தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள் மீதான மோடி அரசின் தாக்குதல்….

11 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 7

தமிழகத்தில் அண்மைக்  காலமாக பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. ஒரகடத்தில்  MSI, ராயல் என்பீல்ட், யமஹா  ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் ஒருபுறமும் துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சாரவாரியத் தொழிலாளர்கள்,   செவிலியர்கள், ஆசிரியர்கள் என அரசுப் பணியாளர்கள் போராட்டம் இன்னொருபுறமும் தீவிரமாக வெடித்து வருகின்றன. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணநிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் எனப் பல்வேறு தொழிலாளர் பாதுகாப்பு கோரிக்கைகளை முன்வைத்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராடிக்   கொண்டிருக்கின்றனர்.

மேற்கூறிய அனைத்து போராட்டங்களின்போதும் நிதி நிலைமையைக் காரணம் காட்டியே அரசு,கோரிக்கையை ஏற்க மறுத்து  தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறது. இப்போராட்டங்கள் யாவும் நீதிமன்ற வழிகளிலோ, பொய் உறுதி மொழிகளின்  அடிப்படையிலோ, காவல்துறை ஒடுக்குமுறையாலோ நீர்த்துப் போகச் செய்யப்படுகிறதே தவிர நிரந்தரமாகத் தீர்க்கப்படவில்லை.

கடந்த காலங்களில் மூலதன முதலைகளுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற பல அரசியல்,பொருளியில் உரிமைகளைக் காங்கிரசை விஞ்சுகிற வகையில் மோடி அரசு வேகமாக  பறித்தது. பொதுத்துறை அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, தவறான நிதிநிலை மேலாண்மையை, மோசமான செலவீனங்களை சரிக்கட்டுவதற்கு ஊழியர்களின் ஊதியத்திற்கு ஒதுக்கப்படுகிற நிதியை அரசு கையாடல் செய்வது, அவர்களின்  சமூகப் பாதுகாப்பு நலத் திட்டங்களை  வெட்டுவது உள்ளிட்ட ஊழியர்  விரோத செயல்பாட்டை  அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆலை முதலாளிகள் உழைப்பாளர்களின் ஊதியமற்ற உழைப்பின்(உபரி மதிப்பு) மதிப்பைப் பெறுவதற்கு தடையாக இருக்கிற அனைத்து தொழிற்சாலை சட்டத்திலும் வேகமாக திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் விரோதக் கொள்கைக்கு சற்றும் சளைக்காத காங்கிரசு உள்ளிட்ட இதர முதலாளிய ஆதரவு கட்சியின் ஆதரவுடன் பல தொழிலாளர் விரோத சரத்துகளை மாற்றிவருகிறது. 1948 தொழிற்சாலை சட்டம்,  அப்ரண்டீஸ் சட்டம் 1961,  1988 சட்டங்களை ஏற்கனவே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்துவிட்டது. இதுபோக, குழந்தைத் தொழிலாளர் தடுப்பு சட்டத்திலும் அபாயகரமான மாற்றங்களை மேற்கொண்டுவருகிறது.

தொழிற்சாலை சட்டம்-1948

இந்த சட்டத்தின்படி, தொழிலாளர் சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கு குறைந்த பட்சமாக மின்நூக்கி ஆலையாக இருந்தால் 10 தொழிலாளர்களும், இல்லாவிட்டால் 20 தொழிலாளர்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற வரைமுறை இருந்தது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆலைகள் 1948 சட்டத்தின் கீழ் அனைத்துத் தொழிலாளர் உரிமைகளையும் வழங்க வேண்டும். ஆனால் இந்த தொழிலாளர் வரைமுறை தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மின்நூக்கி ஆலையாக இருந்தால் 20  தொழிலாளர்களும், இல்லாவிட்டால் 40 தொழிலாளர்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது. பழைய சரத்து நடைமுறையில் இருக்கும்போதே 50 தொழிலாளர்கள் வேலை பார்க்கிற பணியிடங்களில் வெறும் 10 தொழிலாளர்கள் என வருகைப் பதிவேட்டு ஆவணத்தில் பதியப்பட்டு ஏமாற்று வேலை நடந்தது.தற்போது சொல்லவே வேண்டாம்!

பழைய சட்டத்தின்படி பெண் தொழிலாளர்கள்  மாலை 7 மணி முதலாக காலை 6 மணி வரையிலும் ஆலைகளில் பணி செய்வதற்கும் ஆபத்தான பணிகளில் வேலை செய்வதற்கும்  தடை இருந்தது. தற்போது எத்தனை மணி நேரம் வரையிலும் வேலை பார்க்கலாம் எனவும் எந்த ஆபத்து சூழலிலும் பணி புரியலாம் எனவும் வெட்கமற்ற  வகையில்  சட்டத்தைத் திருத்தியுள்ளது அரசு.

மேற்குறிப்பிட்டதெல்லாம் கண்ணில்படும் பனிமுகடு மட்டும்தான். இந்த அரசு மேற்கொண்டுவருகிற தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்களோ எண்ணற்றவை. குறிப்பாக

  • 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு வகையினமாக சுருக்குவது
  • பொது வேலைநிறுத்த முன் அறிவிப்பு காலக்கெடுவை 14 நாட்களில் இருந்து 44 நாட்களாக உயர்த்துவது
  • இதுபோல தொழிலாளர் வேலை நேரத்தையும் தற்போது 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது.
  • தொழிற்சங்கப் பதிவு, ஆவணங்கள் பராமரிப்பில் சிறு தவறு இருப்பினும் சங்கப் பதிவை ரத்து செய்வது
  • முன்பு நூறு தொழிலாளர்களுக்கு குறைவான ஆலைகளில்,தொழிலாளர் பணி நீக்கத்திற்கு அரசு அனுமதி தேவையில்லை என்ற விதி இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை முன்னூறுக்கும் குறைவான தொழிற்சாலை என திருத்த உள்ளார்கள்.
  • ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கையை உயர்த்துவது

எனப் பட்டியில் நீள்கிறது.

மேற்குறிப்பிட்ட அனைத்து  சட்டத் திருத்தங்களும்  நாடாளுமன்றத்தில் ஒப்புதல் ஆவதற்கு முன்பாகவே பா.ச.க. ஆட்சி செய்கிற அரியானா,மகாராஷ்டிரா,இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், அம்மாநில சட்டமன்ற ஒப்புதலின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பா.ச.க. ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் இம்மாதிரியான தொழிலாளர் விரோத சட்டத்திருத்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறையை பொதுசேவை பிரிவில் கொண்டுவந்தது. உத்தரகாண்ட்டில் ஆலை முதலாளிகளே தொழிலாளர் சட்ட நடைமுறை ஆவணங்களைச் சொந்தமாக சான்றழித்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

அருண் நெடுஞ்சழியன், சோசலிச  தொழிலாளர் மையம்  (SWC)

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW