தோழர் முகிலன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதே முதன்மை பிரச்சனை, தமிழக அரசே, பதில் சொல்! – பத்திரிகையாளர்களுக்கு செய்தி

31 Mar 2019

                                                                                          31-3-2018

இன்று காலை நிருபர்கள் சங்கத்தில் தோழர் முகிலன் காணாமல்போனது தொடர்பாக நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள், ,கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்குபெற்றனர். இதில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலத் தலைவர் கண. குறிஞ்சி, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் கென்னடி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த இரா.முத்து, ஒ.பி.டி.ஆர். ஐ சேர்ந்த தோழர் கி.நடராஜன், தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாவேந்தன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவர் இயக்குநர் வ.கெளதமன்,  சுயாட்சி இந்தியா இயக்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவர் கிறிஸ்டினா சாமி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, வெல்பேர் பார்டி ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஜகான், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஸ்டெல்லா மேரி, பூவுலகின் நண்பர்கள் தமிழ்நாடு-பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆர்.ஆர்.சீனிவாசன், எஸ்.ஐ.ஓ வைச் சேர்ந்த சபீர் அகமது, தன்னாட்சி தமிழகத்தைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி, சென்னை தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பிரான்சிஸ், செம்மை சமூகத்தைச் சேர்ந்த மகேஷ், மனிதநேய அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறிஞர் பொன்.ஏழுமலை, வழக்கறிஞர் லிங்கன், தமிழ்வழிக் கல்வி இயக்கத்தைச் சேர்ந்த சின்னப்பா தமிழர் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி 15 நண்பகலில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன், கார்ப்பரேட் அடிமை அரசால் 2018 மே 22 அன்று தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட ஒன்று என்பதை அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தை வெளியிட்டார். அன்றிரவில் இருந்து அவரைக் காணவில்லை. இதற்கு முன்னமே இது தொடர்பில் ஆறு நிமிட காணொளிச் சான்றை வெளியிட்டிருந்தார்.

தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச் சூடு பற்றி தெரிந்து கொண்டேன் என்று சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிப்ரவரி 16 ஆம் நாள் இந்த ஆவணத்திற்குப் பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழானது. ’முகிலன் எங்கே?’ என்று கேட்கும் நிலைக்கு தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டது. வாய்மை வெல்லும், வாய்மை மட்டுமே வெல்லும் என்று ஆவணப்படம் முடிவதற்கிணங்க நீதியின் பிடியில் இருந்து அனில் அகர்வால் – மோடி- எடப்பாடி கூட்டணி தப்ப முடியாது, தப்பவும் விடமாட்டோம். அந்த திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு முடிந்து ஓராண்டு ஆகப் போகும் நிலையில், அரச வன்முறையின் வஞ்சகமான, சூழ்ச்சியை வெளிகொணர்ந்த அந்த ஆவணப்படத்தின் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக செய்யவேண்டியவை

 1. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா  1,2,3,4 ஆகிய நான்கு கேமராக்களின் மே-20, மே-21, மே-22 என மூன்று நாட்களின் முழுமையானப் பதிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். அதே நாளில் காவல்துறையாலும் அவர்களால் நியமிக்கப்பட்டவர்களாலும் எடுக்கப்பட்ட அனைத்துக் காணொளிகளையும் வெளியிட வேண்டும்.
 2. தமிழக அரசு துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைத்துள்ள அருணா ஜெகதீசனின் ஒருநபர் ஆணையம் கடந்த 10 மாதமாக விசாரித்தது தொடர்பான இடைக்கால அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.
 3. உயர்நீதிமன்ற ஆணைப்படி, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அனைவரின் உடற்கூராய்வு அறிக்கையையும் உடனே வெளியிட வேண்டும்.
 4. ஸ்டெர்லைட் குண்டர்கள் நிகழ்த்திய தீவைப்பு சம்பவங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த திருநெல்வேலி எஸ்.பி. அருன்குமார், தீவைப்புப் பற்றி தனக்கு 11.48 க்கு தகவல் வந்தது எனத் தெரிவித்து ஆவணமாக்கியுள்ள தீயணைப்புத்துறை அதிகாரி சண்முகம்,  11.48மணிக்கு தீவைக்கப்பட்டு உள்ளதெனப் பொய் தகவல் தெரிவித்த திருநெல்வேலி காவல் உதவி ஆணையர், காலை சுமார் 11.00 மணிக்கே தீவைப்பு நடந்துள்ளது எனப் புகார்கொடுத்து வழக்குப் பதிவுசெய்து, பலரும் கைதாகி சிறைசெல்ல காரணமான துணைவட்டாட்சியர் சேகர் ஆகியோரை உடனடியாகப் பணிநீக்கம் செய்யவேண்டும்.

 1. துப்பாக்கி சூட்டை, தீவைப்பு சம்பவங்களைச் சதித்தனமாக அரங்கேற்றிய தென்மண்டலக் காவல்துறை தலைவர் ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (டி.ஐ.ஜி.) கபில்குமார் சரத்கர், இவர்களைப் பின்னிருந்து இயக்கிய ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில்அகர்வால் ஆகியோரை உடனடியாகக் கைது செய்யவேண்டும்.

விழுப்புரம் மாவட்டத் துணைக்கண்காணிப்பாளர் செந்தில்குமரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி விசாரணையின் முன்னேற்ற அறிக்கை கடந்த மார்ச் 18 அன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் முகிலனைக் கண்டுபிடிப்பதற்காக இதுவரை 251 பேரை விசாரித்துள்ளோம், 17 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கிறோம் என்று சொல்லப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் இருந்து நமக்கு எழும் கேள்விகள்.

 1. முகிலனின் தொலைப்பேசி எண்ணில் இருந்து கடைசியாக போன குறுஞ்செய்தியைப் பற்றி குறிப்பிடும் காவல்துறை அறிக்கை, எப்போதிலிருந்து, எந்த இடத்திலிருந்து அவரது மூன்று தொலைபேசி எண்களும் செயலிழந்து போயின என்பது பற்றிய விவரத்தை அறிக்கையில் கொடுக்காதது ஏன்? ( பக்கம் 4, வரிசை எண் 4) புலனாய்வுக்கு தேவையான பொறியமைவும் கட்டமைப்பும் அரச அதிகாரமும் கொண்டிருக்கும் சிபிசிஐடியால் தகவல்தொழில் நுட்ப யுகத்தில் இவ்விவரங்களைப் பெறவியலவில்லையா?
 2. முகநூல் மற்றும் வாட்ஸ் அப் பயன்படுத்தும் முகிலன் தொலைபேசியில் அனுப்பிய கடைசி குறுஞ்செய்திக்குப் பிறகும் முகநூல், வாட்ஸ் அப்பைப் பயன்படுத்தியுள்ளார். அந்நேரத்தில் அந்த தொலைபேசி எந்த இடத்தில் இருந்தது என்பதை முகநூல் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களிடம் இருந்து பெறமுடியும். இதை ஏன் இன்னும் செய்யவில்லை?
 3. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என்ற கோணத்தில் தூத்துக்குடியிலும் கூடங்குளத்திலும் விசாரித்ததில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில்  அவர் முக்கியமான நபரில்லை என்றும் யார் மீதும் ஐயம் இருப்பதாக விசாரிக்கப்பட்ட 17 பேரும் சொல்லவில்லை என்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அவர் சிறையில் இருந்தார் என்றும் அறிக்கையில் பதிவு செய்திருக்கிறது சிபிசிஐடி. ( பக்கம் 6,7 வரிசை எண்: 13)  மே 22 அன்று அவர் சிறையில் இருந்ததால் போராட்டத்தில் முக்கிய நபரில்லை என்பதால் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கோ அல்லது அதன் கட்டளைகளுக்கிணங்க துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகளுக்கோ இதில் தொடர்பில்லை என்று சொல்ல வருகிறார்களா? இந்த கோணத்திலான விசாரணையை இவ்வளவு வேகமாக சிபிசிஐடி முடிவுக்கு கொண்டுவருகிறதா? தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில்தான் அந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. அது தொடர்பில் போராட்டக்காரர்களைக் கலவரக்காரர்கள் என்று முத்திரையிட்டு துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முயன்றது அரசு. பா.ச.க. மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள்தான் இந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்காதவர்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டே இன்னொருபுறம் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை நடுவண் புலனாய்வுக் கழகத்திற்கு மாற்றக் கூடாதென்று தமிழக அரசு பிப்ரவரி 19 வரை உச்சநீதிமன்றத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்புதான் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தது என்று அம்பலப்படுத்தும் ஆவணத்தை முகிலன் வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் நிர்வாகமும் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய  காவல் உயர் அதிகாரிகளும் முகிலன் காணாமலடிக்கப்பட்டதற்குப் பின்னணியில் இருக்கலாம் என்ற ஐயம் மேலோங்கி இருக்கிறது. இக்கருத்தைக் கொண்டிருப்போர் பலரும் சிபிசிஐடியால் விசாரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் ஐயம் ஏன் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அல்லது அதை ஏன் இவ்வறிக்கையில் பதிவு செய்யவில்லை?.
 4. பொள்ளாச்சிப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பில்லை என்று அவசர அவசரமாக கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் ஊடகங்களிடம் சொன்னதுபோல் முகிலன் காணாமல் போன வழக்கிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தொடர்பில்லை என்ற பொருள்பட  இவ்வளவு வேகமாக இவ்வறிக்கையில் பதிவு செய்வதேன்? யாரையும் பாதுகாப்பதற்கான முயற்சியா இது? என்ற ஐயம் முகிலன் மீது அக்கறையுடையோருக்கு எழுகிறது.
 5. துப்பாக்கிச் சூடு தொடர்பாக அவர் வெளியிட்ட ஆவணப் படத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேந்திர குமார் யாதவ், அப்போதைய திருநெல்வேலி டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், அப்போதைய  திருநெல்வேலி எஸ்.பி. அருண்குமார், துணை வட்டாட்சியர் சேகர், தூத்துக்குடி மாவட்ட துணை ஆணையர், தீயணைப்புத் துறை அலுவலர் சண்முகம் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனரா?

முகிலன் காணாமல் போனதில் இருந்து மேற்படி கோரிக்கைகள் பின்னுக்குப் போயுள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நடந்துவர்ம் நடுவண் புலனாய்வுக் கழகப் புலனாய்வுக்கு இந்த ஆவணப்படத்தைக் கொடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

முகிலன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதுதான் இப்போதைய உடனடி, அவசரப் பிரச்சனை.   ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் – மோடி – எடப்பாடி கொலைக் கூட்டணியின் பலிபீடத்தில் முகிலனும் ஏற்றப்பட்டுவிட்டாரா? என்ற ஐயத்தைப் போக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு என்பதை நினைவுபடுத்துகிறோம்.

முகிலன் காணாமல் போய் 45 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவரைத் தேடும் பணியில் குறிப்பிடத்தக்க எவ்வித முன்னேற்றமும் இல்லை. இவ்விசயத்தில் தமிழக அரசு காட்டிவரும் மெத்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஒவ்வொரு நபரின் உயிருக்கும் வாழ்வுக்கும் அரசே பொறுப்பு. இனியும் காலந்தாழ்த்தாமால் போர்க்கால அடிப்படையில் முகிலனைத் தேடிக் கண்டிபிடிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தூத்துக்குடியில் திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய மோடி-எடப்பாடி அரசுகள்,  அதற்கு பின்னுள்ளப் சதிகளை அம்பலப்படுத்திய முகிலன் காணாமலாக்கப்பட்ட விசயத்திலும் அலட்சியம் காட்டிவருகிறது. மக்களையும், மக்களுக்காக உழைப்பவர்களையும் தன் எதிரியாக கருதி வேட்டையாடிவரும் இவ்வரசுகளுக்கு தக்கப்பாடம் கற்பிக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

 1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விசாரித்து வந்த தேசிய மனித உரிமை ஆணையம் போதிய காரணங்கள் இல்லாமல் விசாரணையை முடித்துக் கொண்டது ஏற்கதக்கதல்ல. தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பிவிட்டது என்ற காரணத்தை முன்னிறுத்தி 2018 அக்டோபர் மாதத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் இவ்வழக்கை முடித்துக் கொண்டது. ஆனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து உண்மை நிலையை விளக்க முற்பட்ட முகிலன் 45 நாட்களாக காணாமல் போயுள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு குறித்து முழு விசாரணை நடக்கவில்லை என தூத்துக்குடி மக்கள் கடும்கொந்தளிப்பில் உள்ளனர். எனவே, தேசிய மனித உரிமை ஆணையம் துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணையை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும்.
 2. இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் முகிலனின் ஆட்கொணர்வு மனு குறித்த புதிய விவரங்களையும் ஐயப்பாடுகளையும் உள்ளடக்கிய மனு ஒன்றை ஏப்ரல் 8 ஆம் நாள் அன்று சமர்பிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 3. முகிலனைத் தேடிக் கண்டுபிடிப்பதை விரைவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் 5 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
 4. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதென  பிப்ரவரி 15 அன்று ”யார் கொளுத்தியது?” என்ற தலைப்பில் முகிலன் வெளியிட்ட ஆவணப் படத்தைத் தமிழகமெங்கும் திரையிடும் இயக்கம் முன்னெடுக்கப்படும்.

                                                                                                 தோழமையுடன்

                                                                                                       ராஜேஷ்,

                                                                                    காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்

தொடர்புக்கு:    செந்தில்  – 99419 31499 , புகழூர் விசுவநாதன் – 9003867311,   வழக்கறிஞர் கென்னடி – 9443079552

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW