2019 தமிழக பட்ஜெட் – மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அவலநிலையில் தமிழகம் !

தமிழகத்தில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) கடந்த 8 ஆம் தேதியன்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் திட்டங்களுக்கான மாநில அரசின் நிதி ஒதுக்கீடு, நடைமுறையில் உள்ள சேம நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளே பெரும்பாலும் இருந்தன. இவை போக, மின்சாரப் பேருந்து, கலாம் பெயரில் கல்லூரி, 3 ஆயிரம் ஸ்கூட்டர், சென்னையில் பார்க்கிங் வசதி, உணவு பதப்படுத்தும் பூங்காஅணைகள் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளாக, தமிழக அரசு தாக்கல் செய்கிற பட்ஜெட் அறிக்கையானது, முக்கியத்துவம் உடையதாக மாறி வருகிறது. ஏனெனில் மத்தியில் மோடி அரசு ஆட்சியை கைப்பற்றிய பிறகு மேற்கொண்ட மாற்றங்களான திட்டக்குழு கலைப்பு, ஜி.எஸ்.டி அறிமுகம், 14 ஆவது நிதி குழு ஆணையத்தின் பரிந்துரை ஏற்பு ஆகியவை மாநில அரசின் நிதி வருவாயை வெகுவாக குறைத்து விட்டன. சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தாக்கல் செய்கிற நிதி நிலை அறிக்கையின் போதே அரசின் வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் நிலுவைத் தொகை, சேம நல திட்டங்களுக்கான அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்பான அரசின் புள்ளி விவரங்களாக நம்முன் கிடைக்கிறது.
அவ்வகையில் நடப்பாண்டு நிதி நிலை அறிக்கையிலும் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு,கடன் அதிகரிப்பு ஆகியவை தொடர்கதையாக மாறியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.இந்திய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் உட்கட்டுமான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சேம நல திட்டங்களை வேகமாக அமல்படுத்தி வருகிற தமிழக அரசிற்கு,அதிகரித்து வருகிற நிதிப் பற்றாக்குறை நிலைமையானது இறுதி மணி அடிக்கிற நிலையை முன்னறிவிக்கிறது.
நிதிபற்றாக்குறை:
2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.10,950 கோடியாக இருக்கும் எனவும் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை விட சுமார் 4,000 கோடி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே அதிக நிதிப் ,பற்றாக்குறை கொண்ட மாநிலங்களிலும் தமிழகம் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2012-13 நிதி ஆண்டில் தமிழக அரசிடம் ரூ.1,760 கோடி உபரி நிதி இருந்தது. ஆனால் அடுத்த 2013-14 நிதியாண்டிலேயே உபரி நிதி நிலைமையானது, ரூ.1,790 கோடி நிதிப் பற்றாக்குறையாக மாறியது. அதன் பிறகு நிதிப் பற்றாக்குறை நிலைமை அதிகரித்து செல்கிறதே தவிர குறையவில்லை. 2014-15-ம் ஆண்டு நிதி ஆண்டில் 258 சதவீதமும், 2015-16-ல் 48 சதவீதமும், 2016-17-ல் 67 சதவீதமும் பற்றாக்குறை அதிகரித்து உள்ளன. இந்த பற்றாக்குறை சுமைகளை காரணம் காட்டியே அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகைகளை வழங்காமல் சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என ஏளனம் பேசி நிதி பற்றாக்குறை சுமைகளை ஊழியர்களின் தோல் மேல் மாற்றுகிறார்கள்.
மாநில அரசு செயல்படுத்தும் மத்திய அரசு திட்டங்களுக்கான செலவுத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்காதது நிதிப் பற்றாகுறைக்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. 2017 – 2018 ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புக்கு 560 கோடி ரூபாயும், 2018 – 2019 ஆண்டில் 3,852 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டும் எனவும், கல்வி இயக்கம், இடைநிற்றல் கல்வி இயக்கம் ஆகியவற்றுக்கான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை எனவும் தனது பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் கூறிச்செல்கிறார். மத்திய அரசின் நிதி பங்களிப்பு குறைந்து வரும் போதிலும் தமிழக அரசு சொந்த நிதி ஆதாரங்களை திரட்டி வருகிறது எனக் கூறுகிறார்.
சில நாட்களுக்கு முன்பாக மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜட் தாக்கல் செய்ததற்கு பின்னர் நடைபெற்ற விவாதத்தில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.6 ஆயிரத்து 696 கோடியை மத்திய அரசு கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்துக்கு தராமல் நிலுவையில் வைத்துள்ளது என அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழக மின் பகிர்மான நிறுவனத்தின் இழப்பு
கடந்த நிதி ஆண்டில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ரூ.22,815 கோடி கடனை மாநில அரசு உதய் திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொண்டதாக தனது பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், உதய் திட்டத்தில் இணைந்த பிறகு ஏற்பட்ட கடனான ரூ.9,126 கோடி உதய் திட்டக் கடனை மானியமாக மாற்றியுள்ளதாகவும் 2019-20ம் ஆண்டுக்கு ரூ.4,563 கோடி கடனையும் அரசு மானியமாக மாற்றும் எனவும் உரையில் நிதி அமைச்சர் குறிப்பிடுகிறார்
கடந்த 2017 – 18ல், மின் வாரியம், 4,720 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளது. 2016-17 இல் ஏற்பட்ட இழப்பு ரூ.22,815 கோடியாகும். அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பிற்கு தமிழக மின் பகிர்மான நிறுவனத்தின் இழப்பும் முக்கிய காரணமாக உள்ளது. மத்திய அரசின் உதய் திட்டத்தில் மாநில அரசு இணைந்த பிறகு ஏற்பட்டு செலவுகள், மின் கட்டண வசூலில் பின்னடைவு, ஆகியவை மின் பகிர்மான நிறுவன இழப்பிற்கு காரணமாகியுள்ளன. மேலும்,ஒப்பந்த ஊழல்கள், நிலக்கரி கொள்முதல், கார்ப்பரேட்களுக்கு வழங்குகிற சலுகை உள்ளிட்ட அம்சங்களை தணிக்கைக்கு உட்படுத்தினால் மின் பகிர்மான நிறுவனத்தின் இழப்பிறகான காரணங்களைகண்டறிய இயலும்.
அதிகரிக்கின்ற கடன் சுமை:
ஜி. எஸ். டிக்கு பிறகு மாநிலங்களின் வரிவிதிப்பு உரிமைகள் பறிப்பு, 14-வது நிதிக்குழு பரிந்துரையில் மத்திய அரசின் ஆதரவில் செயல்படும் திட்டங்களுக்கான நிதியை 75 சதவீதத்தில் இருந்து 60சதவீதமாகக் நிதி அளவு குறைப்பு,மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஆகியவை தமிழகத்தின் நிதி நிலைமகளை மென் மேலும் மோசமாக்கி வருகின்றன.
தனது நிதி வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு மென் மேலும் கடன் பெற்று வருகிறது.தனது பட்ஜெட் உரையில் தமிழக அரசுக்கு ரூ. 3.97 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட ரூ. 42 ஆயிரம் கோடி நடப்பாண்டில் அதிகரித்திருக்கிறது.
கஜா புயல் நிவாரணத் தொகையில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆதாரம் வரையிலும் மத்திய ஆட்சியாளர்களின் தயவை நம்பியே ஒரு மாநில அரசு செயல்படுவது என்பது மத்திய அரசு கூறுகிற கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். வளர்ச்சிக்கு செலவு செய்ய வேண்டிய அரசு, வாங்கியக் கடனுக்கு வட்டியை செலுத்துவதைத்தான் இந்த பட்ஜெட் தெளிவாகக்காட்டுகின்றது எனவும் வருவாயை பெருக்குவதற்கு எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் மாநில அரசினுடைய கடன், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிமாகி நிதி மேலாண்மை ஒரு மோசமான தோல்வியை சந்திக்கக்கூடிய நிலையில் இந்த பட்ஜெட் அமைந்திருக்கின்றது என இந்த பட்ஜெட்டை ஒரு உதவாக்கரை பட்ஜெட்டாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சிக்கலான வளர்ச்சி கட்டங்களை கொண்ட பல்வேறு இந்திய மாநிலங்களை ஒற்றை சந்தை,ஒற்றை நாடு என்ற முழக்கத்தில் மையப்படுத்தப்பட்ட குடையின் கீழ்,ஒற்றை அதிகார மையத்தின் ஆட்சி செய்வதில் பாஜகவிற்கும் காங்கிரசிற்கும் எந்தவிதமான கொள்கை வேறுபாடும் இல்லை.
பெரும் வேலைவாய்ப்பின்மை, விவசாய நெருக்கடிகள் தீவிரமாகிவருகிற நிலையில், பெரும் கடன் மற்றும் நிதிச் சுமையில் மாநில அரசுகள் சிக்கியிருப்பது மக்களை கைவிடுவதைத்தான் முன் அறிவிக்கிறது. வெள்ளம், வறட்சி, புயல் காலங்களில் மக்கள் கைவிடப்படுகின்றனர், விவசாய நெருக்கடிகளின் போதும் வேலைவாய்ப்பின்மையின் போதும் மக்கள் கைவிடப் படுகின்றனர்.
வாக்கு வங்கி தேர்ந்தல் அரசியல் லாபத்திற்காகவும் கூட்டணி சீட்டு பங்கீட்டிற்காகவும் மாநிலத்தின் தற்சார்பு அரசியல் பொருளியில் உரிமைகள் மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. கொள்ளை ஆட்சியை காப்பற்றிக்கொள்ள இந்துத்துவ பாசிச பாஜகவுடன் எடப்பாடி அரசு போட்டுள்ள அதிகார அரசியல் கூட்டணி மக்களை நிற்கதியாக கைவிட்டுவிட்டது.கடந்த காலத்தில் மாநில சுயாட்சி முழக்கம் எழுப்பிய திமுக அதிகார அரசியலில் அதை கரைத்துக் கொண்டுவிட்டது.இனி தமிழகத்தின் எதிர்காலமானது மத்திய அரசின் நகராட்சி மன்றமாக நீடிப்பதா அல்லது மத்திய அரசிடம் இருந்து பிரிந்து செல்கிற சுயநிர்ணய உரிமைக்காக போராடுவதா என்ற இரு தேர்வில் மட்டுமே அடங்கியுள்ளது!
அருண் நெடுஞ்சழியன்
ஆதாரம்:
https://tamil.thehindu.com/tamilnadu/article26211631.ece