பா.ச.க. ஆட்சியில்  நிலைகுலைந்த நீதித்துறை!

12 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 8

இந்தியக் குடியரசெனும் மணிமுடியில் வைரமாய் காட்டப்படும் நீதித்துறை காவிகளின் ஆட்சியில் கரிகட்டையாய்ப் போனது. இதுவரை இந்திய வரலாறு பார்த்திராத காட்சிகள் நீதித்துறையைச் சுற்றி அரங்கேறின.

பாசக. தனது தேர்தல் அறிக்கையில் நீதித்துறைப் பற்றி வழங்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:

”பாசக அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்ய உறுதி கொண்டுள்ளது — உடனுக்குடன் நீதி வேண்டும், அது எட்டும்படி இருக்க வேண்டும். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியே என்ற புரிதலுடன், நம் நீதியமைப்பில் வழக்குகள் மிக அதிகமாக நிலுவையில் இருக்கும் நிலையை மாற்றப் பலமுனை அணுகுமுறையைக் கைக்கொள்வோம்… நீதிபதிகள் அமர்த்தப்படும் சிக்கலைக் கையாள நீதித்துறைச் சீர்திருத்தங்களுக்கு உயர் முன்னுரிமை தருவோம்; வெற்றிடங்களை நிரப்புவோம்; புதிய நீதிமன்றங்கள் திறப்போம்; நீதித்துறையில் பல்வேறு நிலைகளிலும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு பொறிமுறையை நிறுவுவோம்; நீதித்துறையில் வெற்றிடங்களை நிரப்பவும் கீழமை நீதித்துறையில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவும் இலட்சியத் திட்டம் தொடங்குவோம்.”

ஆனால், ஆட்சிக்கு வந்த பா.ச.க., நீதித்துறையைத் தன் விருப்பம் போல் வளைத்தும் நீதிபதிகள் தேர்வாயத்தையே கலைக்க முயன்றும் தேர்வாயத்தின் முடிவுகளை இடைமறித்தும் அமர்த்தங்களைக் காலவரையறையின்றி தள்ளிப் போட்டும் பணியிடங்களை நிரப்பாமல் காலியாக விட்டும் தனக்கு சாதகமான தீர்ப்புகளை வாரி வழங்கிய நீதிபதிகளுக்கு பதவிகளும் பதவி உயர்வுகளும் நல்கியது. தனது விருப்பத்திற்கு வளைந்து கொடுக்காதவர்களுக்கு சாவும்கூட பரிசளிக்கப்பட்டது. பதவி உயர்வுகள் பறிக்கப்பட்டன. நீதித்துறைக்குள் தாராளவாத சனநாயக முகாமுக்கும் பழமைவாத முகாமுக்குமான முரண்பாடு வெடித்து ஊடக சந்திப்பில் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டது.

தேசிய நீதித்துறை அமர்த்தங்கள்(நியமனங்கள்) ஆணையம் (National Judiciary Appoinments Commission)

உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனங்களையும் இடம் மாற்றங்களையும் பரிந்துரைக்க தேர்வாயம்( collegiums) முறையை உச்சநீதிமன்றம் கடைபிடித்து வருகிறது. அந்த தேர்வாயம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் நான்கு மூத்த நீதிபதிகளையும் உள்ளடக்கிய குழுவாகும். 1998 ஆம் ஆண்டின் ‘மூன்று நீதிபதிகள்’ தீர்ப்பின் அடிப்படையில் இந்த தேர்வாயம் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீதித்துறையின் தற்சார்ப்பு பேணப்படும் என்று கருதப்படுகிறது. இந்த தேர்வாய முறையைக் கைவிட்டு நீதிபதி நியமனங்களைச் செய்வதற்கு தேசிய நீதித்துறை அமர்த்தங்கள் ஆணையத்தை அமைக்கும் சட்டத் திருத்தத்தை 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடுவண் அரசு அறிமுகப்படுத்தியது.

அதில் இந்தியத் தலைமை நீதிபதி, மிக மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்ட அமைச்சர், புகழ் பெற்ற இரு பெருமக்கள் — உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தப் பெருமக்கள் தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரடங்கிய குழுவால் மூன்றாண்டு பதவிக் காலத்துக்கு நியமிக்கப்படுவார்கள். இது நீதித்துறையின் தற்சார்ப்பைக் குலைத்துவிடும் என்று குற்றாய்வுகள் எழுந்தன. 2015 அக்டோபர் 16 அன்று ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 4:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் தேசிய நீதித்துறை அமர்த்தங்கள் ஆணையத்தை அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதென தீர்ப்பளித்து முடிவுக்கு கொண்டு வந்தது. சட்ட அமைச்சரின் வழியாக நீதிபதிகள் அமர்த்த செயல்வழி முழுவதையும் ஆட்சித்துறை கைப்பற்றுவதற்கு இருந்த வாய்ப்பு இதன் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இத்தீர்ப்பின் போது ’முதல் நீதிபதிகள்’ வழக்கை மேற்கொள்காட்டி நீதித்துறை தற்சார்பென்பது அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் பகுதியாகும் என்று நீதிபதி மதன் லோகூர் சொன்னார். எனவே, ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றம் நீதித்துறையின் தற்சார்பை உறுதி செய்யும் எந்த முடிவையும் ஏற்பாட்டையும் குலைக்க முடியாது என்று உறுதிசெய்தார்.

பின்னர், அதே ஆண்டு திசம்பரில் இதே அரசமைப்பு ஆயம் ( bench, அமர்வு)   உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாய்வு செய்து உயர் நீதித்துறைக்கு அமர்த்தம் செய்வதற்கான நடைமுறைக் குறிப்பாணை(Memorandum of Procedure) ஒன்றை இறுதி செய்யுமாறும் நடுவண் அரசுக்கு கட்டளைப் பிறப்பித்தது. ஆனால், நடுவண் அரசு இதை இறுதிசெய்யாமல் காலந்தாழ்த்தியது. அரசுக்கும் தேர்வாயத்துக்கும் இடையே நிலவிய முறுகல் நிலையால் நீதிபதிகள் அமர்த்தங்களிலும் இடம்மாற்றங்களிலும் காலந்தாழ்வு ஏற்பட்டது. பின்னர் நடுவண் அரசு வகுத்துத்தந்த நடைமுறை குறிப்பாணையில்  “தேசப் பாதுகாப்பு” என்ற அடிப்படையில் ஒருவரின் நியமனத்தை மறுக்கும் அதிகாரத்தை நடுவண் அரசுக்கு வழங்கும் விதிக்கூறு இருந்தது. மேலும் மாநிலங்களின் தலைமை சட்டத்தரணிகளையும் மாநிலங்களில் உள்ள அனைத்து நீதிபதிகளையும் மூத்த வழக்கறிஞர்களையும் உள்ளடக்கிய ’நிரந்தர செயலகம்’ ஒன்றை அமைக்க வேண்டும், நீதிபதி தேர்வில் தேர்வாயத்திற்கு துணை செய்யும் வகையில் இச்செயலகமும் பங்குபெறும் என்ற விதிக்கூறும் இருந்தது. இந்த செயலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றந்த விதிக்கூறு சொன்னது. ’தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் நிராகரிக்கும் அதிகாரத்தை ஆட்சித்துறைக்கு வழங்குவதும் தேர்வு செய்யும் அதிகாரத்தை சட்ட அமைச்சர் தலைமையிலான நிரந்தர செயலகத்துடன் பகிர்ந்து கொள்வதும் நீதித்துறை தற்சார்புக்கு அழிவுதரும் என்ற வகையில் இவ்விதிக்கூறுகளையும் மார்ச் 10,2017 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகரை உள்ளடக்கிய தேர்வாயம் நிராகரித்துவிட்டது. இப்படி நடைமுறைக் குறிப்பாணை இறுதி செய்யப்படாமல் காலந்தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

 

நீதிபதிகளின் கலகம் – செய்தியாளர் சந்திப்பு

தேர்வாயத்தில் உள்ள நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2018 சனவரி 12 அன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இத்தகைய ஒரு நிகழ்வு இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான தமது குற்றாய்வை வைத்தனர்.

”இந்த நீதித்துறைப் பாதுகாக்கப் படாவிட்டால், இதன் அமைதி தக்கவைக்கப்படாவிட்டால் இந்நாட்டின் அல்லது எந்தவொரு நாட்டின் சனநாயகத்தையும் பாதுகாக்க முடியாது…. இன்று காலைகூட ஒரு குறிப்பிட்டப் பிரச்சனைப் பற்றி நாங்கள் நால்வரும் ஒரு குறிப்பான வேண்டுகோளுடன் மாண்புமிகு தலைமை நீதிபதியைச் சந்தித்தோம். கெடுவாய்பபாக நாங்கள் சொல்வது சரியென்றும் பொருத்தமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதிலும் அவரை ஏற்கச்செய்ய முடியவில்லை. ஆகவே, இந்த நிறுவனத்தையும் இந்நாட்டையும் பாதுகாக்குமாறு தேசத்திடம் முறையிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு தெரிவில்லாமல் போய்விட்டது. ஏனெனில், இதற்குமுன் எத்தனையோ அறிவார்ந்தோர் இந்நாட்டில் பேசக் கண்டிருக்கிறோம். ஏனெனில், இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து யாராவதொரு அறிவார்ந்த மாந்தர், ’செல்லமேஸ்வரும் ரஞ்சன் கோகோயும் மதன் தாகூரும் குரியன் ஜோசப்பும் தங்கள் மனசாட்சியை விற்றுவிட்டனர், இந்த நிறுவனத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர், இந்த தேசத்தின் நலனைக் காக்கத் தவறிவிட்டனர்’ என்று எம்மீது பழிசொல்வதை நாங்கள் விரும்பவில்லை. ஆகவே, இதை இந்நாட்டு மக்களிடம் முன் வைக்கிறோம். அதற்காகவே இந்த செய்தியாளர் சந்திப்பு” என்றனர்.

இந்த செய்தியாளர் சந்திப்புக்கு உடனடி தூண்டுதலாக அமைந்தது நீதிபதி லோயாவின் ஐயத்திற்குரிய மரணம் தொடர்பான விசாரணையைக் கோரும் வழக்கை தலைமை நீதிபதி தீர்வு செய்த விதம் தானா? என்று பத்திரிகையாளர் கேட்டக் கேள்விக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் ‘ஆம்’ என்று பதிலளித்தார். தாங்கள் இரண்டு மாதத்திற்கு முன்பு தலைமை நீதிபதிக்கு எழுதியக் கடிதத்தின் படியைத் தந்து அதுவே தாங்கள் சொல்லவந்ததை விளக்கும் என்றனர்.

அக்கடிதத்தில், “தலைமை நீதிபதி என்பவர் மற்ற நீதிபதிகளில் முதலாமவர் என்பதைத் தாண்டி வேறெந்த விதத்திலும் மேலானவரும் கீழானவரும் அல்ல. நீதிபதிகளின் வேலைப்பிரிவினைக்கு பொறுப்பானவர், ஆயங்களுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்பவர். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு உரிய வழிகாட்டு நெறிகள் உள்ளன. வழக்குகளை விசாரிப்பதற்கு  உள்ளடக்கத்திலும் எண்ணிக்கையிலும் பொருத்தமான ஆயத்தைத் தவிர  வேறு எந்த ஆயமும் அந்த வழக்குகளை விசாரிப்பதற்கும்  கையாள்வதற்குமான மேதாவித்தனத்தை செய்ய முடியாது. உள்ளடக்கத்திலும் எண்ணிக்கையிலும் பொருத்தமான ஆயத்தை நியமிப்பதில் இருந்து விலகும்போது அது இந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் கசப்பான, விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். அத்தகைய விலகலினால் ஏற்படும் குழப்பங்களைச் சொல்ல வேண்டியதில்லை.

வெகுகாலமாகவே ஆயங்களுக்கு வழக்குகளை ஒதுக்குவதில் கடைப்பிடிக்க வேண்டிய மேற்சொன்ன இரு நெறிகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தேசத்திற்கும் இந்நிறுவனத்திற்கும் ஆகக் கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வழக்குகளை எவ்வித அறிவார்ந்த அடிப்படைகளும் இன்றி ’அவர்களின் விருப்பத்திற்கிணங்க’ தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயங்களுக்கு ஒதுக்கியுள்ள எடுத்துக்காட்டுகள் பல உள்ளன. என்ன விலை கொடுத்தேனும் இது தடுக்கப்பட்டாக வேண்டும்.

நடைமுறை குறிப்பாணை தொடர்பான வழக்கில் 2016 ஆம் ஆண்டின் இறுதியில் ஐவர் அடங்கிய அரசமைப்பு ஆயம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் எங்ஙனம் அது தொடர்பான வழக்கில் R.P.Luthra Vs Union of India இருவர் ( ஏ.கே.கோயல், யு.யு.லலித் – ஏ.கே.கோயல் ஐவர் ஆயத்தில் ஒருவர்) அடங்கிய ஆயத்திற்கு ஒதுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியதோடு நடைமுறை குறிப்பாணைத் தொடர்பாக மீள்பரிசீலனை செய்ய வேண்டுமாயின் அரசமைப்பு ஆயம் மட்டுமே செய்ய முடியும்” என்ற பொருள்பட எழுதியிருந்தனர். “அவர்களின் விருப்பத்திற்கிணங்க’ என்று குறிப்பிட்டிருந்தது வேறெவரையும் அல்ல, நடுவண் ஆட்சியாளர்களைத் தான்!

பரிசளிப்புகளும் பழிவாங்கலும்

பா.ச.க.வுக்கும் பா.ச.க. அரசின் கொள்கைகளுக்கும் ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிகள் பதவி உயர்வாலும் பதவி அமர்த்தங்களாலும் பரிசளிக்கப்பட்டனர்.

  • துளசிராம் பிரஜாபதி வழக்கில் பா.ச.க. தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையைத் தள்ளுபடி செய்ததற்காகவே முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சதாசிவம் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்று ஊடகங்கள் எழுதின. ( இத்தனைக்கும் இவர் தலைமையிலான ஆயம்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தது)
  • நீதிபதி ஏ.கே.கோயல் பா.ச.க. ஆட்சிக்கு வந்த பின் 2014 ஜூலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரும் அதன் வழக்கறிஞர் பிரிவில் இருந்தவரும் ஆவார். இவர் பங்குபெற்ற ஆயம் தான் எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பை வழங்கியது. ஜூலை 6,2018 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற சில மணி நேரங்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக பணியமர்த்தப்பட்டார். இவரே 2018, நவம்பர் 29 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்துகொள்ள அனுமதிக்கும் தீர்ப்பையும் வழங்கியவராவார் என்பது கூடுதல் செய்தி. பா.ச.க. ஆட்சியில் இருந்து கீழ் இறக்கப்பட்டாலும் 2023 வரை தேசியப் பசுமை தீர்ப்பாயத்தில் ஆளும் வர்க்க சேவையைத் தொடரப்போகிறார் கோயல்.
  • இஷ்ரத் ஜகான் கொலை வழக்கில் ’அது மோதல் கொலை அல்ல’ என்று முன்னாள் நடுவண் புலனாய்வுக் கழகத்(சி.பி.ஐ.) தலைவர் ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு 2011 இல் அறிக்கை கொடுத்தது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இவ்வழக்கை ஒப்படைத்த நீதிபதிகள் ஆயத்தில் ஒருவராக ஜெயந்த் படேல் இருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை நடுவண் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றினார். குஜராத்தின் பல உயர்மட்ட அதிகாரிகள் இவ்விசாரணையில் மாட்டிக் கொண்டனர். இதனாலேயே அவர் 2016 ஆம் ஆண்டு குஜராத்தில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றப்பட்டார்.  பின்னர், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வடையும் தருணத்தில், அந்த இடத்திற்கு செல்ல வேண்டியவராக ஜெயந்த் படேல் இருந்தார். அதனாலேயே 2017 செப்டம்பரில் மீண்டும் அலகாபாத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவ்விடமாற்றத்தைக் கண்டித்து கர்நாடகாவிலும் குஜராத்திலும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். ஜெயந்த படேல் நீதிபதி பதவியில் இருந்து விலகினார்!
  • 2014 ஆம் ஆண்டு முன்னாள் அரசுத் தலைமை சட்டத்தரணி கோபால் சுப்ரமணியத்தின் பெயரைத் தேர்வாணையம் பரிந்துரைத்தப் போதும் நடுவண் அரசு அப்பரிந்துரையை ஏற்கவில்லை. நடுவண் புலனாய்வுக் கழகமும் (CBI, நபுக) இந்திய உளவுத்துறையும் இவர் குறித்து தந்த எதிர்மறை அறிக்கையின் (இடைத்தரகர் நீரா ராடியாவோடு பேசியது, 2ஜி வழக்கில் நடுவண் புலனாய்வுக் கழகத்திற்கும் அ.ராசாவின் வழக்கறிஞர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது) அடிப்படையில் இவரை நீதிபதியாக அமர்த்த மறுத்ததாக நடுவண் அரசு சொன்னது. ஆனால், இவர் வெளிக்கொண்டுவந்த உண்மைகளின் அடிப்படையில்தான் பா.ச.க. தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கெளசர்பி, சொராபுதீன் காணாமற் போனது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நடுவண் புலனாய்வுக் கழகத்திற்கு மாற்றியது என்பதே இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப்படுவது தடுக்கப்பட்டதற்கு காரணமாகும். ஜுன் 28, 2014 அன்று ஓர் ஒன்பது பக்க கடிதத்தைத் தந்துவிட்டு இவர் நீதிபதிப் போட்டியில் இருந்து பின்வாங்கினார்!
  • ’கிரீன் பீஸ்’ அமைப்பின் செயற்பாட்டாளர் பிரியா பிள்ளையின் வெளிநாட்டுப் பயணத்தை நடுவண் அரசு தடை செய்திருந்தது. அந்த  தடை ஆணையை ரத்து செய்து மார்ச் 2015 இல் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சக்தார் தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு உள்ள உரிமை அடிப்படை உரிமைகளின் பகுதியல்ல என்று வாதிட முடியாது. பயணத்தைத் தடுப்பதன் மூலம் பேச்சுரிமையும் கருத்துரிமையும் மறுக்கப்படும் பொழுது அத்தகைய பயணமும்கூட அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிவிடுகிறது என்று தீர்ப்பளித்தார். அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டுவதற்கு இருக்கும் உரிமையை உயர்த்திப் பிடித்தத் தீர்ப்பாக இது அமைந்தது. 2016 மார்ச்சில் நீதிபதி ராஜீவ் சக்தார் தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்செய்யப்பட்டார். தில்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேரவையும் மூத்த நீதிபதிகளும் இந்த இடமாற்றத்தைக் கைவிடக் கோரினர்.
  • 2012 ஆம் ஆண்டு சொராபுதீன் வழக்கின் விசாரணையை குஜராத்திலிருந்ந்து மராட்டியத்திற்கும் மாற்றும்படி ஆணையிட்டது உச்சநீதிமன்றம். மேலும், தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரே நீதிபதி வழக்கை விசாரிக்கவும் ஆணையிட்டது. ஆனால், இவ்வாணையை மீறும் வகையில் இவ்வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த  நடுவண் புலனாய்வுக் கழக நீதிபதி எச்.டி.உட்பத் 24 ஜூன் 2014 இல் இடமாற்றல் செய்யப்பட்டார். இதற்கு சில நாட்கள் முன்புதான் இவ்வழக்கில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு கோரியிருந்த பா.ச.க. தலைவர் அமித் ஷாவின் மனுவைத் தள்ளுபடி செய்திருந்தார் எச்.டி.உட்பத்!
  • அதன்பின்னர், இப்பொறுப்புக்கு வந்தவர் நீதிபதி லோயா. அவரும் இயல்பல்லாத சூழலில் ஐயத்திற்கிடமான வகையில் 2014 திசம்பர் 1 அன்று நாக்பூரில் இறந்துபோனார். சொராபுதீன் வழக்கில் அமித் ஷா நேரில் முன்னிலையாக வேண்டும் என்று லோயா வலியுறுத்தியிருந்தார். லோயா மறைந்து மூன்றாண்டுகள் கழித்து 2017 நவம்பரில் கேரவன் இதழ், அவரது மரணத்திற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத் தோண்டி எடுத்து நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. லோயாவின் சகோதரி அனுராதா பியானியும் அவரது தந்தை அர்கிசனும் கேரவானுக்கு பேட்டி அளித்திருந்தனர். லோயா மரணத்தைச் சுற்றி எழுந்த எண்ணற்ற கேள்விகளையும் முரண்பாடான தகவல்களையும் அவர்கள் வெளிப்படையாகப் போட்டுடைத்தனர். லோயா தங்கியிருந்த விடுதி, மரணமடைந்த நேரம், அது குறித்து லோயாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நேரம், விவரங்கள், லோயா உடல்கூராய்வு நடந்த மருத்துவமனை, லோயாவின் அலைபேசியை உறவினர்களிடம் ஒப்படைத்ததில் இருந்த தாமதம், அதிலிருந்த விவரங்கள் அழிக்கப்பட்டிருந்தமை, அவரது உடலில் இருந்த குருதிக் கறை, மரணமடைந்த நேரம் தொடர்பாக உடற்கூராய்வில் சொல்லப்பட்ட தகவல்கள் என எண்ணற்ற முரண்பாடுகள் இருப்பதை எடுத்துரைத்தனர். அவரது தங்கை பியானியே மருத்துவர் என்பதால், 48 வயதுடைய லோயா மாரடைப்பில் சாவதற்கான காரணிகள் எதையும் கொண்டிருக்கவில்லை என்று அடித்துச் சொல்கிறார். பல ஆண்டுகளாக நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் டென்னிஸ் விளையாடக் கூடிய லோயாவின் உடல்நிலை குறித்து முற்றிலும் அறிந்து வைத்திருந்தவர் பியானி. மேலும், சாவுக்கு காரணம் என்று சொல்லப்பட்ட முடிவுகளுக்கு மாறாக, லோயாவின் இதயத் துடிப்பலை(ECG) அறிக்கைகள் மாரடைப்பு ஏதும் ஏற்பட்டதாக காட்டவில்லை. லோயா அந்நேரத்தில் சொராபுதீன் வழக்கை மட்டுமே விசாரித்து வந்திருந்தார். அவ்வழக்கில் அமித் ஷாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்திருந்தது என அவரது சகோதரி பியானியும் தந்தை அர்கிசனும் பேட்டியில் சொன்னார்கள். மேலும் இவ்வழக்கில் சாதகமான தீர்ப்பை வழங்கினால் கைமாறாக 100 கோடி ரூபாயும் மும்பையில் ஒரு வீடும் கிடைக்கும் என பம்பாய் உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி மோஹித் ஷா பேரம் பேசியதாக லோயா தங்களிடம் சொல்லியிருந்தார் என அவரது சகோதரியும் தந்தையும் சொன்னார்கள். லோயாவின் சாவு குறித்து தற்சார்பான, நடுநிலையான விசாரணை வேண்டுமென்னும் கோரிக்கைகள் ஏற்புடையவை அல்ல என்று இந்தியத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோரடங்கிய உச்ச நீதிமன்ற ஆயம் கூறிவிட்டது. இதுவே நான்கு நீதிபதிகளின் ஊடக சந்திப்புக்கு வித்திட்ட நிகழ்வும்கூட. பணியிட மாற்றம், பதவியுயர்வைத் தடுத்தல் என்பதை எல்லாம் தாண்டி நீதிபதி கொல்லப்படுவதில் போய் முடிந்துவிட்டது. பா.ச.க. தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கல்லவா இது!
  • அரசின் பழிவாங்கல் முயற்சிக்கு வெளிப்படையான ஓர் எடுத்துக்காட்டாக நீதிபதி கே.எம்.ஜோசப்பின் கதை அமைந்தது. உத்தரக்காண்டில் குடியரசுத்தலைவர் ஆட்சித் திணிப்பைத் தள்ளுபடி செய்து பா.ச.க.வின் கோபத்துக்கு இலக்கானவர் நீதிபதி கே.எம். ஜோசப். இவருக்கும் நீதிபதி இந்து மல்கோத்ராவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி அமர்த்தம் செய்யும் பரிந்துரையை 2018 சனவரி முதல் வாரத்தில் உச்சநீதிமன்ற தேர்வாயம் நடுவண் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இத்துடன் வேறு சில நீதிபதிகளின் இடமாற்றல் பரிந்துரைகளும் அதில் இருந்தன. கே.எம்.ஜோசப்பைப் பழிவாங்க எண்ணிய நடுவண் அரசு அவரது பதவி நியமனத்தை மட்டும் நிராகரித்து மற்றவற்றை மட்டும் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பில்லை என்பதால் மாதக்கணக்கில் பதிலளிக்காமல் அக்கோப்பில் ஏறி அமர்ந்துகொண்டது. ஏனெனில், நடுவணரசு தேர்வாயத்தின் பரிந்துரையை மீளாய்வுக்குத் திருப்பியனுப்பி. தேர்வாயம் அதே பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தினால் அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நடுவணரசைக் கட்டுப்படுத்துவதாகிவிடும். பல மாதம் கழித்துப் பரிந்துரையை திருப்பி அனுப்பியது நடுவணரசு. மீண்டும் அதே பரிந்துரையை உச்சநீதிமன்றத் தேர்வாயம் நடுவண் அரசுக்கு அனுப்பி வைத்தது. சட்டப்படி பரிந்துரையைச் செயலாக்காமல் இந்து மல்கோத்தராவின் பணி அமர்த்தத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு கே.எம்.ஜோசப்பை ஒதுக்கித் தள்ளியது. ஆட்சியாளர்கள் பரிந்துரையை இப்படி இரு கூறாக்கும் வேலையை கே.எம்.ஜோசப்பைப் பழிவாங்கும் நோக்கில் செய்தார்கள். இம்முறை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வாயம் 2018 சனவரி 10 அன்று எடுத்த முடிவை நடுவண் அரசுக்குப் பின்வருமாறு தெரிவித்தார் – தேர்வாயம் பின்வரும் வரிசையில் நீதிபதி-அமர்த்தங்களைப் பரிந்துரைக்கத் தீர்மானிக்கிறது: 1. திரு கே.எம். ஜோசப்; 2. திருவாட்டி இந்து மல்கோத்ரா, மூத்த வழக்கறிஞர். நடுவண் அரசு வேறு வழியின்றி ஏழு மாதங்கள் கழித்து கே.எம்.ஜோசப்பின் பணியமர்த்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதுவும் முதுநிலையில் இந்து மல்கோத்ராவுக்கும் வினீத் சரணுக்கும் கீழேதான் அவருக்கு இடமளித்தது.

ஒருவழியாக பா.ச.க. ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் இந்திய தலைமை நீதிபதிக்கு எதிராகவே கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் நிலைக்கு ஆளும்வர்க்கத்தின் தாராளவாத முகாம் தள்ளப்பட்டது. காங்கிரசு கட்சி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை முன்னகர்த்தியது. இந்திய வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு இதுவே முதல்முறையாகும்.  சந்தர்ப்பவாதக் கட்சிகளான தி.மு.க., திரிணாமுல் காங்கிரசுகூட நீதித்துறையின் ’மாண்பைக்’ கேள்விக்குள்ளாக்கும் இந்த ‘தெய்வக் குற்றச்’ செயலில் இருந்து விலகி நின்றன. இத்தீர்மானத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஐந்தாவது மிகமிக முக்கியமானது. அரசியலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பானது. நீதித்துறையின் தற்சார்பை விட்டுக்கொடுக்கும் வகையில் வழக்குகளை பிரித்துக்கொடுக்கும் ஆணையராக தன் நிர்வாகம்சார் ஆணையுரிமையைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு. அரசியல் வகையில் தாக்கமுள்ள முக்கியமான வழக்கில் முன்கூட்டியே விரும்பிய தீர்ப்பைப் பெறும் பொருட்டு பொறுக்கியெடுத்த நீதிபதிகளுக்கு தற்போக்காக வழக்குகளை ஒதுக்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால், சட்ட வழிவகைகளுக்குப் புறம்பாக துணைக் குடியரசு தலைவர் இத்தீர்மானத்தை மறுதலித்தார். நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை குலைந்துவிடும் என்று நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தை மேற்கோள்காட்டினார். ஆனால், அச்சட்டத்தின் நோக்கத்தில் ஒன்று நீதிபதிகள் தொடர்பான ஐயங்களையும் குழப்பங்களையும் தீர்த்து நீதித்துறையின் கட்டுக்கோப்பைப் பாதுகாப்பதும் ஆகும். வேறுவழியின்றி தாராளவாதிகள் உயர்த்தியப் போர்க்கொடியையும் பா.ச.க. கிழித்தெறிந்தது.

உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் தீர்வு செய்யப்படாமல் வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. ஆனால், நீதிபதிகள் அமர்த்தத்தை வழிமறித்துக் கொண்டுள்ள நடுவண் அரசு நீதிபதிகள் காலியிடங்களை நிரப்பாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. பன்னாட்டு நீதித்துறை நிலையலகுகளோடு(standards) ஒப்பிடும்போது இந்தியாவில் வழக்குகளின் அளவுக்கு தேவையான நீதிபதிகள் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்குதான் இருக்கிறது. ஏற்கெனவே ஒவ்வொரு நீதிபதியும் ஐந்து மடங்கு வழக்குகளைப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஆனால், வழக்குகள் குவிந்துகிடப்பதற்கு நீதிபதிகளைப் பொறுப்பாக்கி  தலைமை அமைச்சரும் சட்ட அமைச்சரும் தலைமை நீதிபதி முன்னிலையிலேயே கிண்டல் பேச்சுகளைத் பேசினர். ஆனால், நீதிபதிகள் அமர்த்தத்திற்கு தடையாய் இருந்ததே தலைமை அமைச்சர் மோடி தான்.

இந்துராஷ்டிரத்தை நிறுவி இந்தியாவின் அரச மதமாக இந்து மதத்தை அறிவிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வுக்கு இலட்சியமாகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று இதற்கு தேவையான சட்டத் திருத்தங்கள் செய்தால் மட்டும் போதாது. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படைகள் சிலவற்றையே மாற்றியாக வேண்டும். ஒருமுறை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அரசமைப்பு சட்ட முகவுரையில்(Preamble) உள்ள ‘மதசார்பின்மை’, ‘சோசலிசம்’ என்ற சொற்களை நீக்க வேண்டும் என்று பேசினார். அப்படி நீக்கிவிட்டால், அரசமைப்பு சட்டத்தின் உள்ளடக்கத்திற்கு தன் விருப்பம் போல் விளக்கவுரை எழுதி இந்தியாவின் அரச மதமாக இந்து மதத்தைக் காட்ட முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். கருதியது. அரசமைப்பு சட்டத்தில் இத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட சில தீர்ப்புகள் தடையாக இருக்கின்றன. கேசவானந்தா பாரதி வழக்கில் 12 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு ஆயம், நாடாளுமன்றப் பெரும்பான்மையின் வழியாகக்கூட அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாதென தீர்ப்பளித்தது. இந்திய அரசின் மதசார்பற்ற பண்பை சட்டத் திருத்தத்தின் வழியாக மாற்றவே முடியாது, அது அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்று எனச் சொன்னது. 1994 ஆம் ஆண்டின் எஸ்.ஆர். பொம்மை வழக்கும் இதை உறுதிசெய்தது. அரசுக்கு மதமில்லை. அரசு மதத்திலிருந்து விலகி நிற்கிறது. அரசு மத விசயத்தில் நடுநிலையாகவும் பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும் என இஸ்மாயில் பரூக்கி வழக்கிலும் புகாரி வழக்கிலும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் 9 நீதிபதிகள் அல்லது 12 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு ஆயத்தால் எழுதப்பட்ட தீர்ப்புகளாகும். இத்தீர்ப்புகள் திருத்தி எழுதப்படாமல் இந்திய அரசமைப்பில் திருத்தம் செய்து இந்திய அரசின் மதமாக இந்து மதத்தை அறிவித்து இந்துராஷ்டிரத்தைப் படைக்க முடியாது. எனவே, இத்தீர்ப்புகள் திருத்தி எழுதப்பட, பா.ச.க. வின் இந்நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யக்கூடிய 12 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் வேண்டும். இந்த இடத்தில்தான் நீதிபதிகள் பணியமர்த்த முறையில் கைவைப்பதை முதல் வேலையாக செய்த பா.ச.க. வின் நோக்கம் தங்கியுள்ளது. இந்த சுற்றில் தன் விருப்பம் போல் நீதிபதிகளைப் பணியமர்த்திக் கொள்ளும் முயற்சியில் பா.ச.க.வால் வெற்றிப் பெற முடியவில்லை. ஆனால், எதிர்காலத்திலும் இதுவே தொடரும் என்று சொல்வதற்கில்லை.

ஆளும் அரசுக்கும் அதன் கொள்கைகளுக்கும் தேவைக்கு அதிகமாகவே ஒத்துழைப்பு நல்கக் கூடிய நீதிபதிகளின் தீர்ப்புகளை இந்த ஐந்தாண்டில் கண்டோம். இந்தப் போக்கை கேள்விக்குள்ளாக்கி வரலாற்று மரபுகளுக்கு மாறாக நீதிபதிகளே நீதித்துறையைப் பாதுகாக்குமாறு ஊடகத்தின் வழியாக மக்களுக்கு அறைகூவல் விடுக்கக் கண்டோம். அந்த நால்வரில் மூவர் பணி ஓய்வுப் பெற்றுவிட்டனர். ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியாக இருக்கிறார். தாராளவாதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீதித்துறையில் அருகி வர, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ வலதுசாரி கருத்தியல் கொண்ட நீதிபதிகளின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது. பல்கலைக் கழக, கல்லூரி வளாகங்களில் வலுவானக் கட்டமைப்புடன் காலூன்றியுள்ள ஆர்.எஸ்.எஸ். இன் மாணவர் இயக்கத்தின் விளைச்சல்கள் அரசு இயந்திரத்தின் வேர்க்கால்கள் வரை பரவி வருகின்றன. வருங்காலத்தில் செல்லமேஸ்வரர்கள் இல்லாமல் போய் தீபக் மிஸ்ராக்களும் ஏ.கே. கோயல்களும் நீதிமன்றத்தில் கொலுவீற்றிருக்கும் போது நீதிமன்றமும் நாடாளுமன்றமும் செயலிழந்த நிலையில், தாராளவாதிகள் கண்ணீரோடும் கனத்த இதயத்தோடும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க, மக்கள் முகாமால் தெருப்போராட்டங்களில் விதிகள் திருத்தி எழுதப்படுவதற்கான கோடுகள் திட்டுத்திட்டாகத் தெரிகின்றன.

ஐயத்திற்கிடமற்ற சீசரின் மனைவி என புளுகப்பட்ட இந்தியக் குடியரசின் நீதித்துறை, பாஞ்சாலியைப் போல் துச்சாதனன்களால் துயிலுரிக்கப்படக் கண்டோம். தாராளவாதிகள் சூதாடிய பாண்டவர்கள் போல் தலைகுனிந்து நின்றார்கள். துரியோதனனின் மண்டையை உடைக்கும் கதையைக் கொண்ட வீமன்கள் யாரும் தாராளவாத முகாமில் இல்லை என்பதே கசப்பான உண்மை.

  • செந்தில், இளந்தமிழகம்
  1. https://www.thehindu.com/specials/in-depth/njac-vs-collegium-the-debate-decoded/article10050997.ece
  2. https://www.livemint.com/Politics/7C4Kz5uSkX5cIYwP4H1JiK/Judicial-Appointments-SC-leaves-task-of-amending-memo-of-pr.html
  3. https://thewire.in/government/no-delay-drafting-mop-judges-appointment-sc-tells-attorney-general
  4. https://indianexpress.com/article/india/mop-on-appointments-sc-puts-its-foot-down-rejects-govt-plan-to-veto-postings-on-national-security-grounds-collegium-4582978/
  5. https://www.livelaw.in/njac-unconstitutional-constitution-bench-41-2/
  6. https://scroll.in/video/864863/democracy-is-in-danger-watch-the-historic-press-conference-held-by-four-supreme-court-judges
  7. https://scroll.in/article/852239/supreme-court-collegium-should-explain-how-justice-jayant-patels-transfer-was-in-public-interest
  8. https://www.indiatoday.in/india/north/story/gopal-subramaniam-to-cji-govt-not-entitled-to-judge-my-character-198139-2014-06-25
  9. https://www.livelaw.in/lookout-notice-issued-against-green-peace-activist-priya-pillai-quashed-by-delhi-high-court/
  10. https://indianexpress.com/article/india/india-news-india/jurists-protest-transfer-of-delhi-hc-judge-who-gave-greenpeace-case-order/
  11. https://caravanmagazine.in/vantage/shocking-details-emerge-in-death-of-judge-presiding-over-sohrabuddin-trial-family-breaks-silence
  12. https://caravanmagazine.in/vantage/loya-chief-justice-mohit-shah-offer-100-crore-favourable-judgment-sohrabuddin-case
  13. https://thewire.in/law/justice-km-joseph-centre-supreme-court-collegium
  14. https://scroll.in/latest/885596/justice-ak-goel-appointed-chairperson-of-national-green-tribunal

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW