தமிழகத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்….

கிட்டத்தட்ட 2019 ஜனவரி மாதத்தின் பெரும்பாலான பொழுதுகள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு தமிழகத்தில் தான் கழிந்திருக்கின்றன எனலாம். ஜனவரி 6 முதல் 9 வரையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ஆசிரமத்தில் ஆர்எஸ்எஸ் இன் 35 கிளை பிரிவுகளில் பணிபுரிந்து வருவோர் ஒன்று கூடி விவாதித்தனர். அதன் ஒருநாள் நிகழ்வில் அமித்ஷாவும் கூட பங்கேற்றிருந்தார். இவற்றை முடித்த பின்னரும் திருப்பூர், கோவை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தன் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து வருகிறார் மோகன் பகவத். சத்தமில்லாமல் திட்டமிட்ட சந்திப்புகள் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கானோர் திரள்வதில்லை. சில இடங்களில் வெறும் 10 நிர்வாகிகள் மட்டும் கூட சந்தித்திருக்கிறார் என்பது தகவல்… வழிநெடுக ஆளுயர பிளக்ஸ் பேனர்களோ, சுவரொட்டிகளோ இல்லை. இசட் பிளஸ் பாதுகாப்பைத் தவிர….
இவற்றின் தொடர்ச்சியாக திருச்சிக்கும் வந்தார் மோகன் பகவத். உறையூர் சோலைராஜபுரத்தில் 10 கோடி மதிப்பில் அதிநவீன கட்டமைப்பில் உருவாகியுள்ளது ஆர்எஸ்எஸ் இன் புதிய பிரம்மாண்ட கட்டிடம். ஏற்கனவே உள்ள ஆர்எஸ்எஸ்’க்கு சொந்தமான கட்டிடத்தின் பின்புறம் இப்புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சாதனா என்ற அறக்கட்டளையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது இக்கட்டிடம். ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று புதிய கார்யால திறப்பு என்ற பெயரில் நடைபெற்ற விழாவில் தான் மோகன் பகவத் பங்கேற்றார்.
தமிழகத்தில் முகாமிட்டிருக்கும் மோகன் பகவத் இதுவரை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. ஆர் எஸ் எஸ் இன் எந்த நிகழ்விற்கும் பத்திரிக்கையாளர்கள் அழைக்கவோ அனுமதிக்கப்படுவதோ இல்லை. இந்த கட்டிடத் திறப்பு உட்பட. அப்படி என்னதான் நடக்கிறது அங்கே என்றறியும் ஆவலிலும் ( சில தனிப்பட்ட காரணங்களும் உண்டென்பது வேறு விஷயம்) உள்ளே விடுவார்களோ மாட்டார்களோ என்ற குழப்பத்திலும் சென்றிருந்தேன். ஐயா பொதுமக்கள் உள்ளே போகலாமா என்று அங்கு தன்னார்வலராக ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்து நின்றிருந்த முதியவரைக் கேட்டேன். தாராளமாக செல்லலாம் என்று கூறிய அவர் ஹிந்துக்களுக்காக இந்தியாவிலேயே பாடுபடும் ஒரே அமைப்பு என்றும் பெருமை பொங்கக் கூறி என்னை அனுப்பினார்.
மனுதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் இன் கட்டிடத்திற்குள் அவர்களது சங்க உறுப்பினர்களைத் தவிர குறிப்பாக பெண்கள் நுழைவது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றென்பது நாம் அறிந்ததே. இசட் பிளஸ் பாதுகாப்பு என்பதால் என் கையிலிருந்த பையை பரிசோதித்து உள்ளே அனுப்பினர். வளாகத்திற்குள் சென்ற போது அங்கிருந்தவர்களின் கைகளில் பாதாம் பால் டம்ளர்கள் பல சுற்று வந்திருந்தது தெரிந்தது.
மாலை சுமார் 5.15 மணியளவில் புதிய கட்டிடத்தின் இடதுபுறத்திலிருந்த திறந்த வெளியில் நிகழ்ச்சி தொடங்கியது. சமஸ்கிருத மந்திரங்களும், பாடல்களும் இடையிடையே இடம் பெற்றிருந்தன. சிறப்பாக மக்கள் பணி செய்து வருவதாக ஆர் எஸ் எஸ் அல்லாத சிலருக்கும் விருதுகள் வழங்கினார் பகவத்.
ஆர்எஸ்எஸ் இன் சேய் அமைப்பு நடத்திய வாடகை நாற்காலி மாநாடுகளை மட்டுமே இதுவரை பார்த்து பழகியிருந்ததால் இவ்விழா சற்றே புருவத்தை உயர வைத்தது. சிறிய இடம் தான் என்றாலும் சற்றேறக்குறைய 700 பேர் வரை கூடியிருந்தார்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கையை விட்டு யாரும் எழுந்து செல்லவில்லை.
தமிழில் பொங்கல் வாழ்த்துக்கூறி தொடங்கிய பகவத் இந்தியில் உரையாற்றினார். ஹிந்து ஒற்றுமை, இந்துக்கள் தங்கள் பலத்தை உணராமல் இருப்பதால் தான் மற்றவர்கள் நம்மை அடிமைப்படுத்த நினைக்கின்றனர் என்ற எதிர்பார்க்கப்பட்ட வசனங்களையே பல்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப பேசினார். விவேகானந்தரை குரங்குகள் விரட்டிய கதையும் இடம் பெற்றது. இறைவன் ஒன்று தான் என்பதை உணர்ந்து உலக மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதாக சுமார் 25 நிமிடங்கள் வரை உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இதையடுத்து புதிய கட்டிடத்திற்குள் சென்றபோது சுமார் 6 அடிக்கு மேலான பாரத மாதாவின் முழு உருவப்படம் நம்மை வரவேற்றது. ஆனால் புதிதாக ஈஷாவின் ஆதியோகி அதே சிலை வடிவில் சுமார் 3/4 அடி உயரத்தில் பாரத மாதாவின் காலடியில் அமர்ந்திருந்தார். தெரிந்தது தான் என்றாலும் இத்தனை வெளிப்படையாக காட்டியது முதல் முறையாக இருக்கலாமென நினைக்கிறேன். தரைத்தளத்திலேயே புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற்றது. முதல்தளத்தில் நிறுவனர் ஹெட்கேவர், மற்றும் கோல்வாக்கரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அது கூட்டங்கள் மற்றும் பிராத்தனைக்கான தளமாக இருக்கக் கூடும். இரண்டாம் தளத்தில் நவீன உணவு தயாரிக்கும் அறை உள்பட முக்கிய பிரமுகர்கள் வந்தால் தங்குவதற்க்கு தேவையான அறைகள் பல இடம் பெற்றிருந்தன. வந்திருந்த பகவத் அதிலொரு அறையில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தார் என்பதால் அத்தளத்தின் சில அறைகளை மட்டும் காண பாதுகாப்புப் படை அனுமதிக்கவில்லை. இதர பல அறைகள் நிர்வாகிகள் மற்றும் பயிற்சி பெற வருவோர் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செயின் ஜார்ஜ் கோட்டையில் பறந்தே தீரும் தமிழிசை சவுந்தரராஜன் அடிக்கடி முழங்கும் காவிக்கொடி மூன்றாம் தளத்தின் மொட்டை மாடியில் பறந்து கொண்டிருந்தது.
வந்திருந்தோருக்காக சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடும்பம் குடும்பமாக பலர் உணவருந்திக் கொண்டிருந்தனர். அங்கு வந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் ( மத்திய அரசு நிறுவனத்தில் பெரிய பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர்) பேசிய போது…… ” என் 10 வயதிலிருந்து ஆர்எஸ்எஸ் இல் இருக்கிறேன். ( பெருமிதத்துடன் கூறுகிறார்) ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 1 மணி நேரத்தை தனக்காக கொடுக்க வேண்டுமென சங்கம் கேட்கிறது. அந்த ஒரு மணி நேரம் எதுவென எங்களுக்குள் முடிவு செய்து நாங்களே இடத்தையும் தேர்வு செய்து வெறும் 5 பேர் வரையில் கூட ஒன்று கூடுகிறோம். தினசரி கூடுவதற்கு தவறுவதில்லை. அது மட்டுமின்றி வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பாக பகுதி வாரியாக சற்றே பெரிய அளவில் கூடுகிறோம். அந்த ஒரு மணி நேரத்தை விவாதித்தல், வாசிப்பு, பாடல் இசை என பலவற்றிற்கு பயன்படுத்துகிறோம். திருச்சியில் மட்டுமே சுமார் 2000 உறுப்பினர்கள் இருக்கிறோம். சங்கத்தில் சேருவோர் இதன் மூலம் பெறுவது தன்னம்பிக்கையுடன் கூடிய தனி மனித முன்னேற்றம் மட்டுமே. நேரடி பணப்பலன்கள் எதுவுமில்லை. முழு நேர ஊழியர்களுக்கு படி வழங்கப்படும். ஆனால் அது அவர்களது அடிப்படைத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்க்கு மட்டுமே பயன்படும். சங்க உறுப்பினர்களின் நிதியிலிருந்து பிரித்து வழங்கப்படுவதால் முழு நேர ஊழியர்கள் மிக சிக்கனமாகவே செலவு செய்வார்கள். வருடத்திற்கு ஒரு முறை குரு பூர்ணிமா நாளில் தான் அந்த பணத்தை வழங்கக் கூடிய வாய்ப்பு சங்க உறுப்பினர்களுக்கு கிடைக்கும். குருக்களுக்காக ஆண்டு முழுவதும் சேர்த்து வைத்து இயன்றதை மகிழ்வுடன் வழங்குவோம். ” என்று கூறி முடித்தார்…
இப்படியாக அவர் புலகாகிதமடைந்து பேசிக் கொண்டிருக்கையில் காந்தி, நரேந்திர தபோல்கர் , கல்புர்கி, கோவிந் பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகிய பெயர்கள் என் மனக் கண்ணில் வந்து போய்க் கொண்டே இருந்தன…. கூடவே 1992, 2002 ஆகியவையும் தான்..
– கதிர்