பசுவின் பெயரால் வன்கும்பலின் (mob lynching) கொலைவெறியாட்டம்

09 Apr 2019

பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 5

இந்துத்துவ வன்முறை வரலாற்றில் ஒரு புதிய போக்காக பசுப் பாதுகாப்பு என்பதன் பெயரால் வன்கும்பல் அடித்து கொலைகள் மாதாந்திர செய்தியாகியுள்ளது. அனைந்திந்திய மற்றும் மாநில அளவிலான அரசின் குற்றப் பதிவேடுகள் பசுப் பாதுகாப்புக்காகவென்று நடந்த வன்முறைகளை இனம் பிரித்துக் காட்டுவதில்லை. அவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதும் அம்பலமாகியுள்ளது. மோடி ஆட்சியின் இந்த ஐந்தாண்டுகளில் பசுப் பாதுகாப்புக்காக, முகநூல் பதிவுக்காக, குழந்தைகளைக் கடத்தியதற்காக  என கும்பல் வன்முறைகள் பெருகியுள்ளன. நாட்டின் எங்காவது ஒரு மூலையில், ’மாட்டிறைச்சி வைத்திருந்தார், மாடு திருடினார், மாட்டிறைச்சி உள்ள வாகனம் ஓட்டுகிறார், மாட்டுத் தோலை உரிக்கிறார்’ என்ற காரணங்கள் அல்லது ஐயங்களின் பெயரால் இஸ்லாமியர்களோ தலித்துகளோ தாக்கப்படுவதை இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வன்முறையாக மாற்றியது மோடியின் ஐந்து ஆண்டுகால ஆட்சி ஈட்டிய வெற்றிகளில் முக்கியமான ஒன்றாகும்.

மோடி தலைமையமைச்சராகப் பதவியேற்று இரண்டு வாரத்தில், 2014 ஜூன் 14 அன்று இந்த ஆட்சியின் முதல் வன்கும்பல் அடித்துக்கொலை பூனேவில் நடந்தது. ’முகநூல் பதிவிற்காக’ என்ற காரணத்தின் பெயரால்  28 அகவை நிரம்பிய தகவல் தொழில்நுட்பப் பணியாளர் மோஹ்சின் முகமது சேக் ’இந்துராஷ்டிர சேனா’ என்ற அமைப்பின் உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டார். 2015 இல் இராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வன்கும்பல் அடித்துக்கொலைகள் நடந்தன. அதில் 2015 செப்டம்பர் 28 அன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தாத்ரி மாவட்டத்தின் பிசாரா கிராமத்தில் 52 அகவை நிரம்பிய முகமது அக்லக் என்பவரும் அவரது 22 வயது மகனும் கன்றுக்குட்டியைத் திருடி, கொன்றுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரால் அவர்களது வீட்டிலேயே செங்கற்களாலும் கட்டைகளாலும் ’பசுக் காவலர்களால்’ தாக்கப்பட்டனர். அதில் அக்லக் படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி தரும் செய்தி நாட்டில் உள்ள சனநாயக ஆற்றல்களைக் கவலைக்குள்ளாக்கியது. ஆனாலும் இது தொடர்ந்தது. 2017 ஏப்ரல் 5 அன்று அரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல்வாரில்  பெஹ்லூ கான் என்ற பால் விவசாயியும் அவருடன் இருந்த அறுவரும் சுமார் 200 ’பசுக் காவலர்களால்’ தாக்கப்பட்டனர். இதில் பெஹ்லு கான் கொல்லப்பட்டார். ஆனால், உயிர் தப்பிய அறுவர் மீதும் பசுவதை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்ப்பட்டது!

2017 ஜுன் 23 அன்று தில்லியில் இருந்து மதுரா நோக்கி இரயிலில் பயணித்துக் கொண்டிருந்த ஜுனைத்தும் அவரது இரு சகோதரர்களும் தாக்கப்பட்டனர். மாட்டிறைச்சி வைத்திருந்தனர், ரயில் பெட்டிக்குள் அமர்விடத்திற்காக வாக்குவாதம் செய்தனர், இறைச்சி உண்ணும் பழக்கம் உடையவர்கள் என தாக்கப்பட்டதற்கான காரணங்கள் சொல்லப்படுகின்றன. இம்முறை கத்தியால் தாக்குதல் நடந்ததில், 17 அகவை நிரம்பிய ஜுனைத் படுகொலை செய்யப்பட்டார். ஜுனைத் ஈகைத் திருநாளுக்காக துக்ளகாபாத்தில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு பரிதாபாத்தில் உள்ள தமது சொந்த ஊரான கந்தவாலி கிராமத்திற்குப் போய்க் கொண்டிருந்தபோது இது நடந்தது. 2016 ஜுலை 18 இல் குஜராத்தில் பசு மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தனர் என்பதன் பெயரால் தலித் இளைஞர்கள் மகிழுந்தில் கட்டி வைக்கப்பட்டு, ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டனர். இதன் எதிர்வினையாக குஜராத்தில் மாபெரும் உனா எழுச்சி நடந்தது. 2016 ஆகஸ்ட் 24 அன்று அரியானா மாநிலம் மேவட்டில் ’மாட்டிறைச்சி உண்டனர்’ என்ற பெயரால் பசுப் பாதுகாப்பு குண்டர்கள் பத்து பேரால் இஸ்லாமிய இணையர்கள் கொல்லப்பட்டதோடு இரு பெண்கள்  கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2017 மே 30 அன்று சென்னை ஐ.ஐ.டி. யில் உள்ள சைவ உணவு விடுதியில் ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் மீது மாட்டிறைச்சி உண்டாரென்ற காரணத்தின் பெயரால் வன்கும்பல் தாக்குதல் நடைபெற்றது.

 

2017 ஜூனில் வெளிவந்த indiaspend.com இன் ஆய்வு தரும் புள்ளிவிளக்கங்களில் சில: 2010 இல் இருந்து 2017 வரையான கும்பல் வன்முறைகளில் கொல்லப்பட்டவர்களில் 84% இஸ்லாமியர்கள், அவ்வன்முறைகளில் 97% மோடி ஆட்சிக்கு வந்தபின்(2014 மே மாதத்திற்குப் பிறகு) நடந்தவை.  வன்கும்பல் தாக்குதல், படுகொலை, கொலை முயற்சி, கூட்டுப் பாலியல் வல்லுறவு, ஆடை அகற்றி அடித்தல், வீட்டை எரித்தல், வாகனத்தை எரித்தல், வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசுதல், ஆளையே எரித்தல், சங்கிலியால் கட்டி வைத்து அடித்தல், தூக்கில் தொங்க விடுதல் என கும்பல் வன்முறையின் வகைகள் அனைத்தும் இதில் அடங்கும். 2010 – 2017 வரையான எட்டு ஆண்டுகளில் கொல்லப்பட்ட 25 பேரில் 21 பேர் இஸ்லாமியர்கள், சுமார் 139 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 52% ஐயத்தின் பெயராலானப் புரளிகளால் தூண்டப்பட்டவை. வன்முறைகளின் உச்சம் என்பது 2017 இல் நடந்தவையாகும். இந்தியாவில் 29 மாநிலங்களில் 19 இல் இவை நடந்துள்ளன. 60 வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை பா.ச.க. ஆளும் மாநிலங்களில் நடந்தவை. 8 மாநிலங்கள் காங்கிரசால் ஆட்சி செய்யப்பட்டுகின்றன. சமாஜ்வாதிக் கட்சி( உத்தர பிரதேசம்), ஆம் ஆத்மி(தில்லி), மக்கள் ஜனநாயக கட்சி( ஜம்மு காஷ்மீர்) ஆகிய கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் வன்முறை நடந்துள்ளது. இதில் உத்தரபிரதேசம்(9), அரியானா(8), கர்நாடகா(6), குஜராத்(5), தில்லி(5), இராஜஸ்தான் (5), மத்திய பிரதேசம் (4)  ஆகியவை அதிக எண்ணிக்கையில் வன்முறை நிகழ்ந்த மாநிலங்களாகும். ஆந்திரா, அசாம், இமாச்சல பிரதேசம், கேரளா, ஒடிசா, தமிழ்நாடு, மராட்டியம், பீகார் ஆகியவற்றில் தலா ஒரு தாக்குதல் நிகழ்வு பதிவாகியுள்ளது. 30%  வன்முறை நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோர் மீதே வழக்குப் பதிந்துள்ளது காவல்துறை. 5% வன்முறை நிகழ்வுகளில் குற்றமிழைத்தவர்கள் மீது வழக்குப் பதியப்படவில்லை. 24 தாக்குதல் நிகழ்வுகளில் ஈடுபட்டோர் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தள், வட்டாரப் பசுப் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

 

ஆய்வில் வந்தடைந்த இந்த எண்ணிக்கை எப்போதும் உண்மையான கணக்கைவிட குறைவாகவே இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இதுவரை இந்த வன்முறைகளில் ஈடுபட்டோர் ஒருவர் கூட சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை. திசம்பர் 3 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள புலந்தசஹரின் மஹாவ் கிராமத்தில்  மாட்டிறைச்சி வயல்வெளிகளில் இருக்கிறதென்பதன் பெயரால் காவல் நிலையத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் ’பசு காவலர்கள்’. அக்கூட்டம் வன்முறையில் ஈடுபட காவல்துறையும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த கலவரத்தில் பா.ச.க. உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதோடு காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்டார். வன்முறைக் கும்பலும் துப்பாக்கியால் சுட்டதால்தான் இவர் கொல்லப்பட்டார். இவர்தான் முகமது அக்லக் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி. இவர் கொல்லப்பட்டத்தே காவல்துறையின் சதித்திட்டம் என்கிறார் அவரது தங்கை. இவ்வழக்கில் முதல் குற்றவாளி பஜ்ரங் தள் உறுப்பினர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும்கூட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பசுவின் பாதுகாப்புப் பற்றியே தனது கவலையை வெளிப்படுத்தினார்.

 

2017 மே 23 இல் ’விலங்குகள் வதை தடுப்புக்கான விதிகள்( கால்நடை சந்தையை முறைப்படுத்தல்) என்ற தலைப்பில் விலங்குகள் நலனைக் காக்கவும் விலங்குகளை வதைப்பதைத் தடுக்கவும் என்ற காரணத்தைச் சொல்லி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக மத்திய அரசிதழில் அச்சிடப்பட்டது. விலங்குகள் மீதான வதைகள், கொடுமைகள் என சிலவற்றைப் பட்டியலிட்ட அந்த விதிகள் கால்நடை விற்றல் – வாங்கல் தொடர்பான விதிகளையும் கொண்டிருந்தன. கால்நடைகளை இறைச்சிக்காக, பலியிடுவதற்காக விற்கவோ வாங்கவோ கூடாது; விவசாயத் தேவைகளுக்காக மட்டுமே விற்கவும் வாங்கவும் வேண்டும். அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் ஏராளமான காகித அத்தாட்சிகளுடனே விற்பனை செய்யக்கூடிய விதிகளைக் கொண்டிருந்தது. இந்த அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை ஜுலை 10, 2017 அன்று உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. மாட்டிறைச்சிக்கான விற்பனைக்கு தடை விதிக்கும் அரசாணை என்ற வகையில் நாடெங்கும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பியக்கம் எழுந்தது. இந்த அரசாணைக்குப் பின்னணியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் மராட்டியத்தைச் சேர்ந்த பனியாக் குழு ஒன்று இருந்தது என்றும் அக்குழு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆட்டிறைச்சி ஏற்றுமதியைத் தடுக்க விரும்பியதென்றும் அறியப்பட்டது. பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் விகாஸ் மகாத்மா இந்த மாற்றங்களுக்காக பா.ச.க. அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தவர். உண்மையில் கால்நடை விற்பனை சந்தையை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதன் வழியாக கால்நடை வளர்ப்பைச் சார்ந்துள்ள சிறுகுறு விவசாயிகளை இதில் இருந்து அப்புறப்படுத்தி பெருநிறுவனங்கள், இந்துத்துவ நிறுவனங்கள் நடத்தும் கோசாலைகளின் கைக்கு மாற்றுவதை இலக்காக கொண்டதே இந்த அரசாணை. ஏற்கெனவே கார்ப்பரேட் பொருளியல் கொள்கையால் நலிந்து கிடந்த விவசாய வர்க்கத்தினரிடையே தற்கொலைப் பெருகுவதற்கு இந்த கால்நடை சந்தை சீர்த்திருத்தங்களும் வழிவகுத்தன.

 

பசு புனிதம், அதை இறைச்சிக்காக கொல்வது கொலைக்குற்றமென்று இந்துத்துவ ஆற்றல்கள் பரப்புரை செய்யும் இந்தியாதான் உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. ”2016 ஆம் ஆண்டில் மட்டும் 1.56 டன் மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. 2026 இல் இது 1.93 டன் அளவுக்கு வளரும்” என்று 2017-2026 ஆம் ஆண்டுக்கான OECD-FAO விவசாயக் கண்ணோட்ட அறிக்கை சொல்கிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் இந்துக்களே அன்றி இஸ்லாமியர்கள் அல்ல. சதீஷ் சபர்வால் என்ற இந்துவின் உடையதுதான்  தெலங்கானவில் செயல்படும் இந்தியாவின் ஆகப் பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் – ’அல் கபீர் தனியார் ஏற்றுமதி நிறுவனம்’. சுனில் கபூர் தலைமையில் மும்பையில், மதன் அப்பாட் தலைமையில் தில்லியில், சுனில் சூட் தலைமையில் உத்தர பிரதேசத்தில் என மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அடுத்துஅடுத்து வரும் பெருநிறுவனங்களின் உரிமையாளர்கள் யாவரும் இந்துக்களே! எனவே, மாட்டிறைச்சிக்கான விற்பனை தடை, பசுப் பாதுகாப்புக் கொலைகள் நடக்கும் நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செழிக்கிறதென்றால் இதிலிருந்து பெறப்படும் செய்தி என்ன? அரசியல் வகையில் பசுவின் பெயரால் இஸ்லாமியர்கள், தலித்துகள் மீது வெறுப்பை உமிழ்ந்து தனிமைப்படுத்துவது மட்டுமின்றி பொருளியல் வகையில் கால்நடை வளர்ப்பு, மாட்டிறைச்சி விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்கள், சிறுகுறு விவசாயிகளை நசுக்கி, உள்ளூர் மாட்டிறைச்சி சந்தையை மட்டுப்படுத்தி மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பணம்கொழிப்பவர்களின் பெட்டியை நிரப்புவதாகும்.

 

சங் பரிவாரங்களைச் சேர்ந்த பசுப் பாதுகாப்புக் குண்டர்கள் இந்த தாக்குதல்களை நிகழ்த்தினாலும் இதற்கு அரசின் வாழ்த்தும் காவல்துறையின் பாதுகாப்பும் வெகுமக்களின் ஏற்பும் இருந்து வந்துள்ளது. ஒருவர் கொல்லப்பட்டார் என்பதைவிட அவருடைய வாகனத்தில், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த இறைச்சி மாட்டுடையதா? இல்லையா? என்பதே ஊடகங்களால் அதிகம் பேசப்பட்டது. தாத்ரி (முகமது அக்லக் கொலை) நிகழ்வில் காவல்துறை அப்பாவிகள் மீது வழக்கு தொடுப்பதாகவும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் எச்சரிக்கும் வகையில் பேசினார். பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் தேஜ்பால் நகரின் முயற்சியால் தாத்ரி படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மீண்டும் தேசிய அனல்மின் நிலையக் குழுமத்தில் ஒப்பந்தப் பணி வழங்கப்பட்டது.

”பசுக்களைக் கடத்திக் கொன்றால் நீங்கள் கொல்லப்படுவீர்கள்” என்று புதுதில்லி பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர்  ஜியான் தேவ் அகுஜா ஏப்ரல் 2015 இல் பேசினார். பசுப் பாதுகாப்புக்கென்று கும்பல் வன்முறைகளில் ஈடுபடுவோர் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஒப்பானவர்கள் என்று இராஜஸ்தானில் செயல்படும் பெண்கள் பசுப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் சாத்வி கமல் பேசினார். இப்படி எரியும் நெருப்பில் எண்ணெய்விட்டு கும்பல் படுகொலைப் பண்பாட்டை சங் பரிவாரத் தலைவர்கள் வளர்த்தனர்.  2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது மோடி பேசியவற்றைக் கேட்டால் அவரது சகாக்கள் இப்படி பேசுவதில் வியப்பிருக்காது. மாட்டிறைச்சி ஏற்றுமதியை ’இளஞ்சிவப்பு புரட்சி’ என்று வண்ணனை செய்தார் மோடி. இந்த இளஞ்சிவப்பு புரட்சிக்கு காங்கிரசு திட்டமிடுவதாகவும் இந்தியா உலகிலேயே மிகப் பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நாடென்பதை அறிந்து என் நெஞ்சம் கொதிக்கிறது. நீங்கள் ஏன் மெளனம் காக்கிறீர்கள் என்ற பொருள்பட அவர் பேசினார். இந்துத்துவ ஆற்றல்களின் அடையாளச் சின்னங்களில் ஒருவரான மகாரானா பிரதாப்பின் பிறந்த நாள் நிகழ்வில் பேசும்போது, ’ராணா பிரதாப் பசு பாதுகாப்புக்கு என்று தன் வாழ்வை ஒப்புக்கொடுத்தவர், பசுக்களைக் காப்பதற்காக ரானா பிரதாப் நடத்தியப் போர்களில் இளைஞர்கள் தன்னுயிரை ஈந்தனர். ஆனால் இன்றைக்கு நடப்பதென்ன?’ என்று பேசினார். இப்படியாக, பசுப் பாதுகாப்புக்கு என்று போர் தொடுப்பதை வீரதீர செயலாக முன்வைத்தார் மோடி.

இப்படி எல்லாம் பேசி ஆட்சிக்கு வந்த மோடி ’பசுக் காவலர்களால்’ நடத்தப்பட்ட கொலைகளுக்கு எதிராக எப்படி வாய்திறப்பார்? சர்வதேச அழுத்தம் பெருகியதாலும் உள்நாட்டில் ‘எனது பெயரில் வேண்டா’ம்’ என்று முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களாலும் கும்பல் படுகொலைகளைக் கண்டித்து மோடி இரண்டே முறை வாய்திறந்தார்.  அக்டோபர் 2015 இல் அக்லக் படுகொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்தும் 2017 இல் ஜூனைத் படுகொலையைத் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பின்பும் என இரண்டு முறை பசுவின் பெயராலான வன்முறைகளை ஏற்க முடியாதென சொன்னார் மோடி. ஆனால், அவரது அறிக்கை வந்த சில மணி நேரங்களிலேயே ஜார்கண்ட்டில் மேலும் இரு இஸ்லாமியர்கள் பசுவின் பெயரால் கொல்லப்பட்டனர். எதிர்க்கட்சிகள் வன்கும்பல் அடித்துக்கொலைகளைத் தடுப்பதற்கு சட்டமியற்றச் சொல்லி வலியுறுத்தின. ஆனால், அதற்கு மத்திய அரசு இசையவில்லை. தேசியக் குற்றப் பதிவேட்டில் வெறுப்புக் குற்றங்கள் தனியாக ஆவணப்படுத்துவதில்லை. ஆனால், வட அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய குற்றங்களைத் தனியாக ஆவணப்படுத்தி  எதிர்க்கட்சிகள் இதை வலுவாக வலியுறுத்தவும் இல்லை. மாறாக முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரசோ, ’கோசாலைகள் திறப்போம், பசுப் பாதுகாப்புக்கு என்று சிறப்பு அறிவிப்புகள்’ என இவ்விசயத்தில் பா.ச.க.வோடு போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை உருவாக்குகிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசு தலைமையிலான அரசு,  பிப்ரவரி 5 அன்று பசு வதையில் ஈடுபட்டோர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டதும் நடந்துள்ளது.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வரலாற்றில் இது மூன்றாவது கட்டமாகப் பார்க்கப்படுகிறது. சுதந்திர இந்தியா பிரிவினையோடு ஓட்டிய வன்முறைகளையும் படுகொலைகளையும் கடந்த நூற்றாண்டின் ஆகப் பெரும் இடப்பெயர்வையும் கண்டது. அதன் பிறகு முதல் கட்டத்தின் தொடக்கமாக 1961 இல் ஜபல்பூரில் மதச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பின் அடிப்படையிலான வன்முறை வெடித்தது. அதன் பிறகு தொடர் வன்முறை நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்தன. இரண்டாவது கட்டமாக 1983 இல் அசாமில் வங்காள இஸ்லாமியர்களுக்கு எதிராக வெடித்த வன்முறை, 1984 இல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, 1989 இல் பகல்பூர் படுகொலைகள், 1991 பாபர் மசூதி இடிப்பை ஒட்டியப்  படுகொலைகள், 2002 இல் குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலை என பெரும் எண்ணிக்கையில் மக்களைப் படுகொலை செய்யும் வன்முறைகள் நடந்தன. குஜராத் படுகொலைக்குப் பின்னான மூன்றாவது கட்டத்தில் ஒரே இடத்தில் கொல்லப்படுவோர் எண்ணிக்கை இரண்டு இலக்கத்தைத்  தாண்டுவதில்லை. குறைவான கொலை எண்ணிக்கை, மிக அதிகமான வெறுப்புப் பரப்புரை, மிக அதிகமான சொத்து சேதம், மிக அதிகமான இடப்பெயர்வு என்ற வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்த்தப்படுகிறது. வாட்ஸ்-அப், முகநூல் போன்ற இணைய ஊடகங்களின் வழியாக கும்பல் வன்முறைகள் பரப்பபடுவதால் குற்றமிழைப்போருக்கு அது ஊக்கமளிப்பதாகவும் பாதிக்கப்படுவோருக்கு அளவுக்கு அதிகமான அச்சமூட்டுவதாகவும் அமைகிறது. மேலும் சாவு எண்ணிக்கை குறைவாக இருக்கும் பொழுது அது உள்நாட்டு, வெளிநாட்டு மாந்த உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்ப்பது குறைவாக இருக்கிறது. பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் கொலைகள் இவ்வகையைச் சேர்ந்தவை. ஆர்.எஸ்.எஸ். அரசு, அரசமைப்பை ஏற்காத அமைப்பு மட்டுமல்ல அரசுக்கு வெளியே சமூக கட்டுப்பாட்டின் வழி நாட்டை நடத்திச் செல்ல வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்ட அமைப்பு. ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை ஆயுதபாணி ஆக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக கொண்டு தொடக்கம் முதலே செயல்பட்டு வரும் இயக்கம். பசுப் பாதுகாப்பின் பெயராலான கும்பல் படுகொலைகள் அரசமைப்புக்கு வெளியே குண்டர்களின் வழியாக சமூக கட்டுப்பாட்டை நிறுவும் ஆர்.எஸ்.எஸ். இன் வெற்றிகரமான முன்னேற்றமாகும்.

ஒரு மாந்தரின் உணவு உரிமை, உடை உரிமை, வழிபாட்டு உரிமை ஆகியவை பிறப்புரிமையாகும், அரசமைப்பு சட்டப்படியான அடிப்படை உரிமைகளாகும். ஆதார் வழக்கில் தனி நபர் அந்தரங்க உரிமை, தூக்கு தண்டனைக்கு எதிரான வழக்கில் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை உயர்த்திப்பிடித்த உச்சநீதிமன்றம் ’வன்கும்பல் அடித்துக்கொலைகளுக்கு’ எதிரான வழக்கில் ’தடைசெய்யப்பட்ட இறைச்சி’ என்ற எல்லைக்குள்ளாகவே சிக்கலை அணுகியது.

ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே பண்பாடு என்ற நோக்கில் ’இந்து தேசத்தில் மாட்டிறைச்சி உண்ணும் பண்பாட்டிற்கு இடமில்லை’ என்ற வகையில் ஒரே பண்பாட்டைத் திணிக்கும் காவிக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று பசுப் பாதுகாப்பு அரசியல். சம காலத்தில் காவி பயங்கரத்தின் குருதி சாட்சியாக அக்லக், பெஹ்லூ கான், ஜுனைத் ஆகியோர் பொதுவெளியில் படுகொலை செய்யப்பட்டதை இந்நாடு கண்டது. தன் தந்தை ஓரிடத்தில் காவிக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோவை வாட்ஸ்-அப்பில் மகன் பார்க்க நேர்ந்தது. ’நாடெங்கும் நச்சுக் காற்றொன்று வீசிக் கொண்டிருக்கிறது. சொந்த மண்ணில் அதன் மண்ணின் மக்கள் அந்நியராக உணரும் நிலை ஏற்பட்டு வருகிறது.  வெட்ட வெளிச்சத்தில் ,ஊரார் நேரடியாகப் பார்க்க, நாடே இணைய ஊடகங்களில் பார்க்க நடந்து கொண்டிருக்கும் வன்கும்பல் அடித்துக்கொலைகள் இந்தியாவின் சமூக சனநாயகத்தின் தாழ்வான மட்டத்தைக் காட்டி நிற்கின்றன.

 

 

செந்தில், இளந்தமிழகம்

  1. https://thewire.in/communalism/beef-train-cow-vigilantism
  2. http://archive.indiaspend.com/cover-story/86-dead-in-cow-related-violence-since-2010-are-muslim-97-attacks-after-2014-2014
  3. https://indianexpress.com/article/india/india-news-india/in-dadri-sangeet-som-accuses-up-govt-of-framing-innocent-for-lynching-incident/
  4. https://timesofindia.indiatimes.com/city/noida/akhlaq-murder-suspects-get-jobs-at-ntpc-plant-in-dadri/articleshow/61085617.cms
  5. https://sabrangindia.in/article/man-who-part-lynch-mob-freedom-fighter-la-bhagat-singh-sadhvi-kamal
  6. https://thewire.in/communalism/if-you-smuggle-and-slaughter-cows-you-will-be-killed-bjp-mla-gyan-dev-ahuja
  7. https://scroll.in/article/760006/how-narendra-modi-helped-spread-anti-beef-hysteria
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW