தோழர் நெல் செயராமனுக்கு அஞ்சலி! – மீத்தேன்/ஹைட்ரோகார்பன் போன்ற பேரழிவு திட்டங்களை விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம் !
பசுமை புரட்சி வெண்மைப்புரட்சி என்பதன் பெயரில் இந்திய அரசு கொண்டு வந்த திட்டம் இந்திய விவசாயத்தை சர்வதேச ஏகபோக முதலாளிகளிடம் அடகு வைத்ததது. விவசாயிகளின் வாழ்வு ‘மான்சாண்டோ, எண்டோசல்பான். ராசி சீட்ஸ்” போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டது. டங்கள் திட்டம் உலகமயமாக்கல் அமல்படுத்தப்பட்ட பிறகு சிறு குறு விவசாயம் கால்நடைவளர்ப்பு கிராமப்புற வாழ்வு எனஅனைத்தும் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடானது. இந்த அயோக்கியத்தனத்திற்கு வக்காலத்து வாங்கி நாட்டை வளர்த்தெடுக்கும் திட்டம் எனப் பிரச்சாரம் செய்தது சுவாமிநாத கும்பல்.
இயற்கைமுறை விவசாயம், பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் என பசுமைப்புரட்சிக்கு எதிராக இந்தியா முழுமையும் பல்வேறு மக்கள் இயக்கங்கள், இயற்கை ஆய்வாளர்கள், இயற்கை அறிவியலாளர் என வெடித்துக் கிளம்பினர். அப்படி வந்தவர்களில் நம் காலத்தில் சிறப்பாக செயல்ப்பட்டு மறைந்தவர்கள் தான் நம்மாழ்வாரும், நெல் செயராமன் அவர்களும்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை பூர்வீகமாகக் கொண்ட நெல் செயராமன் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். கால் நூற்றாண்டிற்கும் மேலாக இயற்கை முறை விவசாயம் தமிழகத்தின பாரம்பரிய நெல் ரகங்களை கண்டறிந்து மக்களிடம் பரவலாக கொண்டுசென்றவர். பகுதி அளவில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களை மாநிலம் முழுமையும் கொண்டு சென்று சோதனைமுறையில் பல முயற்சிகளைமேற்கொண்டு வெற்றிகரமாக நடைமுறைச் சாத்தியமாக்கினார். மாப்பிள்ளை சம்பாவை, மக்கள் மயமாக்கியத்தில் அவர் பங்கு சிறப்பாக இருந்தது,
174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விதைகளை இலவசமாக விவசாயிகளுக்கு கொடுத்து எந்தெந்த நெல்ரகங்களை எந்தெந்த பகுதி மற்றும் பருவகாலத்திற்கு பயிர் செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் சலிப்பில்லாமல் வழங்குவார். நெல் திருவிழா, உணவுத் திருவிழாக்களை நடத்தி மக்களிடம் பாலிஷ் செய்யப்படாத அரிசி மற்றும் தானிய வகை உணவுகளைப் பரவலாக கொண்டு சென்றார். பாரம்பரிய ரகங்களை விவசாயிகளுக்குள் பரிமாற்றம் செய்வது, பாரம்பரிய விளைபொருட்களை இயற்கை பொருள் அங்காடி மூலம் நகர மக்களிடம் விற்பனைக்கு சாத்தியமாக்கியதில் இவர் பாலமாக இருந்தார்.
பஞ்சாப்-ஹரியானா ,டெல்லி போன்ற பகுதியில் இருக்கும் இயற்கை முறை விவசாயிகளின் போராட்டங்களிலும்,தென்மாநிலங்களின் இயற்கைமுறை விவசாய சங்கங்கள் மற்றும் ஆர்வலர்களுடன் சமகால இளைஞர்களை உறவாட முயற்சிகள் மேற்கொண்டார்.
காவிரி பாசன படுகையை நாசமாக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போரட்டத்தில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டார். நமது வேளாண்மை மரபைக் காப்பாற்றுவதும், பாரம்பரிய இயற்கை முறை விவசாயத்தைப் பரவலாக்குவதும், அடிப்படையில் ஏகாதிபத்திய கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏதிரானது. கார்ப்பரேட் மயமான வேளாண்மை வேதியியல் உரங்களையும்- மரபணு மாற்றிய விதைகளையும் எதிர்த்து முறியடிப்பதற்கான போராட்டத்தின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்தது. அதை விடுத்து இயற்கைமுறை விவசாயம் என்ற பெயரில் நாம் நடத்தும் முயற்சிகள் ஏகாதிபத்திய எதிர்பபு அரசியலோடு இணைக்காத வரை ஒட்டடைப்பானையில் தண்ணீர் ஊற்றி பானையை நிரப்ப செய்யும் முயற்சியாகவே முடியும். இந்த அரசியல் கண்ணோட்டத்தில் தான் நெல் செயராமன் போன்றவர்கள் நம்மோடு மாறுபட்டு நின்றனர்; இறுதிவரை இயற்கை, மரபு பாதுகாப்பு என்ற புள்ளியில் ஊன்றி நின்றார்;. அதை நாம் ஏகாதிபத்தியகார்ப்பரேட்எதிர்ப்பு அரசியலோடு இணைத்து முன்னெடுக்க நம்மாழ்வார், நெல்செயரமன் போன்றவர்களின் தியாகத்திலிருந்து வளர்த்தெடுப்போம். இதுவே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். அவர்களின் தியாகத்தை போற்றுவோம். அவர்களின் கனவுகளை நனவாக்க ஆயிராமாயிரமாய் அணிதிரள்வோம.
இன்று தமிழகம் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக சூறையாடப்படப்படுகிறது. நமது மண்ணையும் மரபையும் காப்பாற்றுவது நமது கடமை. காவிரி மண் இன்று பெட்ரோல் வளத்திற்காக பாலைவனமாக பாழாக்கப்படுகிறது. காவிரிப் படுகையைக் காப்பதற்கு காவி- கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிக்க உறுதியேற்போம் !
விநாயகம்,
தலைமை குழு, தமிழ்த்தேச மக்கள் முன்னணி
vinayagam73@gmail.com <mailto:vinayagam73@gmail.com>, 9994094700