பொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்

20 May 2019

சென்னைப் பல்கலைக்கழக அரசியல் துறையின் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று  ஆளும்வர்க்க அறிவுஜீவிகளைக் கருத்தியல் தளத்தில் திணறடித்து மக்களின் குரலாய் விளங்கிக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தேர்தல் களங்களில் நேரடி கள ஆய்வு செய்துள்ளார். இந்திய அளவிலான தேர்தல் கள நிலவரம் பற்றி உன்னிப்பாக கவனித்து  வருகிறார். அவர் மக்கள் முன்னணிக்கு வழங்கிய செவ்வி.

  1. இந்த தேர்தல் இந்திய அரசியல் வரலாற்றில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுகிறது?

2019 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. காரணம் சாதி, மதத்தை ஒருங்கிணைக்கும் இந்துத்துவ ஆதிக்க சக்திகளுக்கும் இந்தியாவின் பன்முகத்தன்மை அடங்கிய சமூக கலாசாரத்திற்குமான ஒரு நெடிய போராட்டத்தில் இந்த தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறு 2016 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் காங்கிரசு கட்சியின் செயலிழந்த தன்மைக்கும் ஊழலுக்கும் எதிரான களமாக அமைந்ததோ அவ்வாறு 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் சாதி, மதத்தினை ஒருங்கிணைத்து அரசியல் நடத்துகின்ற இந்துத்துவ சக்திகளுக்கும் அதை எதிர்கொள்ள பல திசைகளில்  பல்வேறு நிலைகளில் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான களமாக அமைந்துள்ளது.

 

  1. இந்த தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுகிறது?

முதன்மையாக தி.மு.க.வின் தலைவர் கலைஞர் கருணாநிதியும் அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் தேர்தல் அரசியல் களத்தில் இல்லாமல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் களமாகும். இவர்களுடைய மறைவு தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருந்தாலும் திமுகவில் புதிய தலைமையும் அதிமுக உடைந்து ஒருபுறம் தலைமை பண்புகளற்ற அரசு அதிகார மையமாகவும் இன்னொருபுறம் டிடிவி தினகரன் தலைமையில் கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றது. இந்த சூழலில் இந்த தேர்தல் களம் தமிழக அரசியலின் அடுத்த கட்டத்திற்கான புதிய தலைமுறைத் தலைவர்கள் யார்யார் என்பதை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதே சமயத்தில், இந்துத்துவப் பாசிச சக்திகளுக்கும் திராவிட சமூக அரசியல் இயக்கங்களுக்குமான ஒரு போராட்டக் களத்தையும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகம் சந்தித்து கொண்டு இருக்கிறது.

 

  1. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்த விதம் பற்றி?

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் அமைதியாக நடந்தது போல் காட்சி தந்தாலும் இந்த தேர்தல் மிகவும் வன்முறை நிறைந்த தேர்தல் ஆகும். மத்திய மாநில அரசுகளின் அதிகார வீச்சு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சம், பணநாயகம், சாதிக் கலவரங்கள் போன்ற அரசியல் சனநாயக பண்புகளுக்கு எதிரான தன்மைகளை நிலைநிறுத்திய தேர்தல் இதுவாகும்.

 

 

  1. இந்த தேர்தலில் ஆளுங் கட்சியும், எதிர்க்கட்சிகளும் மக்களுக்கு பணம் கொடுத்தது எல்லோரும் அறிந்ததே. பணம் எந்தளவுக்கு தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்று கருதுகிறீர்கள்?

ஆளுங் கட்சியும் எதிர்க் கட்சியும் மக்களுக்கு பணம் கொடுத்துள்ளது அனைவரும் அறிந்தது. இடைத்தேர்தலில் பணம் முடிவுகளை மாற்றி அமையக் கூடிய சக்தியாக மாறினாலும் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும்.

 

  1. புதிதாக தோன்றியுள்ள அ.ம.மு.க. கட்சிக்கு எத்தகைய ஆதரவு இருக்கிறது?

அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சியை மறைமுகமாக இயக்கியவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் பின்புலமாக இருந்து இயக்கியவர்கள் அமமுக கட்சிக்கு அடித்தளமாகவும் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றார்கள். அக்கட்சி பணத்தை வைத்து எதை சாதிக்க முடியும் மற்றும் பணத்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம்.  அமமுக.வுக்கு மக்களிடையே ஆதரவு என்பதைவிட அது தமிழக அரசியலில் ஆச்சர்யக் குதிரையாக வலம்வந்து கொண்டு இருக்கும் பணக்காரக் கட்சியாகும்.

 

  1. தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க., அ.ம.மு.க. இணைவதற்கான வாய்ப்புகள் உண்டா?

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவ்விரு கட்சிகளும் இணையுமா? அல்லது இணையாதா? என்பதைவிட பிரிந்து இருந்தாலும் இணைந்தாலும்  அ.இ.அ.தி.மு.க. இரண்டு மூன்று அணிகளாகத் தான் தொடர்ந்து செயல்படும். அதே போல், செம்மையான தலைமை இல்லாததால் அ.தி.மு.க.வில் இருந்து கணிசமானத் தொண்டர்கள் விலகிச் சென்று கொண்டிருப்பது நிகழ்கால உண்மையாகும்.

 

  1. தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கணிக்கிறீர்கள்?

தமிழக தேர்தல் முடிவுகள் திமுக – காங்கிரசு கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் என்று கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

  1. இந்திய அளவில் காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்துள்ளதா?  மோடிக்கு எதிராக ராகுல் காந்தி என்பது மக்களிடம் எடுபடுகிறதா?

காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்துள்ளதா என்பதை விட மோடி செல்வாக்கு மிகப் பெரிய அளவில் குறைந்துவிட்டது. மோடிக்கு எதிராக ராகுல் காந்தி என்பது மக்களிடம் எடுபடுகிறதோ இல்லையோ ராகுல் காந்தியை அரசியல்வாதியாக மாற்றியதோடு அவருக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்று தந்ததே மோடியின் எதிர்வினை அரசியல்தான்.

 

  1. இந்த தேர்தலுக்குப் பின் மத்தியில் ஆட்சி அமைவதில் மாநிலக் கட்சிகளின் பங்கு எப்படி இருக்கக் கூடும்?

இந்திய அரசியலில் கூட்டாட்சி முறை அமைகிறதோ இல்லையோ கூட்டணி ஆட்சியை தவிர்ப்பது மிகமிக கடினம். தனிப்பெரும்பான்மை என்பது காங்கிரசு கட்சிக்கு முடிந்து போன சகாப்தம். அந்த முடிவின் துவக்க நிலையைப் பாரதிய சனதா கட்சி ஏந்தி நிற்கிறது.

 

  1. உத்தரபிரதேச மாநிலத்தில் மும்முனைப் போட்டி நடக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கணிக்கிறீர்கள்?

தேர்தல் முடிவுகளில் எஸ்.பி. பி.எஸ்.பி கூட்டணிக்கு பெருமளவு தொகுதிகள் கிடைத்தாலும் பாரதிய ஜனதா கட்சி உத்தரபிரதேசத்தில் ஒரு கடினமானப் போட்டியாக விளங்கும். பிரியங்கா காந்தியின் வருகையால் உத்தரபிரதேசத்தில் காங்கிரசுகாரர்களுக்கு புத்துணர்ச்சி என்று சொன்னாலும் அங்கே காங்கிரசின் எழுச்சி என்பது இன்னும் கனவாகத் தான் இருக்கிறது.

 

  1. வட இந்தியாவில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? தேர்தலில் எப்படி பிரதிபலிக்கவிருக்கிறது?

வட இந்திய மக்களிடையே மிகவும் பிற்போக்கான சமூக கலாச்சார வெளிப்பாடு இருந்தாலும் சாதி, மதம் இவற்றையெல்லாம் கடந்து எதேச்சதிகாரம் என்ற அதிகார வரம்பு மீறல்களை ஒருங்கிணைந்து எதிர்க்கக் கூடியவர்கள் அவர்கள். இதில் ஒரு ஜனநாயக பண்பும் இருக்கிறது. மோடியின் தேசியவாதம், முதலாளித்துவம், இந்துத்துவ மதவாதம் இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் புரட்டிப் போடக்கூடிய அரசியல் வெளிப்பாடுகள் வட இந்தியாவில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

 

  1. தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உள்ள கட்சிகள் என்னென்ன?

தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைவதைப் பொருத்தவரை இரண்டு நிலைகப்பாடுகளும் மூன்றாவதாக ஒரு வியூகமும் கானப்படுகின்றது. முதலாவதாக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து யாருடன் வேண்டுமானாலும் கூட்டுச் சேரலாம் என்ற பா.ச.க.வின் நிலைப்பாடு. இரண்டாவது, பா.ச.க.வை தவிர்த்து யாருடன் வேண்டாலும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்ற நிலைப்பாடு. பா.ச.க., காங்கிரசு தவிர்த்து மூன்றாவது அணிக்கான நிலைப்பாடு. மூன்றாவது நிலைப்பாடு பலவீனமாக தெரிந்தாலும் தேர்தலுக்குப் பின்னால் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு மிகப் பெரிய வியூகமாய் அமையக் கூடும்.

 

  1. தமிழகத்தில் தே.மு.தி.க., பா.ம.க. வின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கக்கூடும்?

தே.மு.தி.க. வின் அரசியல் எதிர்காலம் அஸ்தமனத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தேமுதிக என்ற கட்சி இன்னும் ஐந்து ஆண்டுகளில் காணாமல் போனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. பா.ம.க.வுக்கு அரசியல் களத்தில் நெடிய பயணம் என்ற வரலாறு இருந்தாலும் சாதி அரசியல், கொள்கையற்ற கூட்டணித்தளம், சுயநலமிக்க தலைமை  ஆகியவற்றால் அது வீழ்ச்சிப் பாதையில். சென்று கொண்டிருக்கிறது.

 

 

  1. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் AFPSA வை நீக்குவது, 124 A வை நீக்குவது போன்ற முன் வைப்புகள் உள்ளதே? காங்கிரசு கொள்கைகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா?

காங்கிரசு கொள்கையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? என்பதைவிட ஆட்சிக்கு திரும்ப வரவேண்டும் என்பதில் உள்ள அவசரத்தை நம்மால் காண முடிகிறது. காங்கிரசு நினைத்திருந்தால் AFPSA வை நீக்குவது, 124 A வை நீக்குவது போன்ற முன்னெடுப்புகள் எப்பொழுதோ நடந்து முடிந்திருக்கும்.

 

 

  1. பா.ச.க. தன்னுடைய தேர்தல் பரப்புரையில் எதையெல்லாம் நம்பியிருக்கிறது?

பா.ச.க. நம்புவதெல்லாம் மோடி – அமித்ஷா என்ற இரட்டை பிம்பம்,  பெருமுதலாளிகளையும் மேலும் ஆர்.எஸ்.எஸ். இன் வழிகாட்டுதலையும் மட்டும்தான்.

 

  1. தேர்தல் கமிசனின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

மிக சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் ஆணையம் கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் வென்றெடுத்த தனித்துவத்தையும் போராடிப் பெற்ற செயல்பாட்டு சுதந்திரத்தையும் ஒரே ஆண்டில் இழந்து எதிர்காலத்திற்கான அதிர்வு அலைகளை முன்கூட்டியே தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

 

 

  1. 2019 தேர்தல் முடிவுகளின் படி எத்தகைய ஆட்சி அமையும்? தனிப் பெரும்பான்மையா? கூட்டணி ஆட்சியா?

தனிப் பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து பா.ச.க. தனிப் பெரும் கட்சி என்ற இடத்திற்கு வந்துவிடும். பலவீனமான பா.ச.க. தலைமையிலான கூட்டணி என்பதும் தொங்கு பாராளுமன்றம் என்ற நிலைப்பாடும் ஒன்றை ஒன்று உரசிப்பார்க்கும் யதார்த்தமாக தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள் இருக்கும்.

 

 

  1. பிரதமர் கனவில் இருக்கும் தலைவர்கள் யார் யார்?

பிரதமர் கனவில் யார் இல்லை என்று சொல்லுங்கள்?

 

  1. சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்) ஆகிய நாடாளுமன்ற கம்யூனிஸ்ட்கள் பெறக்கூடிய இடங்கள் எத்தனை? அவர்களது செயல்பாட்டில் எத்தகைய இடைவெளிகளைக் காண்கிறீர்கள்?

சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்) ஆகிய நாடாளுமன்றக் கம்யூனிஸ்ட்கள் 10-15 தொகுதிகளில் வெற்றிப் பெற்றால்தான் அவர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அரசியல் எதிர்காலம் உண்டு என்று சொல்லலாம். பாரதிய சனதா கட்சிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு, காங்கிரசு கட்சிக் குறித்த குழப்பம், கூட்டணி அரசியலின் பலத்தை நம்பி இழந்த மக்கள் தளம் என எத்தனையோ முரண்பாடுகள் கம்யூனிஸ்ட்களை இயக்கிக் கொண்டிருக்கிறது.

 

  1. ’தமிழ் மானம் காக்க உதயசூரியனுக்கு வாக்களிப்பீர்’ என்று தி.மு.க. பரப்புரை செய்ததே? தி.மு.க.வின் முந்தைய கால ஊழல், மக்கள் விரோத செயல்பாடுகளில் இருந்து ஏதேனும் மாற்றத்தை எதிர்பார்க்கலாமா?

ஈழத்தமிழர்களின் மானத்தைக் காக்க திமுக தவறியது என்ற ஆழ்ந்த வருத்தமும் துயரமும் என்னை விட்டு என்றுமே அகலாது. திமுகவின் முந்தைய கால ஊழல் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளில் இருந்து மாற்றம் நிகழ்ந்தால்தான் தி.மு.க.  விற்கும் எதிர்காலம் இருக்கும். இல்லையெனில், திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். திராவிட அரசியலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. வை சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கும் டி.டி.வி. தினகரன் ஆகியவர்களுக்கு  தி.மு.க. தான் எதிரி.. தி.மு.க. இதனை நினைவில் கொள்ள வேண்டும்.

 

  1. தமிழகத்தில் பா.ச.க. , ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சி எப்படி இருக்கிறது? தமிழக அரசியலில் பா.ச.க.வின் நீண்ட கால திட்டங்கள் என்ன?

தமிழகத்தில் பா.ச.க. ஆர்.எஸ்.எஸ். மத்திய, மாநில அரசுகளின் நிழலில் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. திராவிடமும் திராவிடக் கட்சிகளும் இல்லாத தமிழகம் தான் பா.ச.க. வின் நிகழ்கால நடவடிக்கைகளும் நீண்ட கால கனவும் கூட. தமிழகம் திராவிடக் கொள்கை, திராவிட சித்தாந்தம், திராவிட சமூக கலாச்சார  பண்பாட்டு அரசியலை திரும்பவும் தேடிப் போக வேண்டிய ஒரு சூழலை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் அடுத்த அரசியல் களம் இதுவாகத்தான் இருக்கும்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW