ஜனவரி 29 – ஈகி முத்துக்குமார் பத்தாம் ஆண்டு நினைவில்….முன்னேற்றக் கழகங்களிடம் இருந்து மக்களின் கைக்கு அரசியல் மாறும் ஊழியைத் தொடங்கி வைத்த தீப்பொறி – முத்துக்குமார்!

28 Jan 2019

இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடக்கும் இன அழிப்புப் போரைத் தமிழகம் பொருட்படுத்தாது என்றுதான் கலைஞரும் ஜெயலலிதாவும் சோனியாவும் சிதம்பரமும் பிரணாப் முகர்ஜியும் எம்.கே.நாராயணனும் சிவசங்கர மேனனும் எண்ணியிருந்தனர். இணைய ஊழியில் இன உணர்வுக்கு இடமில்லை என்றிருந்தனர். இனத்துக்காக, மொழிக்காக உயிரைக் கொடுப்பது எல்லாம் 20 ஆம் நூற்றாண்டோடு மலையேறிப் போய்விட்டது என்றிருந்தனர். இந்த எதிர்பார்ப்பில் தீயள்ளிப் போட்டான் முத்துக்குமார். 2019 சனவரியில் 29 இல் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் முன்பு போரை நிறுத்த வலியுறுத்தி அந்த இளைஞன் தீக்குளித்தான். அதிலிருந்து மே 19 க்குள் முத்துக்குமாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஜெனிவாவிலும் மலேசியாவிலும் என மேலும் 16 பேர் இலங்கையில் நடக்கும் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி தீயில் கருகினர்.

இன அழிப்புப் போரை இந்திய அரசு நிறுத்த முயலவில்லை. முள்ளிவாய்க்காலில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடியதோடு மொத்தமாக ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பத்தாண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரும் போராட்ட நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இனக்கொலை செய்த இலங்கை மீது தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றத்திலும் இலங்கையின் வட மாகாணசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கான  நீதியின் கதவுகளைத் திறப்பதற்கு இன்னும் வெகுதூரம்  பயணிக்க வேண்டிய நிலையில் உலகத் தமிழினம் இருக்கிறது.

கஜாப் புயலைப் போல் தமிழக அரசியலைத் தாக்கிய இந்த தீக்குளிப்புகளின் தொடர்ச்சியாய் வெகுமக்களிடம் தமிழ்த்தேசிய உணர்வு மேலெழத் தொடங்கியது. இந்திய அமைதிப் படைக் காலத்தில் இந்தியாவின் மீது மயக்கம் கொண்டிருந்த ஈழத் தமிழர்களுக்கு அதன் விரிவாதிக்க முகத்தை அம்பலப்படுத்தியது திலீபனின் உயிர் ஈகம். அது போல், இந்தியா இலங்கைக்கு துணைப் போவதை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அம்பலப்படுத்தி அதன் பசுத்தோலை உரித்தான் முத்துக்குமார்.

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி!” என்று இந்திய அரசின் பொய் முகத்தை தனக்கு தீ மூட்டி தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினான்.

அடுத்து, தமிழினக் காவலர், உலகத் தமிழினத் தலைவர் என்றெல்லாம் கலைஞரைப் பற்றிக் கட்டமைக்கப்பட்டிருந்த பொய் மூட்டைகளை முத்துக்குமாரின் ஈகம் பொசுக்கியது. கொத்துக் குண்டுகளாலும் எறிகணைகளாலும் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் என மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்ட போதுகூட காங்கிரசுடனான கூட்டணியைக் கைவிடவில்லை கலைஞர்.

”கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்து கொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைறேவற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எைதயும் சாதிக்காது மக்கேள! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமைனயில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகேவா, தமிழருக்காகேவா செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறதே…” என கலைஞரின் அரசியலை அரைப்பத்தியில் கல்வெட்டாக்கினான் முத்துக்குமார்.

போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உண்மையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்கேள தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)” என்று ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பு அரசியலை சுட்டெரித்தான் முத்துக்குமார்.

மனு கொடுங்கள். நீதிமன்ற படியேறுங்கள். கடிதம் எழுதுகிறோம். சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறோம். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகிறோம். அரசமைப்பில் இடமில்லை. நீதிமன்ற உத்தரவு இது. தேர்தலில் எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று பம்மாத்து அரசியல் செய்து கலைஞரும் ஜெயலலிதாவும் தமிழர்களைத் தன்வயப்படுத்தி இருந்தனர்.

கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியலில் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகைள எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள்.” என்றிந்த அட்டைக் கத்தி தலைவர்களைத் தோலுரித்தான் முத்துக்குமார். இந்த தலைவர்களை மட்டுமல்ல இலட்சக்கணக்கில் மாநாடுகளுக்கு ஆள் திரட்டிக் காட்டி தேர்தல் அரசியல் இடங்களுக்கு பேரம் பேசும் பொருளாய் மட்டுமே மக்களைப் பாவித்த தலைவர்களின் எல்லைகளைக் காட்டிச் சென்றவன் அவன்.

மக்கேள யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?” என்றிந்த நெஞ்சை சுடும் கேள்வியைக் கேட்டுப் போனவன் முத்துக்குமார்.

இந்த பத்தாண்டுகளில் பச்சிளம் குழந்தை பாலச்சந்திரன் மார்பில் குண்டடிப் பட்டு செத்துக் கிடந்த புகைப்படங் கண்டு தமிழகம் தழுவிய மாணவர் போராட்டம் நடந்தது. கூடங்குளம் அணு உலைக்கெதிராய் ஆண்டுக்கணக்கில் இடிந்தகரைப் போராட்டம் நடந்தது. மீத்தேன், ஹைட்ரோகார்பனுக்கு எதிராய் திருநகரியும் கதிராமங்கலமும் நெடுவாசலும் போராட்டத்தில் இறங்கின. சல்லிக்கட்டு உரிமை மீட்க தமிழகமே களம் இறங்கியது. காவிரி உரிமைக்காக தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்தன. ஸ்டெர்லைட்டை விரட்டியடிக்க சாதி, மதம் கடந்து தூத்துக்குடி மக்கள் போராடினர். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும் மக்களும் களம் கண்டனர்.  இப்படி நடந்த எந்தப் போராட்டங்களிலும் தேர்தல் அரசியலில் விலைபோகும் கட்சிகளை மக்கள் நம்பவில்லை; போராட்டத்திற்குள் நுழைய அவர்களை அனுமதிக்கவில்லை; தெருப் போராட்டங்களை மட்டுமே நம்பினர்.  என்பதற்குப் பின்னால் முத்துக்குமார் தன் ஈகத்தால் மூட்டிய நெருப்பு கனன்று கொண்டிருக்கிறது.

கலைஞரும் ஜெயலலிதாவும் கண்ணை மூடிவிட்டதால் அவர்களால் பதவி, சொத்து, சுகம் அடைந்தோரெல்லாம் அவர்களைக் கடவுளாக்க முயல்கின்றனர். அதுவும் குறிப்பாக, முள்ளிவாய்க்கால் பெருந்துயரின்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த கலைஞரை ‘குன்றம் நிகர்த்த கொள்கையர்’ என பட்டம் சூட்டுகின்றனர். ஆனால், அந்த பகட்டுப் புகழாரங்களை சுட்டெரித்த வரலாற்று நாயகன்தான் முத்துக்குமார்.

ஓர் அரசியல் தலைவரைப் பொறுத்தவரை அவர் உயிரியல் வகையில் எப்போது இறந்தார் என்பதைவிட அவர் அரசியல் வகையில் எப்போது இறந்தார் என்று மதிப்பிடப்படுவது உண்டு. சவகர்லால் நேரு உயிரியல் வகையில் 1964 மே 27 அன்று இறந்தார். ஆனால், அவர் அரசியல் வகையில் 1962 ஆம் ஆண்டு இந்திய சீனப் போரில் தோல்வியடைந்த போதே அதாவது 1962 நவம்பர் 21 ஆம் நாளே இறந்துவிட்டார் என்று சொல்வதுண்டு. சுதந்திர இந்தியாவின் சிற்பிகளில் ஒருவராக, அணிசேரா நாடுகளின் மூலைக்கல்லாகவும் இருந்த நேரு நிலைகுலைந்து போய் அமெரிக்க உதவியை நாட நேர்ந்தது!

இது போலவே, கலைஞர் 2018 ஆகஸ்ட் 7 அன்று உயிரியல் வகையில் இறந்தாராயினும் வரலாற்று நோக்கில் 2009 சனவர் 29 அன்று முத்துக்குமார் தீக்குளித்து ஈகியான போதே அரசியல் வகையில் இறந்துவிட்டார். என்றைக்கு இந்த மண்ணில் தன் உயிரைத் துச்சமாக மதித்து தமிழினத்திற்கென்று ஒருவன் தீக்குளித்து சாக நேர்ந்ததோ அன்றைக்கே கலைஞர் பற்றி கட்டமைக்கப்பட்ட கண்ணாடிப் புகழாரங்கள் நொறுங்கி போயின. அதற்குப்பின், ’இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று தமிழகத்தில் எழுந்த முழக்கத்தையும் ’ஈழத் தாய்’ என்று ஒரு சாராரால் ஜெயலலிதாவுக்குப் புகழாரம் சூட்டப்பட்டதையும் ’தமிழினத் துரோகி’ என்று ஒரு சாராரால் கலைஞர் வசை பாடப்பட்டதையும் இந்தப் பின்னணியில் பொருத்திப் பார்க்கலாம். வரலாற்றைப் பொருத்தவரை ஜெயலலிதா ஊழல் குற்றவாளியாக சிறைவைக்கப்பட்டுள்ளார். கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தைவிட அவரது பதவி அரசியலால் விளைந்த முள்ளிவாய்க்கால் முற்றமே  வரலாற்றில் அவரைப் பற்றிய மதிப்பீட்டுக்கான கட்டியங் கூறும்.

2004 இல் இருந்து 2014 வரையான காங்கிரசின் பத்தாண்டு கால ஆட்சியில் புழுத்துப் போன ஊழலாலும் விவசாய நெருக்கடியாலும் வேலையின்மையாலும் மக்கள் பா.ச.க.வைப் பதவியில் அமர்த்தினர். ’ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே மொழி’ என்ற திசையில் நாட்டை இழுத்துச் செல்கிறது பா.ச.க. இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராகவும் பறிபோகும் மாநில உரிமைக்கெதிராகவும் அணையா நெருப்பாய்க் கொதித்துக்கிடக்கும் தமிழகம் மோடிக்கு வெறுப்பூட்டுவதாக இருக்கிறது. மோடி ஆட்சியில் பெருகி ஓடும் மக்களின் கண்ணீர் ஆற்றில் குளித்து தமது கரைகளை கழுவிக் கொண்டு மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று தி.மு.க.வும் காங்கிரசும் புனிதக் கூட்டணியாக வலம் வர விரும்புகின்றன. தமது கடந்த கால தவறுகள் பற்றி எந்தக் குற்றாய்வும் இன்றி, ”எங்களை விட்டால் வேறு நாதியில்லை” என்று சொல்கின்றனர்.

2008 இன் பிற்பாதியில் இருந்து 2012 வரையிலான முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னுமான  மூன்றாண்டு காலத்தில் அரசியல் பயின்ற இளைஞர் கூட்டத்தில் ஒருசாராரும் பா.ச.க. எதிர்ப்பு என்றப் பின்னணியில் தி.மு.க. வைப் பாகுபலியாகவும் தி.மு.க., காங்கிரசு கூட்டணியை மாற்றாகவும் சொல்லக் காண்கிறோம். பா.ச.க. வெறும் மதவாதக் கட்சி மட்டுமல்ல, இந்தியாவிற்குரிய குறிப்பான வரலாற்றுச் சாலையில் அதன் பயணத்திற்கான எரிபொருள் உலகமய கார்ப்பரேட் பொருளியல் கொள்கைதான். பா.ச.க. காவி கட்சி மட்டுமல்ல, காவியும் கார்ப்பரேட்டும் இரண்டறக் கலந்த கட்சி. உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளியல் கொள்கையில் இருந்து வேறுபட்ட கொள்கை காங்கிரசுக்கும் இல்லை, தி.மு.க.வுக்கும் இல்லை. சாவின் விளிம்பில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நிறுத்தப்பட்டிருந்த போதே பதவியை இறுகப் பிடித்துக் கொண்டு மக்களைப் புறந்தள்ளியவர்கள், தமிழ்நாட்டு மக்களை வேறெந்த நெருக்கடியின்போது பதவி ஆசையை மீறி காத்துவிடப் போகிறார்கள்? பா.ச.க. வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது எந்த அளவுக்கு தேவையோ அதே அளவுக்கு மக்களிடமிருந்து மக்களுக்கு அரணாக புதிய அரசியல் ஆற்றல் எழுந்து வர வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, முள்ளிவாய்க்காலின் போதே சாயம் வெளுத்துப் போன இக்கட்சிகளை ஆட்சியில் அமர்த்திவிட்டால் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்களுக்கான வரலாற்று ஆசான் முத்துக்குமார்.

ஒருவேளை இந்தக் கூட்டணி தேர்தலில் மக்களிடம் வாக்குகளைப் பெறலாம். ஆனால், தேர்தலில் மக்கள் வாக்களிப்பதில் இருந்து மட்டுமே மதிப்பிட வேண்டுமானால் சம்பந்தனையும் சுமந்திரனையும் ஈழத் தமிழர்கள் நம்பியிருப்பதாகவும் முப்தி முகமதுவையும் ஓமர் அப்துல்லாவையும் காஷ்மீரிகள் நம்பியிருப்பதாகவும் மதிப்பிடுவதில் போய் முடிந்துவிடும். ஆனால், ஈழத்திலும் காஷ்மீரிலும் சரி மக்கள் தெருப் போராட்டங்களை நம்பி இருக்கின்றனர். தேர்தல் கட்சிகளுக்கு தேர்தல் ஒன்றே பிழைப்புக்கான வழி. ஆனால், மக்களுக்கு அவர்தம் அரசியல் போராட்டத்தில் தேர்தலும் ஒரு களம். தெருதான் முதன்மைக் களம். 21 ஆம் நூற்றாண்டில் தெருக்களை நோக்கிப் போராட்ட ஆற்றலாய் தமிழர்களை இழுத்துவந்த முதல் நெருப்பு முத்துக்குமார்.

முத்துக்குமார் மூட்டிய நெருப்பின் சூட்டில் ஒரு போராட்ட நீரோட்டம் மண்ணுக்கடியில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் மேல்பரப்பில், முள்ளிவாய்க்கால் பிணக் குவியலையும் தூத்துக்குடியில் சிந்திய குருதியையும் காய்ந்து கிடக்கும் காவிரி நிலத்தையும் நீட் தேர்வால் சாகடிக்கப்பட்ட அனிதாவையும் காட்டி, பதவியில் மக்கள் சொத்தைக் கொள்ளையடித்த ஊழல் குற்றவாளிகளைக் காட்டி ‘என்னை முதல்வராக்கினால் எல்லாவற்றையும் தலைகீழாய் மாற்றுவேன்’ என வண்ணவண்ணக் கொடியுடன் வலம் வருவோர் பலர் உண்டு. இந்த இடத்தில் முத்துக்குமாரின் நினைவு நம் நெஞ்சை விட்டு அகன்றுவிடக் கூடாது.  இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை சுயநலமிகள் காயடித்ததுப் போல் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப்  பின்னான தமிழர் எழுச்சியை பதவிப்பற்று கொண்ட தன்னலக்காரர்கள் தனதாக்கிவிடக் கூடாது என்று முத்துக்குமார் சொன்ன எச்சரிக்கையை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.

மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும் அவனை விரட்டியடியுங்கள் என்று முத்துக்குமார் சொன்னான். அதுமட்டுமல்ல,  ’என்னை முதல்வர் ஆக்குங்கள், உங்கள் தலைவிதியை மாற்றி அமைக்கிறேன்’ என்று சொல்வது யாராக இருந்தாலும் அது பெரிய ஏமாற்று. காமராசர் தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி வரை எத்தனையோ முதல்வர்கள் அரசமைப்பின் வழி தமிழகத்தின் மீது பூட்டப்பட்டிருக்கும் அடிமை விலங்கை அடையாளம் காட்டிவிட்டனர். இந்த உண்மையை எடுத்துச் சொல்வதற்கு இனி மு.க. ஸ்டாலினும் சீமானும் கமலும் தேவையில்லை.

தேர்தல் பதவி அரசியலுக்கு எதிரானப் புரட்சி நெருப்பு முத்துக்குமார்.  தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைப்பதற்கு போட்டிப் போடும் வாக்கு சாவடி அரசியல் மாயத்திரை!  உண்மையான தேச அதிகாரமும் மக்கள் சனநாயகமுமே புரட்சி, இன விடுதலை, இன்னபிறவெல்லாம்!

முத்துக்குமாரின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் உரிமைகளை அடகு வைக்கும் அரசியலை அம்பலப்படுத்த உறுதியேற்போம்! புரட்சிவய அரசியல் அதிகாரத்திற்கானப்  போராட்ட அரசியலை வளர்த்தெடுப்போம்! முன்னேற்றக் கழகங்களிடம் இருந்து கையில் இருந்த அரசியலை மக்களிடம் மாற்றிவிட்டு தெருப் போராட்டங்களுக்கான ஓர் ஊழியைத் தொடங்கி வைத்த தீப்பொறியாம் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW