‘ரெட்’ ரோசா- ஓர் இடி மின்னல்
“அவர் ஒரு கழுகாக இருந்தார்; இருக்கிறார். மொத்த உலகிலிருக்கும் கம்யூனிஸ்ட்களின் நினைவில் அவர் நேசத்திற்குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல்களின் முழுமையான பதிப்பும் கம்யூனிஸ்ட்களின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகப் பயன்மிக்க பாடமாக விளங்கும்”
– ரோசா லக்ஸம்பர்க் குறித்து லெனின்
ரோசா லக்ஸம்பர்க் இன்றிலிருந்து சரியாக நூறாண்டுகளுக்கு முன்பு ஜனவரி 15,1919 இல் ஜெர்மன் தொழிலாளர் வர்க்க எழுச்சி அலையின் போது, எதிர்புரட்சிகர சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் கார்ல் லீபட்னிக்கும் கொலை செய்யப்பட்டார். ரோசாவின் உடல் ஆறு மாதங்களுக்கு பிறகு கால்வாயில் கண்டெடுக்க- ப்பட்டது.
ரோசா- ஜெர்மன், போலந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னணி கோட்பாட்டாளர், நடைமுறை புரட்சியாளர், முதலாம் உலகப் போருக்கு முன்புவரை லெனினுக்கு சமமான சர்வதேச தலைவராக திகழ்ந்தவர். போல்ஷ்விக் புரட்சியை போற்றியவர். அதேநேரத்தில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை, கம்யூனிஸ்ட் கட்சி கட்டமைப்பு, புரட்சியில் கட்சியின் பாத்திரம் போன்ற கேள்விகளில் லெனினை கடுமையாக விமர்சித்தவர்.
ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடித்தளம் குறித்த கோட்பாட்டாக்கம், கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாளித்துவ சீர்திருத்தல்வாத சாய்விற்கு எதிரான போராட்டம், பாட்டாளி வர்க்க போராட்டங்களில் வேலை நிறுத்தங்களின் பாத்திரம், போருக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் வேலைத் திட்டம் போன்ற கேள்விகளில் ரோசாவின் மார்க்சிய பங்களிப்பானது, இளம் கம்யூனிஸ்டகளுக்கு கலங்கரை விலக்காக வழிகாட்டுகிறது.
சோவியத் புரட்சியின் நூற்றாண்டு நிறைவு, மார்க்ஸ் பிறந்து இருநூறாண்டு நிறைவு, நக்சல்பாரி எழுச்சியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவிற்கு அடுத்து ரோசா படுகொலை செய்யப்பட்ட நூற்றாண்டு வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய முதலாளித்துவத்தின் விதி விலக்கான காலகட்டத்தை கடந்து தற்போது முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி சகாப்தத்தில் நுழைந்திருக்கிறோம். வால் ஸ்ட்ரீட் முற்றுகை, அரபு எழுச்சி முதலாக மஞ்சள் சட்டை எழுச்சி வரை வெவ்வேறு வகையிலான போராட்ட வடிவங்களில் வெவ்வேறு கண்டங்களில் மக்களின் எழுச்சி தீவிரப்பட்டு வருகிற நிலையில் ரோசாவின் “தன்னெழுச்சி போராட்டம்” குறித்த கோட்பாடு முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.
முன்னால் சோசலிஸ்ட் கட்சிகள், மைய வலதாக மாற்றமடைந்து கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஐரோப்பிய நாடாளுமன்றங்களில் ஆதிக்கம் செய்து வந்தன. தற்போது இந்த மரபான கட்சிகளுக்கு எதிராக வலது பாசிசம் வேகமாக செல்வாக்கு பெற்றுவருகிறது. முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி வடிவிற்கு மாற்றாக கம்யூனிஸ்ட்கள் சோஷலிச மாற்றை முன்வைப்பதும், தொழிலாளர் இயக்க போராட்டத்தை மென் மேலும் தீவிரப்படுத்துவதும் உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில் ரோசாவின் மார்க்சிய பங்களிப்பை ஆழமாக பயில்வது மென் மேலும் அவசியமாகிறது.
முதலாளித்துவ தோற்ற மயக்கங்களில் இருந்து சிவில் சமூகத்தை விடுவிப்பது மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகளின் சீர்திருத்தல்வாதம் போன்றவை கடுமையான சவாலாக இன்று நம்முன் எழுந்துள்ளது. இதற்கு ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வலது திரிபிற்கு இன்றளவிலும் கோட்பாட்டு பங்களிப்பு செய்கிறது. நாடாளுமன்றவாதத்தில் ஊறிப்போன கம்யூனிஸ்ட் கட்சிகள், பாட்டாளி வர்க்க இயக்கத்தில் அமைப்பு ரீதியாக செல்வாக்கு செலுத்துகிற காலகட்டத்தில் சமூக ஜனநாயக கட்சிக்கு எதிரான ரோசாவின் போராட்டம் நமக்கு படிப்பினை வழங்குகிறது. ரோசாவின் ‘சீர்திருத்தமா?புரட்சியா?(Reform or Revolution)’ எனும் நூல், முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான வலுவான போராட்ட வடிவமாக பொது வேலைநிறுத்தம் குறித்த அவரது கட்டுரைகள்(Mass strike,the party and the trade unions) இன்றளவிலும் முக்கியமானவை.
1917 சோவியத் புரட்சியின் வெற்றி மட்டுமல்ல, 1918-19ஜெர்மன் புரட்சியின் தோல்வியும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முக்கிய படிப்பினைகளை வழங்குகிறது. அவ்வகையில் ரோசாவின் வாழ்வும் போராட்டமும் ஐரோப்பிய கண்டத்தின் இருபதாம் நூற்றாண்டு புரட்சிகளும் சமகால முக்கியத்துவம் உடையவை. ஏனெனில் ஜெர்மன் புரட்சியின் தோல்வி உலக சரித்திரத்தை வேறு திசையில் மாற்றியமைத்தது. ஹிட்லரின் பாசிசம், யூத இனப் படுகொலைகள், இரண்டாம் உலகப் போர், அணு குண்டு வீச்சு, ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் தேசிய விடுதலை,நவீன காலனியாக்கம் என உலகின் திசைப் போக்கானது, ஜெர்மன் புரட்சியின் தோல்வியில் இருந்து கிளம்பிய வரலாற்று சங்கிலித் தொடர் நிகழ்வுகள்தான்!
“தந்தையர் நாட்டை காப்போம்” என முதலாம் போருக்கு ஆதரவளித்து நாடாளுமன்ற பதவியில் ஒட்டிக்கொண்டது முதாளித்துவ நிறுவனமாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியது, சமாதானமாக சோசலிசத்தை அடைவது போன்ற மார்க்சிய திருத்தல்வாதங்களின் ஆதர மையமாக திகழ்ந்த அன்றைய ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னணி தலைவர்களுக்கு எதிராக ரோசா தொடுத்த கூர்மையான விமர்சன அம்புகள் இன்றளவிலும் நூறாண்டுகள் கடந்து திருத்தல்வாதிகளை துழைக்கிறது. அவ்வகையில் பெர்ன்ஸ்டைன், கவுட்ஸ்கி உள்ளிட்ட திருத்தல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் இளம் ரோசா லெனினுக்கு முன்னோடியாக விளங்கினார் என்றே கூறலாம்.
அதேநேரம் ரோசா, கட்சியின் வலது சாய்வை கட்சி கட்டமைப்பின் வழியே எதிர்கொண்டு திருத்தல்வாதத்தை முறியடிக்க தவறினாரோ என எண்ணத் தோன்றுகிறது. காலம் கடந்து கட்சியில் இருந்து வெளியேறி ஸ்பார்டகஸ் லீக் இயக்கத்தை நிறுவி, புரட்சிகர எழுச்சியில் பங்கேற்றது ரோசாவை தனிமைப்படுத்தி கொலை செய்வதற்கு வாய்ப்பளித்தது என்றே தெரிகிறது. மேலும் புரட்சியில் கட்சியின் பாத்திரத்தை குறைமதிப்பீடு செய்தது, பாட்டாளி வர்க்கத்தின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மிகை மதிப்பீடு செய்தது, ஜார்ஜ் லூகாஸ் கூறுவது போல “புரட்சிகர அறம்”குறித்த ரோசாவின் நிலைப்பாடு ரோசாவின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஜெர்மன் புரட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. எதிர் புரட்சி வென்றது. ரோசா எதிர்பார்த்தது போல ஒரு தெரு சண்டையில் அவர் வீர மரணம் அடைந்தார்.
ரோசா – ஒரு கவிஞர், மேடைப் பேச்சாளர், தத்துவ ஆசிரியர், தாவரவியலாளர், மொழிபெயர்ப்பாளர், கோட்பாட்டாளர், நடைமுறை புரட்சியாளர், காதலர், சகோதரி, தோழர், மொத்தத்தில் ரோசா-ஒரு இடி மின்னல்.
– அருண் நெடுஞ்செழியன்