பா.ச.க. வின் கைப்பாவையாய் தற்சார்பு நிறுவனங்கள்..  

02 May 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 13

ஆர்.பி.ஐ. முதல் சி.பி.ஐ. வரை பல்வேறு அரசு நிறுவனங்களும் பா.ச.க. அரசால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு அடிபணியச் செய்யப்பட்டன. ஓர் ஆளுங் கட்சி தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இந்நிறுவனங்களை வளைக்க நினைப்பது இயல்பே. ஆனால், பா.ச.க. வின் இவ்வைந்து ஆண்டுகால ஆட்சியில் அது எல்லை மீறிச் சென்றது, ஆட்களைப் பொறுப்பில் அமர்த்துவது தொடங்கி தரவுகளைச் சிதைப்பது வரை அது நீண்டது. இந்நிறுவனங்களின் தற்சார்பு முற்றாகப் பறிக்கப்பட்டது. சில அதி முக்கியப் பொறுப்புகள் ஆர்.எஸ்.எஸ்./பா.ச.க. சாய்வு கொண்டோருக்கு வழங்கப்பட்டன. இதை கேள்விக்குட்படுத்திய அரசதிகாரிகள் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டனர். 2014 இல் இருந்து இக்கொடுங்கோன்மை ஓர் அமைப்புவகையாக இருந்தது.

 

நடுவண் புலனாய்வுக் கழகம்(நபுக, CBI)

 

நடுவண் புலனாய்வுக் கழகம் ஆளுங் கட்சிகளின் தேவைக்கெனப் பயன்படுத்தப்பட்டே வந்துள்ளது. ஆனால் மோடி அரசு இந்த நிறுவனத்தை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. 2002 இல் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ச்சியைப் புலனாய்வு செய்த அதிகாரி ராகேஷ் அஸ்தானாவை 2017 இல் நபுக வில் அமர்த்தியதில் இருந்து தொடங்கியது. விரைவாக அவர் நபுகவின் சிறப்பு இயக்குநராக பதவி உயர்த்தப்பட்டார். பா.ச.க.வின் உயர்மட்ட தலைவர்களுடன் அவருக்கு இருந்த நெருக்கம் காரணமாக அவரால் இந்த மட்டத்திற்கு செல்ல முடிந்தது. நபுக வின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா தொடக்கம் முதலே அஸ்தானாவின் பணியமர்த்தத்தை எதிர்த்துவந்தார். இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அஸ்தானா மீது கையூட்டுப் பெற்றக் குற்றச்சாட்டுக்கான முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.   இப்புலனாய்வு நடந்து கொண்டிருக்கும் போதே, 2018 அக்டோபரில் திடீரென வர்மாவையும் அஸ்தானாவையும் விடுப்பில் செல்லப் பணித்து நாகேஸ்வர ராவ் என்பரை இடைக்கால இயக்குநராக அமர்த்தியது பா.ச.க. அரசு. வர்மா மோடி அரசால் அமர்த்தப்பட்ட அஸ்தானாவுக்கு எதிராக செயல்பட்டதும் ரபேல் வழக்குப் புலனாய்வில் அவர் ஈடுபட்டதும்தான் அவர் அகற்றப்பட்டதற்கு காரணம் என்று கருதப்பட்டது. யஷ்வந்த சின்ஹா, அருண்சோரி, பிரசாந்த் பூசன் ஆகியோரின் முயற்சியால் ரபேல் வழக்கு நபுக வுக்கு வந்தது. அதன் தொடர்க்க நிலைப் புலனாய்வை வர்மா தொடங்கியிருந்தார் என்று சொல்லப்பட்டது. அவர் இராணுவ அமைச்சகத்திடம் இருந்து புலனாய்வின் பொருட்டு ரபேல் ஆவணங்களைக் கோரியிருந்தார்.  ரபேல் வழக்கில் வர்மாவின் ஈடுபாடு மோடி அரசை அமைதியிழக்கச் செய்ததால்தான் அவர் பணியில் இருந்து அகற்றப்பட்டார் என்று பேசப்பட்டது.  அரசு இவ்விரு அலுவலர்களையும் சமப்படுத்த முயன்றது. ஆனால், அது உண்மை அல்ல. வர்மா பா.ச.க. அரசுக்கு உடன்பட மறுத்தவர், அஸ்தானா பா.ச.க. மற்றும் அதன் தலைவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு உழைக்க அணியமானவர். மோடி அரசின் இந்நடவடிக்கை நபுக வின் செயல்பாட்டை அரசியல் தன்மைப் பெறவைக்கும் தெளிவான முயற்சியாகும். சனவரி 2019 இல் உச்சநீதிமன்றம் அலோக் வர்மாவை நபுக இயக்குநராக மீளமர்த்தம் செய்தது. அதேநேரத்தில், அவரது செயல்பாடுகளைக் மட்டுப்படுத்தியது. மேலும் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய ஓர் உயர்மட்ட தேர்வுக் குழு வர்மாவின் நிலை குறித்து முடிவுசெய்யும் என்றும் சொன்னது. வர்மா மீது அஸ்தானா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடுவண் ஊழல் கண்காணிப்பு ஆணையம்(CVC) ஓர் அறிக்கை கொடுத்தது. இதன் விளைவாக, வர்மா இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தீயணைப்புத் துறையின் இணைத் தலைவர் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். ”இயற்கை நீதி மறுக்கப்பட்டது, நபுக இயக்குநர் பொறுப்பில் இருந்து நான் அகற்றப்படுவதை உறுதிசெய்வதில் ஒட்டுமொத்த செயல்வழியும் தலைகீழாக்கப்பட்டுள்ளது.. நடுவண் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் முழு அறிக்கையும் நபுக வால் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒருவரின் புகாரின் அடிப்படையில் வந்தடையப்பெற்றது என்ற உண்மையைத் தேர்வுக் குழு கருத்தில் கொள்ளவில்லை…..கூட்டாக உள்முக நோக்கு செய்ய வேண்டிய தருணமிது… நிறுவனங்கள் நமது சனநாயகத்தின் ஆக வலிமையான, கண்ணுக்குப் புலப்படக்கூடிய அடையாளங்களில் ஒன்றாகும். நபுக இன்றைய இந்தியாவின் மிக முக்கியமான அமைப்புகளில் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. நேற்றைய முடிவானது என்னுடைய செயல்பாட்டின் மீது மட்டும் தாக்கம் செலுத்தப் போவதில்லை, மாறாக நபுக என்ற நிறுவனத்தை ஆளும் அரசாங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும் நடுவன் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வழியாக கையாள்வது எப்படி என்பதற்கான எடுத்துக்காட்டாக அமையப் போகிறது” என்று வர்மா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

நபுகவின் இடைக்கால இயக்குநராக அமர்த்தப்பட்ட நாகேஸ்வர ராவ் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் வெளிப்படையான ஆதரவாளர் என்பதற்கு அவரது முந்தைய வெறுப்புப் பேச்சுகளும் செயல்பாடுகளும் சான்றாகும். இவர் ஒடிசாவில் மாவட்டக் கண்காணிப்பாளராக இருந்தபோது மத மாற்றம் குறித்து எச்சரிக்கைவிடும் வகையில் பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பினார். இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், மார்க்சியர்கள் ஆகியோர் மாந்த உரிமைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என்றும்கூட சொல்லியுள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு கந்தமாலில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிட்டவரும்கூட. 2018 இல் ஆர்.எஸ்.எஸ். இன் கூட்டங்களிலும் செயல்பாடுகளிலும் நேரடியாகப் பங்குபெற்றுள்ளார். நபுகவின் இயக்குநராக அமர்த்தப்பட்டபின் இவர்  முசாபர்நகர் பாலியல் வன்முறை வழக்கையும் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வந்த அலுவலரை இடம்மாற்றம் செய்தார். இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது என்பதால் நீதிமன்றம் தலையிட்டு நாகேஸ்வர ராவ் செய்தது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமென சுட்டிக்காட்டியது.

இவர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்.  ஊழல், வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பினும் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வுடன் இருக்கும் நெருக்கமான உறவின் காரணமாக,  இவர் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்று முன்னேறுகிறார்.

 

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்: ( Attorney General of India)

 

இந்திய அரசாங்கத்தின் முதன்மை சட்ட ஆலோசகர் இவர். இந்த பொறுப்பு அரசமைப்பு வழிகாட்டும் பொறுப்பா?  இல்லை அரசாங்கத்திற்கு(வாடிக்கையாளர்) வாதாடும் வழக்கறிஞரா? என்ற விவாதம் இருந்துகொண்டு இருக்கிறது. ஆனால், இவரது அலுவலகம் என்பது அரசமைப்புச் சட்டப் பொறுப்பு , இவர் அரசமைப்பையும் பொது நலனையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. வழக்கறிஞர்களின் மொழியில் சொல்வதானால் இப்பொறுப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக வழக்காடுவதைவிட மேலானதாகும். அவர் அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை எதிரடிக்கக் கூடாது மாறாக அரசமைப்பை எழுத்திலும் உள்ளடக்கத்திலும் எதிரடிக்க வேண்டும். தலைமை வழக்கறிஞருக்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான உறவின் ஒருங்கியல்தன்மை என்பது தலைமை வழக்கறிஞருக்கு அரசாங்கத்திற்கு இடையிலானதைவிட இசைவுடையதாகும்.

 

ஆனால், அரசாங்கங்கள் எப்போதும் இப்பொறுப்பைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முயன்றுள்ளன. மோடி அரசாங்கத்தால் 2014 ஆம் ஆண்டு இப்பொறுப்புக்கு அமர்த்தப்பட்டவர் முகுல் ரோத்தகி. இவர் அருண் ஜெட்லிக்கு நெருக்கமானவர், 2002 குஜராத் கலவர வழக்கில் மோடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். இவர் ரிலையன்ஸ் இன்ஃப்ரா உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளார். அவர் தலைமை வழக்கறிஞர் பொறுப்பில் அமர்த்தப்பட்டதில் இருந்து பலமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஆதார் வழக்கின் போது அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை அல்ல என்று சொன்னார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை தகுநிலை கேட்ட வழக்கில், 1968 தீர்ப்பைக் காட்டி அதுவொரு சிறுபான்மை நிறுவனம் அல்ல என்று சொன்னார். யாகூப் மேமனின் தூக்குக்கு எதிராய் எழுந்த முறையீடல்களை வலிமையாக எதிர்த்து வாதாடி, தண்டனைப் பெற்றவர்களுக்கு இருக்கும் அரசமைப்புs சட்ட உரிமைகளை மறுத்தார். 2018 ல் கர்நாடகா வழக்கில் பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக வாதாடி, பா.ச.க. வை ஆட்சியமைக்க அழைத்த கர்நாடக ஆளுநரின் முடிவை எதிர்த்த முறையீடல்களை எதிர்த்து நின்றார். இராணுவ உபகரணங்கள் விற்கும் வெளிநாட்டு நிறுவனமான ஃபின்மக்கானிக்காவின் மீதான தடையை நீக்குவதற்கு பின்னால் இருந்தவர்களில் ஒருவர். ஐயத்திற்கு இடமின்றி அவரொரு கார்ப்பரேட் சார்ப்பு கொண்டவர், பா.ச.க. ஆதரவு வழக்கறிஞர் ஆவார். இவரைத் தொடர்ந்து அப்பொறுப்புக்கு வந்தவர் கே.கே.வேணுகோபால். இவரோ பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்காக வாதாடியவர். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கிலும் ஜெயலலிதாவுக்காக வாதாடியவர். தற்சமயம் ரபேல் ஊழல் வழக்கில் மோடி அரசைப் பாதுகாத்து வருகிறார்.  சர்ச்சைக்குரியவை சிலவற்றைப் பேசியும் உள்ளார்.

 

தேர்தல் ஆணையம்:

மோடி அரசு தேர்தல் ஆணையரை அமர்த்தாமல் காலந் தாழ்த்தியது. தேர்தல் தேதிகளை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம்  காலந்தாழ்த்தி வருகிறதென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. 2019 தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நாடு முழுவதும் 28 சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு 157 புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மோடி. ”தலைமை அமைச்சர் மோடியின் ’அலுவல்பூர்வ’ சுற்றுப்பயணங்கள் நிறைவடைவதற்காக தேர்தல் ஆணையம் தெரிந்தே தேர்தல் தேதிகளை அறிவிக்காமல் காத்திருக்கிறதா? என காங்கிரசின் அகமது படேல் சொன்னார். இதே போல் 2017 ஆம் ஆண்டு குஜராத் தேர்தலும் காலந் தாழ்த்தப்பட்டது.

 

உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறினார்கள் என்ற பெயரில் சந்திரசேகர் ஆசாத் இராவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் போடப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும்போதே பா.ச.க.வும் அதன் தலைவர்களும் பதாகைகளையும் இராணுவப் படங்களையும் பயன்படுத்திக் கொண்டே இருந்தனர். எனவே, தேர்தல் ஆணையம் கடைபிடித்தது தேர்தல் நடத்தை விதிகளையா? அல்லது மோடி நடத்தை விதிகளையா? என்று  கேட்கும் அளவுக்கு இருந்தது. வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்யப்படுகிறதென கிட்டத்தட்ட அனைத்துக் எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் எனக் கோரி வருகின்றன.

 

நடுவண் தகவல் ஆணையம் (CIC), தகவல் உரிமை சட்டம் (RTI)

நடுவண் தகவல் ஆணையத்தில் உள்ள தகவல் ஆணையர்களின் சம்பளம், படி மற்றும் பணிக்காலம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நடுவண் அரசு தன் கையில் எடுத்துக் கொள்ளும் வகையில் தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது மோடி அரசு.  அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரித்த காரணத்தால், இந்த அமைப்பு பலவீனப்படுத்தப்பட்டது. பா.ச.க. அரசாங்கம் தகவல் ஆணையர்களின் பணியமர்த்தத்தைக் காலந்தாழ்த்திக் கொண்டிருந்தது. கடைசியாக உச்சநீதிமன்றம் தலையிட்டு, தேவையான நியமனங்களைச் செய்யுமாறு அரசாங்கத்தைப் பணித்தது.

 

மோடி அரசு தகவல் உரிமைச் சட்டத்தில் உள்ள வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் கட்டுப்படுத்துவதற்கென அச்சட்டத்தில்  தொடர்ச்சியானத் திருத்தங்களை மேற்கொண்டது.  பல்வேறு ஆர்.டி.ஐ. கள் அரசின் தலையீட்டால் நிராகரிக்கப்பட்டன.  ஆர்.பி.ஐ. இடம் கோரப்பட்ட  பணமதிப்பிழக்கத்தின் பாதிப்புகள் மற்றும் அது குறித்த விவாதங்கள், இந்திய விமானப் படையிடம் கோரப்பட்ட ரபேல் விவரங்கள், மோடி பட்டம் பெற்றது தொடர்பாக குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களிடம் இருந்து கோரப்பட்ட விவரங்கள், ஆர்.பி.ஐ. இடம் இருந்து கோரப்பட்ட வாராக் கடன் விவரங்கள் ஆகியவை கொடுக்கப்படாமல் மறுக்கப்பட்ட ஆர்.டி.ஐ.க் களில் முக்கியமானவை ஆகும். நீதிமன்றம் தலையிட்டு இப்படி விவரங்கள் கொடுக்கப்படாமல் மறுக்கப்பட்டது என்பது தகவல் உரிமைச் சட்டத்தை மீறுவதென சொன்னது. ஆயினும் பணமதிப்பிழக்க நடவடிக்கை தொடர்பான பகுதி விவரங்களைக் கொடுப்பதற்கே இரண்டரை ஆண்டுகளை எடுத்துக் கொண்டது ஆர்.பி.ஐ. வாராக் கடன் விவரங்களை இப்போதுவரை கொடுக்கவில்லை ஆர்.பி.ஐ.  தேர்தலில் போட்டியிடுபவர்களின் கல்வித் தகுதி பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை குடிமக்களுக்கு உண்டென்றும் தேர்தலில் வென்றவர்கள் வேட்பு மனுவில் பொய் சொல்லியிருப்பின்  அவரது தேர்வையே ரத்து செய்ய முடியும் என்றும் 2016 நவம்பரில் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். ஆனால் மோடியின் கல்வித் தகுதி தொடர்பாக தில்லிப் பல்கலைக் கழகத்திடம் கோரப்பட்ட விவரங்கள் தரப்படவில்லை என்பதால் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது.

 

தேசியப் புள்ளியியல் ஆணையம்

 

மோடி கடந்த தேர்தலின் போது, ’தாம் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன்’ என்று உறுதியளித்திருந்தார். ஆனால்,  உண்மைகளும் விவரங்களும் வேறு விதமாய் இருக்கின்றன. மோடி அரசு வேலையின்மை தொடர்பானத் தரவுகள் பொருட்டு மக்களை ஏய்க்க முயன்றது. ’சுவராஜ்யா’ என்ற பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் மோடி, “வேலையில்லை என்பதைவிட வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் இல்லை என்பதே பிரச்சனை” என்று சொன்னார். மோடி அரசு வேலையின்மைத் தொடர்பாக தேசியப் புள்ளியியல் ஆணையம் 2018 இல் வெளியிட்டிருக்க வேண்டிய அறிக்கையை வெளிவரவிடாமல் தடுத்தது. வேலையின்மைப் பற்றி கடைசியாக 2012 இல் தான் அறிக்கை வந்திருந்தது கணக்கெடுப்புக்கான முறையியலையும் மோடி அரசு மாற்றியது.

 

2017-2018 ஆம் ஆண்டுக்கான தேசிய புள்ளியியல் ஆணையத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை தொடர்பான ஆண்டு இறுதி ஆய்வு முடிவை வெளியிடாமல் வைத்திருப்பதைக் கண்டித்து தற்சார்பு அமைப்பான தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல் தலைவர் பி.சி. மோகனன் மற்றும் தில்லிப் பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர் ஜே.வி. மீனாட்சி ஆகிய இருவரும் தேசிய புள்ளியியல் ஆணையத்தில் இருந்து விலகினர். இந்த ஆய்வு முடிவின் படி ( Periodic Labour force Survey 2017-2018) கடந்த 45 ஆண்டுகளிலேயே மிக அதிகமான வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது. மேலும் அந்த அறிக்கை, நகரத்திலும் கிராமத்திலும் உள்ள இந்தியர்கள் எப்படி ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்கின்றனர் என்பதையும் அதில் 55 விழுக்காட்டினர் சம்பளமே இல்லாமல் கூடுதல் நேரம் வேலை பார்ப்பது குறித்து அதிருப்தியில் உள்ளனர் என்பதையும் இந்த அறிக்கை சொல்கிறது. அறிக்கை வெளியிடப்படாத நிலையில் அறிக்கையில் இருந்த இச்செய்திகள் ஒரு ஊடகத்தின் வழியாக கசிந்தவையே ஆகும்.

ஆனால், பா.ச.க. அரசின் நிதி ஆயோக்கோ, இந்த விவரங்களை மறுத்து, “இந்த அறிக்கை வரைவு நிலையில் இருந்ததுதான், அதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்பட வில்லை” என்று சொன்னது. திட்டக் கமிசனைக் கலைத்துவிட்டு மோடி அரசு கொண்டு வந்ததுதான் இந்த நிதி ஆயோக். அதன் தலைவர் அமிதாப் காந்த், எப்போதெல்லாம் மோடி அரசின் கொள்கைகளின் போதாமையை வெளிப்படுத்தும் தரவுகள் வெளிவருகிறதோ அப்போதெல்லாம் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அலுவலகர் அமிதாப் காண்ட் களத்தில் குதித்து மோடி அரசைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறார்.

 

தேசிய புள்ளியியல் ஆணையம் மோடி அராங்கத்தின் கீழ் வளர்ச்சி வேகம் குறைந்து போயுள்ளது என்றது. ஆனால், நிதி ஆயோக்கும் நடுவண் புள்ளியியல் அலுவலகமும் தலையிட்டு தேசிய வருமானத்தை கணக்கிடும் முறையியலை மாற்றினார்கள். கணக்கிடும் முறையியலை மாற்றியதிலிருந்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் வளர்ச்சித் தகவு குறைவாக இருந்தது என்ற முடிவை வந்தடைந்தார்கள். பா.ச.க. அரசு திட்டமிட்ட வகையில் தற்சார்பான புள்ளியியல் அமைப்புகளை ஓரங்கட்டி, தனது சொந்த அமைப்புகளால் அவற்றை இட்டு நிரப்ப்பி மோடி மற்றும் அதன் தலைவர்களின் பல்லவிக்கு ஏற்றாற் போல் உண்மைத் தரவுகளைத் திரிக்கும் வேலையைச் செய்தது.  வேலை வாய்ப்புகள், பொருளாதார நெருக்கடி ஆகியவைத் தொடர்பான முக்கியமான தரவுகளை வெளியிடுவதை வெளிப்படையாகவே காலந்தாழ்த்தி அதன் மீதான விவாதங்களை திசைதிருப்பும் வேலையையும் மோடி அரசு செய்தது. வேலையில்லா நெருக்கடிக்கு  முகங் கொடுப்பதில் மிக மோசமாக தோற்றுப்போனது மோடி அரசு..

 

சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கிலும் குஜராத் கலவர வழக்கிலும் குஜராத் அரசுக்காக வாதாடியவரும் இந்துத்துவ எதிர்ப்பு செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் மற்றும் ஐ.ஏ.எஸ். சஞ்சீவ் பட் மீது வழக்குகளைப் புனைந்தவருமான தூசர் மேத்தா சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் அமர்த்தப்பட்டார். பாபர் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாய்வு செய்து கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருந்ததாக சொன்ன தொல்லியல் ஆய்வுத் துறையைச் சேர்ந்த புத்த ரேஷ்மி மணி மோடி அரசால் தேசிய அருங்காட்சியகத்தின் துணைத் தலைவராக அமர்த்தப்பட்டார். பா.ச.க.வையும் மோடியையும் வெளிப்படையாகப் புகழ்ந்து தள்ளிய பிபின் ராவத் இராணுவத் தலைமை அதிகாரியாக அமர்த்தப்பட்டார். 2019 தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு, அரசு நிறுவனங்களிலும் துறைகளிலும் பல்வேறு நியமனங்களை மோடி அரசு செய்தது.

 

மத்திய மற்றும் மாநிலப் பல்கலைக் கழகங்களிலும், ஆய்வு நிறுவனங்களிலும், மத்திய, மாநிலப் பாடத் திட்டங்களின் நூல்களுக்கான உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கக் கூடிய குழுக்களிலும் , பல்வேறுவகை பண்பாட்டு நிறுவனங்களிலும், ஆவணக் காப்பகங்களிலும் பயிற்றுநர் நிறுவனங்களிலும், பெருமிதத்திற்குரிய ஐ.ஐ.டி. தொடங்கி திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் துறைசார் பட்டதாரிகளை உருவாக்கக் கூடிய கல்வி நிறுவனங்களிலும், சென்சார் அமைப்புகளிலும் வலதுசாரி ஆதரவாளர்களை நியமிப்பதன் மூலம் அதன் சனநாயகத் தன்மையை அழித்து தனது அந்நிறுவனங்களை தனது சித்தாந்த நிலைகளை நோக்கித் தள்ளுகிறது. அதிகார மையங்களில் ஆர்.எஸ்.எஸ். செய்துள்ள ஊடுருவலை இது காட்டுகிறது.

 

பா.ச.க. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே பங்குபெற்றது. அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மீதான ஆர்.எஸ்.எஸ். இன் கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு பா.ச.க. தலைவர்களும் நடுவண் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

.

மோடி அரசுக்கு தற்சார்பான சனநாயக நிறுவனங்கள் பொருட்டு ஓர் எரிச்சல் இருக்கிறது, ஏனெனில் அவை பா.ச.க.வினதும் மோடியினதும் எதேச்சதிகார நகர்வுகளுக்கு சவால்விடுகின்றன. இந்திய குடியரசின் முதலாளித்துவ சனநாயகத்தின் தலைமேல் எதேச்சதிகாரம் மற்றும் பாசிசம் நிழலாடுகிறது. சவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜோயா அசன், “ மொத்தத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆளுங் கட்சி மற்றும் அதன் சர்வ வல்லமைப் பொருந்திய தலைவரின் நலன்களுக்கு சேவைசெய்யும் பொருட்டு,  பா.ச.க. தலைவர்களைக் கொண்டு பொது நிறுவனங்கள் சீராக குலைக்கப்பட்டதையும் அரசமைப்பு சட்டம் தந்த உரிமைகளுக்கும் அரசு நிறுவனங்களின் தற்சார்புக்கும் எதிராக அரசாங்கம் தாக்குதல் நடத்தியதையும் கண்ணுற்றோம்”

– யாமினி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW