திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது சாலையோர வியாரிகளை அப்புறப்படுத்தக் கூடாதெனப் போராடியவர்களைக் குறிவைத்து அடாவடித்தனம் செய்த மதுக்கான் நிறுவனம்!
திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட காலமாக தங்களது
அன்றாட வாழ்வுக்காக சாலையோரம் வணிகம் செய்துவரும் தரைக்கடை, மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள், சிறு வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் வேலையின் காவல்துறையின் உதவியுடன் எக்ஸ்பிரஸ் வேஸ் மதுக்கான் என்னும் தனியார் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.
பால்பண்ணையில் இருந்து தஞ்சாவூர் வரைக்கும் போக்குவரத்து நெரிசல் என்று காரணம் காண்பித்து சர்வீஸ் சாலை போடும் ஒப்பந்தம் மதுக்கான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த
சனவரி மாதம் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் வேறிடங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்று துண்டறிக்கை கொடுத்தது அந்நிறுவனம். அதே நேரத்தில், வியாரிகளுக்கு மாற்று இடம் கொடுப்பது பற்றி எந்த முன்வைப்பும் இல்லை. உடனே வியாபாரிகள் சிலர் எதிர்ப்பினை தெரிவித்தனர். மேலும் தேர்தல் நேரத்தை கணக்கில் கொண்டும் மதுக்கான் தனியார் நிறுவனம் சாலைப் பணிகளில் ஈடுபடவில்லை.
ஏப்ரல்-18 இல் தேர்தல் முடிந்த பிறகு சில நாட்களில் மீண்டும் வந்து இடத்தைக் காலி செய்யும் பணியில் மதுக்கான் நிறுவனம் ஈடுப்பட்டது. மேலும் அரியமங்கலம் பகுதியில் உள்ள தரைக்கடை, தள்ளுவண்டிக்கடைகளை எந்தவித அறிவிப்பும் இன்றி காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்த முயற்சித்தது.
இதனைக் கண்டித்து ஏப்ரல் 25 அன்று திருச்சி அரியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி, தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், வியாபார சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சாலையோர தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் பெருமளவு கலந்துக்கொண்டனர். அன்றே மதுக்கான் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பின்பும் அடுத்த நாளே அவர்களை அப்புறப்படுத்துவதில் மதுக்கான் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்கு அந்த பகுதியில் இருந்த வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி அந்த பகுதியில் அப்புறப்படுத்தும் பணிகளை கைவிட்டுவிட்டு அருகில் உள்ள காட்டூர் பகுதியில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த முனைந்தது. அங்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்த அழைத்ததையொட்டி அகில இந்திய மஜ்லீஸ் கட்சி, தமிழ்த்தேச மக்கள் முன்னணி, வியாபார சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் ,மதுக்கான் நிறுவன ஊழியர்கள் உள்பட அனைவரும் பங்கேற்றனர். அதில் தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்த மாட்டோம் என்று மதுக்கான் நிறுவன ஊழியர்கள் வாய்மொழியாக உறுதி தந்ததையையொட்டி ஆய்வாளர் மணிவண்ணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகும் ஓரிரு நாட்களிலே மதுக்கான் நிறுவனம் மற்றும் காவல்துறையினர் பெருமளவில் ஆட்களை நிறுத்தி திருவெறும்பூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்னும் பெயரில் தஞ்சை எர்த் மூவர்ஸ் TN49.BD6998 எண் கொண்ட பொக்லைன் எந்திரத்தைக்கொண்டு சிறு வணிகர்களின் கடைகளை இடித்தனர். மேலும் தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்த மாட்டோம் என்று உறுதி கொடுத்ததை மீறி அவர்களையும் அப்புறப்படுத்த முயற்சிக்கவே இதனை தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர் தள்ளுவண்டி கடை வைத்திருப்பவருமான தோழர் இரகு கண்டித்தார். அப்போது தோழர் ரகுவைக் காவல்துறை மிரட்டி, தாக்க முயற்ச்சித்தது.
மேலும் அன்று மாலை அகில இந்திய மஜ்லீஸ் கட்சியைச் சேர்ந்த தோழர் சம்சுதீன் மற்றும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் இரகு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் தோழர்கள் சம்சுதினையும் ரகுவையும் கைது செய்வேன் என்று மிரட்டினார். மேலும்
அந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் பின்பு மாவட்ட துணை கண்காணிப்பாளரை சந்தித்து அனுமதி பெறப்பட்டது.அதன் பின்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறக் கூடாது என அனைத்து வகையிலும் மதுக்கான் நிறுவனமும் காவல்துறையும் முயற்சித்தது. அதனொரு பகுதியாக தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தோழர் இரகுவை உதவி ஆய்வாளர் மாரிமுத்துவும் காவலர் மாடசாமிவும் மிரட்டினர்.
மேலும் 06.05.2019 அன்று எப்படியும் ஆர்ப்பாட்டம் நடைபெறப் போகிறது என்று அன்று காலை தெரிந்துக் கொண்டவுடன் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ஆர்ப்பாட்ட பணியில் இருந்த தோழர் இரகு அவர்களின் தள்ளுவண்டி உள்பட நான்கு தள்ளுவண்டிகள் காவல்துறையாலும் மதுக்கான் நிறுவன ஊழியர்களாலும் அடித்து நொறுக்கப்பட்டது. அன்று மாலை ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கு சி.ஐ.டி.யூ செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிரானப் போராட்டங்களில் பங்குபெறவில்லை. இது தொடர்ச்சியாக அராஜகத்தில் ஈடுபடும் காவல்துறைக்கும், மதுக்கான் நிறுவனத்திற்கும் மறைமுகமாக துணை போவதாகவே அமைந்துள்ளது.
”கௌரவத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கு முயற்சி செய்பவர்கள் சாலையோர சிறுவணிகர்கள். இவர்கள் தங்களது தொழிலை இந்தியாவெங்கும் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்” எனப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் சாலையோர சிறுவணிகர்களுக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கியுள்ளன. சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தலாமே ஒழிய, சாலையோரங்களில் சிறுவணிகம் செய்வதை மறுக்கக்கூடாது என நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.
காவல்துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்களது கூடுதல் வருவாய்க்காக சாலையோர சிறுவணிகர்களைத் துன்புறுத்துவதையும் அவர்களது பொருட்களை தூக்கிவீசி சேதப்படுத்துவதையும் நீதிமன்றங்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன.
“சாலையோர வணிகர்கள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் சாலையோர வணிகத்தை முறைப்படுத்துதல்) சட்டம் 2014” இன்படி, சாலையோர வணிகம் என்பது ஆக்கிரமிப்பு அல்ல; இதற்குத் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பொருந்தாது. 2014 சட்டப்படி எங்கே விற்பனை செய்யலாம் (Vending Zone), எங்கே விற்பனை செய்யக்கூடாது (Non-Vending Zone) என்பதை நகர வணிகக் குழு (Town Vending Committee) தான் ஆய்வுசெய்ய வேண்டும்.
ஆனால், திருச்சியில் இன்னும் நகர விற்பனைக் குழுவே அமைக்கப்பட வில்லை. இந்தப் பின்னணியில் மதுக்கான் நிறுவனமும் காவல்துறையும் இணைந்து கொண்டு இப்படியான அட்டூழியங்களை செய்துள்ளன. மேலும் சாலையோர வியாபாரியாகவும் முன்னணி செயற்பாட்டாளராகவும் இருக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர் ரகுவின் கடை பழிவாங்கும் நோக்கில் இடிக்கப்பட்டிருப்பதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
மக்கள் முன்னணி ஊடகத்திற்காக
ஜெயக்குமார்