இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புகள்: இரத்த சகதியில் கால் பதிக்கப் போவது யார்?
ஏப்ரல் 21 – ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகள் கண்டனத்திற்குரியது, ஆழ்ந்த கவலைக்குரியது. ஏப்ரல் 21 காலை 8:45 மணியில் இருந்து இலங்கையில் தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் குண்டுகள் வெடிக்கத் தொடங்கின. ஏசு உயிர்த்தெழுந்த திருநாள் அன்று தேவாலயங்களில் வழிபாட்டு நேரத்தில் மக்கள் கூடி இருக்கும் வேளையில் பொதுமக்களைக் கொல்வதை இலக்காக்கி நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் யாவும் ஐயத்திற்கிடமின்றி பயங்கரவாத நடவடிக்கையாகும். கொழும்பில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திலும் நீர்க்கொழும்பில் உள்ள செபஸ்டியன் தேவாலயத்திலும் மட்டக்களப்பில் உள்ள ஜயோன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தன. அதுமட்டுமின்றி வெளிநாட்டுக்காரர்கள் தங்கக் கூடிய கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதிகளான சாங்கிரி-லா, கிங்க்ஸ்பரி, சின்னமன் கிராண்ட் விடுதிகளிலும் குண்டுகள் வெடித்தன. காலை 8:45 மணிக்கு தொடங்கி 9:05 மணிக்கு இடைப்பட்ட 20 நிமிடங்களில் இந்த ஆறு இடங்களிலும் குண்டுகள் வெடித்துவிட்டன. பின்னர் பிற்பகல் 1:45 மணி அளவில் தேசிய விலங்கியல் பூங்காவுக்கு அருகில் உள்ள தேஹிவாலா என்ற இடத்தில் குண்டு வெடித்தது. டெமடகோடா என்ற இடத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் காவல்துறை தேடுதல் வேட்டையில் இருந்த போது மனித வெடிகுண்டு வெடித்து மூன்று காவலர் பலியாயினர். மொத்தமாக காலை 8:45 இல் இருந்து பிற்பகல் 2:15 க்குள் எட்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் ஏழு மனித வெடிகுண்டு தாக்குதல்களாகும்!
கொழும்பு குண்டுவெடிப்பில் குறைந்தது 82 பேர், நீர்க்கொழும்பு தேவாலயக் குண்டுவெடிப்பில் குறைந்தது 104 பேரும் மட்டக்களப்பு குண்டுவெடிப்பில் குறைந்தது 28 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 320 ஐ கடந்துள்ளது கொல்லப்பட்டோர் எண்ணிக்கை. சுமார் 500 பேருக்கும் மேல் காயம் அடைந்து சிகிச்சையில் உள்ளனர். சாவு எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. மட்டக்களப்பில் கொல்லப்பட்டதில் சுமார் பாதி பேர் குழந்தைகள். கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியும் தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி. கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தமிழர்கள். சுமார் 37 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தியாவைச் சேர்ந்தவர் இதுவரை 8 பேர் என அறியப்பட்டுள்ளது. இவையன்றி அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, சீனா, துருக்கி உள்ளிட்ட பல வெளிநாடுகளைச் சேர்ந்தோரும் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் அடையாளம் தெரியாதிருக்கும் உடல்களும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
இந்த தாக்குதல் ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர் தினத்தைக் குறிவைத்து திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதும் வெளிநாட்டுக்காரர்கள் தங்கக் கூடிய நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒன்றுமாகும். இதன் மூலம் சர்வதேச கவனம் பெற வைப்பது இத்தாக்குதலின் நோக்கமாகும். உலகில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். போப் அரசர் தொடங்கி ஐ.நா. செயலர் வரை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குக்கு ரூ 1 இலட்சம் தருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. தேவாலயங்கள் அரசு செலவில் புணரமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். காயம்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
முக்கிய தேவாலயங்கள், சுற்றுலா மையங்களைக் குறிவைத்து மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என ஏப்ரல் 4 அன்றே புலனாய்வுத் தகவல் பெறப்பட்டன என இலங்கையின் சுகாதார துறை அமைச்சர் ரஜிதா சேனரட்னா ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர் ஏப்ரல் 9 அன்று இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் பயங்கரவாத அமைப்பில் உள்ள உறுப்பினர்களின் பெயர் பட்டியலையும் குறிப்பிட்டிருந்தாக ரஜிதா சொல்கிறார். இந்திய உளவுத்துறையும் இது குறித்த எச்சரிக்கையை வழங்கியுள்ளதென சொல்லப்படுகிறது. ஆனால், இதை ஏன் முன்கூட்டியே தடுக்கத் தவறியது அரசு? என்ற கேள்வியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எழுப்பியுள்ளார். பாதுகாப்புத் துறையின் பொறுப்பு அதிபர் மைத்ரி பால சிறிசேனாதான் என்று சுட்டிக் காட்டியுள்ளார். மைத்ரி பால சிறிசேனா இன்றிரவிலிருந்து அவகர கால நிலைமையைப் பிரகடனம் செய்துவிட்டார். இனி அதிபர் கையில் முழு அதிகாரமும்!
அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு’ போர்வையில் முன்னெடுக்கப்பட்ட அரசியலைப் பற்றிப்பிடித்து விடுதலை இயக்கமானப் புலிகளைப் பயங்கரவாத இயக்கம் என முத்திரையிட்டது இலங்கை அரசு. விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போர் என்று சொல்லிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரானப் போரை நடத்தி, வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள், மக்கள் கூடும் இடங்களில் குண்டுப் போட்டு ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றுகுவித்தது சிங்கள பெளத்த பேரினவாத அரசு. இது சிங்கள அரசின் பயங்கரவாதம் ஆகும். ஆனால், இப்போதுதான் சிங்கள மக்கள் ’பயங்கரவாதம் என்றால் என்ன?’ என்பதைக் கண்டுள்ளனர்.
இன்று இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பும் பொறுப்பேற்றுள்ளது. தனது ‘அமக்’ செய்தி ஊடகத்தின் மூலம் இத்தாக்குதலை நிகழ்த்தியவர்கள் இஸ்லாமிய அரசின் போராளிகள் என்று சொல்லியுள்ளது. இதற்கானப் புகைப்பட ஆதாரங்கள் எதையும் வெளியிடவில்லை.
இலங்கையில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 24 பேரும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என இலங்கை அரசு சொல்லியுள்ளது. மேலும் மனித வெடி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியுள்ளது. இத்தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியப் பின்னணி கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக இலங்கையின் சுகாதார துறை அமைச்சர் ரஜிதா சேனரட்னா தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எத்தகைய ஆதாரங்களையும் கொடுக்கவில்லை. சர்வதேச வலைப்பின்னலுடன் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள இவ்வமைப்பு இதற்கு முன்னர் பெளத்த விகாரைகளைத் தாக்கியதற்காக அறியப்பட்ட ஒன்று. இதுபோன்ற தாக்குதலைத் தொடர்ந்து எப்போதும் ஏதேனும் ஓர் இஸ்லாமிய அமைப்பின் பெயர் சொல்லப்படுவதை நாம் கண்டு வருகிறோம். இலங்கையின் இராணுவ அமைச்சர் ரூவன் விஜயவர்தனே, இத்தாக்குதல் கடந்த மார்ச் மாதத்தில் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்துசர்ச பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக முன்னெடுக்கப்பட்டது என ஊடகங்களுக்கு சொல்லியுள்ளார். ஆனால், இக்கூற்றுக்கான ஆதாரங்கள் எதையும் அவார் கொடுக்கவில்லை. இலங்கை முஸ்லிம் பேரவையின் துணைத் தலைவர் ஹில்மி அகமது மூன்றாண்டுகளுக்கு முன்பு தீவிரவாதக் கருத்துகளைக் கொண்ட இஸ்லாமியக் குழு மற்றும அதன் உறுப்பினர்களின் விவரங்களை இராணுவ புலனாய்வு அமைப்புக்கு கொடுத்து எச்சரித்ததாக சொல்கிறார். ஆயினும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என்பதுதான் சோகமானது என்று சொல்லியுள்ளார்.
இலங்கையில் ஆகச் சிறுபான்மையினரான கிறித்தவர்களுக்கும் அதற்கடுத்த அளவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சமூகப் பொருளாதார நலன்களுக்கிடையிலான முரண்பாடுகள் இல்லை. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலக்காக்கி நட்சத்திர விடுதிகள் குறிவைக்கப்பட்டிருப்பது 2008 மும்பை குண்டு வெடிப்புகளை நினைவுப்படுத்துகிறது. இலங்கை தீவுக்குள்ளான அரசியல் பொருளாதார நிலைமைகளுக்கு அப்பால் இத்தாக்குதல் அதிகம் சர்வதேச பரிமாணம் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த தாக்குதல் ஏகாதிபத்திய மேற்குலகுக்கும் மத்திய கிழக்கிற்கும் எதிரான முரண்பாட்டை கிறித்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான சிலுவைப் போர் போல் முன்னெடுத்துவரும் ’இஸ்லாமிய அரசு’ ஐ.எஸ். இயக்கப் பாணியிலான தாக்குதலாக அமைந்துள்ளது.
2001 ஆண்டு நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதல் அதன் தோற்றத்தில் சாகசதன்மை வாய்ந்தாக காட்சியளித்தாலும் அது ஆப்கானிஸ்தானின் கதவுகளை அமெரிக்காவுக்கு திறந்துவிட்ட நடவடிக்கையே ஆகும். அரசியல் பொருளில் அமெரிக்க புஷ்ஷின் நண்பனே ஒசாமா பின்லேடன். அதுபோல் இந்த தாக்குதலும் முதலாவது அர்த்தத்தில் இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் ஆப்பு வைக்கக் கூடியது. சிங்கள பெளத்தப் பேரினவாதம் இதையே காரணமாக்கி தனது கோரப் பற்களை இஸ்லாமிய சமூகத்தின் மீது பதித்துவிடும் அபாயம் உள்ளது. ஆசியாவில் இஸ்லாமியர்கள் மதச் சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் நாடுகளில் எல்லாம் மதப் பெரும்பான்மைவாத சக்திகள் இத்தாக்குதலைத் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். தாக்குதல் நடந்த அன்றே பா.ச.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி, இந்தியாவிலும் இதுபோல் குண்டுவெடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பா.ச.க. ஆட்சியே மேலும் வேண்டும் என்ற பொருள்பட கருத்துக் கூறியுள்ளார். நேற்றைய தேர்தல் பரப்புரையில் மோடி, இந்த குண்டு வெடிப்பைக் குறிப்பிட்டு பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு தமக்கு வாக்கு அளிக்குமாறு பேசியுள்ளார். மேலும், இலங்கை குண்டுவெடிப்பைக் குறிப்பிட்டு 2014 ஆம் ஆண்டு தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே நிலைமைதான் இந்தியாவில் இருந்தது என்றும் அவர் பேசியுள்ளார்.
அமெரிக்க அரசு செயலாளர் மைக் போம்பியோ இஸ்லாமியப் பயங்கரவாதத்தை எதிர்த்து சண்டையிட உறுதியேற்பதாகவும் இது இலங்கைக்கு மட்டுமல்ல தமக்குமான யுத்தம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். ஐ வெற்றிக் கொண்ட போதிலும் மேலும் தீவிரமாகவும் கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்பதை இத்தாக்குதல் உணர்த்தியுள்ளதாகவும் இத்தீமை இன்னும் இவ்வுலகில் நீடிக்கிறது என்றும் சொல்லியுள்ளார். எனவே, புலிகளை அழிப்பதற்காகப் பயங்கரவாதத்திற்கு எதிரானப் போரை நடத்தியதாக உலகிற்கு அறிவித்த இலங்கைக்கு இப்போது அதே பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ’உதவிக்கரம்’ நீட்டப் போகிறது அமெரிக்கா. அது உதவிக்கரம் அல்ல, ஆக்டோபஸ் கரங்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அல்கொய்தா அமைப்பு முதலில் அமெரிக்காவால் வளர்த்துவிடப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ். உம் ஒரு காலத்தில் அமெரிக்காவாலும் பின்னர் இரசியாவாலும் ஆதரிக்கப்பட்ட ஒன்றாகும். பயங்கரவாத அமைப்புகளின் பின்னணியில் இது போன்ற அரசுகள் ஆதரவு இருந்து வந்துள்ளது. இரட்டை கோபுரத் தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களை ஏதாவதொரு அமைப்பு செயல்படுத்தியிருந்தாலும் அதை செய்வதற்கான முடிவுக்குப் பின்னால் சி.ஐ.ஏ, மோசாட் போன்ற ஏகாதிபத்திய அரசுகளின் தேர்ச்சி மிக்க உளவு நிறுவனங்களின் பங்கு இருப்பதைக் கண்டுள்ளோம். அதுபோல், இந்த தாக்குதலைச் செயல்படுத்தியக் குழுவுக்குப் பின்னாலும் இதனால் பலனடையக் கூடிய ஏகாதிபத்திய சக்திகளின் உளவுத்துறைகளுக்குப் பங்கு இருக்கக் கூடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இது போன்ற தாக்குதல்களை செயல்படுத்தும் குழுவுக்கு அப்பால் இதனால் பலனடையக் கூடிய சக்திகளின் பங்கு, பாத்திரத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
இனப்படுகொலைக்கு நீதி கோரி போராடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் மீண்டும் இரத்தம் சிந்தியுள்ளனர். அவர்களின் நீதிக்கானப் போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தும் குண்டு சத்தமாக இது அமைந்துள்ளது. இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் மீது சிங்களப் பெளத்த பேரினவாத அரசு தமது கொடுங்கரங்களைப் பதிப்பதற்கு இத்தாக்குதல் வழிகோலிவிட்டது. சிறிசேனா – ரணில் முகாம்கள் தத்தமது தேவைக்கேற்ப இத்தாக்குதலைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டன. அமெரிக்க – இஸ்ரேல் – இந்தியா அச்சு அல்லது டிரம்ப் – நெதன்யாகு – மோடி என்ற ரசவாதக் கூட்டணி அப்பாவி மக்களின் ரத்தத்தின் பெயரால் தத்தமது இஸ்லாமிய எதிர்ப்புவாத அரசியலைக் கொக்கரிக்கத் தொடங்கிவிட்டன. இத்தாக்குதல் அதன் இறுதியான அர்த்தத்தில் ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்யக் கூடியது என்பதைப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். வரலாற்று அர்த்தத்தில் இரட்டை கோபுரத் தாக்குதல் உலக அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பாதியளவேனும் இந்த தாக்குதல் தெற்காசியாவின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கிறது.
வர்க்கக் கண்ணோட்டம் அற்ற எந்தப் போராட்ட முன்னெடுப்பும் மத, இன மோதல்களாக அப்பாவி மக்களின் இரத்தத்தைப் பெருக்கெடுத்து ஓடச் செய்து இறுதியில் எதிரியின் காலடியில் சரனடைந்துவிடுகிறது, மனித குல நாகரிகத்திற்கும் மனித குல வளர்ச்சிக்கும் தடையாய் அமைந்துவிடுகின்றன. தேசியம், சனநாயகம், சோசலிசம் என்ற முழக்கங்களில் எதுவொன்றைப் புறந்தள்ளியும் ஏகாதிபத்திய உலக ஒழுங்கை மாற்றியமைக்க முடியாது. அப்படி புறந்தள்ளும்விடத்து அது ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கு சேவை செய்வதாகவே முடிந்துவிடுகிறது.
ஏசு உயிர்த்தெழுந்த திருநாளில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் உயிர்த்தெழப்போவதில்லை. ஆனால், கொல்லப்படுகின்ற மனித நேயமும் மனித மாண்பும் சனநாயகமும் உயிர்த்தெழுந்தால் ஒழிய மனித குலத்திற்கு உய்வில்லை.
- செந்தில், இளந்தமிழகம்