கார்ப்பரேட் வேதாந்தா’விற்கு கருணை ! தூத்துக்குடி மக்களுக்கு நோய் ! போராடுபவர்களுக்கு துப்பாக்கி ரவை! இதுதான் பசுமை தீர்ப்பாயத்தின் நீதி !
ஸ்டெர்லைட் நாசகர ஆலைக்கு எதிரான மாபெரும் முத்துநகர் எழுச்சியை நேரடி வன்முறையால் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தவர்கள், தற்போது மீண்டும் ஆலையை திறக்க சட்டப்பூர்வ வன்முறையை கையிலெடுத்துள்ளனர். ஆலைக்கு எதிரான ஒன்றுபட்ட மக்கள் திரள் போராட்டத்தை எதிர்கொள்ள திராணியற்றவர்கள், புறக்கடை வழியாக சட்ட முகமூடியணிந்து கொண்டு ஆலையை திறக்க முனைகின்றனர். ஸ்டர்லைட்டை மூடுவதற்கான மக்கள் போராட்டத்தின் காரணங்கள் அவ்வாறே நிலவி வருகிற நிலையிலும், ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் கூறிய ஆலை விதிமீறல்கள் அவ்வாறே நீடிக்கின்ற நிலையிலும், ஆலைக்கு எந்த எச்சரிக்கையும் / தண்டனையும் வழங்காமல் ஆலையை மீண்டும் திறக்க உத்திரவிட்ட பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உள்ளடக்கத்தில் முரண்பாடுகளின் குவியலாக உள்ளது. பெரு- முதலாளிகளுக்கு அப்பட்டமாக சேவை செய்வதாக உள்ளது. தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே ஆலை நிர்வாகத்திற்கு தீர்ப்பின் நகல் கிடைப்பது, தீர்ப்பாயம் நியமித்த ஆய்வுக்குழு அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் அரசு வாதம் போதுமானதாக இல்லை எனக் கூறி ஆலையைத் திறக்க வேண்டுமென நீதி நின்று கொல்கிறது!
வேதாந்தாவின் சட்டைப் பையில் நீதிமன்றமா?
14 உயிர்களை குடித்தபின்னர் மக்கள் கோபத்தை தணிப்பதன் பொருட்டு கீழ்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.
- உப்பார் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள ஆலையின் காப்பர் கழிவுகளை ஸ்டெர்லைட் ஆலை அகற்றவில்லை.
- காற்றில் வெளியிடுகிற ஆர்செனிக், நைட்ரஜன் ஆக்ஸைட், பிஎம் 10, சல்பர் டை ஆக்ஸைடு SO2 போன்றவற்றை சோதிக்கிற காற்றும் மாசு அறிக்கையை வழங்கவில்லை.
- தண்ணீர் மாதிரிகளில் உள்ள கன உலோகங்களை சோதிக்கிற நிலத்தடி நீர் மாசு அறிக்கையை வழங்கவில்லை.
ஆலை தொடங்கிய நாள் தொட்டு இவ்வாறுதான் சட்டத்திற்கு புறம்பாகவே ஆலை இயங்கிவருகின்றது. இவை போக ஆலையில் புகைப்போக்கியும் விதிகளுக்கு புறம்பாக குறைவான உயரத்திலேயே அமைக்கப்பட்டுள்ளதால், உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையும், ஆலையின் சுற்றுவட்டத்தில் 25 மீட்டர் பசுமை வளையம் அமைக்கப்பவேண்டும் என்ற நிபந்தனையும் ஆலை நிர்வாகம் காற்றில்பறக்க விட்டுள்ளது. இத்தகைய சட்ட விதி மீறல்களால் ஆலை சுற்றுப்புற நிலத்தடி நீர் நஞ்சாவது ,பொது மக்களுக்கு கண் எரிச்சல், தோல் நோய்கள், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, கேன்சர் போன்ற ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆலை முடியதற்கு பிறகு காற்று மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் கூறியது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கூறிய விதிமீறல்களை, பசுமை தீர்ப்பாயம் நியமித்த தருண் அகர்வால் குழுவும் உறுதி செய்துள்ளது. அதனால் என்ன, கருணை காட்டுங்கள் என தீர்ப்பாயத்திற்கு ஆய்வுக்குழு பரிந்துரைத்தது! ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டது! ஆய்வு செய்ய வேண்டிய எல்லையை தாண்டி, தீர்ப்பு வழங்குகிற பணியையும் ஆலைக்கு சார்பாக அகர்வால் குழு மேற்கொண்டது!
டில்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தவில்லை என அம்மாநில அரசை கண்டிக்கிற நீதிமன்றம் தூத்துக்குடி நகர மக்களின் உயிர்வாழ்க்கைக்கு எமனாக உள்ள ஆலையின் விதி மீறல்களை கண்டித்து ஆலையை மூடுவதற்கு உத்தரவிடாமல் அகர்வால் குழுவின் கருணைமிக்க கோரிக்கையின் பெயரில் நீதி வழங்குகிறது! அரசியல் சாசனத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் ஆட்சிதானே தவிர ஆலை முதலாளிகளுக்கு கருணை காட்டுகிற ஆட்சியல்ல என தருண் அகர்வால் கமிட்டிக்கு பதிலுரைக்க வேண்டிய பசுமைத் தீர்ப்பாயம் “கருணையின்” அடிப்படையில் நீதி வழங்கி ஆலைவிதிமீறலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவதில் வரலாற்று முன்னோடியாகிறது!
போபால் விஷ வாயு தாக்கத்தால் மாண்ட ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு கிடைக்காத நீதி, கண் பார்வையிழந்த மக்களுக்கு கிடைக்காத நீதி! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுகொல்லப்பட்டு உயிரிழந்த பதினான்கு பேர்களுக்கு கிடைக்காத நீதி!கார்ப்பரேட்களுக்கு மட்டுமே “கருணையின்” அடிப்படையில் கிடைக்கிறது !
ஆலையில் காற்று மாசு சட்டம் மீறப்பட்டடுள்ளதா? கருணை காட்டுங்கள்! ஆபாத்தான கழிவு மேலாண்மை சட்டம் மீறப்பட்டுள்ளதா, கருணை காட்டுங்கள்! நிலத்தடி நீர் மாசு தடுப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதா? கருணை காட்டுங்கள்! பசுமை வளையம் அமைக்கப்படவில்லையா? கருணை காட்டுங்கள்! இவ்வளவு விதிகளையும் மீறி இயக்கப்படுகிற ஆலையை அரசு மூடுவதா? ஐயகோ இது இயற்கைக்கு முரணானது! சட்டம் சந்தி சிரிக்கிறது!கார்பரேட் மூலதனம் பல்லிளிக்கிறது!
விதிகள் உண்டு, விதிமீறலும் உண்டு! அதனால் என்ன?ஆலை முதலாளிக்கு கருணைஅடிப்படியில் நீதி வழங்கி உத்தரவிடு! விதிமீறலுக்கு விலை வை! காற்று மாசுவிற்கு விலை வை! ஆலை குடிக்கிற ஒவ்வொரு உயிருக்கும் விலை வை! மக்களுக்கு நூறு கோடி ரூபாய் செலவு செய்து, ஆயிரம் ஆயிரம் கோடி ரூபாய்லாபத்தை உத்தரவாதப்படுத்து ! தலைமுறை தலைமுறையான மக்களின் வாழ்க்கையை அழி! இதுதான் தருண் அகர்வால் குழுவும் பசுமைத் தீர்ப்பாயமும் வழங்கியுள்ள நவீன நீதி! உலகம் கண்டிராத நீதி! முதலாளித்துவ சட்டத்தின் பெயரிலான நீதி!
கார்ப்பரேட்டுக்கு கருணை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய்,போராடுபவர்களுக்கு துப்பாக்கி ரவை! இதுதான் நவீன முதலாளித்துவ நீதி! முதலாளித்துவ சட்டத்தின் ஆட்சியில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதற்கு பதிலாக முதலாளிகளுக்கு கருணை! மக்களுக்கு துப்பாக்கி ரவை! சிறை! என பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படவேண்டும்.
பசுமைத் தீர்ப்பாயமும், ஆய்வுக் குழுவும் யாரின் சேவகர்கள்?
பசுமைத் தீர்ப்பாயம் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது, அது நியமித்த தருண் அகர்வால் குழுவின் ஆய்வுச் செலவு மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் அதன் விசாரணையும் தீர்ப்பும் வேதாந்தாவிற்கு சேவை செய்வது அம்பலமாகியுள்ளது.
தருண்அகர்வால் குழுத் தேர்வு, இக்குழுவின் ஆய்வு முறை, ஆய்வின் பரிந்துரை, குழுவின் பரிந்துரையை எதிர் மனுதாரர்களுக்கு வழங்காதது என சம்பவங்களின் தொடர்ச்சியை கவனித்தோம் என்றாலே தீர்ப்பு ஆலைக்கு சார்பாக எழுதப்பட உள்ளது என்பதை ஒருவர் எளிதாக ஊகிக்கலாம். ஆனால், தீர்ப்புவருவதற்கு முன்பே தீர்ப்பின் நகல் ஆலைக்கு கிடைக்கிற அளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தை வேதாந்தா கேலிக் கூத்தாக மாற்றியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது!
“ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று ஒரு உத்தரவினை வழங்கி உள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக மதியம் 2 மணி அளவில் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளதாக மக்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுமார் 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே காலை 7.39 மணிக்கு “என்.ஜி.டி.பி.ஏ” என்ற பயனாளர் கணக்கில் இருந்து “ஆபாஸ் பாண்டியா” என்ற மற்றொரு பயனாளர் கணக்கிற்கு இந்த தீர்ப்பு ”வேர்டு பைலாக” பரிமாறப்பட்டுள்ளது. சற்று நேரத்தில், அதே ”ஆபாஸ் பாண்டியா” என்ற பயனாளர் கணக்கில் இருந்து மீண்டும் “என்.ஜி.டி.பி.ஏ” என்ற பயனாளர் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பத்திமாபாபு குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்மனுதாரர்களுக்கு அறிக்கை வழங்காதவரும், ஸ்டேர்லைட்டிற்கு கருணை காட்டக் கூறியவ ஆய்வுக் குழு தலைவர், தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே ஆலை நிர்வாகத்திற்கு கிடைக்கிற தீர்ப்பு! உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சட்டப்பூர்வ ஆட்சியின் லட்சணம் இதுதான்!
ஆலைக்கு சார்பான அரசின் சட்டப் போராட்டம்!
மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் முதல் முதலாக ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் போராட்டங்களால் கைவிடப்பட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 1994ம் ஆண்டில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆலை இயங்கத் தொடங்கிய காலம்தொட்டே அதன் விதிமீறல்களின் எதிர்விளைவுகளால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தை அடுத்து 21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து விதி மீறல்களை பட்டியலிட்டது. விதிமீறல்களும் பாதிப்புகளும் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் நிருபிக்கப்பட்ட நிலையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வானது ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற ஆலை நிர்வாகம், தவறான விளக்கங்களையும் ஆவணங்களையும் காட்டி வாதிட்டது. இறுதியாக 2013 ஏப்ரல் ஆலையை மூடும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆலை விதிமீறல்களுக்கு தண்டமாக நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அழிவு வளர்சிக்கு தண்டத் தொகை விதிக்கிற அவையாக நீதிமன்ற அவை சுருங்கியது.
இதனைத்தொடர்ந்து இயங்கத் தொடங்கிய ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் படுகிற துன்ப துயரங்கள் தொடர்ந்தன. அதன் பின்னர் 2013 மார்ச் 23ம் தேதி அதிகாலையில் ஆலையில் இருந்து திடீரென விசவாயு கசிந்தது, அதைத்தொடர்ந்து நடைபெற்ற மக்கள் போராட்டத்தால் 30ம் தேதி ஆலையை ஜெயா அரசு மூடியது.
இதனை மீண்டும் ஸ்டெர்லைட் உடைத்தது. ஆலையின் மோசமான விதிமீறல்களால் தீவிர பாதிப்பு ஏற்படுகிற போதெல்லாம், மக்கள் போராட்டங்கள் தீவிரத்தன்மை பெறுகிறபோதெல்லாம், மக்களின் கோபத்தை திசை திருப்புகிற வகையில் தற்காலிகமாக ஆலை மூடல் நாடகத்தை அரசு நடத்துகிறது. அம்மாவின் ஆட்சியை நடத்துவதாக சொல்கிற தற்போதைய எடப்பாடி அரசும், கடந்த கால நாடகத்தையே தற்போதும் தொடர்ந்தது. போராட்டம் தீவிரம் பெற்றவுடன், நிராயுதபாணி மக்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தி மக்களை படுகொலை செய்து ஆலை மூடல் நாடகத்தை நடத்தி,தற்போது ஆலையை திறப்பதற்கு துணை போகிறது!
அண்மையில் மோசமான திசையில் செல்லும் ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் தமிழக அரசின் செயல்முனைப்பற்ற தன்மையை கீழ்வருமாறு சுட்டிக் காட்டியிருப்பார்.
· பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஆய்வுக்குழுவுக்கு தலைமையாக நியமிக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் தன்னுடைய பணிக்காலத்தில் காசியாபாத் பிராவிடண்ட் பண்டு முறைகேடு சம்மந்தமான பிரச்சினையில் ஆதாயம் அடைந்தவர் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டவர். இவரின் நியமனத்தை தலையீட்டாளர்கள் சார்பாக பேராசிரியர் பாத்திமா எதிர்த்தார். ஆனால் தமிழ்நாடு அரசு நீதிபதி தருண் அகர்வால் நியமனத்தை ஆட்சேபிக்காமல் மௌனம் காத்தாது.இதுஆய்வுழுவின் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்துகிற முயற்சிக்கு அரசு மறைமுகமாக துணைபோவதற்கு ஒப்பாகும்!
· மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வானத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த 28.05.2018 தேதிய அரசாணை வலுவற்றதாக உள்ளது” என்று சுட்டிக்காட்டியது. இதையெடுத்து உண்மையாகவே அரசு ஆலையை மூடுவதற்கு முயற்சி எடுக்கிறது என்றால் தமிழக அமைச்சரவையை கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை அமைச்சரவை முடிவாக எடுத்திருக்கு வேண்டும்.மாறாக உலக நீதிமன்றம் சென்றாலும் ஆலையை திறக்கவிடமட்டோம் என வாய்ச்சவடால் விட்டு மக்களை ஏமாற்றினார்கள்.
இந்தப் பின்புலத்தில்தான் தமிழக அரசு பிறப்பித்த ஸ்டெர்லைட் ஆலை மூடல் உத்தரவை ரத்து செய்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த தருண்அகர்வால் குழுவின் ஆலைக்கு ஆதரவான அறிக்கையை அடிப்படையாக வைத்து ஆலையை மீண்டும் திறப்பதற்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
ஆலைமூடலுக்காகப் பலியான 14 பேரின் ஈகத்தை உயர்த்திப் பிடிப்போம்!
மீண்டும் திறக்கவிடாமல் தூத்துக்குடி மக்கள் போராட்டத்திற்குத் தோள் கொடுப்போம்!
காவி-கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!
-அருண் நெடுஞ்சழியன்
arunpyr@gmail.com, 8825425912