சனவரி-25 மொழிப்போர் ஈகியர் நினைவேந்துவோம்!  மொழிப்போர் அரசியலும் – மொழிக்கொள்கையும்.

25 Jan 2019

தமிழர் தேசத்தின் அண்மைய வரலாற்றில் பெருங்குருதி பெருக்கெடுத்து ஓடிய ஈகம், மொழிப்போர் ஈகம் என்று சொன்னால் அது மிகையாகாது. மாந்தனுக்கு தாய்மொழியின் மீதான பற்று தாய் மீதான பற்றை போன்ற ஒன்று, ஆனால் தமிழ் தேசிய இனத்தின் மொழிப்போர் அதையும் கடந்த ஒன்று! அது தாய்மொழியை காப்பதற்கான போர் மட்டுமல்ல, ஒரு இனத்தின் மொழியை தமிழ்த்தேசத்தின் பொதுமொழியை வல்லாதிக்கம் செய்ய வந்த அரசியல் ஆக்கிரமிப்பாளர்களை அவர்தம் படைகளை எதிர்த்து தமிழ்மான மறவர்கள் செங்குருதி பெருக்கெடுத்து ஓட தெருக்களிலே போர்க்கோலம் பூண்ட வீரக்கதை அது தலைமுறை தலைமுறையாய் எடுத்து செல்ல வேண்டிய கதையும் அதுதான் சாதி கடந்து, மதம் கடந்து, ரத்த மொழி பிரிக்கும் இரண்டகம் கடந்து நம் இனத்தின் ஒர்மையாய் நடுகல்லாய் மாறிப்போன நம் மாவீர்ர்களுக்கு செலுத்தும் வீரவணக்கமாகும்.

மனித சாதியால் மட்டுமே இனம் பிரிக்கும் திராவிட அரசியலிலிருந்து மொழியால் இனம் பிரிக்கும் தமிழ் அரசியலுக்கு இன்றைக்கு வந்த சீமான் அவர்களுக்கு வேண்டுமானால் வரலாறு தெரியாமல் இருக்கலாம், அய்யா மணியரசன் அவர்களுக்குமா  புரியவில்லை, உங்களோடெல்லாம் மொழிப்போரில் தோளோடு தோள் நின்று தலைகொடுத்தவனெல்லாம் தாய்மொழி பார்த்தா தலை கொடுத்தான், மொழியுரிமை எனும் வல்லாதிக்க எதிர்ப்பு சனநாயக உணர்வுதானே ஒரு மொழி இனத்தவனின் தேசத்தவனாய் ஓர்மைபடுத்தி சீற்றங்கொண்டு எழ செய்தது. மார்க்சிய பாலபாடத்தை அடையாள அரசியல் கண்னை மறைப்பது தகுமா? மொழிப்போரும் மொழி அரசியலும்தானே சிதறுண்ட சிறுவீத ஆக்கிரமிப்பிற்குள்ளான நம் தேசத்தை உணர்வெழுச்சியோடு ஓர்மைபடுத்தும் வரலாற்று காரணியாய் மாறியது, அதையே இனம் பிரிக்கும் அரசியலாய் மாற்றுகிறீர்களே நடுகல்லாய் வீழ்ந்துபட்ட மாவீர்ர்களின் ஈகம் உங்கள் மொழி அரசியலை  ஏற்குமா? புறப்பகைக்கு சேவகமாய் ஊறுவிளைவிக்கும் உட்பகையை கீறுகின்றீர்களே நியாயமா?

குடியுரிமை வரையரைக்கும் குடியாட்சி உரிமைக்கும் எதிரி இந்தியாதானே இந்த வல்லாதிக்கத்தை எதிர்த்துதானே போர்கோலம் பூண்ட தாயினும் இனிய எம்மொழி, மொழிவழி தேசியத்திற்கான அடித்தளத்தை ,இத்துணைகண்டத்திற்கே முன்னுதாரனமான முற்போக்கு தேசிய வடிவத்தை வழங்கியது, அதைப்போய் பிளவுபடுத்தும் பிற்போக்குவாதத்திற்கு துனைக்கழைக்கிறீர்களே பொருந்துமா? பெரியாரையும் அவர் வழிவந்தவர் அரசியல்  கொள்கைகளை குறைகாண்பதற்காக மொழிபோராட்டத்தில் ஓற்மையுற்று ஈகம் செய்த இனத்தின் குடிகள் சிலவற்றையே குறைகாண்கிறீர்களே இதுதான் உங்களின் தேசிய இனம் குறித்தும், மக்களின்பால், சனநாயகத்தின்பால் கொண்டிருக்கும் அரசியலா?

தமிழ் ஓர்மையின் அடையாளம், வல்லாதிக்க எதிர்ப்பின் அடையாளம், அது வரலாற்றாலும் செழுமையினாலும் மட்டுமல்ல அதன் வேர்களில் உரமாய் படிந்திருக்கிற மாவீர்ர்களின் குருதியாலும் பெருமைகொண்டு நிற்கிறது. அதைத்தான், உலகம் மொழிக்காக ஒரு அரசியலா? பன்னூறு வீர்ர்களின் ஈகமா? என்று வியப்போடு பார்க்கிறது. அதை ஒரு போதும் வரலாற்றை பின்னுக்கு இழுக்கும் விசையாக உங்களால் பயன்படுத்திகொள்ள முடியாது. செம்மார்ந்து நிற்கும் எம் செம்மொழி, வள்ளுவனையும், கணியன் பூங்குன்றனையும் வள்ளலாரையும் உலகுக்கு தந்த பொதுமைக்கான மொழி, கொடுங்கோல் சிந்தைக்கு இடங்கொடாது.

பெரியாருக்கு மொழிப்பற்றும் கிடையாது, வரலாற்று தொடர்ச்சி கொண்ட மொழிக்கொள்கையும் கிடையாது. அவரின் சமூகநீதி கொள்கையை அமுல்படுத்துவதற்கு ஏற்ப அந்த காலகட்டத்தில் எந்த ஆட்சியாளரை ஆதரித்தாரோ அதற்கேற்ப அவரின் மொழிக்கொள்கை அமைந்தது. 1938 ல் மொழிப்போரை ஆதரித்தார் 1965 ல் மொழிப்போராட்டத்தை எதிர்த்தார். எந்த அளவிற்கு எழுத்து சீர்திருத்த்த்திற்கு பாடுபட்டாரோ அதைபோன்றே ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்பதை பற்றியும் பேசியிருக்கிறார். அவரின் கொள்கை தடுமாற்றம் நமக்கு எவ்வளவு அபத்தமாக படுகிறதோ, அதே அளவிற்கு அபத்தம்தான் அத்தவறை இனவாத கண்ணாடி கொண்டு விளக்குவதுமாகும்.

சீனத்தின் பெருந்தலைவர் மாவோ கூட அதே போன்ற தவறை தொடக்ககாலத்தில் கொண்டிருந்தவர்தான், சீனத்தின் அனைத்து மக்களும் எழுத்தறிவை பெற வேண்டும் என்பதற்காக கடினமான சீனத்தின் வரிவடிவங்களுக்கு மாற்றாக ரோம எழுத்துகளை பயன்படுத்தலாம் எனபதை கொள்கையாக கொண்டிருந்து அதை பிறகு மாற்றிகொண்டவர். அவரின் புரிதல் தவறான கொள்கையை கொண்டிருந்தது என்பதாக விளக்கலாமே ஒழிய அவர் மக்களின்பால் கொண்டிருந்த நோக்கத்திற்கு வேறு ஏதாவது சாயம் பூசமுடியுமா ?அந்த வகையில்தான் 65ல் பெரியாரின் மொழிக்கொள்கையும் தவறு அவரின் வன்முறையான அரசுவாத பார்வையும் தவறு.

அதேபான்றுதான் நாடாளுமன்ற மையவாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் மொழிக்கொள்கையும் வரலாற்றில் தடம்புரண்டு கொண்டே இருந்தது. 1950 வரை தாய்மொழிக்கொள்கையையும், மொழிவழி தேச உரிமையை பற்றியும் பேசியவர்கள், நாடாளுமன்றத்தில் பங்குபெற்ற பிறகு, இந்திய தேசியத்தை கொள்கையாக ஏற்றுகொண்ட பிறகு ஆளும் வர்கங்களின் மொழிக்கொள்கையே அவர்களின் கொள்கையாக மாறியது, பிறகு தோன்றிய மா-லெ இயக்கம்தான் தாய்மொழிக்கொள்கை என்பதை உறுதிபடுத்தி வரலாற்று பழியை துடைத்தது. மா-லெ இயக்கத்தின் நிறுவன தலைவர்களான அண்மையில் மறைந்த ஏ.எம்.கோதண்டராமனும், கோவை ஈஸ்வரனும்,மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த காலகட்டத்திலேயே கட்சி நிலைபாட்டிற்கு எதிராக மொழிப்போராட்டத்தில்  தீவிரமாக பங்கேற்று மாணவர்கள், தொழிலாளர்கள் மத்தியில்  பணியாற்றி இருக்கின்றனர்.

1938 மொழிப்போரின், ஈகத்தின் வரலாற்று தொடர்சியின்றி 65 ம் ஆண்டு மொழிப்போர் இல்லை. காலகட்டத்தின் தலைமைகளும் இயக்கங்களும் மாறியிருக்கலாம் ஆனால் தனித்தமிழ் இயக்கத்திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் அதில் ஒரு வரலாற்று தொடர்ச்சியும் முகாமையான பங்கும் இருக்கிறது. ஒன்றின் வரலாற்றை இன்னொன்று மறுதலிக்க முடியாது. 1965 போராட்டத்தில் தனித்தமிழ் இயக்கத்தின் தொடர்ச்சியான மொழியுணர்ச்சி அரசியலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மொழியுணர்ச்சி செயற்பாடுகளும்தான் முக்கிய பாடாற்றி இருக்கின்றன. ஆனால் தி.மு.கா’விற்கு மொழி அரசியல் என்பது வடவர் எதிர்ப்போடு சேர்ந்த இந்தி எதிர்ப்பாக மட்டும்தான் அமைந்தது அறிவியல் பூர்வமான தாய்மொழி கொள்கையாக இருக்கவில்லை. ஆட்சி கட்டிலில் அமர்த்திய மொழிப்போரும் அரசியலும் அரியாசனம் ஏறவில்லை என்பதுதான் இன்றைக்கு வாழ்கின்ற உண்மை.

மும்மொழி கொள்கையும் இந்திதிணிப்பும்தான் இந்திய தேசியத்தின் அரசியல் ஆக்கிரமிப்பு கொள்கை. நூற்றாண்டுகால போராட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது நமது மொழி அரசியல், இன்றைக்கும் இந்தி திணிப்பிற்கான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உயிர்கொடை கொடுத்து இந்தியின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினார்கள் நமது ஈகியர், ஆனால் ஆங்கிலம் ஆக்கிரமித்து நிற்கிறது. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மொழியில் ஊனமாய் நமது கல்வியும் தலைமுறையும் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஏழைக் கிராமத்தவனும் அரசு பள்ளியை துறந்து பிள்ளையின் வாயில் ஆங்கிலம் வந்துவிடாதா என உழைத்த காசை கொட்டி அடிமையை போல உழன்று கொண்டிருக்கிறான்.

இந்தியை தடுத்துவிட்டோமோ என ஆசுவாசபடுத்திகொள்ளலாம், இந்தி எப்படி பேயோ அது போன்று ஆங்கிலமும் பிசாசுதான். இந்திய தேசியத்தின் மும்மொழி கொள்கை எப்படி மோசடியோ அப்படி திராவிட கழங்களின் இருமொழி கொள்கையும் ஏமாற்றுதான். தாய்மொழி கொள்கைதான் மாற்று அதுதான் நம் அடிமைதலையை விடுவித்து நம்மை முன்னேற்றத்திற்கு அழைத்து செல்கின்ற மொழிக்கொள்கையாகும், அது மொழிக்கொள்கையோடு மட்டும் சம்மந்தபட்டதல்ல அரசியல் அதிகாரத்தோடும் சம்மந்தப்பட்டது. யார் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் மொழிதான் நிலத்தை ஆளும் எனவேதான் நாம் உயர்த்த வேண்டிய கொடி இடைவிடாத அரசியல் அதிகாரத்திற்கான போராட்ட கொடி, அதுதான் மும்மொழி திணிப்பு என்ற நிற்கதியான அச்சுறுத்தலிலிருந்து நம்மை விடுவிப்பதோடு, உயிர் கொடுத்த ஈகியருக்கு நியாயம் செய்வதாகவும் அமையும்

எனவே,

மும்மொழிக் கொள்கை மோசடி கொள்கை, இருமொழி கொள்கை ஏமாற்று கொள்கை, தாய்மொழி கொள்கையே சனநாயக கொள்கை என்றும்.

இந்திய தேசியம் மோசடி, மாநில சுயாட்சி ஏமாற்று, தமிழ்த்தேச குடியரசே மாற்று என்றும் சூளுரைப்போம்! மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செய்வோம்!

 

பாலன், பொதுச்செயலாளர்

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

vasan08@rediffmail.com, 70100084440

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW