முள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு !

18 May 2019

முள்ளிவாய்க்கால் – தொன்மைமிக்க தமிழினம் தனது ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில் கண்டிராத அழிவாகும்.  பச்சிளங் குழந்தைகளும் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்படுவதைத் தடுக்க முடியாத கையறு இனமாகவே பத்துகோடி தமிழர்களும் இருந்தோம். முள்ளிவாய்க்காலில் சிங்களப் பெளத்தப் பேரினவாதம் உருவாக்கிய சாம்பல் மேட்டில் தமிழீழக் கோரிக்கையும் புதைக்கப்பட்டுவிட்டது என்றுதான் கொலைக்கனவு கண்டனர். ‘வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ’ என்பதற்கிணங்க முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்றும் இப்பத்தாண்டுகள் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. வரலாற்றைப் பொருத்தவரை இப்பத்தாண்டுகள் என்பது கடலின் துளிதான். வலி சுமந்த மக்களுக்கோ ஓர் ஊழிக் காலமாய் இந்த பத்தாண்டுகள் நகர்ந்துள்ளது.

எதுவுமே நடக்கவில்லை என்பதொரு மேலோட்டமான மதிப்பீடு. வல்லரசுகளின் காய் நகர்த்தல்களுக்கும் வஞ்சகங்களுக்குமிடையிலே வடமாகாணசபை, தமிழக சட்டசபை, ஐ.நா.மனித உரிமை அவை என மூன்றிலும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் தமிழர் போராட்டங்களின் விளைபயனே அன்றி எவரது கருணையும் பிச்சையும் அல்ல. நல்லாட்சி, தேசிய அரசாங்கம், புதிய யாப்பு என்பதெல்லாம் பழைய புளுகுகளாகிவிட்டன. ரணில் – இராசபக்சேவின் பதவிச்சண்டை கேலிக்குரியதாய் அம்பலப்பட்டுவிட்டது. இனி உடனடி தேவை, விலைபோன தமிழ்த் தலைவர்களைப் புறக்கணித்து வரலாறு அடையாளங் காட்டியுள்ள ஆற்றல்களை ஒன்றிணைத்த ஐக்கிய முன்னணியாகும்.

குடியேற்ற ஊழியில் பிரித்தானிய பேரரசுக் கனவுக்கு தமிழீழ மக்களின் தேசிய தகுநிலை பலிபீடம் ஏற்றப்பட்டது. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா-ரசிய மேலாதிக்கப் போர் தமிழர் முதுகில் ஏற்றப்பட்டது. பனிப்போருக்குப் பின்னான காலத்தில் அமெரிக்க சீன மேலாதிக்கப் போட்டிக்கான புவிசார் போரும் இலங்கை தீவில் நடத்தப்பட்டது. இப்போது மேற்குலகுக்கும் மத்திய கிழக்கும் இடையிலான சண்டையும் ஈஸ்டர் தாக்குதல் இலங்கை தீவில் வெடித்து தமிழர் குருதி குடித்து நிற்கிறது. வரலாற்று அன்னை ஈழத் தமிழ் மக்களை நெருப்பாற்றில் முக்கி எடுக்கிறாள். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பை இன அழிப்புக்கு கைகொள்ளும் சிங்களப் பெளத்த பேரினவாதம் தென்னிலங்கை முஸ்லிம்களையும் தமிழீழ பகுதியில் உள்ள முஸ்லிம்களையும் வேட்டையாடும் படலத்தைத் தொடங்கிவிட்டது. வன் தாக்குதலில் நசுக்குண்டு வரும் முஸ்லிம்களுக்கு ஆதரவாய் சிங்களப் பெளத்த பேரினவாதத்தை எதிர்த்து நிற்க வேண்டிய சனநாயக கடமை தமிழ்த்தேசிய ஆற்றல்களுக்கு உண்டு. கடினமே என்றாலும் தமிழ்-முஸ்லிம் ஐக்கியம் காலத்தின் கட்டளையாகும்.

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு செய்ததால் படிந்த குருதிக் கறையை சிங்களப் பெளத்தப்  பேரினவாதம் ஈஸ்டர் குண்டு வெடிப்புகளில் சிந்தப்பட்ட தமிழரின் குருதிக் கொண்டே அழிக்கப் பார்க்கும் முயற்சியைத் தொடங்கிவிட்டது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கானப் பன்னாட்டுப் புலனாய்வை அரசியல் நிகழ்ச்சி நிரலில் உயிர்ப்போடு வைத்திருப்பது இனி பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இராணுவ ஆட்சியின் கீழ் மகாவலி எல் வளையத் திட்டத்தின் மூலம் சிங்களக் குடியேற்றங்களைத் தீவிரப்படுத்தும் பேரினவாதம். வடக்கையும் கிழக்கையும் நிலத் தொடர்ச்சியற்று ஆக்கும் 70 ஆண்டுகால பணியைச் செய்து முடிப்பதற்கு இத்தருணத்தை பேரினவாதம் பயன்படுத்த முயலும். வடக்கு கிழக்கு பகுதியின் நிலத் தொடர்ச்சியைப் பேணி தாயகம் காக்கப்பட்டாக வேண்டும். பிரதேச ஐக்கியம் பேணப்பட வேண்டும்.

இலங்கை தீவில் இருக்கும் சிங்கள தேசத்தால் அநீதியான இன அழிப்புக்கு உலகின் ஆதரவைப் பெற முடிந்தது.  தமிழ்த்தேசத்தால் தனது விடுதலைக்கான ஆதரவை ஏன் பெறமுடியவில்லை? முள்ளிவாய்க்கால் எழுப்பும் முதற்கேள்வி இதுதான். இந்த கேள்விக்கு விடை காண்பதிலேயே பண்புரீதியானப் பாய்ச்சல் இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு ஆற்றல்களிடையே நிலவும் பல்வேறு அரசியல் முரண்பாடுகளில் ஒருபக்கம் நிலையெடுத்து ஈழத்தமிழர்கள் அடிபட்டுவிடக் கூடாது. பா.ச.க, காங்கிரசு என இந்திய அரசில் பதவியில் இருப்போரின் விருப்பத்திற்கிணங்க தமிழீழத் தேசியக் கொள்கையை வடிவமைத்தல் தற்கொலைக்கு ஒப்பானது.

சொல்லிமாளாத துயரக் கடலில் நிற்கும் ஈழத் தமிழர்களை வரலாற்று அன்னை அரவணைப்பாள் என்ற நம்பிக்கையோடு முன்னேறுவோம்

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW