பொள்ளாச்சி பெண்களைச் சீரழித்த கும்பல் நால்வர் மட்டுமா? யாரைக் காப்பாற்ற கோவை மாவட்ட எஸ்.பி. அவசரப்படுகிறார்? – தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்

11 Mar 2019
சிலநாட்களாக பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு என்பவன் தலைமையில் ஒரு கும்பல் பெண்களைக் கடத்திச் சீரழித்துப் படம் பிடித்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி வரும் செய்திகள், வீடியோக்கள் பரவி வருகின்றன. இக்காட்சிகள் பார்ப்போரைப் பதறவைக்கின்றன. சின்னப்பாளையம் பண்ணை வீட்டில் வைத்துத்தான் இக்கொடூரங்களைச் செய்துள்ளனர். சபரிராஜன், வசந்தகுமார், சதீஸ்குமார், பைனான்ஸ் மணிகண்டன் உள்ளிட்டோரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை அம்மா பேரவைச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். புகார் கொடுக்க வருபவரை அச்சுறுத்தும் இச்செயலைத் தொடர்ந்து நாகராஜ், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் விடப்பட்டுள்ளார். தாக்கிய இவருக்கும் குற்றவாளிகளுக்கும் சம்பந்தமில்லையா? ஏன் தாக்கினார்? ஏன் உடனடியாகப் பிணையில் விடப்பட்டார்?
முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு இதில் பலபெரிய புள்ளிகளுக்குத் தொடர்பிருக்கிறது என வீடியோ பரவலாக்கி வந்த நிலையில் கைது செய்யப்பட்டு நால்வரும் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அம்மா ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நாகராஜ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன் முக்கியக் குற்றவாளிக்கும் திமுக நிர்வாகிக்கும் தொடர்பிருப்பதாகக் கூறுகிறார். திமுகவும், அதிமுகவும் இதைத் தேர்தல் பிரச்சினையாக ஆக்கிக் கொள்வார்கள். ஆனால் பொள்ளாச்சி மக்கள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
கோவை மாவட்ட காவதுறை எஸ்.பி. திரு பாண்டியராஜன் தனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் நால்ரைத் தவிர யாரும் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார். காவதுறைக் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கவில்லையா?  எனும் கேள்விக்கு தேவைப்பட்டால் எடுத்து விசாரிப்போம் எனப் பதிலளித்துள்ளார். நான்கு செல்போன், நான்கு வீடியோக்கள்தான் எனக் கூறியுள்ளார். நாகராஜுக்கும் குற்றச் சம்பவங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளார்!
25 நாட்களாக சூழலியல் போராளி தோழர் முகிலன் என்ன ஆனார்? எனக் கண்டுபிடிக்க முடியாத காவல்துறை குற்றவாளிகளைக் காவலில் எடுத்து விசாரிக்காமலே நால்வருக்கு மேல் குற்றவாளிகள் இல்லை என அறுதியிட்டுச் சொல்கிறது. யாராவது சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பினால் நடவடிக்கை எனக் கூடுதலாக மிரட்டியுள்ளார்.
ஒராண்டாகியும் பிணையில் விடப்படாமல் சிறை வைக்கப்பட்டுள்ள கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி ஒருபுறம்,  காதல், கடத்தல், வன்புணர்வு, வீடியோ, பணப்பறிப்பு எனக் கும்பலாக இயங்கிய பின்னணி குறித்த அக்கறையற்று யாரையோ காப்பாற்றும் போக்கு மறுபுறம் எனக் கவலையளிக்கும் வகையில் மாணவிகள், இளம்பெண்களின் வாழ்க்கை சிக்கியுள்ளது.
துல்லியமான விசாரணையில் குற்றச் செயலின் பின்னணியைக் கண்டுபிடிப்பது,
பிணை மறுத்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவது, பெண்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றைச் சாதிக்க பெண்கள் இயக்கங்களும், மக்கள் இயக்கங்களும் கரம் கோர்த்து வீதியில் இறங்க வேண்டிய தேவை உள்ளது. களம் காண்போம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW