வெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறை மக்களிடம் எடுத்துசெல்லுவோம் !

25 Dec 2018

அப்பாவுடைய பழைய சுசுகி பைக் பற்றிய நினைவுகளில் இப்போதும் பசுமையாக நினைவுக்கு வருவது அவருடன் டிசம்பர் 25ம் தேதி செல்லும் வெண்மனி பயணம் தான். வெண்மணி என் ஊரிலிருந்து சுமார் 20 km தூரம் உள்ள ஒரு கிராமம் தான். உரிமைக்குரல் எழுப்பிய உழைக்கும் வர்க்கத்தின் குரல்வளைகள் தீயில் பொசுக்கப்பட்ட நாள் , 44 பேரை உயிருடன் வைத்து எரித்த பண்ணை ஆதிக்கத்தின் வெறியை உலகுக்கு காட்டிய நாள், ஆண்டயை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காகவே அவர்கள் கொல்லப்பட்ட நாள்.

வெண்மணி மக்கள் விவசாய சங்கத்தின் மூலம் ஒரு படி நெல் ஊதிய உயர்வு கேட்கின்றனர். அதை கொடுக்க முடியாது என பண்ணை நிராகரிக்கிறது. வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் பண்ணை வெளியூரிலிருந்து ஆட்களை வேலைக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. அவர்கள் வேலை செய்வதை மக்கள் தடுத்து நிறுத்துகின்றனர். ராமையாவின் குடிசையில் உழைக்கும் 44 மக்கள் செத்து மடிகின்றனர்.

பின்னர் நீதிமன்ற விசாரணையில் அப்போதைய ஆளும் அரசு இரிஞ்சுர் கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்தது (அற்ப காரணங்களை சொல்லி) , இந்த செயல் தான் அவரை 44 துண்டுகளாக அழித்தொழிப்பு இயக்கம் வெட்டி வீச காரணமாக அமைந்தது. வெண்மணி சம்பவத்திற்கு முன் மற்றும் பின் என நாம் கீழ தஞ்சையின் சூழ்நிலையை நாம் ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்த மக்கள் விவசாய சங்கமாக ஒன்றிணைந்து தங்கள் கோரிக்கைகளை வைத்தனர். சங்கமாகஒன்றிணைவதற்கான  விதையை விதைத்தவர் கீழ தஞ்சையை சுற்றியுள்ள பெரும்பான்மயான பகுதிகளில் உள்ள வீடுகளில், கல்யாண காதுகுத்து பத்திரிகைகளில், அந்த வெள்ளை சட்டையும் கருப்பு கண்ணாடியும் போட்ட, திருத்துறைப்பூண்டி மண்ணிலே புதைந்துகிடக்கிற “தோழர் பி.சீனிவாசராவ் (BSR)” தான்.

காலையில் 4 மணிக்கு வயலுக்கு போனா, இரவு  8 மணிக்கு தான் கரை ஏற முடியும், விடுமுறை கிடையாது, சாட்டையடி சாணிப்பால், இடைவேளை கிடையாது, குறைந்த ஊதியம் இப்படிப்பட்ட அடிமைத்தனத்தின் உச்சகட்ட நிலையில் இருந்த சமயத்தில் விவசாயிகள் சங்கம் அமைப்பதற்காக”காக்கி டவுசருடனும் முண்டா பணியனுடனும் திருத்துறைப்பூண்டி வந்து இறங்கியவர் தோழர் சீனிவாசராவ்”. சீனிவாசரவிடம் இருந்து அறிந்து கொள்ள வேண்டியவை… சீனிவாசராவ் தான் கைப்பட எழுதிய ஒரு புத்தகம் “கீழ தஞ்சையில் என்ன நடக்கிறது “.

இந்த ஒற்றை புத்தகம் ஒரு புரட்சியாளர் தான் வேலை செய்ய கூடிய பகுதியில் உள்ள மக்களை எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கு மிக முக்கிய சான்றாக உள்ளது. சீனிவாசராவ் எல்லாதரப்பு மக்களிடமும் சுரண்ட பட கூடிய மக்களின் பிரச்சனையை பேசினார். முக்கியமான உதாரணம் தோழர் CG அவர்கள் ஒரு கருத்தை தெறிவித்து இருக்கிறார். “எப்படி கள்ளர் ஜாதில உள்ளவங்க லாம் கம்யூனிஸ்ட் கட்சில வந்து சேர்ந்திங்க” என்று கேட்ட போது, அதற்கு CG கூறிய பதில் மிக முக்கியமான ஒன்று ” நாங்க பண்ணைல கங்காணி வேல செஞ்சுடு இருந்தப்போ. எங்களை போய் அடிமை வேல செய்யுற ஆளுங்களை அடிக்கிறதுக்கு இழுத்துட்டு வர சொல்லுவாங்க , நாங்க போய் அவங்ககிட்ட நடக்க போற விஷயத்தை சொல்கி எங்கயாச்சும் கொஞ்ச நாள் ஓட சொல்லிடுவோம், அது மட்டும் இல்லாம வேலைக்கு யாரும் வராம இருந்தாலும் நாங்க கொஞ்சம் வந்தா மாத்தி சொல்லுவோம். இந்த மாதிரி குறைந்தபட்ச நல் எண்ணம் கொண்டவர்களை சீனிவாசராவ் கண்டுபுடிச்சாறு , அவங்கள அரசியல்படுத்துனாரு “.

மக்களிடம் செல்வதும் யாரையும் ஒதுக்காமல் மக்களிடம் பேசுவதும் தான் ஒரு உண்மையான புரட்சிகர இயக்கத்தின் நோக்கம் என்பதற்கான முக்கியமான உதாரணம் BSR அவர்கள். BSR விதைத்த விதை தான் கோட்டூர் பண்ணையை , குன்னியூர் பண்ணையை , வலிவளம் தேசிகர் பண்ணையை வீழ்த்த செய்தது. பலர் இந்த வெற்றிக்கு தற்போது சொந்தம் கொண்டாடலாம் , வரலாறுகளை திரிக்கலாம். ஆனால் கீழ தஞ்சையின் ஒவ்வொரு தெருவிற்கு வெளியிலும் பறக்கும் செங்கொடி அதற்கான சாட்சியாக இருக்கும். எங்கள் பகுதியின் நடவு பாட்டுகளில், கும்மி பாட்டுகளில் BSRன் உயிர் இருக்கும், விவசாய சங்கத்தின் சாதனை இருக்கும். ரஷ்யா, லெனின் , ஸ்டாலின் என தெருவிற்கு ஒருத்தரின் பெயர் வைக்கப்பட்டிருக்கும். இவை செங்கொடியின் செயல்பாடுகளை சொல்லும்.

கர்நாடகாவில் இருந்து வந்து , தமிழை கற்று மக்களோடு பழகி , மக்களுடன் வாழ்ந்து எந்த அமைப்பும் இல்லாத இடத்தில் சங்கம் என்னும் ஒரு புதிய விஷயத்தை அதன் வலிமையை மக்களுக்கு உணர்த்திய மாமனிதர் சீனிவாசராவ். மேலும் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் , வர்க்க போராட்டத்தையும் ஒரு சேர நிகழ்த்தி காட்டியவர் நம் BSR அவர்கள். சீனிவாசராவ் தமிழர் அல்ல, ஆனால் அவர் இந்த தமிழ் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த மனிதர். சீனிவாசராவ் தலித் அல்ல ஆனால் பண்ணை அடிமைகளாக இருந்த தலித் மக்களுக்காக போராடியவர் . ஏனெனில் சீனிவாசராவ் ஒரு கம்யூனிஸ்ட். அதனால் தான் இவை அனைத்தும் சாத்தியப்பட்டது . அவர் வழியில் வந்த விவசாய சங்கத்தினுடைய போராட்டத்தினை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் 44 பேர் ஒரே வீட்டில் கொல்லபட்டனர்.

ரத்தமும் சதையுமாக ஒவ்வொரு மக்களும் செத்து மடிந்தனர். (கீழ வெண்மணி சம்பவத்திற்கு சில ஆண்டுகள் முன் தான் ஒரு மிக ஆளும் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக கோபலக்ரிஷ்ணா நாயுடு தேர்ந்தெடுக்கபட்டார் என்பது மிக முக்கியமான குறிப்பு) . அதற்கு பின் கீழ தஞ்சை முழுவதும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் கட்டபட்டது. மேலும் பண்ணை நிலங்கள் பிரித்து கொடுக்கப்பட்டன, வேகமாக குடியிருப்பு மனைகளுக்கு, உழும் நிலத்திற்கு பட்டா போன்றவை இந்த சங்கங்களின் போராட்டம் மூலம் வழங்கப்பட்டன. கீழ தஞ்சையின் பெரும்பான்மையான பகுதிகளில் அமாவாசை சங்கம் கட்டபட்டது.

இந்த செங்கொடி சங்கத்தின் விவசாய தொழிலாளர் சங்கமே இந்த அமாவாசை சங்கம். அம்மாவாசை சங்கம் அங்குள்ள உழைக்கும் மக்களின் ஆன்மாவோடு கலந்த ஒரு சங்கம் . வெண்மணி க்கு  பின் உள்ள சூழலில் இந்த அமாவாசை சங்கத்தின் சாதனை மிக பெரியது . கூலி உயர்வு , மாத விடுமுறை ( அதுவும் அம்மாவாசை அன்று) அன்றும்  சங்கத்தின் கணக்கு வழக்கு பார்க்கவே பெரும்பாலும் உபயோகிக்கபடும். அந்த நாளை எல்லாரும் பெரும் திருவிழாவாக  கொண்டாடினார்கள், அன்று சிறப்பு உணவாக தான் அப்போது இட்லி, கறி சமைக்கபட்டது. இன்று கூட ஊரில் பலர் அமாவாசை  அன்று மட்டும் தான் இட்லி சுடவார்கள் என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்.
மேலும், ஒவ்வொரு கிராமம் தோறும் கிராம கமிட்டி கட்டப்பட்டது. கிராம கமிட்டி மக்களின் பிரச்னைகளை பேசியது ,  அவர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் உடன் நின்றது. வாழ்வின் ஒரு பிரிக்க முடியத அமைப்பாக இன்றுவரை பல இடங்களில் இந்த கிராம கமிட்டி இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. இவை எல்லாம் ஒரு செங்கொடி இயக்கத்தால் மட்டுமே செய்ய கூடிய சாதனை அல்லவா.
தற்போதைய சூழலில் கிராம கமிட்டி பற்றி எந்த அடிப்படை அறிவும் இல்லாத,  அதன் அரசியல் துளி கூட தெரியாத ADMK  மற்றும் DMK  கட்சிகள் இன்று  கிராம கமிட்டியை வைத்துள்ளன.
இந்த செங்கொடி இயக்கத்தின் சாதனை யாரும் எண்ணிப்பார்க்க இயலாதவை. சாட்டையடி,  சாணிப்பால் , சவுக்கடி என  இருந்த மக்களை மிக பெரிய மாற்றத்தை நோக்கி தள்ளியவை செங்கொடி இயக்கங்கள். ஏஜிகே வரிகளில் சொல்ல வேண்டும் எனில் ” தோளிலே துண்டு போட்டோம், காலிலே செருப்பணிந்தோம் , மனிதர்களாக வாழ தொடங்கினோம் , மானத்துடன் வாழ தொடங்கினோம்.” இவ்வளவு பெரிய மாற்றம் ஒரு செங்கொடி இயக்கத்தால் மட்டும் தானே இதுவரை இந்த உலக வரலாறுகளில் சாத்தியம்.
” திருத்துறைப்பூண்டியை அடுத்த களப்பால் பகுதிகளில் நிஜாம் பண்ணைக்கு எதிராக நடந்த கலவரத்தை ஒடுக்க வந்த மலபார் போலீஸ். போராளிகளை முட்டியிட வைத்து அப்படியே காவல் நிலையம் வரை அழைத்து சென்றது. அவர்கள் சென்ற பாதை முழுவதும் இரத்தம் கொட்டி கிடந்ததாக கூறுவதுண்டு. இப்படி பலரின் ரத்த கறைகளில் நனைந்த கொடி அல்லவா கீழ தஞ்சையின்  செங்கொடி”.
ஆனால், இன்று செங்கொடி இயக்கங்களின் நிலை, மிக பெரிய தொய்வை , அவை வெற்றிகரமாக பணியாற்றிய இடங்களிலேயே சந்தித்து இருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் அவை அடுத்தகட்ட தலைமுறைக்கு கடத்தப்படாததும், தேர்தல் அரசியலில் திருத்துறைப்பூண்டி தொகுதியை கூட்டணி கட்சிகளிடம் பெறவே போராட்டம் நடத்த வேண்டியுள்ளதால் மாணவர், இளைஞர், விவசாய அமைப்புகளை வலுப்படுத்துவதில் , அணித்திரட்டுவத்தில், அரசியல்படுத்துவதில், வரலாறுகளை சொல்லி கொடுப்பதில், விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் கோட்டைவிட்டுள்ளது நமது பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள்.
இவ்வளவு பெரிய கட்டமைப்பு BSR போல , மணியம்மை போல, கீழ வெண்மணியில் கருகிய 44 போராளிகள் போல, ஆலத்தூர் கலவரத்தில் ரத்தம் சிந்திய போராளிகள் போல பலரின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. இதனை நாம் காப்பாற்றாவிட்டால் நமக்காக ரத்தம் சிந்திய போராளிகளுக்கு செய்யும் மாபெரும் வரலாற்று துரோகம் என்பது மறுக்க முடியாத உண்மை.
வெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறுகளை அடுத்தவர்களிடம் சொல்லுவோம். செங்கொடி இயக்கத்தின் சாதனையை மக்களிடம் சொல்லுவோம். நாளை இதே கீழ தஞ்சையில் வர போகிற முதலாளித்துவ நாசகர அழிவு திட்டங்களை எதிர்த்து நிற்க கம்யூனிச அரசியலை கொண்டு மக்களை அணித்திரட்டுவோம்.
இவை அனைத்து செங்கொடியால் மட்டும் அல்லவா சாத்தியம். ஏனெனில் உழைக்கும் மக்களின் உரிமை கோபமாய் வெகுண்டெழுவது எப்போதும் நம் செங்கொடி மட்டும் தானே.
– அருநந்தி பாஸ்கர், தமிழ்நாடு மருத்துவ கல்லூரி மாணவர் சங்கம்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW