‘கொளுத்தியது யார் ? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை! தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் !

17 Feb 2019

15.02.19 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  தோழர் முகிலன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஐ.டி தொழிலாளர் சங்க FITE தலைவர் பரிமளா, பூவுலகு நண்பர்கள் ர.ர.சீனிவாசன்  மற்றும் நேர்மை அமைப்பின் நிர்வாகி பங்கேற்றனர்.
கடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச் சூடு எப்படி திட்டமிட்டு நடத்தப்பட்டது? , ஐ.ஜி., டி.ஐ.ஜி.எஸ்.பி. போன்ற காவல் உயர் அதிகாரிகளின் பங்கு இதில் என்ன? என்பதை அம்பலப்படுத்தும் காணொளி காட்சிகள் அவை (கீழ்வருமாறு). அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதை வெளியிடுவதால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதையும் அவர் பதிவிட்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு  இரவு ரயில் மூலம் மதுரை செல்ல புறப்பட்ட தோழர் முகிலன் கடைசியாக இரவு 10.30 மணிக்கு தோழர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இரவு 2  மணி போல முகநூலில் பதிவிட்டுஇருந்தார். அதற்கு பிறகு இந்நேரம் (17.02.19; 12:30)   வரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மனைவிக்கு  எந்த தகவலும் இதுவரை இல்லை.

2012 மார்ச் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின்போதும் இதுபோலவே தோழர்கள் முகிலன், சதீஸ், வன்னியரசு உளவுத்துறையால் கடத்தப்பட்டனர். அப்போது தோழர் முகிலனை 3 நாட்கள் தலைமறைவாக வைத்து, பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக எவ்வாறு காவல் துறை திட்டமிட்டு வன்முறை செய்தது என்பதை அம்பலப்படுத்தியதால் தோழர் முகிலனை பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழக அரசும் – காவல் துறையும்  செயல்படுகிறது என்று நாம் சந்தேகிக்கின்றோம். தோழர் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை பாதுகாத்திட குரல் கொடுப்போம். அவர் பாதுகாப்பிற்கு தமிழக அரசு பொறுப்பேற்கவேண்டும் .

# மக்கள் முன்னணி ஊடகம்

தோழர்கள்  இரா.சா.முகிலன், மரு.இரா.இரமேஷ், கொ.மோகன்ராஜ், பொன் சந்திரன் ஆகியோர்   15.02.19    அன்று சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை.

==================================================================================

தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & டியுநோ மீடியா வழங்கும்

கொளுத்தியது யார் ? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்

தமிழ் மக்களுக்கு வணக்கம்.

 

 1. தீயணைப்பு அதிகாரி மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் குற்றச்சாட்டு

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நிகழ்வில் மறைக்கப்பட்ட உண்மைகளை ஏற்கனவே நாங்கள் வெளியிட்டோம். அதன் தொடர்ச்சியாக, முக்கிய ஆவணம் ஒன்றைக் காணொலியாக இப்போது வெளியிடுகிறோம்.

மே மாதம் 22, காலை 11:48 மணி. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களால் ஏற்பட்ட தீயினை அணைக்குமாறு திருநெல்வேலி காவல்துறை உதவி ஆணையர் அவர்கள் சிப்காட் தீயணைப்பு நிர்வாக அலுவலர் சி.சண்முகம் அவரிடம்  நேரில் கோரிக்கை வைத்தார்.

செய்தி கிடைத்ததும், ஆட்சியர் வளாகத்தில் நிலை நிறுத்தப் பணியில் இருந்த தீயணைப்பு வண்டியானது,  நிகழ்வு நடந்த இடத்தைக்  காலை 11:50 மணி அளவில் அடைந்தது. அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வாகனங்களில் ஏற்பட்ட தீயினை அணைக்கத் தொடங்கியதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்தின் நிர்வாக அதிகாரி எழுத்துப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார்.

 

அதுபோலவே, துணை வட்டாட்சியர் திரு.சேகர் அவர்கள் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பினர் மக்களிடம் கலவரத்தைத் தூண்டி, பெட்ரோல் குண்டுகளை வீசி, தீ வைத்தார்கள் என்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் மே 22 அன்று மாலை 5 மணிக்குப் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகார் சிப்காட் காவல் நிலையத்தின் 191/18 என்ற முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு ஆகியிருக்கிறது.

இதில் என்ன உண்மை இருக்கிறது என்பது பற்றி நாம் இனி பார்ப்போம்.

 

 1. ஆட்சியர் அலுவலகத்தின் கண்காணிப்புக் காமிராக்கள்

 

இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வரைபடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றது.

 

ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலுக்குக் கிழக்குப் புறம் மக்களின் மனுக்களைப் பதிவு செய்யும் அலுவலகம் அமைந்துள்ளது. அதற்கு முன்புறத்தில் இருக்கும் மேற்கூரையில் இரண்டு கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிழக்குப் பகுதியைக் கண்காணிக்கும் காமிராவை காமிரா 1 என்றும் மேற்குப் பகுதியைக் கண்காணிக்கும் காமிராவைக் காமிரா 2 என்றும் அழைக்கிறார்கள்.

 

இவை போலவே, ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் கிழக்கு மற்றும் மேற்கு மூலைகளில் இரண்டு கண்காணிப்புக் காமிராக்கள் உள்ளன. மேற்கு மூலையில் உள்ள காமிராவைக் காமிரா 3 என்றும் கிழக்கு மூலையில் உள்ள காமிராவைக் காமிரா 4 என்றும் அழைக்கிறார்கள்.

 

2018 மே 22 ஆம் நாளன்று காலை 11:50 முதல் மதியம் 12:10 வரை இந்தக்காமிராக்களின் பதிவுகளி மே 26 ஆம் தேதியன்று ஆட்சியர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டது. அந்தப் பதிவுகளை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதன் முடிவுகளை இனி  நாம் பார்ப்போம்.

 

 1. ஆட்சியர் அலுவலக வளாகத்தை மேற்பார்வையிட்ட தென் மண்டல ஐ.ஜி

 

காலை 11 மணி 50 நிமிடம் 30 விநாடியின்போது வெள்ளை நிற இன்னோவா கார் ஒன்று கிழக்கு எல்லையில் காவல்துறையால் வைக்கப்பட்டிருந்த இரும்பினால் ஆன தடுப்புக்களைக் கடந்து மேற்கு நோக்கி வருவதைக் காமிரா1 இன் பதிவில் பார்க்கிறோம்.

 

மேற்கு நோக்கி வரும் இந்தக் காரானது மனுக்களைப் பெறும் அலுவலகத்தின் முன்பு – அதாவது காமிரா   1 -இன் அருகில் நின்று விடுகிறது.  அப்போது நேரம் 11 மணி 50 நிமிடம் 50 விநாடிகள் ஆகும்.  இந்த நிகழ்வானது காமிரா 3 இலும் பதிவாகி உள்ளது.

 

இந்தக் காரின் முன்புறத்தில் கொடி ஒன்றும், அதன் மேல் புறத்தில் சுழல் விளக்கு ஒன்றும் இருக்கிறது. செவ்வக வடிவில் உள்ள அந்தக் கொடியின் முன்புறம் முக்கோண வடிவத்தில் வெட்டப்பட்டுள்ளது. இந்த வடிவத்தில் அமைந்த கொடியானது காவல்துறையின் மண்டலத் தலைவருக்கு உரியதாகும். எனவே, இந்தக் காரானது தென் மண்டல ஐ.ஜி. க்கானது என்ற முடிவுக்கு வர முடிகிறது. திரு.சைலேஷ் குமார் யாதவ் அவர்களே அன்றைய தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்தவர். அவர்தான் அங்கு வந்துள்ளார் என்ற முடிவை இதன் மூலம் அடைய முடிகிறது.

 1. வளாகத்தில் இருந்த அதிர்ச்சியூட்டும் பொருட்கள்

 

இந்த காலகட்டத்திற்கான காமிரா 1 இன் பதிவில் எவரும் எதிர்பார்க்க முடியாத பொருள் ஒன்றைப் பார்க்க முடிகிறது. அந்தப் பொருள், காமிராவின் வலது புறமாக உள்ளது. அது இரும்பினால் ஆன உயரமான ஒரு ஏணியாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.

 

இதே பகுதியை முகநூலில் இயங்கும் காரி டிவி-யானது கிழக்கில் இருந்து படம் பிடித்துள்ளது. 11 மணி 56 நிமிடம் 32 விநாடியின்போது காமிரா 1 இல் தெரிகின்ற லுங்கி கட்டிய நபரைக் காரி டி.வி.யின் காணொலிப் பதிவிலும், அதே இடத்தில் பார்க்க முடிகிறது. எனவே நமக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் காரி டி.வியின் காணொலியைக் கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும்.

 

அது ஒரு பிரம்மாண்டமான இரும்பு ஏணி. நான்கு சக்கரங்களைக் கொண்டிருக்கும் அந்த ஏணியானது சுமார் 12 அடிக்கும் கூடுதலான உயரத்தைக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கும் எவரும் அதனைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்து போக முடியாது என்ற அளவிற்கு அதன் வடிவமைப்பு மிகப் பிரம்மாண்டமாக உள்ளது. காமிரா 1 மற்றும் 2-ற்கு அருகில் அது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

 

மேற்குப் பகுதியைக் கண்காணிப்பதற்காக இருக்கும் காமிரா 2 இன் பதிவிலும், காமிரா 3 இன் பதிவிலும் நம்மை அதிர வைக்கின்ற மேலும் சில பொருட்களைப் பார்க்க முடிகிறது.

 

ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கம்பி வேலியின் ஓரமாக உடைந்த செங்கல் குவியல் ஒன்று இருப்பதைப் பார்க்கிறோம். மேலும், அதன் அருகில் நீளமான சவுக்குக் கட்டைகளும் போடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

 

இந்தப் பகுதிக்குள்  போராட்டக்காரர்கள் முதல் முதலில் நுழைவது 11 மணி 55 நிமிடம் 24 விநாடியின் போதுதான் என்பதைக் காமிரா 1 இன் பதிவின் மூலம் அறிந்து கொள்கிறோம். எனவே, அவர்கள் வருவதற்கு சுமார் 5 நிமிடம் முன்பாக இந்தப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட முன்னேற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காகவே ஐ.ஜி.சைலேஷ் குமார் யாதவ் அங்கு வந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. சுமார் 1 நிமிடம் 2 விநாடி நேரம் அவர் அந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் காமிரா 1 மற்றும் 3 -இன் பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்கிறோம்.

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடும் போராட்டக்காரர்கள் கலவரத்தை நடத்துவார்கள் எனக் காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்தான் ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ் அவர்கள் இந்த மேற்பார்வையினை நடத்தியிருக்கிறார்.

 

அப்போது எல்லோரின் பார்வையிலும்  முதலில்  எளிமையாகக் கண்ணில்படும் பிரம்மாண்டமான இரும்பு ஏணி ஒன்று கண்காணிப்புக் காமிரா1 மற்றும் 2 இன் அருகில் வைக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்தாலும், அதை அகற்றச் சொல்லி உத்தரவிடவில்லை. அதுபோலவே, ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் முன்புள்ள கம்பி வேலியின் முன்பாகவே உடைந்த செங்கல் குவியல் ஒன்று இருப்பதையும், சவுக்குக் கட்டைகள் இருப்பதையும் அவர் பார்க்க முடிந்தும், பார்க்காதது போல் கண்டுகொள்ளவில்லை; அவற்றை உடனடியாக அகற்றச் சொல்லியும் அவர்  உத்தரவும் இடவில்லை.

 

 

 1. கண்காணிப்புக் காமிராக்கள் யாரால், எவ்வாறு உடைக்கப்பட்டன?

 

ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதிக்குள் போராட்டக்காரர்கள் முதல்முதலில் நுழைவது 11 மணி 55 நிமிடம் 24 விநாடியின் போதுதான் என்பதைக் காமிரா 1 இன் பதிவு தெரிவிக்கிறது. உள்ளே நுழைந்த மக்கள்  கூட்டத்தில் கலந்து  இருக்கும் சிலர், அவர்களுடன்  கூட வருபவர்களில் சிலருக்குக் கட்டளையிடுபவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. கறுப்பு சட்டை, கறுப்பு பேண்ட் மற்றும் தொப்பி அணிந்த சுமார் 6 அடி உயரம் உள்ள ஒருவர் கூட்டத்தில் உள்ள சிலரிடம் காமிரா 1-2 ஐக் காட்டி, உயரமான ஏணியில் ஏறி அதனை உடைக்கச் சொல்லும் காட்சியினைக் காமிரா 1 பதிவு செய்து உள்ளது. அவ்வாறு ஏணியில் ஏறும் நபர்கள் நுழைவாயிலின் முன்புறம் உள்ள கம்பி வேலியின் அருகில் இருந்த உடைந்த செங்கற்களைக் கொண்டே 11 மணி 57 நிமிடம் 34 விநாடியின் போது அந்தக் காமிராக்களை உடைக்கின்றார்கள்.

 

எனவே ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ் அவர்கள் இந்தப் பகுதியை மேற்பார்வை இட்டபோது கண்டுகொள்ளாமல் விட்ட பிரம்மாண்டமான ஏணியும்,  உடைந்த செங்கல் குவியலும்,  சவுக்குக் கட்டைகளுமே கண்காணிப்புக் காமிராக்களைக் குறுகிய நேரத்தில், குறி தப்பாமல் உடைப்பதற்கு உதவியாக இருந்தன என்பதைக் கண்காணிப்புக் காமிராக்களின் பதிவுகள் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்கின்றன.

 

 1. காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூடு

 

ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதியைக் கண்காணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த காமிரா 1 மற்றும் 2-ம் உடைக்கப்பட்ட அடுத்த 15 விநாடிகளில், மேற்கில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் அணி திரண்டு இருந்த காவலர்கள், சொல்லிவைத்தாற்போல, கிழக்கில் உள்ள போராட்டக்காரர்களைத் தாக்கி விரட்டக் கூட்டமாக ஓடிச் செல்கிறார்கள். உருவிய கைத் துப்பாக்கி கொண்டு போராட்டக்காரர்களை நோக்கி சுட்டுக் கொண்டே ஓடும் காவல் அதிகாரி  ஒருவர் காவலர் அணிக்குத் தலைமை தாங்குகிறார். அவரும், பிற காவலர்களும் கிழக்கு நோக்கி சுட்டுக் கொண்டே ஓடும் காட்சியினை சன் டிவி வெளியிட்ட காணொலி ஒன்று காட்சிப்படுத்தி இருக்கிறது.

 

உருவிய கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே காவலர் அணிக்குத் தலைமை தாங்கிய காவல் அதிகாரி  ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலை 11 மணி 57 நிமிடம் 59 விநாடியின்போது கடந்து செல்வதைக் காமிரா 3 இன் பதிவு தெரிவிக்கிறது.

 

இதற்கு 25 விநாடிகளுக்கு முன்னதாகக் காமிரா 1 மற்றும் 2 ஆகியவை உடைக்கப்பட்டுவிட்ட காரணத்தால், கிழக்குப் பகுதிக்குள் போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே சென்ற காவல்துறையினர் தம் தாக்குதல்களை எவ்வாறு அரங்கேற்றினார்கள் என்பதற்கான கண்காணிப்புக் காமிராக்களின் பதிவுகள் இல்லாமல் போய் விட்டது.

 

 

 1. துப்பாக்கி சூடு நடத்திய காவலர் அணிகளின் பின்னால் சென்ற ஊடகவியலாளர்களின் காணொலிப் பதிவுகள்

 

தாக்குதல் நடத்தச் சென்ற காவலர் அணியின் பின்னால் சன் டி.வி.யின் நிருபர் அறிவரசு அவர்களும், காமிராமேனும் வருவதை காமிரா 3 இன் பதிவில் காண முடிகிறது. மேற்கில் இருந்து வரும் அவர்கள் ஆட்சியர் அலுவலக  நுழைவாயிலுக்குள் 11 மணி 58 நிமிடம் 48 விநாடியின்போது நுழைகிறார்கள். நுழைவாயிலின் முன்புறம் அவர்கள் 12 மணி 00 நிமிடம் 52 விநாடி வரை – அதாவது 2 நிமிடம் 6 விநாடிகள் – இருக்கின்றனர்.  அப்போது, ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்குப் போராட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதங்களை அவர்கள் சன் டிவி-யின் காமிராவிலும், தங்கள் சொந்த செல்போன்களிலும் காணொலிப் பதிவுகளாகப் பதிவு செய்துகொள்கிறார்கள் என்பதை காமிரா 3 இன் பதிவில் காண முடிகிறது.

 

அதன் பிறகு, அவர்கள் 12 மணி 00 நிமிடம் 53 விநாடியின்போது, கிழக்கில் உள்ள காவல்துறையால் துப்பாக்கிசூடு  மற்றும்  தாக்குதல் நடத்தப்பட்ட  களத்தை நோக்கிச் செல்லத் தொடங்குகிறார்கள்.

 

 1. ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறிய திருநெல்வேலி டி..ஜி.

 

12 மணி 00 நிமிடம் 53 நிமிடத்தின்போது சன் டிவி நிருபர் அறிவரசும் காமிராமேனும் கிழக்கு நோக்கி சென்றபிறகு ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் முன்பு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.

 

அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்த அடுத்த 30 விநாடிகளில் – அதாவது 12 மணி 01 நிமிடம் 23 விநாடியில் – நுழைவாயிலுக்கு முன்பாக வெள்ளை நிறக் காவலர் வேன் ஒன்றும், வெள்ளை நிற இன்னோவா கார் ஒன்றும் காவலர் அரணாக செயல்பட்ட மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி வந்து நுழைவாயிலின் முன்புறம் வந்து நிற்கின்றன. காவலர் வேனில் ஏ.கே.47 துப்பாக்கியை வைத்துள்ள காவலர் ஒருவர் மேற்கில் இருந்து ஓடி வந்து ஏறிக் கொள்கிறார். அதன் பிறகு வேனும், காரும் தெற்கு நோக்கிச் சென்று மேற்கில் திரும்பி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் நோக்கிச் சென்று விடுகின்றன.

 

வெள்ளை இன்னோவா காரின் முன்புறம் முக்கோண வடிவினால் ஆன கொடி கட்டப்பட்டு இருப்பதைப் பார்க்கிறோம். அதன் கூரையில் சுழல் விளக்கு உள்ளது. நம்பர் பிளேட்டில் ஒற்றை நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சின்னங்கள் யாவும் டி.ஐ.ஜி.க்கான குறியீடுகளாகும். எனவே, இந்தக் காரானது திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யான திரு.கபில் குமார் சரத்கர் அவர்களுக்கானது என்ற முடிவுக்கு வர முடிகிறது.

 

 1. துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட களம்குறித்த விவரணை

 

அடுத்த 30 விநாடிகளில் கிழக்கில் காவலர்களால் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பைக் கடக்கிறார்கள். கடக்கும்போதே காமிராவை இயக்குகிறார்கள். அவர்களின் காணொலிப் பதிவு 12 மணி 1 நிமிடம் 28 நொடியின்போது தொடங்குகிறது. 12 மணி 3 நிமிடம் 54 நொடியுடன் முடிவடைகிறது. 2 நிமிடம் 26 விநாடிகள் நீளும் அந்தக் காணொலியே காவலர்களின் தாக்குதல் களம் எவ்வாறு இருந்தது என்பதை நேரடியாகக் காட்சிப் படுத்திய, எவராலும் மறுக்க முடியாத, ஒரே ஆதாரமாகும்.

 

இரும்புத் தடுப்புகள் கீழே தள்ளப்பட்டுக் கிடக்கின்றன. அதற்குக் கிழக்கே லத்தி ஏந்திய காவலர் ஒருவர் மேற்கை நோக்கியவாறு நிற்கிறார். கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஸ்கூட்டி ஒன்றில் ஒருவர் வருவதை காமிராவின் இடது மூலையில் காண்கிறோம். காமிராவுக்கு முதலில் ஆட்சேபம் தெரிவிக்கும் லத்தி ஏந்தியக் காவலர் பிறகு ஒன்றும் சொல்லாது ஒதுங்கி விடுகிறார். அவருக்குப் பின்புறத்தில் மரத்தின் கீழ் தலை கிழக்கு நோக்கியும் கால் மேற்கு நோக்கியும் தரையில் கிடக்கும் கந்தையாவின் இறந்த உடலை நோக்கி காமிரா நகர்கிறது. உடலுக்கு முன்பாக காமிராவின் இடது மூலையில் கையில் லத்தியுடன் உள்ள போக்குவரத்துக் காவலர் ஒருவர் மேற்கு நோக்கி வருவதைப் பார்க்கிறோம். கந்தையாவின் உடலுக்குப் பின்புறம் ஒரு இரு சக்கர வாகனம் கீழே தள்ளப்பட்ட நிலையில் இருக்கிறது; உடலுக்கு மேற்கில் சுமார் 30 மீட்டர் தொலைவில் இரண்டு வெள்ளை நிறக் கார்கள் தெற்கு-மேற்காகத் தலைகீழாக உருட்டப்பட்டுக் கிடக்கின்றன. கீழே உருட்டப்பட்ட நிலையில் உள்ள இருசக்கர வாகனத்துக்குத் தெற்கில் இருந்து கருப்பு பேண்ட், கருப்பு சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் காமிராவை நோக்கித் தனது இடது கையினைத் தூக்கிக் கொண்டே நடந்து வருகிறார்.  காமிரா அவரைப் பார்த்து ஜூம் செய்யப் படுகிறது. அவரது தலையில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பின்னர் ஜூம் அவுட் செய்து ஆட்சியர் அலுவலகத்தின் தென்கிழக்குப் பகுதியினை பின்புலமாக வைத்து  அவரது கதையினைக் காமிரா கேட்கத் தொடங்குகிறது. அவருக்குப் பின்புறம் மூன்று ஜீப்புகளும் மினி லாரி ஒன்றும் நல்ல நிலையில் நின்று கொண்டிருக்கின்றன. தென்மேற்குத் திசையை நோக்கி காமிரா பார்த்துக் கொண்டிருப்பதால், ஆட்சியர் அலுவலகத்தின் சைக்கிள் ஸ்டேண்டின் நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. பின்னர் தன் பார்வையைக் கீழே கிடக்கும் கந்தையாவின் இறந்த உடலை நோக்கித் திரும்புகிறது. மேற்கில் இருந்து வடக்காக வந்து அவரது உடலைச் சுற்றிக் காண்பிக்கிறது. பின்னர் கிழ்க்குப் புறம் வந்து அவரது உடலை மேலிருந்து கீழாகப் பார்க்கிறது. தூய வெள்ளைகச் சட்டை, மடித்துக் கட்டப்பட்டத் தூய வெள்ளை வேட்டி, கட்டையான கறுப்புக் கொடுவாள் மீசையை கொண்ட கந்தையா தம் இரண்டு முழங்கைகளையும் மடித்து முன்னங் கைகளைத் தூக்கிய, நெஞ்சின் இடது புறம் ரத்தம் கொட்டிய நிலையில் பிணமாகத் தரையில் கிடக்கிறார். இதனைப் பார்த்த பிறகு, கந்தையாவின் வலது காலுக்கு அப்பால் குனிந்து நிற்கும் இளைஞனைக் காண்பிக்கிறது. அவருக்குப் பின்புறம் ஆட்சியர் அலுவலகத்தின் தென்கிழக்கில் உள்ள கம்பி வேலியிட்ட மரங்கள் உள்ள பகுதி தெரிகிறது. வேலியின் அருகில் முன்பு இங்கிருந்த போக்குவரத்துப் போலீசாரும், கேடயம் தான்ங்கிய சுமார் 8 காவலர்களும் இருக்கிறார்கள். காமிரா இளைஞனைச் சுற்றி வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதி – அதாவது காவலர்களின் தாக்குதல் பகுதி – முழுவதும் இளைஞனின் பின்புலமாக உள்ளன. காமிராவின் வலது மூலையில் இளஞ்சிவப்பு ஸ்கூட்டி நிற்கிறது. அதற்குப் பின்புறம் உருண்ட நிலையில் ஜீப்புகள் உள்ளன. 30 க்கும் மேலான காவலர்கள் அங்கும் இங்குமாக, எவ்விதப் பதட்டமும் இல்லாமல் நின்றும் நடந்தும் கொண்டு இருக்கிறார்கள். மர நிழலில் நிற்கும் இளைஞன் காமிராவைப் பார்த்து அழுதுகொண்டே பேசத் தொடங்குகிறான். வலது மூலையில்  கருநீலம் மற்றும் வெள்ளைக் கட்டங்கள் உள்ள சட்டையை அணிந்த நிருபர் அறிவரசு அவர்களின் முதுகுப்புறத்தின் ஒரு பகுதி தெரிகிறது. காமிரா தென்மேற்கு நோக்கித் திரும்புகிறது. இளைஞருக்குப் பின்புறம் சாய்ந்து கிடக்கும் இரும்புத் தடுப்புகளுக்கு அருகில் இருந்து இன்கு நடப்பது அனைத்தையும் காவலர் ஒருவர் காமிராவில் பதிவு செய்து கொண்டிருக்கிறார். மீண்டுமொருமுறை கீழே கிடக்கும் கந்தையாவின் உடலைக் காண்பிக்கிறது காமிரா. மீண்டும் இளைஞனைக் காண்பிக்கிறது காமிரா. அவர் இப்போது கீழே அமர்ந்து கொண்டே அழுது கொண்டே பேசத் தொடங்குகிறார். காமிரா அவரை நோக்கி ஜூம் செய்கிறது. அவர் தன் கதையை சொல்கிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் அங்கு  எடுக்கப்பட்ட காணொலியை நியூஸ் 7 தொலைக்காட்சியும் ஒளிபரப்புகிறது.

 

நியூஸ் 7 தொலைக்காட்சியின்  பதிவானது ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதி – அதாவது கண்காணிப்புக் காமிரா 1 மற்றும் 2 கண்காணிக்க வேண்டிய பகுதி – அந்த நேரத்தில் எவ்வாறு இருந்தது என்பதைத் துல்லியமாகக் காட்சிப் படுத்துகிறது. கிழக்குப் பகுதியின் வடக்கிலும் தெற்கிலும் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்புகள் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடக்கின்றன. சுமார் 10 சீருடை அணிந்த காவலர்களும், சீருடை அணியாத அதிகாரிகளும் இந்த வாகனங்களுக்கு இடையில் நிற்கின்றனர். முன்னதாக நாம் சன் தொலைக்காட்சியில் பார்த்த  ஸ்கூட்டி மேற்கு நோக்கி சென்று தெற்கு நோக்கிப் போவதைப் பார்க்கிறோம்.

 

இந்த ஸ்கூட்டியானது கிழக்கில் இருந்து வந்து தெற்கில் சென்று பின்னர் மேற்கு நோக்கிச் செல்வதை ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் உள்ள கண்காணிப்புக் காமிரா 3 பதிவு செய்துள்ளது. ஸ்கூட்டியானது கிழக்கில் இருந்து தெற்கு நோக்கி நுழைவாயிலுக்கு முன்புறம் திரும்பும் நேரம் 12 மணி  02 நிமிடம் 47 விநாடியாகும். இந்தப் பதிவினைக் கொண்டே நாம் சன் தொலைக்காட்சியின் காணொலி நேரத்தைக் கண்க்கிட்டுள்ளோம்.

 

 1. ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் முன்புறம் நடந்த விசித்திர நிகழ்வுகள்

 

12 மணி 00 நிமிடம் 53 நிமிடத்தின்போது சன் டிவி நிருபர் அறிவரசும் காமிராமேனும் கிழக்கு நோக்கி சென்றபிறகு ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் முன்பு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.

 

அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்த அடுத்த 30 விநாடிகளில் – அதாவது 12 மணி 01 நிமிடம் 23 விநாடியில் – நுழைவாயிலுக்கு முன்பாக வெள்ளை நிறக் காவலர் வேன் ஒன்றும், வெள்ளை நிற இன்னோவா கார் ஒன்றும் காவலர் அரணாக செயல்பட்ட மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி வந்து நுழைவாயிலின் முன்புறம் வந்து நிற்கின்றன. காவலர் வேனில் ஏ.கே.47 துப்பாக்கியை வைத்துள்ள காவலர் ஒருவர் மேற்கில் இருந்து ஓடி வந்து ஏறிக் கொள்கிறார். அதன் பிறகு வேனும், காரும் தெற்கு நோக்கிச் சென்று மேற்கில் திரும்பி தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் நோக்கிச் சென்று விடுகின்றன.

 

 1. டிஐஜியும், இளஞ் சிவப்பு ஸ்கூட்டரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய பாதை

 

காவல்துறைக் கட்டுப்பாட்டு அரணாகத் திகழ்ந்த ஆட்சியர் அலுவலகத்தின் மேற்குப் பகுதியில் 12 மணி 01 நிமிடம் 20 நிமிடம் வரை பணியில் இருந்த திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கர் அவர்கள் அதற்குப் பிறகு அங்கிருந்து கிழக்கு நோக்கி வந்து, தெற்கில் திரும்பி, மேற்கில் சென்று தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் நோக்கி செல்வது தெரிகிறது.

 

இதன் பிறகு சுமார் ஒரு நிமிடம் கழித்து – 12 மணி 02 நிமிடம் 31 நொடியின்போது – கிழக்கில் இருந்து வரும் இளஞ்சிவப்பு ஸ்கூட்டி ஒன்று நுழைவாயில் பகுதியினைக் கடந்து தெற்கு நோக்கிச் சென்று மேற்கில் திரும்பிச் செல்கிறது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த 39 விநாடிகளில் – 12 மணி 03 நிமிடம் 10 விநாடியில் இருந்து 12 மணி 03 நிமிடம் 47 விநாடி வரை – கிழக்கு நோக்கித் தாக்குதலுக்காகச் சென்ற காவலர் அணிகளில் ஒன்றானது மேற்கில் உள்ள காவலர் அரண் பகுதிக்குள் திரும்புகிறது.

 

 1. விசித்திர நடத்தை கொண்ட நபர் ஒருவரைப்பற்றிய பதிவு

மேற்குக் காவலர் அரண் பகுதியில் இருந்து 12 மணி 02 நிமிடம் 55 விநாடியின்போது வந்த ஒருவரின் நடவடிக்கைகள் விசித்திரமாக உள்ளன. கருப்புச் சட்டை வெளிர்நிறப் பேண்ட் அணிந்த அவரது செயல்பாடுகள் யாரையோ எதிர்நோக்கிக் காத்திருப்பது போல இருக்கிறது. 12 மணி 04 நிமிடம் 16 விநாடியின்போது அவர் தெற்கு நோக்கி வேகமாகச் செல்கிறார். கிழக்கு மேற்காகச் செல்லும் சாலை சந்திப்பில் நின்று கிழக்குப் புறமாக 12 மணி 04 நிமிடம் 50 விநாடியின்போது எட்டிப் பார்க்கிறார். பின்னர் வேகமாக ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை நோக்கி 12 மணி 05 நிமிடம் 05 விநாடியின்போது ஓடி வருகிறார். இதே நேரத்தில்தான் நிருபர் அறிவரசும், காமிராமேனும் நுழைவாயிலுக்குள் அவசரம் அவசரமாக நுழைகிறார்கள். அவர்களுக்குப் பின்புறமாக ஓடி வரும் கறுப்பு சட்டை மனிதர் மேற்கு நோக்கித் திரும்பி காவலர் அரண் பகுதிக்குள் 12 மணி 05 நிமிடம் 11 விநாடியின்போது சென்று மறைகிறார்.

 

 1. கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியேறும் காவலர்கள்

 

இந்த நேரத்தில்தான் கிழக்கில் தாக்குதல் நடத்துவதற்காகச் சென்ற பல்வேறு காவலர் அணிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் வழியாக மேற்குக் காவலர் அரணுக்குள் நுழையத் தொடங்குகின்றன. அணிகள் யாவும் மேற்குக் காவலர் அரணை நோக்கியே செல்கின்றன.

 

கிழக்கே தாக்குதல் நடத்தச் சென்ற அணிகளுக்கு உருவிய கைத் துப்பாக்கியுடன் சுட்டுக்கொண்டே தலைமை தாங்கி ஓடிய காவல் அதிகாரி அதே உருவிய கைத்துப்பாக்கியுடன் கிழக்கில் இருந்து நுழைவாயிலுக்குள் 12 மணி 05 நிமிடம் 21 விநாடியின்போது திரும்பி வருவதைப் பார்க்கிறோம். அவரும் பிறரைப் போலவே மேற்குக் காவலர் அரணிற்குள் சென்று விடுகிறார்.

 

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 11 மணி 58 நிமிடம் 06 விநாடியின்போது கிழக்கே தாக்குதலுக்குச் சென்ற திருநெல்வேலி எஸ்.பி. அருண்குமாரும் அவரது பாதுகாவர் அணியும் மேற்குக் காவல் அரணுக்குள் 12 மணி 05 நிமிடம் 45 விநாடிகளில் திரும்பி விடுகின்றனர்.

 

கிழக்கில் தாக்குதல் நடத்தச் சென்ற காவலர் அணிகள் அனைத்தும் 12 மணி 05 நிமிடம் 52 விநாடிக்குள் ஒன்று மேற்குக் காவலர் அரணுக்குள் திரும்பி வந்து ஒளிந்து கொள்கின்றன.

 

 

 1. நான்கு வழிச் சாலைக்குள் துரத்தப்பட்ட போராட்டக்காரர்கள்

 

ஆட்சியர் அலுவலகத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த போராட்டக் காரர்கள் மீது 11 மணி 58 நிமிடத்தில் இருந்து காவலர்கள் துப்பாக்கிசூடும், தடியடியும் நடத்துகிறார்கள். இதனால் போராட்டக் காரர்கள் தாம் வந்த வழியாகவே நான்கு வழிச் சாலையை நோக்கித் – அதாவது தெற்கு நோக்கி – தப்பி ஓடுகிறார்கள்.

 

நான்கு வழிச் சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவாயிலுக்குள் மக்கள் நுழைந்து கொண்டிருப்பதை பரணி டி.வி.யானது நுழைவாயிலுக்குக் கிழக்கே உள்ள “ஜீசஸ் கால்ஸ்” மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்து காணொலி பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

 

பரணி டி.வி.யின் இந்தப்  பதிவில், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வடக்கு நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் மக்கள் திரளானது திடீரென்று திரும்பி வந்த வழியே ஓடுவதைப் பார்க்கிறோம். சிறிது நேரத்தில், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் அனைவருமே விரட்டப்பட்டு விடுகின்றனர்.

 

மக்கள் முதல் முதலாகத் தாம் செல்லும் திசையில் இருந்து திரும்பி வந்த வழியே திரும்பி ஓடத் தொடங்கும் நேரத்தினை 11 மணி 57 நிமிடம் 50 விநாடிகள் என்று காமிரா 3 இன் மூலம் அறிகிறோம். அடுத்த ஒரு நிமிடம் 14 விநாடிக்குள் – அதாவது 11 மணி 59 நிமிடம் 04 விநாடிகளுக்கு உள்ளாக – ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிடுவதைப் பரணி டி.வி.யின் காணொலி வழியாகப் பார்க்க முடிகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் பகல் 12:00 மணி அளவில் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைய முற்படுகின்றனர். அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு வெளியில் துரத்தப்படுகிறார்கள். பரணி டி.வி.யின் காமிராவானது ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தீப்புகை எழுவதைக் காட்டுவதற்கு முன்பாக 07 விநாடிகளுக்கு முன்பும் 2 நிமிடம் 13 விநாடிகளுக்கு முன்பும் துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சப்தமும், மக்கள் நால்வழிச்சாலை நோக்கி மீண்டும் ஓடுவதையும் பார்க்கிறோம். எனவே, முதலில் வெளியேற்றப்பட்ட மக்களால் மீண்டும் ஒரு முறை ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முடியவில்லை என்பது உறுதியாகிறது.

 

 1. காமிரா 3 இன் கடைசி 3 நிமிடப் பதிவு: மக்கள் வெளியேகுண்டர்கள் உள்ளே

 

12 மணி 05 நிமிடம் 52 விநாடி நேரத்தின்போது ஆட்சியர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த, முன்னதாகத் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களில் பெரும்பாலானோர் தங்களின் தங்கும் இடத்திற்குத் திரும்பி விட்டார்கள். இருப்பிடத்திற்குத் திரும்பாத காவலர்கள் நான்கு வழிச் சாலையில் இருந்து மீண்டும் ஒருமுறை மக்கள் ஆட்சியலுவலகத்திற்குள் நுழைந்து விடாமல் இருக்க ஆட்சியர் அலுவலக வளாகத்தைத் துப்பாக்கி கொண்டு காவல் காத்தனர்.

 

ஆனாலும் 12 மணி 06 நிமிடம் 54 விநாடி நேரத்தில் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்குள் பலர் நுழைவதைக் காமிரா 3 இன் பதிவில் பார்க்கிறோம். அவர்களது செயல்பாடுகளில் பதட்டம் என்பது துளியும் இல்லை. மேலும், அவர்களில் சிலர் முன்னதாகக் காமிரா 1 இல் பதிவாகியுள்ளனர். எடுத்துக் காட்டாக, காமிரா 1 மற்றும் 2 ஐ உடைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த கறுப்பு நிற பேண்ட்-சட்டை மற்றும் தொப்பி அணிந்த உயரமான மனிதரை மீண்டும் ஒருமுறை காமிரா 3 இன் கடைசி 3 நிமிடப் பதிவிலும் காண்கிறோம். வேறு இரண்டு பேர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு  காமிரா 3 ஐ உடைக்க மற்றொரு நபரைத் தூண்டி விடுவதும் அவர்தான் என்றும் அறிந்து கொள்கிறோம்.

 

காவலர் அணிகள் அவற்றின் அரணுக்குள் சென்ற பின்னர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் குண்டர்கள் கும்பலானது வளாகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றது. எவ்விதப் பதட்டமும் இல்லாமல் கிழக்கே உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் தொடங்கி மேற்கில் காவல்துறையினரின் அரணாக இருந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தின் முன்புறப் பகுதி வரை இருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கின்றனர். வாகனங்களின் டயர்களும், ரெக்சின் துணியால் ஆன சீட் கவர்களும், பிளாஸ்டிக் பாகங்களும் பெட்ரோல் தீயில் எரிந்து கரும்புகையைக் கக்கி அதுவரை தெளிந்து இருந்த தூத்துக்குடி நகரின் வானத்தைக் கருமையான புகையால் நிரப்பி ஆட்சியர் அலுவலகத்தில் மிகப் பயங்கரமான வன்முறை நிகழ்ந்துள்ளது என்பதை உலகிற்குத் தொலைக் காட்சிகளின் மூலம் பறைசாற்றுகின்றன. கரும்புகையால் நிரம்பிய வானம் ஒருபுறம்; சுடப்பட்டு ரத்தம் தோயந்த தூய வெண்மையினால் ஆன ஆடையை அணிந்து தரையில் கிடக்கும் கந்தையா மறுபுறம். இவற்றைத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பியபோது வானத்தை நிறைத்த கரும்புகைக்கான தீயை வைத்தது போரட்டக்காரர்கள்தான் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

 

என்றாலும்கூட, மே 26 ஆம் தேதியன்று சிசிடிவி பதிவுகள் வெளியிடப்பட்டபோது சன் டிவி-யின் ஒளிபரப்புக் காணொலிக் குவியலில் 18 விநாடிக்கான காமிரா 04-இன் பதிவு இருப்பதைக் கண்டோம். அதில் 16 விநாடிக்கான ஒரு துண்டும், 2 விநாடிக்கான ஒரு துண்டும் உள்ளன. பதிவிற்கான நேரம் அந்தப் படிமங்களில் உள்ளன.

 

12:08:32 இல் இருந்து 12:08:34 வரை இருக்கும் 02 விநாடிக்கான பதிவில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்கிறோம். காவல்துறையின் அரணாகத் திகழ்ந்த மேற்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை 12 மணி 06 நிமிடத்திலிருந்து ஆட்சியர் அலுவலகத்தினைக் கையில் எடுத்துகொண்ட குண்டர் கும்பல் உடைத்துக் கொண்டிருப்பதையும்,  அதனைக் காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் அந்தப் பதிவில் பார்க்கிறோம்.

 

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த சன் டி.வியின் குழுவால் கட்டிடத்தின் உள்ளேயிருந்து ஜன்னல் வழியாக இந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு காணொலிப் பதிவு உண்மையை சந்தேகத்திற்கு இடமின்றி விளக்குகிறது.

 

ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடி வழியாக காமிரா தெற்கு நோக்கிப் பார்க்கிறது. நுழைவாயிலுக்கு முன்புறம் தெற்கு நோக்கி நீளும் சாலையும் கிழக்கு மேற்காக நீளும் முன்புறச் சாலையும் இணையும் இடத்தில் உள்ள நடைபாதையில் ஒரு கும்பல் மேற்கு நோக்கி நிற்கிறது; கற்களை எறிகிறது; விசிலை ஊதுகிறது; கைகளை அசைக்கிறது; யாரையோ வா வா என்று அழைக்கிறது. அந்தக் கும்பலில் காமிரா 1 மற்றும் 2 இனையும், காமிரா 3 ஐயும் உடைக்கத் தூண்டிய கருப்புநிற சட்டை,பேண்ட், தொப்பி அணிந்த உயரமான நபரைப் பார்க்க முடிகிறது.

 

இந்தக் கும்பலை ஜூம் செய்து காட்டிய காமிரா வலதுபுறம் – அதாவது நுழைவாயிலுக்கு மேற்குப்புறம் – திரும்புகிறது. 12 மணி 08 நிமிடம் 35 விநாடியின்போது இந்தக் கும்பலால் உடைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டிருக்கின்றன.

 

ஆட்சியர் அலுவலகத்தில் நின்ற வாகனங்களுக்குத் தீ வைத்துவிட்டு வெளியேறும் நிலையில் இருந்த குண்டர் கும்பலின் தலைவர்களையே சன் தொலைக்காட்சியின் இந்தக் காணொலியானது  வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

 

காவல்துறை பாதுகாப்புடனும், எவ்வித பதட்டம் இன்றி, திட்டமிட்ட அடிப்படையில்  இந்த தீ வைப்பு, கண்காணிப்பு மற்றும் கலவரத்தில் எடுபட்ட கும்பல் ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்பாடு செய்த அடியாள் கும்பல்  என்பதை நாம் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.

 

ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பகல் 12 மணியில் இருந்து காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. 11 மணி 58 நிமிடத்தின்போது  நான்கு வழிச் சாலை நோக்கி துரத்தப்பட்ட மக்களால் அதன்பிறகு ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முடியவில்லை. அப்படி இருக்கும்போது, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த காவலர்களுக்குத் தலைமை தாங்கிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஏன் 12 மணி 01 நிமிடம் 20 விநாடியின்போது தனது தாக்குதல்படையுடன் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்? ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் 12 மணியில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த காவலர் அணிகளை ஆட்சியர் அலுவலகத்தின் காவல் அரணாகத் திகழ்ந்த ஊரக் வளர்ச்சித்துறை  அலுவலகத்திற்குத் திரும்ப ஏன் அவர் உத்தரவிட்டார்?

 

காவலர் அணிகள் அவற்றின் அரணுக்குள் சென்ற பின்னர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் குண்டர்கள் கும்பலானது வளாகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கின்றது. எவ்விதப் பதட்டமும் இல்லாமல் கிழக்கே உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் தொடங்கி மேற்கில் காவல்துறையினரின் அரணாக இருந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தின் முன்புறப் பகுதி வரை இருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கின்றனர். வாகனங்களின் டயர்களும், ரெக்சின் துணியால் ஆன சீட் கவர்களும், பிளாஸ்டிக் பாகங்களும் பெட்ரோல் தீயில் எரிந்து கரும்புகையைக் கக்கி அதுவரை தெளிந்து இருந்த தூத்துக்குடி நகரின் வானத்தைக் கருமையான புகையால் நிரப்பி ஆட்சியர் அலுவலகத்தில் மிகப் பயங்கரமான வன்முறை நிகழ்ந்துள்ளது என்பதை உலகிற்குத் தொலைக் காட்சிகளின் மூலம் பறைசாற்றுகின்றன. கரும்புகையால் நிரம்பிய வானம் ஒருபுறம்; சுடப்பட்டு ரத்தம் தோயந்த தூய வெண்மையினால் ஆன ஆடையை அணிந்து தரையில் கிடக்கும் கந்தையா மறுபுறம். இவற்றைத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பியபோது வானத்தை நிறைத்த கரும்புகைக்கான தீயை வைத்தது போரட்டக்காரர்கள்தான் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

 

காவல்துறை பாதுகாப்புடனும், எவ்வித பதட்டம் இன்றி, திட்டமிட்ட அடிப்படையில்  இந்த தீ வைப்பு, கண்காணிப்பு மற்றும் கலவரத்தில் எடுபட்ட கும்பல் ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்பாடு செய்த அடியாள் கும்பல்  என்பதை நாம் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.

 

 1. வாய்மை மட்டுமே வெல்லும்

 

முதல் சுற்றுத் துப்பாக்கிசூடு 11 மணி 58 நிமிடத்தின் போது நடத்தப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்தியவுடன் வளாகத்திற்குள் கொல்லப்பட்ட நபரைக் காட்சிப்படுத்த தொலைக்காட்சி ஊடகவியலாளர்களில் வெகுசிலரை மட்டுமே தேர்ந்தெடுத்து அதனைக் காவல்துறை நிறைவேற்றியிருக்கிறது.

 

மக்களை ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து வெளியேற்றிய காவல்துறை, அலுவலக வளாகத்தை 12 மணி 06 நிமிடத்திற்குப் பிறகு குண்டர்கள் கையில் ஒப்படைத்துள்ளது; குண்டர்கள் தீ வைப்பில் ஈடுபட்ட நேரத்தில், நான்குவழிச் சாலையில் இருந்த மக்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து விடாதபடி காவல்துறையின் ஒரு அணியானது பார்த்துக் கொண்டது.

 

இந்த நிகழ்வுகள் யாவும் வெறும் 12 நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்ட காரணத்தால் தீ வைத்தது போராட்டக்காரர்கள்தான் என்று காவல்துறை கூறியதையும், அவர்களைத் தூண்டியது புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் மற்றும் மக்கள் அதிகாரத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறியதையும் ஊடகங்கள் நம்பின; அவற்றை வெளியில் ஊதிப் பரப்பி அனைவரையும் நம்ப வைத்தன.

 

உண்மையில், ஐ.ஜி. வந்த நேரமான 11.50 க்கும், சிசி டிவி கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்ட நேரமான 11.57 க்கும், கைதுப்பாக்கியுடன் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ஓடிய காவல்துறை அதிகாரி சென்ற நேரமான 11.57.50 களிலும், சன் டிவி நிருபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து கிழக்கு நோக்கி சென்ற 12.00.31 களிலும், துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த கந்தையாவையும், தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட சந்தோசையும் சன் டிவி, நியூஸ் 7 டிவி, காவல்துறை போட்டோகிராபர் ஆகியோர் பேட்டியும்-படமும் எடுத்துக் கொண்டு இருந்த  12.01 மணிக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேற்குப்பகுதி காவலர்களின் அரண் பகுதியில் இருந்து டிஐஜி தனது காரில் வெளியேறிய 12.01க்கும், காவல்துறை போட்டோகிராபர் தனது இளஞ்சிவப்பு நிற ஸ்கூட்டியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓட்டி செல்லும் நேரமான 12.02 களிலும், சன் டிவி நிருபர் கிழக்கு பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓடி வந்த 12.05.07 களிலும், கையில் கைதுப்பாக்கியுடன் சென்ற காவல்துறை அதிகாரி காவலர்களுடன் திரும்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேற்கில் இருந்த காவலர் அரண் பகுதி நோக்கி ஓடிய 12.05.21 களிலும், நெல்லை எஸ்.பி. கிழக்கில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த நேரமான 12.05.45 களிலும் எவ்விதத் தீ வைப்பு சம்பவங்களும் நிகழவில்லை  என்பதை நாம் சிசி டிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் அறிய முடியும்.

 

எனவேதான அரசால் ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்ட பொய்யை உண்மையாக்க, ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் துப்பாக்கி சூட்டை நடத்த தான் காலை 11 மணிக்கே உத்தரவு கொடுத்து விட்டதாகத் துணை வட்டாட்சியர் சேகர் எழுத்து பூர்வமாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

 

ஆதாரபூர்வமாக நாம் அறிந்த, 12 மணி 06 நிமிடத்திற்குப் பிறகு ஏற்பட்ட தீயினை அணைப்பதற்காகத் தன்னை  11 மணி 48 மணிக்கே திருநெல்வேலி காவல்துறை உதவி ஆணையர் அழைத்ததாகவும், தீயினை 11 மணி 50 நிமிடத்திலிருந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் மூலம் அணைத்ததாகவும்  சிப்காட் தீயணைப்பு நிர்வாக அலுவலர் சி.சண்முகம் அவர்கள் எழுத்துப் பூர்வ ஆவணமாகத் தெரிவித்து இருக்கிறார்.

 

 

 1. செய்ய வேண்டியது என்ன?

 

 • சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2,3,4, என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த நான்கு கேமராக்களின் மே-20, மே-21, மே-22 என மூன்று நாட்களின் முழுமையான பதிவுகளை அரசாங்கம்  உடனடியாக பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

 

 • குறைந்தபட்சம்  சிசிடிவி கண்காணிப்பு கேமரா 1,2 இன் மூலம் மே-22 காலை 11.50 முதல் 11.57.34 விநாடி வரையிலும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா 3,4 இன் மூலம்  மே-22 காலை 11.50 முதல் 12.09.43 வரையிலும் ஆன பதிவுகளை உடனே  வெளியிட வேண்டும். அப்போதுதான்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அனைத்து உண்மைகளையும் உலகம் நாங்கள் சொல்வது போல் நடந்துள்ளதை அறிய முடியும்.

 

 • மே-22, 2018 அன்று  காவல்துறையினர் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும், காவல்துறையால் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் எடுத்துள்ள அனைத்துக் காணொலிகளையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

 

 • மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய போதும், தீ வைப்பு சம்பவத்தையும்  உடன் இருந்து பார்த்து  காட்சிப்படுத்தியுள்ள   ஊடகவியளாலர்கள், குறிப்பாக சன் டிவி நிருபர் அறிவரசு மற்றும் கேமிராமேன்,  நியூஸ் 7 டிவி  நிருபர் ஆகியோர் 11.50 நிமிடம் முதல் 12.10 வரை, அங்கு நடந்துள்ள உண்மைகளை உலகின் முன் தெரிவிக்க வேண்டும்.

 

 • தமிழக அரசு துப்பாக்கி சூடு தொடர்பாக அமைத்துள்ள  ஒரு நபர் ஆணையம், நாட்டிற்க்கு உண்மையை உணர்த்த, உடனடியாக  கடந்த 7 மாதமாக இதுவரை விசாரித்தது தொடர்பான இடைக்கால அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.

 

 • உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட அனைவரின்  உடற்கூறு ஆய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். அரசே சட்டத்தை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும்.

 

திருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் 12.06.08 மணிக்கு கிழக்கிருந்து  காவல்துறை அரண் பகுதிக்குள் வந்து விட்டார்.  அதன் பின் அனில் அகர்வால் அவர்களின் அடியாட்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம்  சாவகாசமாக வந்து வாகனங்களைத்  தீ வைத்து எரித்தும், சிசி டிவி 3, 4 கண்காணிப்பு கேமிராவை உடைத்து முடித்தும்,  பின்பு அவர்கள்  எஸ்.பி  இருந்த காவல்துறை அரண் பகுதிக்குள் வந்த போதும் அவர் எதுவும் செய்யாமல் ஏன் இருந்தார்? என்பதற்கு திருநெல்வேலி எஸ்.பி அருண்குமார் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

 

துணை வட்டாச்சியர் சேகர் அவர்கள்,  புரட்சிகர இளைஞர் முன்னணி, நாம் தமிழர் மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்பினர் மீது தெரிவித்துள்ள புகாருக்கு பதில் அளிக்க வேண்டும்.

 

தீ வைப்பு  பற்றி தனக்கு  11.48 க்கு   தகவல் வந்தது என தெரிவித்து ஆவணமாக்கியுள்ள தீயணைப்பு துறை அதிகாரி சண்முகம்,  11.48 மணிக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது என பொய் தகவல் தெரிவித்த திருநெல்வேலி காவல் உதவி ஆணையர், காலை சுமார் 11.00 மணிக்கே தீ வைப்பு நடந்துள்ளது என புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து, பலரும் கைதாகி சிறை செல்ல காரணமான துணை வட்டாட்சியர் சேகர் ஆகியோரை மக்கள் பணியில் தொடர அருகதை அற்றவர்கள் என உடனடியாக அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

 

திட்டமிட்டு துப்பாக்கி சூட்டை, தீ வைப்பு சம்பவங்களை  சதித்தனமாக அரங்கேற்றிய தென்மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், திருநெல்வேலி சரக காவல்துறை துணைதலைவர் டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கர், இவர்களை பின்னிருந்து இயக்கிய ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

 

மக்கள் நலனில் அக்கறையுள்ள  அனைத்து அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சுற்றுசூழல் இயக்கங்கள், காட்சி/செய்தி ஊடகங்கள்  அனைவரும் ஒருமித்த குரலில் இந்த உண்மைகளை ஓங்கி  உலகம் முழுக்க ஒலிக்க வேண்டும். தூத்துக்குடி மக்களின் அறமான, நியாமான போராட்டத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். கிடைக்கச் செய்வோம்.

 

நன்றி

 

வாய்மை மட்டுமே வெல்லும்!!!

 

  இரா.சா.முகிலன்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்

 

மரு.இரா.இரமேஷ்

கொ.மோகன்ராஜ்

டியுனோ மீடியா

 

பொன் சந்திரன்

பாசிச எதிர்ப்புப் பள்ளி

 

 

 

References

 

SunTV

News7 TV

Puthiya Thalaimurai TV

Sathyam TV

Polimer TV

Velicham TV

OneIndia

KaariTV – Facebook

Youtube

 

Thanks to:

 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு

ஸ்டெர்லைட்க்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை

மக்கள் கண்காணிப்பகம் (People’s Watch)

மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)

மக்கள் அதிகாரம் (Makkal Athikaram)

புரட்சிகர இளைஞர் முன்னணி (RYF)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பு

தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு சங்கம்

தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு சங்கம்

ஆழகடல் விசைப்படகு மீன்பிடி வளர்ச்சி சங்கம்

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம்

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் (TBA)

மக்கள் உரிமை கழகம்

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO)

ஸ்டெர்லைட்க்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகள்

தூத்துக்குடி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW