான மொழி இல்லாவிட்டால் வலியை யாருக்கு கொண்டு சேர்க்க எண்ணுகிறோமோ அவர்களுக்கு கொண்டு செல்ல முடியாதுபோய்விடும். மார்க்சிய மொழியில் சொல்வதாயின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமான வடிவம் தேவை. பொருத்தமான மொழியைக் கையாள்வதற்கு தடையாய் இருப்பதென்ன? சாதியமைப்பைத் தேங்கிக் கிடக்கும் குட்டையாக காண்பதும்,சாதிய சமூக அமைப்பில் ஏற்பட்டிருக்கும் வர்க்க மாற்றங்களைக் காணத் தவறுவதுமாகும். வர்க்கக் கண்ணோட்டத்தை நீக்கிவிட்டால், அது சாதிகளுக்கிடையிலான சண்டையாகவும் மக்களெல்லாரையும் சாதி வெறியர்களாகவும் கருதச் செய்துவிடும் ஆபத்துள்ளது.

 நிலப்பகிர்வும் சாதி ஒழிப்பும்

பா.ரஞ்சித் பேசியவற்றில் அதிகம் விவாதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டியது நிலப் பகிர்வு பற்றி பேசியதாகும். சைவ மடங்களில் இருந்து நிலங்களைப் பறித்து நிலமற்றவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். இந்தக் கோரிக்கையை காலந்தோறும் எழுப்பி வருபவர்கள் இடதுசாரிகளே. திராவிட அரசியலும் அம்பேத்கரின் கருத்துகளும்கூட பண்பாட்டுத் தளத்திலான மாற்றங்கள், கருத்தியல் மாற்றங்கள்,மனநிலையில் மாற்றம் என்பதற்கே அதிகம் அழுத்தம் கொடுத்தன. பொருளாக்க கருவிகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உடைமையாக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தி இருந்தபோதும் அவருக்குப்பின் அதில் அக்கறை செலுத்தியவர் கெய்க்வாட் மட்டுமே. தலித் அரசியல் களத்திலும் அரசியல் அதிகாரம் மற்றும் பண்பாட்டுத் தளத்திலான சமத்துவத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அண்மைக் காலத்தில், ஜிக்னேஷ் மேவாணி நிலவுரிமைப் பற்றிய முழக்கத்தை முன்னுக்கு கொண்டுவந்துள்ளார்.

நிலங்களைப் பகிர்ந்தளித்துவிட்டால் சாதி உதிர்ந்துவிடும், சாதி மேல்கட்டுமானம் என்று இடதுசாரி முகாமில் இருந்த கருத்து சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு இன்றைக்கு இடதுசாரிகள், சாதி ஒரு மேல்கட்டுமானப் பிரச்சனை இல்லை என்பதை அறிந்தேற்றதோடு சாதி ஒழிப்பில் கருத்தியல், பண்பாட்டு இயக்கத்திற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது என்பதையும் பெரியார், அம்பேத்கர் இயக்கங்களில் இருந்து அறிந்தேற்றுள்ளனர். அதே நேரத்தில், பொருளாதாரத் தளத்திலான மாற்றங்களின் வழியாகவே கருத்தியல், பண்பாட்டுத் தளத்தில் முழுவெற்றி ஈட்ட முடியும் என்று வரையறுக்கின்றனர். அவ்வகையில் , திருப்பனந்தாள் மட்டுமின்றி காவிரிப் படுகை எங்கும் உள்ள சைவ மடங்களில் குவிந்துகிடக்கும் நிலங்களை நிலமற்றோருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை தமது கட்சித் திட்டத்தின் பகுதியாகவே கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ளனர்.

திராவிட இயக்கத்தைப் பொருத்தவரை சமூக நீதி என்பதை அரசு, கல்வித் துறைகளில் இட ஒதுக்கீடு என்றளவில்மட்டுமே கவனம் செலுத்தியது. இதனால் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு துறைகள் மற்றும் கல்வியில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆயினும் இது  பட்டியல் சாதி மக்களில் அரை விடுக்காட்டினருக்கு மேலானவர்களின் வர்க்க நிலையில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை. ஒருசிறு விழுக்காட்டினரின் வர்க்க நிலையில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்துள்ளது. நிலப்பகிர்வும் நடக்கவில்லை, மூலதன உடைமையிலும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் மாற்றம் நிகழ்த்தப்பட வில்லை. மேற்படி பொருளியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்படாமல் சாதி ஒழிப்பு இயக்கத்தில் பாய்ச்சலை ஏற்படுத்திவிட முடியாது என்பதில் நடைமுறைச் சிக்கல் மட்டுமல்ல மெய்யியல் போதாமையையும் திராவிட இயக்கம் கொண்டிருக்கிறது. இதனால், திராவிட இயக்கம் சைவத்துடன் சமரசத்துக்கு சென்றது, சைவ மடங்களில் இருக்கும் நிலங்களைக் கைப்பற்றி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது. எம்.ஜி.ஆர். 1980 ஐ ஒட்டியைக் காலப்பகுதியியில் மிகக் கறாரான நில உச்சவரம்பு சட்டம் ஒன்றை இயற்றிய போதும் நடுவண் அரசு அதற்கு தடையாய் நின்று நிலவுடைமையைப் பாதுகாத்துவிட்டது. இடதுசாரி இயக்கம் சாதி குறித்த தமது கண்ணோட்டத்தை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டதுபோல் திராவிட இயக்கம் சாதி குறித்த தமது கருத்துநிலையை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறது.

தலித் அரசியலைப் பொருத்தவரை திராவிட அரசியலின் தொடர்ச்சியாக அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து. சாதியை ஒரு மனநிலைப் பிரச்சனையாகவே பரிசீலிக்கும் போக்கு இன்றளவும் ஓங்கி நிற்கிறது. பஞ்சமி நில மீட்புக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் எழுந்த இயக்கமும் துப்பாக்கிச் சூட்டு அடக்குமுறையால் நசுக்கப்பட்டது. பஞ்சமி நில மீட்புக் குறித்து சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர்கள் கவனம் செலுத்தி வந்தாராகிலும் அதற்கான மக்கள் இயக்கமாக அது வளர்த்தெடுக்கப்பட வில்லை. இந்தப் பின்புலத்தில் பா.ரஞ்சித் தலித் அரசியல் களத்தில் இருந்து நிலப் பகிர்வுப் பற்றி இப்போது எழுப்பியுள்ள குரல் இராஜராஜ சோழனையும் தாண்டி அதிகம் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவைமட்டுமின்றி, தமிழ்த்தேசியத்தின் சாறம் என்பது சாதி ஒழிப்பு, நிலவுடைமை ஒழிப்பு என்ற வகையில் நிலப் பகிர்வு கோரிக்கை தமிழ்த்தேசியத்தில் இருந்தும் பிரிக்க முடியாத ஒன்றாகும்.

தொகுப்பாக, சாதி ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இன்றைக்கு இருக்கும் தன்மையில் இல்லை. கடந்த எண்ணூறிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளால் நிலமானிய முறையின் வளர்ச்சிப் போக்கில் நிலவுடைமை பொருளாக்க முறைக்கு குமுகம் மாறிச் செல்லும் வளர்ச்சிப் பாதையில் இன்றிருக்கும் சாதி அமைப்பு உருப்பெற்றுள்ளது. இதில் இந்த நிகழ்ச்சிப் போக்கைத் தீவிரப்படுத்தியதில் சோழர்களுக்கு முந்தைய காலத்தைவிட சோழர் காலத்திற்கும் சோழர் காலத்தைவிட விஜயநகரப் பேரரசுக் காலத்திற்கும் விஜயநகர பேரரசு காலத்தைவிட ஆங்கிலேயப் பேரரசுக் காலத்திற்கும் பங்குண்டு. இன்றைக்கு இந்தியப் பேரரசு காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம். எனவே, சாதியமைப்பின் மாற்றங்களில் சோழர்,பாண்டியர், நாய்க்கர், ஆங்கிலேயர் மற்றும் இன்றைய இந்தியா எனப் பல்வேறு அரசுகள் பங்காற்றியுள்ளன. எனவே, அரசு, அரசியல் அதிகாரம், ஆளும்வர்க்கம், சொத்துடைமை, பண்பாடு, கருத்தியல் என சாதியமைப்பின் வளர்ச்சியை ஊடுருவிப் பார்க்க வேண்டியுள்ளது.

சாதி ஆதிக்கத்தையும் நிலத்தின் மீதான அதிகாரத்தையும் அதன் வரலாற்று வளர்ச்சிப் பாதையில் பிரிக்க முடியாதது போல் சாதி ஒழிப்பையும் நிலப்பகிர்வையும் பிரிக்க முடியாது. அதே நேரத்தில் சாதி ஒழிப்புக்குத் தேவையானப் பொருளியல் மாற்றங்களில் நிலப்பகிர்வு மட்டும் போதுமானதல்ல என்பதும் குறிப்பிட வேண்டிய உண்மையாகும்.

மற்றபடி, கல்லறைக்குள் இருக்கும் இராஜராஜ சோழ மன்னன் மீதான விமர்சனத்திற்கு எல்லாம் கண்டனங்கள் எழுவது பொருத்தமற்றது. சொல்லப்பட்ட கருத்தில் இருக்கும் வரலாற்றுத் தரவுப் பிழைகளைத் தோழமையோடு சுட்டிக் காட்டுவதே சனநாயக இயக்கத்தின் கருத்துச் சுதந்திர வெளியைப் பாதுகாத்து இவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு துணைசெய்யும். இந்துத்துவ சக்திகளின் சட்டைப் பைக்குள் தமிழக அரசு இருப்பதால்,  காவல்துறையே முன் வந்து பா.ரஞ்சித் மீது ஒரு வழக்குப் பதிந்துள்ளது. எது எப்படியோ, பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையே திராவிட, தமிழ்த்தேசிய, இடதுசாரி, தலித்திய ஆற்றல்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் தமிழ்நாட்டில் இவ்வாற்றல்களை ஒருபுள்ளியில் ஒன்றுபடுத்தும் வேலையை எச்.ராஜாக்கள் செய்துவிடுகிறார்கள் என்பது ஆறுதலான விசயம்.

செந்தில், இளந்தமிழகம்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW