பாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ எழுச்சி வெல்லட்டும்!

01 Jan 2019

காலம் காலமாய் தங்கள் மீது தொடுக்கப்பட்ட பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பல்வேறு போராட்ட களம் கண்ட கேரளப் பெண்கள், இன்று (சனவரி 1)  உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ’நாங்கள் அசுத்தமானவர்கள் அல்ல’ என்ற முழக்கத்தோடு ‘வனிதா மதில்’ போராட்ட களத்தில் லட்சக்கணக்கில் எழுச்சியோடு களம் காண இருக்கிறார்கள்.

மாதவிடாய் பருவ காலகட்டத்தில் இருக்கிற 10-50 வயதிற்குள் உள்ள பெண்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வழிபட அனுமதி இல்லை என்ற நீண்ட கால நடைமுறையை சமீபத்தில் உச்ச நீதி மன்றம் தடை செய்தது. ‘கடவுளை வழிபடும் உரிமை அனைத்து பக்தர்களுக்கும் உண்டு. பாலின அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது’ என்று கூறி பிற்போக்கான சபரிமலை கோயில் வழிபாடு நடைமுறைக்கு உச்ச நீதி மன்றம் ஒரு முடிவு கட்டியது.

1980 களில் ஜெயமாலா என்ற பெண் நடிகர் கோயிலுக்குள் சென்றதாகவும், ஐயப்பனை தொட்டு வழிப்பட்டதாகவும் வெளி வந்ததை அடுத்து கோயில் நிர்வாகம் சபரிமலை கோயிலில் ’தீட்டு கழிக்கும்’ பூசையை செய்தது. இது ஊடகங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளானது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 5 பெண்கள் ’அரசமைப்பு சட்டம் வலியுறுத்துகிற சமத்துவம், பாரபட்சமின்மை, மத சுதந்திரம் போன்றவற்றுக்கு எதிரானது இந்த செயல்’ என்று உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடுத்தனர். இந்த வழக்கை தொடுத்த சில பெண்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களாகவும், முக்கிய நிர்வாகிகளின் உறவினர்களும் ஆவர். 2006 இல் இருந்து ஆர்.எஸ்.எஸ் சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவுக்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. முதலில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை பா.ஜ.க, காங்கிரஸ், இரண்டு கட்சிகளும் வரவேற்று, பிறகு தேர்தல் அரசியல் கணக்கில், இடது சனநாயக முன்னணி அரசு தீர்ப்பை அமல்படுத்துவதற்கு தடையாக அத்தனை செயல்பாடுகளையும் முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றன.

குறிப்பாக, பா.ஜ.க மாநில தலைமை, சபரிமலை பெண்கள் நுழைவு பிரச்சினையை இந்து மதத்தை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை ஆளும் இடது அரசுக்கு எதிராக அணிதிரட்ட கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு என்று பேசியது ஊடகங்களில் அம்பலமானது. சபரிமலை கோயில் நுழைவு போராட்டத்தை பதிவு செய்ய வந்த பெண் பத்திரிக்கையாளர்களை தனது கட்சி குண்டர்களை வைத்து தாக்கியது. பா.ஜ.க அதன் மற்ற அமைப்பை சார்ந்த பெண்களை கோயிலில் நுழைய முயற்சி செய்து பிரச்சினையை உண்டு பண்ணியது. சபரிமலை கோயில் திறக்கப்படும் போதெல்லாம் பெண்கள் கோயிலுக்கு நுழைய முயற்சி எடுத்த போதெல்லம் தனது குண்டர் படையை வைத்து, அந்த பகுதியையே ஓர் போர்களத்தை போல மாற்றியது. பக்தர்களை காவல்துறையினர் தாக்குவது போன்று தனது கட்சிக்காரர்களைக் கொண்டு நடித்து எடுக்கப்பட்ட பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கலவரத்தை உண்டு பண்ண பார்த்தது. ஆயிரக்கணக்கான நடுத்தர வகுப்பு பெண்களை வீதியில் இறக்கி,’ காத்திருக்க நாங்கள் தயார்’ என்ற பரப்புரையை செய்து பெண்களின் உரிமைக்கு எதிராக பெண்களையே நிறுத்தியது. ஆனால், பா.ஜ.க பெண்கள் உரிமை சார்ந்த பிரச்சினையை கூட தன்னுடைய அரசியல் நலனுக்கு மக்களை பிளவு படுத்த, ஆளும் இடது அரசை கவிழ்க்க பயன்படுத்துகிறது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. இருந்தாலும் வெட்கமே இன்றி, இந்து மத காவலர்கள் போல முகமூடி அணிந்து கொண்டு, இடது அரசு இந்து மதத்திற்கு எதிரானது, இந்து கலாசாரத்தை அழிக்க பார்க்கிறது என்று கூக்குரல் எழுப்பிக்கொண்டு இருக்கிறது. தனது உரிமையை நிலை நாட்ட சபரிமலைக்கு வரும் பெண்களை, உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக தனது குண்டர்களை வைத்து மிரட்டுகிறது.

அன்று கேரளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கோயில் நுழைவு போராட்டத்தை வைக்கத்தில் நடத்திய காங்கிரஸ் இன்று சபரிமலையில் பெண்கள் நுழைவதை தடுக்கிறது. மத வழிபாடு சம்பந்தமான நடைமுறைகளை மாற்றக்கூடாது எனச் சொல்கிறது. தேர்தல் அரசியலில் எப்படியாவது அதிகாரத்தில் அமர்ந்து விட வேண்டும் எனத் துடிக்கிற காங்கிரஸ், பா.ஜ.க வின் பசு அரசியல், சமசுகிருத வேத கல்வி போன்றவைகளை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து பா.ஜ.க வின் காவி அரசியலையும் தனதாக்குற அளவிற்கு இறங்கிவிட்டதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஆளும் இடது முன்னணி அமல்படுத்தும், நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வுக்கு செல்லாது என்று கூறி விட்டார். வேண்டுமென்றே போராட்டங்களை கட்டவிழ்த்து விட்ட பா.ஜ.க கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சபரிமலை கோயில் பகுதி முழுக்க 144 தடையுத்தரவு போடப்பட்டு போராட்டகாரர்களை தடுத்து நிறுத்தியது கேரள காவல்துறை. ஆனாலும், 4 திருநங்கைகளைத் தவிர 10-50 வயதுகுட்பட்ட பெண் ஐயப்ப பக்தர்கள் யாரும் இது வரை வெற்றிகரமாக கோயிலுக்கு சென்று வழிபட முடியவில்லை.

போதிய பாதுகாப்பளித்து, கேரள காவல்துறையால் ஆளும் இடது அரசால் பெண்களின் கோயில் நுழைவு உரிமையை உறுதி செய்ய முடியவில்லை. இந்து மதத்தை பாதுகாப்பவர்கள், இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்று மக்களை அணிதிரட்டுகிற தேர்தல் அரசியலுக்கான பா.ஜ.க வின் செயல் உத்தியின் முன்னே தேர்தல் அரசியலில் உள்ள காரணத்தால், சமரசமின்றி இந்த போராட்டத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது சனநாயக முன்னணியால் முன்னெடுக்க முடியவில்லை என்பதையும் நாம் விமர்சன பூர்வமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது.

எனினும் தீய மதவாத பாசிச தன்மை கொண்ட பா.ஜ.க கட்சிக்கு எதிராக அதன் பெண்கள் விரோத பிற்போக்கு கொள்கைகளுக்கு எதிராக புரட்சிகர, சனநாயக சக்திகள் அணி சேர்வதே முதல் கடமையாகும். சபரிமலை பிரச்சினைக்கு ஆதரவாக சனநாயக சக்திகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சபரிமலை பிரச்சினையை வைத்து பா.ஜ.க செய்யும் அரசியலின் தீய நோக்கங்களை அம்பலப்படுத்துவதையே முதன்மை இலக்காக கொண்டிருக்க வேண்டும். மாறாக இந்த நேரத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை / இடது அரசை அம்பலப்படுத்துவதை முதன்மை இலக்காக மாற்றுவது  என்பது  திசைவிலகும் அரசியல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத வழிபாடு போன்ற பண்பாட்டு தளத்தில் பெரிய அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அதற்கு ஆதரவாக பெரும்திரளான மக்களின் கருத்தும் மாற வேண்டிய தேவையுள்ளது. அந்த நோக்கத்தில் கேரள இடது சனநாயக முன்னணி ’முற்போக்கு மறுமலர்ச்சி கேரளத்தை முன்னெடுத்துச் செல்வோம்’ என்ற முழக்கத்தோடு 25,000 குழுக்களை வைத்து நேரிடையாக பல லட்சம் மக்களை சந்தித்து பா.ஜ.க வின் பிற்போக்குத்தன அரசியல் குறித்த புரிதலை உண்டாக்க ஒரு மாபெரும் சமூக இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. பேரணிகள், கையெழுத்து இயக்கங்கள், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் மக்களிடம் அரசின் நிலைப்பாட்டை புரிய வைக்க முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறது. இது மிகவும் சரியான, பாராட்டத்தக்க முயற்சியாகும். இதை தமிழ்நாடு பெண்கள் இயக்கம் முழு மனதோடு வரவேற்கிறது.

இன்று  சனவரி 1,2019  கேரளத்தின் கடைசி முனையான காசர்கோட்டில் இருந்து தலை நகரான திருவனந்தபுரம் வரையில் 620 கி.மீ வரையில் உலக அளவில் கவனத்தை ஈர்க்ககூடிய எழுச்சிகரமான ‘வனிதா மதில்’ நிகழ்வில் ஏறக்குறைய 40 லட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள்.

’கேரளாவை பைத்தியக்காரர்களின் நாடாக மாற்ற அனுமதியோம் ! முற்போக்கு கேரள மரபுகளை தகர்த்திட அனுமதியோம்! ஆண் பெண் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவோம்’  என்ற முழக்கம் கேரளா முழுவதும் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது.

பாலின சமத்துவத்திற்கான கேரள பெண்களின் ‘வனிதா மதில்’ மாபெரும் வெற்றி பெற தமிழ்நாடு பெண்கள் இயக்கம் தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

‘வனிதா மதில் – பெண்கள் சுவர்’ போராட்டத்திற்கு ஆதரவாக சனவரி 1, அன்று சென்னையில் நடைபெறும் பெண்கள் சுவர் போராட்டதில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ் நாடு பெண்கள் இயக்கமும் பங்குகொள்கிறது.

பரிமளா, தமிழ்நாடு பெண்கள் இயக்கம்

parimalapanju@gmail.com, 9840713315

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW