‘உண்மைவென்றதென’ ஊளையிடும் ஸ்டெர்லைட் நிர்வாகம்! உண்மை யாதெனில்…..15 உயிரை கொடுத்துவிட்டு மீண்டும் திறக்க அனுமதிப்போமா?

20 Dec 2018

 

பசுமை தீர்ப்பாயம் ஆலையைத் திறக்க ஆணையிட்டதால் உண்மைவென்றெதன ஊடகங்களின் வழி ஊளையிடுகிறது ஸ்டெர்லைட்.

உண்மை வென்றெதெனில், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காக்கிச் சட்டை அணிந்த ஏவல் படையை  வெளியேற்றி விட்டு ஒரே ஒரு நாள் ஆலையை இயக்கிவிட முடியுமா?

உண்மை வென்றெதனில் தூத்துக்குடி மக்களிடம் ஸ்டெர்லைட் வேண்டுமா? வேண்டாமா? ஆலையால் வளர்ச்சியா? ஆபத்தா? என்று பொதுவாக்கெடுப்பு நடத்த முடியுமா?

உண்மை வென்றெதனில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஸ்டெர்லைட் வேண்டாமென சொல்பவர்களை ஒன்றுகூட அனுமத்திக்க முடியுமா?

உண்மை வென்றெதனில் தூத்துக்குடி நகரத்தில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்பதை தடுப்பதற்கு கருப்புத் துணி விற்பனையைத் தடை செய்திருப்பதேன்?

உண்மை வென்றெதனில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கப்போவதை எண்ணி புன்னகைக்கும் உழவர்களைக் கொண்டு உடன்குடி மற்றும் ஆத்தூர் விவசாய சங்கத்தினர் ஒரு பேரணி நடத்திக் காட்ட முடியுமா?

உண்மை வென்றதெனில் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தினர் ஒரு நாள் வீதிக்கு வந்து தங்கள் முகத்தைக் காட்ட முடியுமா?

”எங்களைப் பொருத்தவரை உண்மை என்றால் எங்கள் செழிப்பும் தூத்துக்குடியின் வளர்ச்சியும், தமிழ்நாடு முன்னோடியாக இருந்து, இந்தியா உயர்ந்து நிற்பதே” என்று விளம்பரம் செய்கிறது ஸ்டெர்லைட்! உண்மையின் விளக்கம் அவர்களின் செழிப்பாம்! உண்மைதான்! சிறு கும்பலுக்கு செழிப்பு என்றதன் இன்னொரு பக்கம் பெருந்திரளுக்கு அழிப்பு. அந்த சிறு கார்ப்பரேட் கும்பல் தங்களைத்தான் ஊரென்றும் நாடென்றும் உலகமென்றும் எண்ணிக் கொள்கிறது. பூமி சுழல்வதும் ஆதவன் கதிரும் நிலவின்  ஒளியும்  வான் மழையும் வின்மீண்களும் தங்களுக்கே, தங்களுக்கு மட்டுமே என்பது அந்த கார்ப்பரேட் கும்பலின் மெய்யியல்.

உண்மை யாதெனின், குழந்தை குட்டிகளோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரம் ஆயிரமாய் திரண்டவர்கள் ’வன்முறையாளர்கள்’ என சித்திரிக்கப்பட்டு  வேட்டையாடப்பட்டதே!

உண்மை யாதெனின், காவல் துறையினரில் ஒருவருக்கு கூட காயம் இல்லாத போது போராடியவர்களில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கை, கால் இழந்ததுமே!

உண்மை யாதெனின், பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இருக்கக் கூடாதென ஸ்டெர்லைட் நிர்வாகம் சொன்னது, வெட்கமின்றி இது ஏற்றுக் கொள்ளவும்பட்டது!

உண்மை யாதெனின், பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழுவின் தலைவர் தருண் அகர்வாலுக்கு ஒரு விலை உண்டு, காசியாபாத் பிராவிடண்ட் பண்டு முறைகேடு சம்மந்தமான வழக்கில் அவன் விலை போனவன் என்பதே! இவனை இவ்வாய்வுக் குழுவில் சேர்த்ததைக் கேள்விக்குட்படுத்த வில்லை எடப்பாடி அரசு என்பதே!

உண்மை யாதெனின், பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் முன் வைத்த ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய விவரங்களை எதிர்தரப்புக்குப் பசுமை தீர்ப்பாயமோ ஆலை நிர்வாகமோ தரவில்லை என்பதே!

உண்மை யாதெனின், பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதி பரிபாலனம் செய்த ஏ.கே.கோயல் ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் பிரிவின் முன்னாள் தேசிய செயலர்!  இவன் தான் உச்சநீதிமன்றத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பைக் கொடுத்தவன் !

உண்மை யாதெனின், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே அதன் நகல் வெளியாகும் அளவுக்கு நீதி சிரிப்பாய் சிரித்துப் போனது!

உண்மை யாதெனின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை மீது எடுத்து வைத்த குற்றச்சாட்டுகளை தருண் அகர்வால் ஆய்வுக்குழுவும் மறுக்கவில்லை என்பதே!

உண்மையாதெனின், காற்று மாசு சட்டம், ஆபத்தான கழிவு மேலாண்மை சட்டம், நிலத்தடி நீர் மாசு தடுப்புச் சட்டம் ஆகியவை மீறப்பட்டதற்கும் பசுமை வளையம் அமைக்கப்படாததற்கு நீதி கோரப்படாமல் கருணை காட்டப்பட்டதே!.

உண்மை யாதெனின், ஒருபக்கம் ஆலை மூடுவதற்காக வாதிடுவதாக காட்டிக் கொண்ட தமிழக அரசு, இன்னொருபுறம் துப்பாக்கிச் சூடு பற்றி விசாரணையை சிபிஐ நடத்தக் கூடாதெனவும் வாதாடிக் கொண்டிருந்தது!

உண்மையாதெனின், எல்லோருக்கும் ஒரு விலை உண்டு. தருண் அகர்வாலுக்கும் ஏ.கே. கோயலுக்கும், எடப்பாடிக்கும், மஃபாய் பாண்டியராஜன் உள்ளிட்ட மாண்புமிகுக்களுக்கும் விலை உண்டு!

உண்மையாதெனின், பணம் பத்தும் செய்யும், பாதாளம் வரை பாயுமெனில் பசுமை தீர்ப்பாயத்திற்குள்ளும் பாயும் என்பதே.

உண்மையாதெனின், மக்களால், மக்களுக்காக, மக்களே என்ற மண்ணாங்கட்டி சனநாயகம் இதுவல்ல, காவி-கார்ப்பரேட் கூட்டு சர்வாதிகாரம்தான் நடக்கிறது என்பதே!

முத்துநகரத்து எழுச்சியையும் போராடிய மக்களையும் கொல்லப்பட்டவர்களையும் காயம்பட்டவர்களையும் நூற்றுக்கணக்கில் சிறை சென்றவர்களையும் வழக்குகளில் வதைபடுபவர்களையும் கொச்சைப்படுத்தி ஓநாய் ஒன்று ஊளையிட்டாலும் ’நான்காம் தூண்’ என்றும் மயிறு மட்டை என்றும் தங்களுக்கு தாங்களே மெடல் குத்திக் கொள்ளும் ஊடகங்களில் பரப்புரை செய்வதற்கும் ஒரு விலை உண்டு. ஊடக தர்மம் என்பது இன்னின்னதுக்கு இவ்வளவு பணம் என்பதே!

உண்மை இப்படி  இருக்க, ஓநாய்கள் ஒய்யாரமாய் ஓலமிடுவதேன்?

டாஸ்மாக்கை மூடுவேன், ’நான் உங்களில் ஒருத்தி’ அணு உலையைத் திறக்க மாட்டேன், விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டேன் என்று காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகளின் வரிசையில் ஸ்டெர்லைட் ஆலை மூடியது மூடியதுதான் என்று ’அம்மா’ அரசின் வழி வந்த எடப்பாடி சொல்கிறார்.  இந்த நாடகத்தின் முதல் காட்சி பசுமை தீர்ப்பாயத்தில் முடிந்து அடுத்த காட்சி உச்சநீதிமன்றத்தில் நடக்கப் போகிறதென்பதால்.

கொள்கை, கோட்பாடு, இன விடுதலை என்றெல்லாம் பேசக் கூடிய கட்சிகள் தொண்டர்களைத் துதிப்பாடிகளாக்கிப் ’போராட வேண்டாம், போராட வேண்டாம்’ என பழக்கி வைத்திருப்பதால்..

மக்களை வரலாற்றின் உந்து சக்தி என்று அளவிடாமல் வாக்கு சாவடிக்கு வந்து தங்களுக்கு வாக்களித்துப் போகும் ஆடு, மாடுகள் என உருவாக்கி வைத்திருப்பதால்..

தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழ்ந்து வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என மக்களில் பெரும்பகுதியினர் இருப்பதால்…

அத்தனையும் அநீதியாய் நடக்கிறதென்று அறிந்தாலும் ஒரிரு நாள் சிறை செல்லவும் ஒரு நாள் விடுப்பெடுக்கவும் தயங்கும் கூட்டத்தினர் இருப்பதால்…

யாரோ ஒரு கடவுள் அவதாரமோ, தேவ மைந்தனோ, இறை தூதனோ வந்து அதிசயங்களை நிகழ்த்தி மீட்பானென நம்பிக் காத்திருப்போர் இருப்பதால்..

ஆகவே, ஆரவாரத்தில் குதிக்கிறது ஸ்டெர்லைட்!

அனில் அகர்வால்கள் இலண்டனில் இருந்த படி முத்துநகரத்தைப் பாழ்படுத்திக் கொண்டிருக்க தருண் அகர்வால் என்றொருவன் ஆய்வு செய்து விளக்கம் தர ஏ.கே. கோயல் என்றொருவன் நீதி வழங்க மாண்புமிகுக்கள் மண்டியிட தளபதிகள் இந்நாடகத்தில் அட்டைக் கத்தியை வீரத்துடன் வீச ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் நச்சைக் கக்கப் போகிறது.

ஆனால், இது முடிவல்ல..

தூத்துக்குடி பெருமிதத்துடன் எழுந்து நிற்கத் தான் போகிறது. தூத்துக்குடிக்கு பெருமை ஸ்டெர்லைட் ஆலையால் அல்ல, ஸ்டெர்லைட்டை எதிர்த்து நடத்தியப் போராட்டத்தால்! அடையாளப் போராட்டங்களில் அமிழ்ந்து கொண்டிருந்த தமிழ்நாட்டிற்கு எடுத்துக்காட்டாய் ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் காட்டியதற்காக. தன்னுயிர் தந்து தாய்நிலத்தைக் காத்ததற்காக. மீண்டும் எழுந்து நடத்தப் போகும் போராட்டத்திற்காக.

அப்போது இப்படித்தான் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி மண்ணை விட்டு விரட்டியடிக்கப்படும்….

 

 

செந்தில், இளந்தமிழகம்

tsk.irtt@gmail.com, 9941931499

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW